செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற பெண்கள் திருமணம் செய்திருக்க வேண்டியது அவசியமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், எம். மணிகண்டன்
- பதவி, பிபிசி தமிழ்
இந்தியச் சமூகத்தில் குழந்தை பெற்றுக் கொள்வது முக்கியமான அங்கீகாரமாக கருதப்படுகிறது. ஆனால் இயற்கையாக எல்லோருக்கும் இது அமையாத சூழலில் செயற்கையான சிகிச்சை மற்றும் வழிமுறைகளை இவர்கள் பின்பற்ற வேண்டியிருக்கிறது.
திருமணம் செய்து கொள்பவர்கள் உடல் நலக் காரணங்களுக்காக குழந்தை பெறுவதற்குச் சிகிச்சை எடுத்துக் கொள்வது போல, கணவரைப் பிரிந்த, திருமணமாகாத பெண்களும், மனைவியைப் பிரிந்த, திருமணமாகாத ஆண்களும் இந்த உதவையைப் பெற முடியுமா என்ற கேள்வி எழுகிறது.
அது சாத்தியம் என்றால், அப்படி குழந்தை பெற்றுக்கொள்ள உதவும் சிகிச்சை முறைகள் என்ன? அவை எப்படிப்பட்டவை? இதன் மூலம் யாரெல்லாம் பயன்பெற முடியும்?
இந்தியாவைப் பொறுத்தவரை திருமணம் செய்து கொண்ட தம்பதிகள்தான் பெரும்பாலும் செயற்கை கருத்தரிப்பு உதவியை நாடுகிறார்கள். ஆனால் திருமணம் செய்து கொள்ளாத, கணவரைப் பிரிந்து வாழும் பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்வதும் சொற்பமான எண்ணிக்கையில் நடப்பதாக இந்தத் துறையில் இருப்பவர்கள் கூறுகிறார்கள்.


"திருமணம் ஆகிய ஓராண்டு வரையிலும் இயற்கையாகவே கருத்தரிக்க முடியவில்லை என்றால் அவர்களுக்கு செயற்கை கருத்தரிப்புக்கான சாத்தியங்களை பற்றி ஆய்வு செய்கிறோம்." என்கிறார் செயற்கை கருத்தரிப்பு நிபுணரான மருத்துவர் ஹலேதா.
"அவர்களுக்கு உடலில் எந்தப் பிரச்னையும் இல்லை என்று தெரிந்தால் அவர்களுக்கு இயற்கையான முறையில் கருத்தரிப்புக்கான சிகிச்சையை அளிப்போம். அது வெற்றியடையாத போது, Intrauterine insemination (IUI) ஐயூஐ என்ற முறையை மேற்கொள்வோம். பெண்ணின் கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்தும் முறை"

பட மூலாதாரம், Getty Images
செயற்கைக் கருத்தரிப்பு என்றால் என்ன?
இயற்கையான முறையில் அல்லாமல் மருத்துவ உதவியுடன் குழந்தை பெற்றுக் கொள்ளும் முறையைத்தான் செயற்கைக் கருத்தரிப்பு என்று பரவலாக அறியப்படுகிறது.
இந்தியச் சட்டங்கள் இதை குழந்தைபேற்றுக்கு உதவும் தொழில்நுட்டம் - assisted reproductive technology (ART) மற்றும் கருவைச் சுமப்பவர் gestational carrier (GC) - வாடகைத் தாய் என்று என்று வகைப்படுகிறது. இவற்றில் தொழில்நுட்பங்களைப் பொறுத்து ஐயூஐ, ஐவிஎஃப், ஐசிஎஸ்ஐ போன்றவை உள்ளன.
ஐவிஎஃப் (IVF) என்பது என்ன?
செயற்கை கருத்தரிப்பு என்றாலே பரவலாக அறியப்பட்ட முறை ஐவிஎஃப்தான்.
"ஐவிஎஃப் என்றால் அது டெஸ்ட் ட்யூப் பேபி" என்கிறார் மருத்துவர் ஜலேதா.

பட மூலாதாரம், Getty Images
" பெண்ணின் கருப்பையில் மருந்து மூலமாக கரு முட்டையை வளர வைக்கிறோம். பின்னர் அனஸ்தீசியா மூலமாக முட்டையை வெளியே எடுக்க வேண்டும். பின்னர் கணவரின் விந்தணுவைப் பெற்று அதை சோதனைக் கூடத்தில் கருவாக வளர வைத்து சில நாள்களில் பெண்ணின் கருப்பையில் மீண்டும் செலுத்துகிறோம். இதுதான் ஐவிஎஃப்"
செயற்கை கருத்தரிப்பில் தற்போதைய தொழில்நுட்பம் என்ன?
ஐவிஎஃப்-இன் முன்னேறிய வடிவம் ஐசிஎஸ்ஐ(ICSI). ஐவிஎஃப் முறையில் பல கரு முட்டைகளில் மொத்தமாக விந்தணுக்கள் ஊற்றப்படும். ஆனால் ஐ.சி.எஸ்.ஐ. முறையில் இது மாறுபடுகிறது. இதில் கரு முட்டையில் நேரடியாக ஒரேயொரு விந்தணுவைச் செலுத்து கருவை உருவாக்குகிறோம். அதற்கடுத்த படிநிலைகள் ஐ.வி.எஃப் (IVF) போன்றதே.
செயற்கை கருத்தரிப்பு முறையை யார் செய்து கொள்ள முடியும்?
"இயற்கையாக கருத்தரிக்க முடியாதவர்கள். கருப்பை குழாயில் அடைப்பு, கருப்பை குழாயில் நீர்கோர்ப்பது, கருப்பையை சுற்றியுள்ள இடத்தில் அதிகமாக நோய்தொற்று அதாவது எண்டோமெட்ரியோஸிஸ் ஆகியவை இருந்தால் கரு முட்டைகள் கருப்பைகள் சரியாக சென்று சேராது. இந்த மாதிரியான நிலை இருப்போருக்கு ஐவிஎஃப் உள்ளிட்ட செயற்கை கருத்தரிப்பு முறைகளை பரிந்துரைக்கிறோம்." என்கிறார் ஜலேதா.
கருப்பையை தவிர சுற்றியுள்ள இடத்தில் மட்டுமே பிரச்னை இருக்கிறது மற்றபடி கருப்பைக்குள் பிரச்னை இல்லை என்றால் அவர்களுக்கு செயற்கை கருத்தரிப்பு முறையை பயன்படுத்தலாம்.
யாருக்கு IVF முறையை பயன்படுத்த முடியாது?
பெண்ணுக்கு கருமுட்டையை உற்பத்தி செய்யும் திறன் குறைவாக இருக்கிறது என்றால் அவர்களுக்கு செயற்கை கருத்தரிப்பு முறையை பயன்படுத்த முடியாது என்கிறார் ஜலேதா.

பட மூலாதாரம், DR Haletha
அதேபோல் ஆணின் விந்தணுவில் எண்ணிக்கை அல்லது தரம் குறைவாக இருக்கிறது என்றாலும் அவர்களுடைய கருமுட்டை அல்லை விந்தணுவை பயன்படுத்த முடியாது. இந்த மாதிரியான சூழ்நிலையில் இருப்போர் கருமுட்டை அல்லது விந்தணுவை தானமாகப் பெற வேண்டியிருக்கும் என்கிறார் அவர்.
செயற்கை கருத்தரிப்பு முறையில் இரட்டையர் பிறக்க வாய்ப்புள்ளதா?
"அதிகபட்சமாக இரண்டு அல்லது மூன்று கருமுட்டைகளை மட்டுமே கருப்பைக்குள் வைக்க முடியும். இதில் எத்தனை கருமுட்டைகள் வேண்டுமானாலும் கருவாக வளரும் வாய்ப்பிருக்கிறது. சில நேரங்களில் எதுவுமே கருவாக வளராமல் போகவும் கூடும். ஆனால் தம்பதியர் இரட்டைக் குழந்தைகள் வேண்டும் என்று கோரி பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக் குறைவு. அதிகபட்சமாக மூன்று கருமுட்டைகளைத்தான் கருப்பைக்குள் செலுத்த வேண்டும்." என்று ஜலேதா கூறுகிறார்.
இரட்டையர் பெற்றுக் கொள்வதில் என்ன சவால் இருக்கிறது?
இயற்கையான முறையாக இருந்தாலும் செயற்கை முறையாக இருந்தாலும் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதில் சில சவால்கள் இருக்கின்றன என்று மருத்துவ நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்

பட மூலாதாரம், Getty Images
"ஒரு குழந்தைக்கு செல்ல வேண்டிய ரத்தம், ஊட்டச் சத்து போன்றவை இரண்டு குழந்தைகளுக்கும் பகிப்படும். இரட்டை அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் வயிற்றில் வளரும்போது தாய்க்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உள்ளிட்டவை அதிகரிக்கும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு. இரட்டைக் குழந்தைகள் பிறக்கும்போது வழக்கமான குழந்தையின் எடையை விட குறைவாக இருகப்பதற்கான வாய்ப்பு அதிகம். மூன்று குழந்தைகள் இருந்தால் எடை இன்னும் குறைவாக இருக்கும். இந்தச் சிக்கல்கள் காரணமாகவே இரண்டுக்கு மேற்பட்ட குழந்தைகள் கருப்பையில் வளரும்போது மூன்றாவது கருவை சட்டப்படி வளரவிடாமல் வைப்பதற்கான சிகிச்சையை பலர் எடுத்துக் கொள்கிறார்கள். இது எந்தக் குழந்தை என்பதோ, ஆணா பெண்ணா என்பதோ தெரிவிக்கப்படாது."
தம்பதியினர் அல்லது தனிநபர் விரும்பி இரட்டை குழந்தைகளை பெற்றுக் கொள்ள முடியுமா?
இரட்டைக் குழந்தைகள் வேண்டும் என்று கேட்டு யாரும் கருத்தரிக்க முடியாது என செயற்கை கருத்தரிப்பு முறை நிபுணர்கள் கூறுகிறார்கள்.
"உடல்நிலையைப் பொறுத்தே எத்தனை கருமுட்டைகளை கருப்பைக்குள் வைக்க வேண்டும் என்பதை மருத்துவர்கள்தான முடிவு செய்வார்கள். இதில் விருப்பம் ஏதும் கூற முடியாது. இரு கருமுட்டைகளை வைக்கும்போது இரண்டும் கருவாகும்போது இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பிருக்கிறது." என்று கூறுகிறார் செயற்கை கருத்தரிப்பு நிபுணரான ஆஷா.

பட மூலாதாரம், DR ASHA
செயற்கை கருத்தரிப்பில் பிறக்கும் குழந்தைகளுக்கும் இயற்கையாக பிறக்கும் குழந்தைகளுக்கும் ஏதேனும் வேறுபாடு உண்டா?
குழந்தைகளின் கரு வளர்ச்சியைப் பொறுத்தவரை எந்த வேறுபாடும் இருக்காது. உடல்நலனிலும் எந்த வேறுபாடும் இருக்காது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
திருமணம் ஆகாத அல்லது கணவரைப் பிரிந்து வாழும் பெண்கள் செயற்கைக் கருத்தரிப்பு முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள முடியுமா?
தனியாக வாழும் பெண்கள் செயற்கை கருத்தரிப்பு முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும். இதற்கு விந்தணுக்களை தானமாகப் பெற வேண்டும் என்கிறார் மருத்துவர் ஆஷா.

பட மூலாதாரம், Getty Images
"குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் பெண்ணுக்கு கருப்பையில் எந்தப் பிரச்னையும் இல்லையென்றால் நேரடியாக அவர்களுடைய கருப்பையில் விந்தணுக்களைச் செலுத்தும் ஐயூஐ என்ற முறை பின்பற்றப்படும். கருப்பையில் பிரச்னை இருந்தால் ஐவிஎஃப் எனப்படும் சோதனைக்கூட கருத்தரிப்பு முறை மேற்கொள்ளப்படும். இதற்கு உரிய சட்ட நடைமுறைகளை முடித்த பிறகு செயற்கை கருத்தரிப்பு அவர்கள் வர வேண்டும்."
திருமணமாகாத பெண்கள் செயற்கை கருத்தரிப்பு முறையில் குழந்தை பெற்றுக் கொள்வது பற்றி சட்டம் என்ன சொல்கிறது?
இந்தியாவைப் பொறுத்தவரை செயற்கைக் கருத்தரிப்பு குறித்த சட்டங்கள் படிப்படியாக உருப்பெற்று வருகின்றன. கடந்த ஆண்டு உடலுறவு இல்லாத வகையில் குழந்தை பெற்றுக் கொள்ளும் தொழில்நுட்பங்களை வரைமுறைப்படுத்தும் சட்டத்தை மத்திய அரசு இயற்றியது.

பட மூலாதாரம், HANSA
"இப்போதைய சட்டங்களின்படி திருமணமாகாத அல்லது திருமணம் ஆன பெண் என்று எதையும் சட்டம் குறிப்பிடவில்லை. தம்பதி அல்லது பெண் என்று மட்டுமே குறிப்பிடுகிறது. எனவே திருமணமாகாத பெண் செயற்கை கருத்தரிப்பு முறையில் குழந்தை பெற்றுக் கொள்வதற்கு சட்ட ரீதியான எந்தத் தடையும் இல்லை." என்கிறார் வழக்கறிஞர் ஹன்ஸா.
"21 வயதுக்கு மேற்பட்ட 50 வயதுக்கு உட்பட்ட பெண், 21 முதல் 55 வயது வரம்பிலுள்ள ஆண் அல்லது தம்பதிகள் இந்த மருத்துவ உதவிப் பெறலாம்." என்கிறார் அவர்.
தனியாக வசிக்கும் ஆண்கள் குழந்தை பெற்றுக் கொள்ள முடியுமா?
பெண்ணைப் பொறுத்தவரை விந்தணுவை தானமாகப் பெற்று குழந்தை பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் ஆணுக்கு கரு முட்டையும் கருப்பையும் தானமாகக் கிடைக்க வேண்டும். அதாவது வாடகைத் தாய் முறை மூலம் மட்டுமே தனியாக வசிக்கும் ஆண் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும்.
வாடகைத் தாய் அல்லது பதிலித் தாய் என்பது என்ன?
ஐவிஎஃப் முறையில் சோதனைக் கூடத்தில் உருவாக்கப்படும் கருவானது தம்பதி அல்லாத வேறொரு பெண்ணின் கருப்பையில் வைக்கப்பட்டு குழந்தை பெற்றுக் கொள்வதைத்தான வாடகைத் தாய் அல்லது பதிலித்தாய் முறை என்று கூறுகிறார்கள். இதில் கருவைச் சுமக்கும் தாயாக மட்டும் அந்தப் பெண் இருப்பார்.

பட மூலாதாரம், Getty Images
தம்பதிகளில் பெண்ணின் கருப்பையில் ஏதேனும் பிரச்னை இருந்து அவர்களால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாதபோது இந்த முறையை தேர்வு செய்கிறார்கள்.
பிறக்கும் குழந்தைக்கு வாடகைத்தாய் உரிமை கோர முடியுமா?
"முடியாது" என்கிறார் வழக்கறிஞர் ஹன்ஸா. எந்தத் தம்பதி அல்லது நபர் வாடகைத் தாயைப் பயன்படுத்துகிறார்களோ அவர்களுக்கே குழந்தையின் முழு உரிமையும் கிடைக்கும். வாடகைத் தாய்க்கு குழந்தையைப் பார்க்கும் உரிமைகூட கிடையாது என்று சட்டம் கூறுகிறது என்கிறார் அவர்.
வழக்கமாக வாடகைத் தாய் அல்லது விந்தணுவைத் தானமாகக் கொடுத்தவர் பற்றிய விவரங்கள் வெளியிடப்படுவதில்லை. "உறவினர் அல்லது தெரிந்தவர் வாடகைத் தாயாகச் செயல்பட்டாலும்கூட குழந்தையின்மீது உரிமைகோர முடியாது" என்று சட்டத்தில் கூறப்பட்டிருப்பதாக ஹன்ஸா தெரிவிக்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













