'என் மனைவியின் படங்களை தவறாகச் சித்தரித்து பணம் கேட்டு மிரட்டினார்கள்' - சைபர் உலகின் மறுபக்கம்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், க. சுபகுணம்
- பதவி, பிபிசி தமிழ்
மகேந்திரனுக்கு(பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஒருமுறை வாட்ஸ் ஆப்பில் ஒரு தெரியாத மொபைல் எண்ணிலிருந்து சில படங்கள் வந்தன. அந்தப் படங்கள் அவரது மனைவி, தங்கை போன்ற தன் குடும்பப் பெண்களின் படங்கள். அவர் தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்த, அவர் டேக் செய்யப்பட்டிருந்த படங்கள் அவை.
அவற்றில் சிலவற்றை மார்ஃபிங் செய்து, தவறாகச் சித்தரித்து எடிட் செய்து அனுப்பியிருந்தனர். அவர் பதறிப் போனார். உடனடியாக அந்த எண்ணைத் தொடர்புகொள்ள முயன்றார். எதிர்தரப்பில் கட் செய்துவிட்டு, வாட்ஸ் ஆப் காலில் வந்தனர்.
“என் வீட்டுப் பெண்களுடைய படங்களை தவறாகச் சித்தரித்து, பணம் கேட்டு மிரட்டினார்கள். 'உடனடியாக 10,000 ரூபாய் பணத்தை நான் சொல்லும் ஜிபே எண்ணுக்கு அனுப்பிவிடு. அப்போதுதான் அவர்களுடைய படங்களை வெளியில் பகிராமல் டெலிட் செய்வேன்’ என்று மிரட்டினார்கள். என்னிடம் உடனே கொடுக்க அவ்வளவு பணம் இல்லை தயவு செய்து இதை யாருக்கும் அனுப்ப வேண்டாம் என்று கெஞ்சினேன்,” என்றார் மகேந்திரன்.
சில நிமிடங்கள் அவர் கெஞ்சிய பிறகு 6,000 ரூபாய் அனுப்புமாறும் அதன்பிறகு டெலிட் செய்துவிடுவதாகவும் கூறியுள்ளனர். ஆனால், அதற்குப் பிறகு மீண்டும் அவரிடம் “நீ முழு பணத்தையும் அனுப்பவில்லை. அதை அனுப்பிய பிறகே டெலிட் செய்வேன்” எனக் கூறியுள்ளார் எதிர்தரப்பில் இருந்தவர். வேறு வழியின்றி மீதியையும் மகேந்திரன் அனுப்பியுள்ளார்.
ஆனால், உண்மையில் நடந்தது வேறு. இணையதளம் ஒன்றில் அந்தப் புகைப்படங்களோடு, விலைமாதர் விளம்பரம் பதிவிடப்பட்டிருந்தது. அப்போதுதான் சுதாரித்துக்கொண்டவர், இதுகுறித்து காவல்துறையில் புகார் தெரிவித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் அந்த விளம்பரம் அடுத்த சில மணிநேரங்களில் நீக்கப்பட்டிருந்தது. அதற்குப் பிறகு அவர்களிடமிருந்து எந்த அழைப்பும் குறுஞ்செய்தியும் வரவில்லை.
இந்த மாதிரியான மிரட்டல்களால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தேசிய குற்ற ஆவண காப்பக தரவுகளின்படி 2018 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் 63.48 சதவீதம் இத்தகைய குற்றங்கள் அதிகரித்துள்ளன. இத்தகைய பிரச்னைகளை அனைவரும் வெளியில் வந்து சொல்வதும் இல்லை.
தங்களுடைய குடும்பப் பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்னை என்பதால், ஆரம்பத்தில் இதை வெளியே கொண்டு போகாமல் அமைதியாக முடிக்க வேண்டும் என்றே பலரும் கருதுகின்றனர்.
அந்த மனப்பான்மையால் ஆரம்பத்தில் பணம் கொடுக்கும்போது, மிரட்டினால் மேன்மேலும் பணம் பிடுங்க முடியும் என்பதை உணர்ந்து எதிர்தரப்பில் இருப்பவர்களும் தொடர்ந்து மிரட்டுகிறார்கள் என்கிறார் சைபர் குற்றப் பிரிவு வழக்கறிஞர் கார்த்திகேயன்.

மேலும், “இதில் இரண்டு வகைகள் உள்ளன. சமூக ஊடகங்களில் அணுகி, ஆசையாகப் பேசி, பழகி வாட்ஸ் ஆப் எண் வாங்கி, பிறகு மிரட்டுவார்கள். இன்னொரு வகையில், நாம் பயன்படுத்தும் ஆன்லைன் கூப்பன்களில் நாம் கொடுக்கும் தகவல்களைப் பயன்படுத்தி டிராக் செய்து மிரட்டுவார்கள்,” எனக் கூறுகிறார் கார்த்திகேயன்.
“சமூக ஊடகங்களில் இளம் பெண்களின் ஒளிப்படங்களைக் கொண்டு போலியாக ஒரு கணக்கு தொடங்கி, அதிலிருந்து சிலரைத் தேடிப் பிடித்து குறுஞ்செய்தி அனுப்புவார்கள். இந்தப் படங்களை டேட்டிங் தளங்களில் இருந்தும் மற்ற சில பார்னோகிராஃபி தளங்களில் இருந்தும் எடுத்துக் கொள்வார்கள்.
அந்தக் கணக்கில் இருந்து, பலருக்கும் மெசேஜ் அனுப்புவார்கள். இந்த மாதிரியான விஷயங்களில் பலவீனமாக இருப்பவர்கள் அவர்களுடைய கோரிக்கையை ஏற்று நட்பாவார்கள். அவர்கள் மேற்கொண்டு ஆசையாகப் பேசி, நன்கு பழகி, வாட்ஸ் ஆப் எண்ணை வாங்கிக் கொள்வார்கள்.
வாட்ஸ் ஆப் எண்ணை வாங்கி, அதில் நேரடியாக வீடியோ கால் செய்து பேசுவார்கள். அதில் வருவது எதிரில் வேறொரு திறன்பேசியில் கணக்கில் ப்ளே செய்யப்பட்டிருக்கும் ஒரு பெண்ணின் வீடியோவாக கூட இருக்கலாம்.

அந்தப் பெண்ணின் வீடியோவை போட்டுவிட்டு, எதிரில் வீடியோ காலில் தெரியும்படி வைத்துவிடுவார்கள். அதை இந்தப் பக்கம் இருப்பவர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அதை வீடியோ காலில் பேசுவதைப் போல பதிவும் செய்துகொண்டு, அதை வைத்து மிரட்டுவார்கள்.”
இன்னும் சிலர் இப்படி நன்கு பேசிப் பழகி எண்ணை வாங்கிய பிறகு, குடும்பத்தினரின் படங்கள் ஆகியவற்றை சமூக ஊடகக் கணக்குகளில் இருந்து எடுத்து, அதை வைத்து மிரட்டிப் பணம் பறிக்கப் பார்ப்பார்கள் எனக் கூறுகிறார்.
இத்தகைய சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. நாட்டின் ஏதோவொரு மூலையில் அமர்ந்துகொண்டு, சமூக ஊடகத்தில் ஒரு போலிக் கணக்கைத் தொடங்கி வைத்துக் கொண்டு, கையில் ஒரு திறன்பேசியை வைத்துக்கொண்டு இதைச் செய்துவிட முடியும்.
மேலும், “எதிர்புறத்தில் ஆடையின்றி படத்தை அனுப்பி, தான் அனுப்பியதைப் போலவே இவர்களையும் அனுப்பச் சொல்லி ஆசையாகப் பேசுவார்கள். இந்தத் தரப்பில் இருப்பவர் அப்படி அனுப்பியதும் அதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டுவார்கள்,” எனக் கூறுகிறார் கார்த்திகேயன்.

பட மூலாதாரம், Getty Images
கழுகுக் கண்களோடு “டேட்டிங் செயலியில் காத்திருப்பார்கள்”
டேட்டிங் செயலிகளில் புதிதாக ஒருவர் பதிவு செய்யும்போது இதுபோன்ற நபர்கள் அவர்களை உடனடியாக அணுகுவார்கள். ஒருவேளை எதிர்புறத்தில் இருப்பவர்கள் எச்சரிக்கையாக இல்லாமல் பேசத் தொடங்கினால், “அவரை தங்களுடைய வலையில் விழ வைப்பதற்கான முயற்சிகளை செய்யத் தொடங்குவார்கள்.”
இதுபோன்ற டேட்டிங் செயலிகளில் அத்தகைய பல போலிக் கணக்குகளைத் தொடங்கி வைத்துக்கொண்டு, அவர்கள் புதிதாக அதில் பதிவு செய்பவர்களுக்காகக் காத்திருப்பார்கள் எனக் கூறுகிறார் கார்த்திகேயன்.
இந்த மாதிரியான செயலிகளின் மூலம் அவர்களுக்கு இப்படியான ஆர்வம் இருப்பதைத் தெரிந்துகொண்டு, பிறகு சமூக ஊடகங்களில் அவர்களைத் தேடிப் பிடித்து அடுத்தகட்ட அணுகுமுறையைத் தொடங்குவார்கள்.
சரி, இப்படி ஒருவர் இந்த மாதிரியான விஷயங்களில் தாமாக முன்னெடுப்புகளை எடுத்தால் தான் பிரச்னை வருமா என்றால் இல்லை. நாம் பயன்படுத்தும் ஆன்லைன் கூப்பன்களையும் சைபர் குற்றவாளிகள் வேவுபார்த்துக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார்.

இதில் “நீங்களே தான் இந்த மாதிரியான முயற்சிகளிலோ இந்தத் தளங்களிலோ சென்று பார்த்திருக்கவோ பேசியிருக்கவோ வேண்டும் என்றில்லை. ஒருவேளை உங்கள் கணக்கையே வேறு யாரேனும் பயன்படுத்தியிருக்கலாம். அப்போது அவர்கள் சிக்கியிருந்து, அது உங்களைப் பாதித்திருக்கக் கூடும்.
அதுமட்டுமின்றி, நிறைய ஆன்லைன் கூப்பன்கள் நமக்கு ஷாப்பிங் சலுகைகளை வழங்குகின்றன. இத்தகைய ஆன்லைன் கூப்பன்கள் பல இடங்களில் விற்கப்படுகின்றன. இதில் முறையாகச் செய்பவையும் இருக்கின்றன. அதேநேரத்தில் சில கூப்பன்களில் இத்தகைய சைபர் குற்றவாளிகள் பொறி வைத்து, அதைப் பயன்படுத்துபவர்களைக் குறி வைக்கின்றனர்.
ஆன்லைன் கூப்பன்களை லாக்-இன் செய்வதற்காக நாம் பெரும்பாலும் சமூக ஊடக கணக்குகளைப் பயன்படுத்துகிறோம். இன்றைய திறன்பேசிகளில், ஒவ்வொரு முறை புதிதாக லாக்-இன் செய்யும்போதும் மின்னஞ்சல் கணக்கை வைத்தோ ஃபேஸ்புக் கணக்கை வைத்தோ லாக்-இன் செய்துகொள்ளும் வசதி இருக்கிறது. நாம் அதைப் பயன்படுத்தி லாக்-இன் செய்யும்போது, அவர்கள் நமக்கே தெரியாமல் அந்த லாக்-இன் விவரங்களை எடுத்துக் கொள்கிறார்கள்.

பட மூலாதாரம், Getty Images
இப்படி எங்கோ, எப்படியோ நாம் நம்முடைய கணக்கு விவரங்களைக் கொடுப்பதால், யார் கைக்கு எது போகிறது எனத் தெரியாது. இப்படிக் கிடைக்கும் கணக்குகளைக் கண்காணித்து, அதை வைத்திருப்பவர்கள் எப்போது பலவீனமாக இருக்கிறார்களோ, அப்போது அவர்கள் இத்தகைய மிரட்டல்களைச் செய்வார்கள்,” எனக் கூறுகிறார்.
சான்றாக, மகேந்திரன் குடும்பத்தில் பெண் உறுப்பினர்கள் இருக்கும்போது, அவர்களுடன் அவர் எவ்வளவு உணர்ச்சிமிகுந்த உறவு கொண்டுள்ளார் என்பதை சமூக ஊடகப் பகுப்பாய்வு மூலம் தெரிந்து கொள்ளும்போது, அந்தப் பெண்களைப் பயன்படுத்தி மிரட்டினால் பணம் பிடுங்க முடியும் என்று முயற்சியை மேற்கொள்கின்றனர்.
ஒருவேளை ஒருவர் பாலியல்ரீதியாக பலவீனமானவராக இருந்தால், அதைப் பயன்படுத்தி பணம் பிடுங்கும் முயற்சிகளை மேற்கொள்வார்கள். இப்படி தங்கள் கைக்குக் கிடைக்கும் விவரங்களைப் பயன்படுத்தி, கண்காணித்து பணம் பறிக்கும் முயற்சிகளில் அவர்கள் இறங்குகின்றனர்.
தனியுரிமைக்கு யாரும் மதிப்பளிப்பதில்லை
இந்த மாதிரியான பிரச்னைகளில் நம்மை எப்படித் தற்காத்துக் கொள்வது எனக் கேட்டபோது, சைபர் வழக்கறிஞர் கார்த்திகேயன் சில பரிந்துரைகளை வழங்கினார்.

பட மூலாதாரம், Getty Images
“குற்றவாளிகள் அவர்களுடைய செயல்முறையை மாற்றிக் கொண்டேயிருப்பார்கள். இதைத் தடுக்க முயல்வோர் மேற்கொள்ளும் ஆராய்ச்சிகளை விட அதிகமாகவும் அதிவிரைவாகவும் எப்படி ஏமாற்றலாம் அவர்கள் ஆய்வு செய்துகொண்டிருக்கிறார்கள். அப்படி புதிது புதிதாக சைபர் குற்றங்கள் நடந்து அது வெளியே வரும்போது தான் இப்படியும் நடக்கலாம் என்று தெரிய வருகிறது.
நம்முடைய தனியுரிமையை நாம் மதிப்பதில்லை. நாமே தான் நம் அனைத்து படங்களையும் காணொளிகளையும் சமூக ஊடகங்களில் பதிவிடுகிறோம்.
அவற்றை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பை நாமே தான் ஏற்படுத்திக் கொடுக்கிறோம். ஆகவே, அதிகளவில் நம்முடைய படங்களையோ குடும்பத்தினரின் படங்களையோ பதிவிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
நம்முடைய மனைவி, குழந்தைகளின் படங்களை அதிகளவில் பதிவிடுவது அவர்களுக்கே பிரச்னையாக முடியலாம். இன்றைய சூழலில் குழந்தை பிறந்தது, முதல் நாள் பள்ளிக்குச் செல்வது ஆகியவை முதல் அனைத்தையும் பதிவிடுகின்றனர்.
இது சைபர் உலகில் பாதுகாப்பானது இல்லை. ஆகவே, அவர்களுடைய படங்களை அவர்களின் அனுமதியின்றி பதிவிடக் கூடாது. அனைவரின் தனியுரிமை குறித்தும் கவனமாக இருக்க வேண்டும். இதனால் ஏற்படும் பாதிப்புகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன.”
மிரட்டல்கள் வந்தால் அஞ்சத் தேவையில்லை
மேலும், “விசா செயல்முறையிலேயே கூட இப்போதெல்லாம் சில நாடுகள், ஒருவருடைய சமூக ஊடகக் கணக்குகளை முற்றிலும் ஆராய்ந்து, பிரச்னைக்குரியவரா இல்லையா, எப்படியான நபர், எதற்கெல்லாம் லைக், கமென்ட் செய்துள்ளார் என்று அனைத்தையும் அலசி ஆராய்கின்றனர்.
எங்கோ எப்போதோ எழுதிய கமென்ட், பதிவிட்ட ஒளிப்படம் சிக்கலுக்குரிய நபராக இருக்கலாம் என்பதைப் போன்ற தோற்றத்தைக் கொடுப்பதாகத் தெரிந்தாலும் விசாவை நிராகரித்து விடுகின்றனர்,” எனக் கூறுகிறார் கார்த்திகேயன்.
இந்த அளவுக்கு சமூக ஊடகங்கள், நம்முடைய உணர்ச்சிகளை, குணங்களை, வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் அளவுக்கு மாறிவிட்டன. இதை வைத்து “ஒருவரின் வாழ்க்கை குறித்த பெரும்பான்மை தகவல்களை ஒருவரால் எடுத்துவிட முடியும். இத்தகைய சூழலில் சைபர் குற்றங்களில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு அனைவரும் தத்தம் தனியுரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும்.”

பட மூலாதாரம், Getty Images
ஒருவேளை, யாராவது இதுபோல் படங்களை வைத்து மிரட்டினாலும், அதற்குப் பதிலளிக்காமல் தவிர்த்து, பிளாக் செய்துவிட்டாலே பிரச்னை தீர்ந்துவிடும்.
மேலும், உங்கள் சமூக ஊடகக் கணக்குளில் “என் சமூக ஊடக கணக்குகளை யாரோ ஹேக் செய்துவிட்டார்கள். என் சார்ந்த படங்களை வைத்து மிரட்டுகின்றனர். அப்படியான படங்களை வைத்து யாராவது மிரட்டினால் அவர்களுக்கு பதிலளிக்காதீர்கள். அவையனைத்தும் போலியனாவை” என்று தெரிவித்துவிடுங்கள் எனக் கூறுகிறார்.
அதிலேயே, “உங்களை மிரட்டும் குற்றவாளிகளுக்கு நீங்கள் இதற்கு அஞ்சமாட்டீர்கள் எனத் தெரிந்து வேறு நபரைத் தேடிப் போய்விடுவார்கள்.
அதையும் மீறி அவர்கள் மிரட்டல்களைத் தொடர்ந்தால், ஏதேனும் தளத்தில் பதிவேற்றினால், cybercrime.gov.in என்ற இணையதளத்தில் சென்று குறிப்பிட்ட இணையதள லிங்க்கை சேர்த்து, புகார் தெரிவிக்கலாம். பிறகு அவர்களே அந்த லிங்க்கில் இருக்கும் விவரங்களை நீக்கிவிடுவார்கள்.”
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












