மாணவர்களை கழிவறையைச் சுத்தம் செய்ய வைத்ததாக தலைமை ஆசிரியை கைது

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள பாலக்கரை ஊராட்சி அரசு தொடக்கப்பள்ளியில் பட்டியல் இன மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த வழக்கில் தலைமறைவாக இருந்த தலைமை ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள பாலக்கரையில் தமிழக அரசின் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.
இங்கு அப்பகுதியைச் சேர்ந்த 35 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் 2 கழிப்பறைகள் உள்ளன. ஒன்றை ஆசிரியர்களும், மற்றொன்றை மாணவர்களும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அப்பள்ளியில் படிக்கும் சில மாணவர்கள் உடல்நல பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர்.
மருத்துவர்கள் அந்த சிறுவர்களிடம் உடல்நல பாதிப்பு குறித்து விசாரித்த போது, ப்ளீச்சிங் பவுடர் உள்ளிட்டவற்றை கொண்டு பள்ளி கழிவறையை சுத்தம் செய்ததால் பாதிப்பு ஏற்பட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
இதை அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அப்பள்ளியின் தலைமை ஆசிரியை கீதா ராணி கடந்த ஒரு வருடமாக அப்பள்ளியில் படிக்கும் பட்டியலின மாணவர்கள் 6 பேரை, பிளீச்சிங் பவுடர், டெட்டால் உள்ளிட்டவற்றை கொண்டு பள்ளி கழிவறையை சுத்தம் செய்ய வைத்தது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து தலைமை ஆசிரியை கீதா ராணி பணி இடை நீக்கம் செய்யப்பட்டார்.
மேலும் மாணவர்களின் பெற்றோர்கள் பெருந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், பெருந்துறை போலீசார் தலைமை ஆசிரியை கீதா ராணியின் மீது குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்புச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டம், ஆபத்தான ரசாயனங்களை பாதுகாப்பற்ற முறையில் பயன்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், பெருந்துறை போலீசார் இன்று காலை தலைமறைவாக இருந்த கீதா ராணியை கைது செய்து விசாரணை நடத்தினர்.
பின்னர் ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








