செயற்கை ஊட்டச்சத்து பானங்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் - மருத்துவர் கூறும் விளக்கம்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
(குழந்தைகள் மற்றும் பெண்களின் ஆரோக்கியம் தொடர்பான செய்திகளை சிறப்பு தொடராக பிபிசிதமிழ் வெளியிடுகிறது. அந்த தொடரின் முதல் கட்டுரை இது)
செயற்கையான ஊட்டச்சத்து பானங்களை குழந்தைகளுக்கு தொடர்ந்து கொடுப்பதால், குழந்தைகளின் எடை அதிகரித்து உடல்பருமன் மற்றும் நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து ஏற்படும் என எச்சரிக்கிறார் சென்னையை சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் லட்சுமி பிரசாந்த்.
விளம்பரங்களில் காட்டப்படும் அல்லது கடைகளில் விற்கப்படும் பல ஊட்டச்சத்து பானங்களில் அதிகப்படியான சர்க்கரை மற்றும் நிறமூட்டிகள் இருப்பதால், குழந்தைகளுக்கு அவை சத்துக்களை கொடுப்பதைவிட, வாழ்வியல் நோய்களை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகரிப்பதாக சொல்கிறார் மருத்துவர் லட்சுமி.
தன்னிடம் வரும் பெற்றோர்கள் பலர் தங்கள் குழந்தைகளுக்கு செயற்கை ஊட்டச்சத்து பானங்களை கொடுக்கலாமா என அடிக்கடி கேட்பதாக கூறுகிறார் அவர்.
''என்னிடம் சிகிச்சைக்கு வந்த ஒரு ஐந்து வயதுள்ள குழந்தையின் எடை 26 கிலோவாக இருந்தது. உணவுப் பழக்கங்களை கேட்டபோது, அந்த குழந்தை அதிக அளவில் செயற்கை ஊட்டச்சத்து பானங்களை அருந்துவதாக அவரது தாய் சொன்னார். ஒரு நாளில் மூன்று முறை அந்த பானங்களை அருந்துவது, பிற ஜங்க் ஃபுட் உணவுகளை எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சி, விளையாட்டு போன்றவற்றில் ஈடுபடாமல் இருப்பது போன்றவற்றால், அந்த குழந்தை அதிக உடற்பருமனால் அவதிப்பட்டது. செயற்கை ஊட்டச்சத்து பானத்தை உடனே நிறுத்திவிட்டு, வீட்டில் பழச்சாறுகள் கொடுப்பதுடன், தீவிர உடற்பயிற்சியால் அந்த குழந்தை தற்போது இரண்டு கிலோ எடையை குறைத்திருக்கிறார்,''என்கிறார் மருத்துவர் லட்சுமி.
கொழுகொழு குழந்தை ஆரோக்கியமான குழந்தையா?
ஒரு குழந்தையின் வளர்ச்சியில் உடல் வளர்ச்சிக்குதான் அதிக கவனம் செலுத்தப்படுகிறது என்பதை தன் அனுபவத்தில் சொல்கிறார் லட்சுமி.
''குழந்தைகளின் வளர்ச்சி என்பது உடல் ரீதியான வளர்ச்சி, மன வளர்ச்சி மற்றும் அறிவு வளர்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும். இதற்கு ஊட்டச்சத்து மிகவும் அவசியம். ஆனால் அது சரிவிகித உணவில் இருந்து கிடைக்கவேண்டும், செயற்கை பானங்களிலிருந்து கிடைக்காது,''என்கிறார் அவர்.


''ஒரு சராசரியான மனிதனின் உயரத்தில் 60 சதவீத உயரம் ஐந்து வயதாகும்போதே தெரிந்துவிடும். குழந்தையின் மூளை வளர்ச்சி என்பது ஆறு வயதாகும் போது 90 சதவீதம் பூர்த்தி ஆகிவிடுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி ஐந்து வயதை எட்டும்போது முழுமை பெற்றுவிடுகிறது. கொழு கொழுவென்று இருந்தால்தான் ஒரு குழந்தை ஆரோக்கியமான குழந்தையாக இருக்கும் என்ற கற்பிதம் நிலவுகிறது. உண்மையில், செயற்கை பானங்களை அதிகளவு தொடர்ந்து குடிக்கும் குழந்தைகளுக்கு விரைவில் உடல்பருமன், நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என மருத்துவ ஆய்வுகள் சொல்கின்றன,''என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
ஒரு சில பெற்றோர் தங்கள் குழந்தைகள் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக கூட செயற்கை பானங்களை பரிந்துரை செய்யுமாறு கேட்கிறார்கள் என்கிறார் லட்சுமி.
''குழந்தைகள் உயரமாக, பலமாக வளர வேண்டும், அவர்கள் ஞாபக சக்தியுடன் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும். அதற்காக ஏதாவது பிராண்ட் சொல்லுங்கள் என்கிறார்கள். ஆனால் நீங்கள் உணவில் சேர்க்கவேண்டிய பழங்கள், கீரை, காய்கறிகள், பருப்பு வகைகள், மாமிச உணவுகள் என கலவையான உணவில் இருந்துதான் சத்துக்கள் கிடைக்கும்,''என்கிறார் அவர்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு, 1
செயற்கை பானங்களால் ஊட்டச்சத்து குறைபாடு
செயற்கை ஊட்டச்சத்து பானங்களில் என்ன இருக்கிறது என விளக்குகிறார் மருத்துவர். ''இந்த பானங்களை பால் அல்லது தண்ணீரில் கலந்து கொடுப்பதற்காக தயாரிக்கப்படுகிறது. செயற்கை பானங்களில் 50 முதல் 60 சதவீதம் கார்போஹைட்ரேட், 10 முதல் 15சதவீதம் புரதச்சத்து, 20 முதல் 25 சதவீதம் மறைவாக இருக்கும் சர்க்கரை, சிறிதளவு வைட்டமின், மினரல் மற்றும் கொழுப்புச் சத்து ஆகியவை இருக்கும். சர்க்கரை இருப்பதால்தான் இந்த பானங்கள் மிகவும் இனிப்பாக உள்ளன,''என்கிறார்.
''சராசரியாக பத்து கிலோ எடை கொண்ட குழந்தைக்கு ஒரு நாளில் பத்து கிராம் புரதம் தேவை. ஆனால் இந்த செயற்கை பானங்களில் இரண்டு ஸ்பூன் கலந்து குடித்தால், ஒன்று அல்லது ஒன்றை கிராம் அளவுதான் புரதம் கிடைக்கும். இது ஒரு எடுத்துக்காட்டுதான். பலவிதமான சத்துகள் இருப்பதாக சொல்லப்படும் பானங்களால் எந்த நேரடியான பயனும் இல்லை. ஒரு சில குழந்தைகள் இந்த பானத்தின் இனிப்பு சுவைக்கு அடிமையாகி, அதை குடித்துவிட்டு, உணவை மறுத்துவிடுகிறார்கள். இதனால் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுகிறது,''என்கிறார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
இரண்டு காரணங்களுக்காக மட்டும்தான் செயற்கை ஊட்டச்சத்து பானத்தை கொடுக்கலாம் என்கிறார் மருத்துவர் லட்சுமி. ''பாலின் நிறம் அல்லது மனம் பிடிக்காத குழந்தைக்கு இந்த பானங்களை கொடுக்கலாம். உண்பதற்கு மிகவும் அடம் பிடிக்கும் குழந்தைகள் மற்றும் மிகவும் தேர்ந்தெடுத்து ஒரு சில உணவை மட்டும் உண்ணும் குழந்தைகள், நொறுக்கு தீனி அதிகமாக சாப்பிட்டுவிட்டு உணவை மறுக்கும் குழந்தைகள் ஆகியோருக்கு மட்டும்தான் செயற்கை ஊட்டச்சத்து பானத்தைக் கொடுக்கலாம். அதற்கு பதிலாக, வீட்டில் சத்துமாவு கஞ்சி தயாரித்து கொடுப்பதைதான் நான் பரிந்துரை செய்வேன்,''என்கிறார் மருத்துவர் லட்சுமி.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு, 2
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












