திருப்பூர் ஜவுளித் துறையை முடக்கும் யுக்ரேன் யுத்தம் - பின்னணி என்ன?

திருப்பூர் ஜவுளித்துறை
    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

தமிழ்நாட்டின் டாலர் சிட்டி என்று அழைக்கப்படுவது திருப்பூர். தமிழ்நாட்டின் பிற ஊர்களைச் சேர்ந்தவர்களுக்கும் தமிழ்நாட்டிற்கு வரும் பிற மாநில தொழிலாளர்களுக்கும் வேலை வாய்ப்பு வழங்குவதில் திருப்பூரின் பங்கு முக்கியமானது. ஆண்டு ஒன்றுக்கு ரூ.60,000 கோடி மதிப்பிலான ஜவுளி உற்பத்தி திருப்பூரில் நடைபெறுகிறது.

பல தசாப்தங்களாக ஆடை உற்பத்தியில் கோலாச்சி வந்த திருப்பூர் கடந்த சில வருடங்களாக தொடர் சரிவை சந்தித்து வருகிறது. மூலப் பொருட்கள் விலை உயர்வு, ஆர்டர் தட்டுப்பாடு போன்ற காரணங்களால் திருப்பூரில் பெரும்பாலான நிறுவனங்கள் தற்போது ஆடை உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. என்ன நடக்கிறது திருப்பூர் ஜவுளித் துறையில்?

பணமதிப்பிழப்பில் தொடங்கிய சரிவு

திருப்பூரில் தற்போது 30% வரைதான் பணி நடைபெற்று வருவதாக தெரிவிக்கிறார் திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கத்தைச் சேர்ந்த முத்துரத்தினம்.

கொரோனா பொது முடக்கத்திலிருந்துதான் ஜவுளித்துறை சரிவடைய ஆரம்பித்தது என்று கூறுவது சரியாக இருக்காது என்கிறார் இவர்.

"திருப்பூர் ஜவுளி சந்தையில் 90% சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தான். பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் இருந்தே சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சரியத் தொடங்கிவிட்டன. 

அதன் பின்னர் ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்ட பிறகு ஏற்கனவே நலிவடைந்திருந்த ஜவுளித்துறை மேலும் பல நெருக்கடிகளைச் சந்தித்தது. கொரோனா பொது முடக்கம் இந்த சரிவை துரிதப்படுத்தியது. சர்வதேச ஏற்றுமதியில் இந்தியாவின் பங்களிப்பும் சரிய ஆரம்பித்தது," என்கிறார் முத்துரத்தினம்.

2017ஆம் ஆண்டு சர்வதேச அளவில் ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதியில் 5% பங்களிப்புடன் 2வது இடத்தில் இருந்தது இந்தியா. அதன் பின்னர் படிப்படியாக சரிந்து 2020ஆம் ஆண்டில் 6 வது இடத்திற்கு சரிந்துள்ளது. சீனா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.

"விலையேற்றத்தால் ஜவுளி ஏற்றுமதி மதிப்பு அதிகமாக இருப்பதாக தெரிந்தாலும் ஏற்றுமதி அளவு என்பது குறைவாகவே இருந்து வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் ஏற்கனவே 50% சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உற்பத்தியை முழுவதுமாக நிறுத்துவிட்டன. பருத்தி விலை இந்த ஆண்டு வரலாறு காணாத உச்சத்தை எட்டியது.

"இதனால் பெரும்பாலான உற்பத்தியாளர்கள் பாலிஸ்டர் ஆடை உற்பத்திக்கு மாறத் தொடங்கிவிட்டனர். காட்டன் ஆடைகள் உற்பத்தி 20% வரை சரிந்துவிட்டது. அதே போல் வங்கதேசத்தில் இருந்து இறக்குமதி செய்வதும் அதிகரித்து வருகிறது. வங்கதேசத்தில் இருந்து இறக்குமதி செய்ய வரி இல்லை. உள்நாட்டு விற்பனையாளர்களும் விலை குறைவு என்பதால் வங்கதேச ஆடைகளையே தேர்வு செய்கின்றனர். வங்கதேசம் வழியாக சீனாவில் தயாரிக்கப்படும் ஆடைகளும் இந்திய சந்தைக்கு வருகின்றன," என்றார் முத்துரத்தினம்.

திருப்பூர் ஜவுளித்துறையில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியால், சர்வதேச ஏற்றுமதியில் இந்தியாவின் பங்களிப்பும் சரிய ஆரம்பித்துள்ளதாகக் கூறுகிறார் முத்துரத்தினம்
படக்குறிப்பு, திருப்பூர் ஜவுளித்துறையில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியால், சர்வதேச ஏற்றுமதியில் இந்தியாவின் பங்களிப்பும் சரிய ஆரம்பித்துள்ளதாகக் கூறுகிறார் முத்துரத்தினம்

ரஷ்யா - யுக்ரேன் போரால் சரிந்த ஏற்றுமதி

ரஷ்யா - யுக்ரேன் போரும் இந்தியாவின் ஏற்றுமதி சரிவுக்கு முக்கிய காரணம் என்கிறார் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் செயலாளர் சக்திவேல்.

இந்தியாவின் 70% ஜவுளி ஏற்றுமதி சந்தை அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்டனில் தான் உள்ளது என்று கூறும் இவர், உக்ரைன் - ரஷ்யா போரால் மேற்குலக சந்தை கடுமையான நிதி நெருக்கடி மற்றும் விலையேற்றத்தைச் சந்தித்து வருதால் அந்நாடுகள் ஆடை இறக்குமதியை நிறுத்திவிட்டதாகக் கூறுகிறார்.

"நடப்பு நிதியாண்டில் ஆயத்த ஆடை ஏற்றுமதி ஏப்ரல் மாதத்தில் 12,000 கோடி ரூபாயாக இருந்து, அக்டோபர் மாதத்தில் ரூ.8,141 கோடியாக சரிந்தது. கடந்த ஆண்டின் ஏற்றுமதியை விட இது 14% சரிவு.

அதே சமயம் பின்னலாடை ஏற்றுமதி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரூ.3,298 கோடியாக இருந்து அக்டோபர் மாதத்தில் 2,165 கோடியாக சரிந்துள்ளது. கடந்த ஆண்டின் ஏற்றுமதியை விட இது 35% சரிவு.

"வங்கதேசத்திலிருந்து ஆண்டுக்கு ஆண்டு இறக்குமதி அதிகரித்து வருவது உண்மை தான். அதனால் நாம் கவலைப்பட வேண்டியது இல்லை. இந்த ஆண்டு வங்கதேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஜவுளி மதிப்பு ரூ.5,000 கோடியாக உள்ளது. அதே சமயம் இந்தியாவிலிருந்து பருத்தி மற்றும் நூல் இறக்குமதி செய்யும் நாடுகளில் வங்கதேசம் முதன்மையாக உள்ளது. அதையும் கவனத்தில் கொண்டு தான் பார்க்க வேண்டும். வங்கதேச இறக்குமதியால் உள்நாட்டு உற்பத்திக்கு பெரிய அளவில் ஆபத்து இருக்காது," என்கிறார் சக்திவேல்.

இந்தியாவிலிருந்து பருத்தி மற்றும் நூல் அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளில் சீனா, வங்கதேசம், வியட்நாம் முதன்மையாக உள்ளது. ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி வங்கதேசம் மற்றும் வியட்நாம் ஜவுளி ஏற்றுமதியில் 2வது மற்றும் 4வது இடம் பிடித்துள்ளன. 

ஆயத்த ஆடை ஏற்றுமதி 14% சரிவை சந்தித்துள்ளது என்கிறார் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் செயலாளர் சக்திவேல்

பருத்தி சந்தை சீராக இருக்க வேண்டும்

இந்த ஆண்டு ஒரு கேண்டி (355 கிலோ) பருத்தியின் விலை ரூ.1 லட்சத்தை தாண்டியது. பருத்தி விலையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்ற பஞ்சாலைகளின் கோரிக்கையை தொடர்ந்து பருத்தி இறக்குமதி மீதான வரி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. ஆனால் பருத்தி விலை எதிர்பார்த்த அளவு குறையவில்லை என்கிறார் தென்னிந்திய நூற்பாலை சங்கத்தின் செயலாளர் ஜெகதீஷ் சந்திரா. 

பிபிசி தமிழிடம் பேசியவர், "ஒவ்வொரு ஆண்டும் பருத்தி உற்பத்தி எவ்வளவு இருக்கும் என்பது முன்கூட்டியே கணிக்கப்படும். ஆனால் கடந்த ஆண்டு இந்த கணிப்பு தவறியது. உள்நாட்டு தேவைக்கு இல்லாமல் பருத்தி ஏற்றுமதி செய்யப்பட்டது. அதனால் தான் மிகப்பெரிய அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஒரு கேண்டி பருத்தி தற்போது ரூ.75,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. 

"இந்த ஆண்டு 360 கோடி பேல் பருத்தி உற்பத்தி செய்யப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. தற்போதைய விளைச்சலும் அதற்கு ஈடாக வருகிறது. அரசு உள்நாட்டு தேவைக்கான இருப்பை உறுதி செய்த பிறகே ஏற்றுமதிக்கு அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தோம். ஆனால் அரசு ஏற்றுமதிக்கு தடை விதிக்கத் தயங்குகிறது. கடந்த ஆண்டு ஏற்பட்டது போன்ற நெருக்கடி இந்த ஆண்டும் ஏற்பட்டுவிடக்கூடாது," என்கிறார்.

பருத்தி விலை எதிர்பார்த்த அளவு குறையவில்லை என்கிறார் தென்னிந்திய நூற்பாலை சங்கத்தின் செயலாளர் ஜெகதீஷ் சந்திரா
படக்குறிப்பு, பருத்தி விலை எதிர்பார்த்த அளவு குறையவில்லை என்கிறார் தென்னிந்திய நூற்பாலை சங்கத்தின் செயலாளர் ஜெகதீஷ் சந்திரா

மின் விலையேற்றத்தால் ஏற்பட்ட பாதிப்பு

தமிழக அரசு மின் கட்டணம் உயர்த்தப்படும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது தொழிற்துறையினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

’புதிய மின் கட்டண விகிதத்தால் தற்போது 25% வரை செலவு அதிகரித்துள்ளது. இனி ஆண்டுதோறும் மின் கட்டணம் உயர்த்தப்படும் என்கிற அறிவிப்பு தொழில்துறையை கடுமையாக பாதிக்கும் என்கிறார் ஜெகதீஷ் சந்திரா.

மின் கட்டணம் அதிகரித்திருப்பது விசைத்தறிகளை கடுமையாக பாதித்துள்ளதாகக் கூறுகின்றனர் பிசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர்

மின் கட்டணம் செலுத்தாத விசைத்தறிகள்

மின் கட்டண உயர்வு அறிவிப்பு வந்ததிலிருந்து கோவை திருப்பூர் மாவட்டங்களில் இயங்கி வரும் விசைத்தறிகள் மின்சார கட்டணம் செலுத்தவில்லை என்கிறார் விசைத்தறி உரிமையாளர் சங்கத்தின் பொருளாளர் பூபதி. 

"ஏற்கனவே 50 சதவிகிதத்துக்கும் குறைவான விசைத்தறிகள் தான் இயங்கி வந்தன. 20% விசைத்தறிகள் ஸ்கிராப்புக்கு சென்று விட்டன. இந்த நிலையில் மின் கட்டணம் 1 யூனிட்டிற்கு ரூ.1.50 அதிகரித்திருப்பது விசைத்தறிகளை கடுமையாக பாதித்துள்ளது. உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை செலுத்தப்போவதில்லை என ஏற்கனவே தீர்மானித்திருந்தோம்.

"அதனால் இரண்டு மாதங்களாக மின் கட்டணம் செலுத்தவில்லை. தற்போது ஆடை உற்பத்தி நிறுவனங்களும் பாவு நூல் வழங்குவதை தற்காலிகமாக நிறுத்துவிட்டார்கள். கடந்த பிப்ரவரி ஒப்புக் கொண்ட ஊதிய உயர்வும் முழுமையாக வழங்கப்படவில்லை. மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். முதல்வரையும் நேரில் சந்திக்க உள்ளோம்," என்றார். 

இந்தியாவில் உள்ள பஞ்சாலைகளில் 45% தமிழ்நாட்டில் தான் உள்ளன

ஏற்றுமதிக்கு கவனம் தேவை

கடந்த 15 ஆண்டுகளாகவே இந்தியா ஜவுளி ஏற்றுமதியில் சர்வதேச அளவில் 4% பங்களிப்பு தான் செய்து வருகிறது. ஆனால் உலகிலேயே பருத்தி அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா தான். ஜவுளி உற்பத்திக்கு என்று புதிய கொள்கை வேண்டும் என்கிறார் முத்து ரத்தினம். 

"இந்தியாவில் பருத்தி உற்பத்தியும் அதிக அளவில் உள்ளது. போதிய மனித வளமும், தொழில்நுட்பமும் நம்மிடம் உள்ளது. ஆனால் நம்மை விட சிறிய நாடுகளான வங்கதேசம், வியட்நாம் ஜவுளி ஏற்றுமதியில் கோலோச்சுகின்றன. இந்திய அரசிடம் தெளிவான கொள்கை இல்லாததே இதற்கு காரணம். ஜவுளி ஏற்றுமதிக்கு இந்திய அரசு தமிழக அரசுடன் இணைந்து புதிய கொள்கையை உருவாக்க வேண்டும். தமிழ்நாட்டில் பருத்தி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்," என்றார் முத்துரத்தினம். 

இந்தியாவில் உள்ள பஞ்சாலைகளில் 45% தமிழ்நாட்டில் தான் உள்ளன. ஆண்டு ஒன்றுக்கு 120 கோடி பேல் பருத்தி தமிழ்நாட்டிற்கு தேவைப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் 6 கோடி பேல் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் பருத்தி உற்பத்தியை ஊக்குவித்து அதிகரிக்க வேண்டும் என ஜவுளித்துறையினர் கோரிக்கை வைக்கின்றனர்.

தமிழ்நாடு பருத்தி கழகம் தொடங்கும் திட்டம் உள்ளதாகக் கூறுகிறார் தமிழக ஜவுளித்துறை அமைச்சர் ஆர்.காந்தி

தமிழக அரசு என்ன செய்கிறது?

ஜவுளித்துறையின்கோரிக்கைகள் தொடர்பாக தமிழக ஜவுளித்துறை அமைச்சர் ஆர்.காந்தி பிபிசி தமிழிடம் பேசுகையில், பருத்தி விலையை மத்திய அரசு தான் கட்டுப்படுத்த வேண்டுமெனக் கூறினார்.

"11% இறக்குமதி வரியை நிரந்தரமாக ரத்து செய்யவேண்டும் என மத்திய அரசிடம் தெரிவித்துள்ளோம். மின்கட்டண உயர்வை பொருத்தவரை மத்திய அரசின் விதிகளின்படி தான் செய்யப்பட்டுள்ளது. அப்போதும் மக்களை பாதிக்காதவாறு மின் கட்டண உயர்வுஅமல்படுத்தப்பட்டுள்ளது.

"தமிழ்நாட்டில் பருத்தி உற்பத்தியை வேளாண்துறை வசம் இல்லாமல் ஜவுளித்துறையே கையாள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜவுளித்துறைக்கு ஒரு ஆணையர் இருந்ததை மாற்றி இரு ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் தற்போது 10 லட்சம் பேல் பருத்தி உற்பத்தியாகிறது. இதை படிப்படியாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தேசிய பருத்தி கழகத்தைப் போல தமிழ்நாடு பருத்தி கழகம் தொடங்கும் திட்டமும் உள்ளது. நிதி நிலைமை சீரடைந்த பிறகு அதுவும் உருவாக்கப்படும்," என்றார் காந்தி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: