பாலியல் கல்வி குழந்தைகளுக்கு எப்போது, எப்படி சொல்லித் தர வேண்டும்?

பாலியல் கல்வி

பட மூலாதாரம், Getty Images

தங்கள் குழந்தைகளிடம் பாலியல் கல்வி குறித்து பேசுவதென்பது, பல பெற்றோருக்கு எப்போதுமே சங்கடமான ஒன்றுதான். குறிப்பாக, இந்த டிஜிட்டல் யுகத்தில் இது தொடர்பான கேள்விகள் மற்றும் சிக்கல்கள் குழந்தைகளுக்கு ஏற்படும். ஆனால், பாலுறவு குறித்து தங்கள் குழந்தைகளிடம் எப்போது, எப்படி பேச வேண்டும் என்பது குறித்து முடிவெடுப்பதில் பெற்றோர் பலரும் பல சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள்.

பாலியல் கல்வி குறித்து குழந்தைகளுக்குக் கற்பிப்பது குறித்தும் அதனை எப்போது தொடங்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள், சுகாதார வல்லுநர்கள் சொல்வது என்ன?

  • பாலியல் கல்வி நேர்மறையான, நீண்டகால விளைவுகளை அதாவது இளம் வயதில் ஆரோக்கியமான உறவுகளை ஏற்படுத்திக்கொள்வதில் உதவுவதாகவும் பாலியல் புரிதல் குறித்த உரையாடல்களை குழந்தைகளிடையே தொடங்குவதை பெற்றோர்கள் தவிர்க்கவோ தாமதப்படுத்தவோ வேண்டாம் என்கிறார் மாண்ட்கிளேர் ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் பொதுச் சுகாதார பேராசிரியர் ஈவா கோல்ட்ஃபார்ப் கூறுகிறார். "சிறு குழந்தைகளிடம் கூட உடல்பாகங்கள், அதன் செயல்பாடுகள், உடல் ஒருமைப்பாடு மற்றும் கட்டுப்பாடு குறித்து பெற்றோர்கள் பேசலாம்" என்கிறார் அவர்.
  • இளம் வயதிலேயே பாலியல் குறித்த புரிதலை மிகவும் இயல்பாகத் தொடங்குவது பெற்றோருக்கு எளிதானதாக இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. சிறு குழந்தைகளின் கேள்விகளுக்கு வெளிப்படையாகவும் நேர்மையாகவும் பதில் சொல்வது, பின்வரும் காலத்தில் மிக சிக்கலான விஷயங்களை பேசுவதை எளிதாக்கும்.
  • தங்களின் தோற்றம் மற்றும் அடையாளத்தை புரிந்து கொள்ள இந்த படிப்படியான அணுகுமுறை உதவுகிறது. குறிப்பாக, விந்து தானம் மூலம் பிறந்த குழந்தைகளிடம் அதுகுறித்த புத்தகங்கள் மற்றும் கதைகளின் அடிப்படையில் பெற்றோர்கள் பேசுவதன் மூலம் அக்குழந்தைகள் தங்களின் தோற்றம் குறித்து மிகவும் நேர்மறையாக உணர்கின்றனர்.
சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு
  • தி அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸின் ஒரு மதிப்பாய்வுரை மூலம் விரிவான பாலியல் கல்வி, பதின்பருவ கர்ப்பங்கள் மற்றும் பாலியல் நோய்கள் ஆகியவற்றைத் தடுக்க உதவுவதாக தெரியவந்துள்ளது.
பாலியல் கல்வி

பட மூலாதாரம், ALEXMIA/GETTY IMAGES

  • தங்களுடைய பதின்பருவ பிள்ளைகளிடம் பெற்றோர்கள் குறிப்பாக அம்மாக்கள் பாலுறவு குறித்து பேசும்போது, பதின்பருவத்தினர், முதன்முறையாக பாலுறவில் ஈடுபடுவதை தாமதப்படுத்துவதற்கும் பாதுகாப்பான உடலுறவில் ஈடுபடுவதற்கும் அதிக வாய்ப்பு ஏற்படுகிறது. தி பிரிட்டிஷ் ஃபேமிலிஸ் ஆய்வு ஒன்று, இத்தகைய உரையாடல்களில் தந்தையும் ஈடுபட பரிந்துரைக்கிறது.
  • இளம் பருவத்தினரிடையே பேசும்போது பாலியல் மற்றும் பாலியல் வளர்ச்சியைச் சுற்றியுள்ள சொற்களஞ்சியத்தை மறுபரிசீலனை செய்வது அல்லது மறைப்பது, வெளிப்படையான உரையாடலின் இயல்பான பகுதியாக முன்வைப்பதற்குப் பதிலாக, அதனை தவறானதாக புரிந்துகொள்ள வழிவகுக்கிறது.
  • தங்கள் குழந்தைகளுக்கு பாலியல் கல்வியை போதிக்கும் ஆசிரியர்களுடன் மாலை நேரத்தில் பெற்றோர்கள் உரையாடல்களில் ஈடுபடுவதும் குறிப்பிட்ட கல்வியாண்டில் பாலியல் கல்வியில் குழந்தைகள் என்ன படிக்கவிருக்கிறார்கள் என்பது குறித்து அறிந்துகொள்வதும் பெற்றோர்களுக்கு உதவுகிறது என ஈவா கோல்ட்ஃபார்ட் தெரிவிக்கிறார்.
  • யுனெஸ்கோவால் வெளியிடப்பட்டுள்ள பாலியல் கல்வி குறித்த சர்வதேச வழிகாட்டு நெறிமுறைகளும் கூட பெற்றோர்கள் இது குறித்த உரையாடலை தொடங்குவதற்கான நல்லதொரு தொடக்கமாக அமையும். உடல் மற்றும் ஆரோக்கியமான உறவுகள் குறித்து அடிப்படையான, தெளிவான எண்ணங்களுடன் யுனெஸ்கோவின் வழிகாட்டு நெறிமுறைகள் இருக்கின்றன.
பாலியல் கல்வி

பட மூலாதாரம், Getty Images

  • உதாரணமாக, 5-8 வயதுடைய குழந்தைகளிடம் "நம் உடலை யார், எங்கு தொட வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை அனைவருக்கும் இருக்கிறது" என கூறலாம்.
  • பதின்பருவத்தினருக்கு உணர்வுரீதியான ஆரோக்கியம் குறித்துப் பேசுவது தன் மீதும் மற்றவர்கள் மீதுமான பொறுப்பை உணர்வதில் உதவும். வழிகாட்டு நெறிமுறைகளின்படி ஆணுறைகள் மற்றும் கருத்தடை சாதனங்கள் குறித்து அவர்களிடம் விளக்க வேண்டும். பாலியல் இன்பம் குறித்து விளக்குவது பாதுகாப்பான பாலுறவு குறித்த சந்தேகங்களை விளக்குவதாக இருக்கும்.

(பிபிசி ஃப்யூச்சர்ஸ் பகுதியில் சோஃபியா ஸ்மித் கேலர் எழுதியது)

காணொளிக் குறிப்பு, மகாராஷ்டிராவில் திருநங்கையைக் கரம்பிடித்த திருநம்பி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: