ஆர்எஸ்எஸ் பற்றிய 64 பக்க புத்தகம் கர்நாடகத்தை அதிரவைப்பது எப்படி?

பட மூலாதாரம், IMRAN QURESHI
- எழுதியவர், இம்ரான் குரேஷி
- பதவி, பெங்களூருவில் இருந்து பிபிசி ஹிந்திக்காக
ஆர்எஸ்எஸ் பற்றி கன்னட இலக்கியவாதி தேவனூர் மகாதேவா எழுதிய 'ஆர்எஸ்எஸ் ஆல மட்டு அகல' (ஆர்எஸ்எஸ் - ஆழமும் அகலமும்)' என்ற சிறு நூல் பற்றி சமூக ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. இது குறித்து ஆர்எஸ்எஸ் கருத்து எதுவும் கூறவில்லை. ஆனால் பாஜக இந்த புத்தகத்தை குப்பை என்று வர்ணித்துள்ளது.
அதன் அச்சுப் பிரதிக்கு அதிக கிராக்கி இருப்பதால் புத்தகம் கிடைப்பது அரிதாக உள்ளது. இணையத்தில் அங்கீகரிக்கப்படாத பிடிஎப்கள் பகிரப்பட்டு, அவசர அவசரமாக இந்தி, தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
64 பக்கங்கள் கொண்ட இந்த நூல், யார் வேண்டுமானாலும் வெளியிடும் அளவுக்கு புதிய வடிவில் உள்ளது. கர்நாடகாவின் கல்புர்கி மாவட்டத்தில் உள்ள பெண்கள் குழுக்களாலும், வட்ட அளவில் உள்ள மாணவர் குழுக்களாலும்கூட இந்த புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.
ஆர்எஸ்எஸ் நிறுவனர் டாக்டர் கேபி ஹெட்கேவார், செல்வாக்கு மிக்க ஆர் எஸ் எஸ் தலைவராக இருந்த கோல்வால்கர், சாவர்க்கர் ஆகியோர் எழுத்துக்களின் தாக்கத்தில் வெளிவந்துள்ள இந்த நூலின் மீதான ஆர்வம் மிக அதிகமாக உள்ளது. பாஜக தொண்டர்கள் மற்றும் உறுப்பினர்களால் இது ரகசியமாக விநியோகிக்கப்படுவதாக ஆசிரியர் மகாதேவா கூறுகிறார்.
"இந்தப் புத்தகத்தைப் பற்றி பெரும்பாலான மாணவர்கள் கேள்விப்பட்டுள்ளனர். இதன் இரண்டாயிரம் பிரதிகளை நாங்கள் வெளியிட்டு நான்கு நாட்களில் அது விற்றுத் தீர்ந்துவிட்டது. எங்களிடம் நூறு பிரதிகள் உள்ளன. மேலும் அச்சிட அனுமதி கேட்டுள்ளோம். மாண்டியா மாவட்டத்தில் உள்ள எஸ்சி, எஸ்டி மாணவர் விடுதியில் இந்த புத்தகத்தை நல்ல எண்ணிக்கையில் விற்றுள்ளோம். சில பிரதிகளை எடுத்துக்கொண்டு உள்ளூர் டீக்கடைக்கு செல்கிறோம். மக்கள் 30 ரூபாய் கொடுத்து வாங்குகிறார்கள்," என்று மைசூர் பல்கலைக்கழகத்தின் சட்டக்கல்லூரி மாணவர் ஷ்ரம் குமார், பிபிசி இந்தியிடம் தெரிவித்தார்.

பட மூலாதாரம், SAVARKARSMARAK.COM
அதே நேரத்தில், கர்நாடகாவின் வடக்கு மாவட்டமான கல்புர்கியில் பிரபுத பாரத் சங்கர்ஷ் சமிதி என்ற பெண்கள் அமைப்பு அதன் ஆயிரம் பிரதிகளை வெளியிட்டுள்ளது. "சில நாட்களிலேயே எங்களின் எல்லா பிரதிகளும் விற்றுவிட்டன. இங்கும், பிதர் பகுதியிலும் மக்கள் எங்களிடம் கோரிக்கை வைப்பதால், நாங்கள் அதிக பிரதிகளை வெளியிட உள்ளோம்."என்று இந்த சமிதியின் அஷ்வினி மங்காகர் கூறுகிறார்,

பட மூலாதாரம், ANURAG BASAVARAJ
உருவகங்களோடும், படைப்பாற்றலோடும் எழுதுவதற்குப் பெயர் பெற்றவர் மகாதேவா. ஏழு கடல் கடந்து, குகையில் வாழும் ஒரு பறவைக்குள் தனது ஆன்மாவை மறைத்து வைத்த மந்திரவாதியுடன் ஆர்எஸ்எஸ்ஸை அவர் ஒப்பிடுகிறார். பறவை கண்டுபிடிக்கப்பட்டு கொல்லப்படும் வரை இந்த மந்திரவாதியை கொல்ல முடியாது. ஹாரி பாட்டர் தொடரின் திரைப்படத்தைப் போலவே, வோல்ட்மார்ட்டைக் கொல்ல ஹார்க்ரக்ஸைக் கொல்ல வேண்டியது அவசியம். மனுஸ்மிருதியில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நாட்டில் சாதி அமைப்பை ஊக்குவிப்பதற்காக பகவத் கீதையை கற்பிப்பதில் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக மகாதேவா கூறுகிறார். 'காப்பி பேஸ்ட்' என்று அரசியல் சாசனத்தை இழிவுபடுத்தும் முயற்சி போன்றது இது என்கிறார் அவர்.
ஆர்எஸ்எஸ் தனது கடவுளை நாட்டின் மீது திணிக்கும் திட்டத்திற்கு, அரசியல் சாசனம் சிம்மசொப்பனமாக இருப்பதே இதற்குக் காரணம் என்று அவர் கூறுகிறார். ஆர்எஸ்எஸ்ஸின் கடவுளில், பிராமணர்கள் தலைப்பகுதியிலும், க்ஷத்திரியர்கள் கைகளிலும், வைசியர்கள் தொடைகளிலும் மற்றும் சூத்திரர்கள் கால்களிலும் உள்ளனர்.
இந்தியாவில் ஓபிசி சமூகத்தைச்சேர்ந்த நரேந்திர மோதி பிரதமராகவும், பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு குடியரசுத் தலைவராகவும் இருக்கும்போது மனுஸ்மிருதி குறித்த தர்க்கத்தை அவர் எப்படி நிரூபிப்பார்? இந்த கேள்விக்கு பதிலளித்த மகாதேவா, "நாம் இங்கு ஒரு உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். பாஜக என்பது ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் உள்ள தனக்கென அமைப்புச் சட்டம் இல்லாத அரசியல் கட்சி. அதன் தெய்வங்கள் நாக்பூரில் உள்ள கருவறையில் அமர்ந்துள்ளன. நாக்பூரில் உள்ள தெய்வத்திடமிருந்து வரும் உத்தரவுகளை கட்சித்தலைமை பின்பற்றுகிறது. வலது அல்லது இடதுபுறத்தில் ஒரு பூ விழுவது கடவுளின் சிறப்புச் செய்தியாக எடுத்துக் கொள்ளப்படுகிறது."என்றார்.
"ஆர்எஸ்எஸ்-ஐ மகிழ்விக்க பாஜக தலைவர்கள் போட்டி போடுகின்றனர். இதற்காக அவர்கள் ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டிபோட்டுக்கொள்கின்றனர். அதனால்தான் சொந்த அமைப்புச் சட்டம் இல்லாத பாஜக போன்ற கட்சியில் சொந்தபலத்தில் எந்த ஒரு தலைவரும் முன்னேற அனுமதிக்கப்படுவதில்லை. பிரதமர் பிற்படுத்தப்பட்டவர்தான். ஆனால் அவர் பிற்படுத்தப்பட்டோருக்கு ஏதாவது நன்மையை கொண்டு வந்திருக்கிறாரா? அதிகமாக இல்லாவிட்டாலும், பிற்படுத்தப்பட்டோருக்கு சிறு நன்மையாவது செய்திருக்கிறாரா? பிற்படுத்தப்பட்டோர் பொதுவாக சிறிய தொழில்களில் ஈடுபடுகிறார்கள். அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க அவர் ஏதாவது முயற்சி எடுத்திருக்கிறாரா? அப்படி எதையும் நான் பார்க்கவில்லை. ஆனால் அவர் கண்டிப்பாக கோடீஸ்வரர்களுக்கான வரியை குறைத்திருக்கிறார்."

பட மூலாதாரம், FACEBOOK@RSSORG
"அவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. பொது சொத்துக்கள் குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றன. பணக்காரர்களின் சொத்துகள் பல லட்சம் கோடியாக அதிகரிக்கின்றன. கார்ப்பரேட் துறைக்கு அரசு, சலுகைகள் அளிக்கிறது. அவர்களின் சொத்துக்களை பிரதமர் காவல் காக்கிறார். முன்பு அரசர்கள், நிலப்பிரபுக்களின் ஆட்சி இருந்தபோது, நான்கு வர்ண முறையைப் பின்பற்றியவர்கள்தான் ஆட்சியில் இருக்க முடிந்தது. அதைப் பின்பற்றாத அரசர்கள் அழிக்கப்பட்டனர். அப்படியானால் உண்மையில் ஆட்சியை நடத்துவது யார்? அரசர் ஆட்சியை நடத்தினாரா? நம் கண்முன்னே தெரிவதைத்தாண்டி நாம் பார்க்கவேண்டும்."
"பழங்குடிகள்தான் இந்த நாட்டின் ஆதிக் குடிகள். ஆனால் பழங்குடி என்ற பெயரை நீக்கி அவர்களை வனவாசிகளாக்கிவிட்டனர். (பழங்குடியினருக்கு என்று ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவாரத்தால் நடத்தப்படும் அமைப்பின் பெயர் வனவாசி கல்யாண் ஆசிரமம் ). இந்த அடிப்படைவாதிகளின் கைகளில் பழங்குடிகள் பிற மதங்களை எதிர்த்துப்போரிடுவதற்கான ஆயுதமாக மாறிவிட்டனர். இதில் ஏதாவது மாற்றம் வருமா? இது சரியான வளர்ச்சியா? இந்த கண்ணோட்டத்திலும் நாம் பார்க்கவேண்டும்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தப் புத்தகத்தில் ஆர்எஸ்எஸ் மீது நம்பிக்கை கொண்டவர்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளனர்.
ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள் இந்தப் புத்தகத்தை குப்பை என்று சொல்கிறார்கள்.

பட மூலாதாரம், Getty Images
தனது ஊரான தேவனூர் என்பதை தன் பெயரின் முன்னொட்டாக கொண்டுள்ள மகாதேவா, ஆர்.எஸ்.எஸ் கருத்தியல் முன்னோடிகளான கோல்வால்கர், சாவர்க்கர் சொன்ன செய்திகளை நேரடியாக இந்த நூலில் தந்துள்ளதாக கூறுகிறார்.
இதை குப்பை என்று சொல்கிறார்கள் என்றால், அவர்கள் கோல்வால்கர், சாவர்க்கர் ஆகியோரை குப்பை என்று அழைக்கிறார்களா?" என்று அவர் கேட்கிறார்.
தேவனூர் மகாதேவா யார்?
சமூக, பொருளாதார அநீதிகள் குறித்து எழுதி வரும் பந்தன்யா, வித்ரோஹி இலக்கிய இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர்தான் தேவனூர் மகாதேவா.
அவரது இரண்டாவது நாவலான 'ஒடலாலா' ஒரு லட்சத்திற்கும் அதிகமான பிரதிகள் விற்றுள்ளது. எத்தனை புத்தகம் விற்றது என்ற கணக்கை தான் வைத்துக்கொள்வதில்லை என்று அவர் கூறுகிறார்.
ஆனால் அவரது மூன்றாவது நாவலான 'குசுமபல்லே' மிகவும் பிரபலமானது. இதற்காக அவர் சாகித்ய அகாடமி விருதையும் பெற்றார்.
புத்தகத்தை அச்சிடும்போது ஆயிரம் பிரதிகள் விற்றால்கூட நன்றாக இருக்கும் என்று நினைத்ததாக மகாதேவா கூறுகிறார். ஆனால், அந்த நூல் இதுவரை ஒரு லட்சம் படிகளுக்கு மேல் விற்பனையாகியுள்ளன.

பட மூலாதாரம், ANURAG BASAVARAJ
விருதை நிராகரித்தார்
தொடக்கப் பள்ளியில் இருந்து கல்லூரிக் கல்வி வரை கன்னட மொழியை பயிற்றுமொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படாததால் 2010 ஆம் ஆண்டு நிருபதுங்கா விருதை அவர் மறுத்துவிட்டார்.
2015 ஆம் ஆண்டில், அவருக்கு அளிக்கப்பட்ட பத்மஸ்ரீ மற்றும் கேந்திரிய சாகித்ய அகாடமி விருதையும் அவர் திருப்பி அளித்துவிட்டார்.
1990களில் அவருக்கு எழுத்தாளர் என்ற முறையில் மாநிலங்களவைக்குச் செல்ல வாய்ப்பு வந்தது. ஆனால் அவர் அதை ஏற்கவில்லை.
"உங்களுடைய இந்த சமீபத்திய சிறு நூலை இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மக்கள் ஏன் படிக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்?" என்று அவரிடம் கேட்கப்பட்டது.
"இதைப் பற்றி நான் என்ன சொல்வது? இந்தக் கேள்விக்கு நான் எப்படி பதில் சொல்வது?"என்று மகாதேவா பதில் அளித்தார்.
பகவத் கீதை பற்றி...
"நால் வர்ண சமூக அமைப்பை கடவுள்தான் உருவாக்கினார் என்று கீதை போதிப்பது மோசமானது. ஆனால் உண்மையில் இது மகாபாரதத்தின் ஒரு பகுதியாக இருந்திருக்க வாய்ப்பில்லை. சங்கராச்சாரியாரே இதை மகாபாரதத்தில் இணைத்தார் என்றும் கூறப்படுகிறது. இதை நான் சொல்லவில்லை. இவை சுவாமி விவேகானந்தரின் சொற்கள். அது சரியாகத்தான் இருக்கும் என்று நானும் நினைக்கிறேன். பகவத் கீதையை முழுமையாக அவர் நிராகரிக்கவில்லை. அதில் பல பௌத்த சிந்தனைகளும் உள்ளன. ஒரு புத்திசாலிதான் பகவத் கீதையை இயற்றியிருக்கவேண்டும். இதில் நான்கு வர்ண அமைப்பை ஆதரித்திருப்பது சோகம். சமூகப் பாகுபாட்டுக்கு இதில் ஆதரவு இருந்தாலும், இதில் பெரிய விஷயங்கள் சொல்லப்பட்டிருப்பதாகத் தெரிகிறது."

பட மூலாதாரம், Getty Images
"இப்போது எழும் கேள்வி என்னவென்றால் நால் வர்ண அமைப்பை போதிக்கும் பகவத் கீதையைப் பரப்புவதும், ஆதரிப்பதும் அரசமைப்புச் சட்டத்தை எதிர்ப்பது ஆகாதா?"
"ஓபிசி, எஸ்சி, எஸ்டி சமூகத்தினர் ஓரளவுக்கு பாஜகவை ஆதரிக்கின்றனர். இவர்களின் நலனுக்காக நிறைய பணிகள் செய்வதாக காட்டப்படுகிறது. உண்மை அப்படி இல்லை என்று நான் நினைக்கிறேன். இந்தியாவில் நடந்துள்ள மேம்பாட்டுப்பணிகளை பார்க்கும்போது, யாராவது தனித்து தெரிகிறார்களா என்ன? வேலையில்லா திண்டாட்டம் மட்டுமே வளர்ந்துள்ளது."
"பட்டியல் சாதிகள், இதர பிற்படுத்தப்பட்ட சாதிகள், பட்டியல் பழங்குடிகள் ஆகியவற்றைச் சேர்ந்த இளைஞர்கள் நிம்மதியில்லாமல் உள்ளனர். வேலையில்லாம் திண்டாடுகிறார்கள். ஆனால், ஆனால், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடி சமூகங்களின் இளைஞர்களிடம் அவர்கள் வாழ்க்கை திண்டாட்டமாக இருப்பதற்கு இஸ்லாமும், கிறிஸ்துவமும்தான் காரணம் என்று கூறுகிறது ஆர்.எஸ்.எஸ்."
"இன்னொரு விஷயம். இந்தியாவில் நால் வருண அமைப்பை மீண்டும் நிலைபெற வைக்க மதத்தின் பெயரால் சாஸ்திரங்களை ஆயுதமாக்குகிறார்கள்."
பிரபல தேர்தல் ஆய்வாளரும், சென்டர் ஃபார் தி ஸ்டடி ஆஃப் டெவலப்பிங் சொசைட்டிஸ் (CSDS) என்ற ஆய்வு நிறுவனத்தின் இயக்குநருமான சஞ்சய் குமார், பாஜகவின் வாக்கு வங்கி மாறி வருவது குறித்து சில நாட்களுக்கு முன்பு ஒரு ட்வீட் பதிவு செய்திருந்தார். "பொது கொள்கை சிஎஸ்டிஎஸ் ஆய்வுகளின்படி பாஜகவுக்கு ஆதரவாக உள்ள மக்கள் தொகுதி மாறி வருகிறது. 1996ல் பாஜக பெற்ற மொத்த வாக்குகளில் 49% ஆதிக்க சாதியினர், 33% ஓபிசி, 11 சதவிகிதம் எஸ்சி மற்றும் 7 சதவிகிதம் எஸ்டி ஆகும். 2019ல் பாஜக பெற்ற மொத்த வாக்குகளில் 30% ஆதிக்க சாதியினர், 44% ஓபிசி, 16 சதவிகிதம் எஸ்சி மற்றும் 10 சதவிகிதம் எஸ்டி ஆகும்,"என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
"தற்போது நிலைமை இப்படி இருக்கும்போது, வேலையில்லாமல் திண்டாடுவோருக்கு வெறுப்புணர்வே உணவாகிறது. ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் அமைப்புகள் பிற மதங்கள் மீது வெறுப்பை வளர்த்து, பிற மதங்களுக்கு எதிராக மக்களைத் தூண்டிவிடுவதை நாம் காணலாம். கோல்வால்கர், சாவர்க்கர் ஆகியோர் ஹிட்லரின் நாஜி கோட்பாடுகளை ஆதரிப்பவர்கள் என்பது தெளிவாகிறது. இப்போது பாஜக ஆட்சியின் கீழ், இவை அனைத்தும் திட்டமிட்ட முறையில் நடக்கின்றன," என்று மகாதேவா கூறினார்.
சமூக வாழ்க்கை, பொருளாதாரத்தில் மனுஸ்மிருதியின் தாக்கம்
சமூக ரீதியாக முன்னேறிய சாதியினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான (EWS) 10 சதவிகித இடஒதுக்கீட்டை ஒரே அடியில் பிரதமர் அமல்படுத்தினார் என்று மகாதேவா கூறுகிறார்.
"ஆனால் வேறு எந்த வகுப்பினருக்கும் கிடைக்காத இந்த பத்து சதவிகித இடஒதுக்கீடு சமூக ஆதிக்கம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அதிக பிரதிநிதித்துவம் கொண்ட வகுப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது. தவிர, இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள் மக்கள் தொகையின் ஐந்து சதவிகிதம் மட்டுமே. பிரதமர் இந்த வேலையைச் செய்துள்ளார்."
"இந்த முடிவால் இடஒதுக்கீட்டில் இருந்த நீதி-நியாயம் சிதைந்துவிட்டது. இடஒதுக்கீட்டின் தன்மையே சூறையாடப்பட்டுவிட்டது. மேலாதிக்கத்தில் இருப்பவர்கள் மேலும் அதிகம் பெற வேண்டும் என்ற கொள்கையையே இது பறைசாற்றுகிறது. இந்தக் கொள்கை எங்கிருந்து வந்தது? அதன் ஆதாரம் மனு தர்மம். அதுவெளிப்படையானது," என்கிறார் மகாதேவா.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
இந்த சிறுநூலை ஏன் எழுதினார்?
சமீப காலத்தில் நடந்த பல நிகழ்வுகள் குறித்து தான் கவலைப்பட்டதாக மகாதேவா கூறுகிறார். இவற்றில் முதன்மையானது EWS இடஒதுக்கீடு ஆகும். இதற்குப் பிறகு கர்நாடக அரசின் மதமாற்றத் தடைச் சட்டம் அவரைப் பாதித்தது. சில நாட்களுக்குப் பிறகு, பாட நூல் சர்ச்சை தொடங்கியது. பசவண்ணா போன்ற பெரிய மனிதரை தவறாக சித்தரித்ததால் அவர் வருத்தமடைந்தார். 'அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் சிறு தவறுகள் இவை' என்று முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியது அவரை மேலும் வருத்தப்படுத்தியது.
கர்நாடக மத சுதந்திரப் பாதுகாப்புச் சட்டம் மூலம் மனு தருமத்தை ஆர்எஸ்எஸ் செயல்படுத்துகிறது என்கிறார் மகாதேவா. "இந்தச் சட்டம் மனநோயாளிகள், மைனர்கள், பெண்கள் மற்றும் தலித்துகளை ஒரே பிரிவில் வைக்கிறது. தலித்துகளும் பெண்களும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களா? இந்த அரசு பெண்களையும் தலித்துகளையும் இரண்டாம் தர குடிமக்களாக ஆக்கியுள்ளது. இது மனு நீதி போன்றதுதான். அதில் அந்தஸ்து மற்றும் சாதியின் அடிப்படையில் ஒரே குற்றத்திற்காக வெவ்வேறு நபர்களுக்கு வெவ்வேறு தண்டனைகள் அளிக்கப்படுகிறது."
காங்கிரஸ் எழுதிய குப்பை என்று வர்ணிக்கும் பாஜக
பாஜகவின் மக்களவை எம்பி பிரதாப் சிம்ஹா பிபிசி இந்தி சேவைக்கு இது குறித்துப் பேசும்போது, "குசும்பலேயில் காட்டியது போல் இன்னும் அவரிடம் படைப்பாற்றல் மிச்சம் இருப்பதாக நான் நினைத்தேன். ராகுல் காந்தியின் தொய்வான பேச்சுக்குப் பிறகு காங்கிரஸ் தொண்டர்களால் எழுதப்பட்ட வாட்ஸ் ஆப் , ஃபேஸ்புக் பதிவுகளின் தொகுப்பாக இந்த நூல் தெரிகிறது. மேலும் இஸ்லாம், கிறிஸ்துவம் போல உலகில் வேறு எந்த நாட்டையும் இந்து மதம் ஆக்கிரமித்ததில்லை; மக்களை கட்டாய மதமாற்றம் செய்ததில்லை. குறைந்த பட்சம் இது அவருக்கு தெரிந்திருக்கவேண்டும்," என்றார்.
இது அவரது இமேஜை வலுப்படுத்தாத வெற்று எழுத்து என்கிறார் மூத்த ஆய்வாளர் விஸ்வேஷ்வர் பட்.
"அவர் தரமான ஆராய்ச்சியுடன் ஒரு அறிவார்ந்த நூலைத் தருவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நூலில் அவரது நோக்கங்கள் ஆழமற்றவை. நான் உண்மையில் ஏமாற்றமடைந்தேன்."என்று அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Thinkstock
இந்த நூல் பற்றி ஆர்எஸ்எஸ் என்ன கூறுகிறது என்று அறிய பிபிசி முயன்றது. ஆனால் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை. பெயர் வெளியிட விரும்பாத பாஜக செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் பேசும்போது, "இந்த விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்து யாரும் பேச மாட்டார்கள். நாங்கள் அதை குப்பையாகக் கருதுகிறோம்" என்று கூறினார்.
ஆனால், மகாதேவா இந்த விமர்சனத்தை நிராகரித்து, "இந்த குற்றச்சாட்டுகளுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. அதிர்ச்சியான ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். இந்த நூலின் பிரதிகளை காங்கிரஸ் உறுப்பினர்கள் விநியோகிக்கிறார்கள். மதச்சார்பற்ற ஜனதா தள உறுப்பினர்களும் அதையே செய்கிறார்கள். பல பாஜக தலைவர்களும் கூட இதை ரகசியமாக விநியோகிக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் விநியோகம் செய்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்,"என்றார்.
புத்தகம் ஒரு குப்பை என்ற விமர்சனத்திற்கு பதிலளித்த மகாதேவா, "நான் கோல்வால்கரையும் சாவர்க்கரையும் மேற்கோள் காட்டினேன். குறைந்தபட்சம் நான் எழுதியதை கோல்வால்கரும் சாவர்க்கரும் சொல்லவில்லை என்று அவர்கள் கூறியிருக்க வேண்டும். அவர்களுடைய அறிக்கைகளை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று அவர்கள் கூறியிருக்க வேண்டும். அல்லது குறைந்த பட்சம் அவர்கள் (கோல்வால்கர் மற்றும் சாவர்க்கர்) முன்பு அப்படிச் சொன்னார்கள், ஆனால் நாங்கள் அதை இப்போது ஏற்கவில்லை என்று சொல்ல வேண்டும். அவர்கள் அதை முழு குப்பை என்று அழைக்கிறார்கள் என்றால், கோல்வால்கரையும், சாவர்க்கரையும் அவர்கள் குப்பை என்று குறிப்பிடுகிறார்கள் என்று பொருள் தராதா,"என்று அவர் கேட்கிறார்.

பட மூலாதாரம், IMRAN QURESHI
பெரும்பாலான மக்களுக்கு அரசமைப்புச் சட்டத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது. "எனக்கு அரசமைப்புச் சட்டம் தேவை. ஒருவேளை உங்களுக்கும் அது தேவைப்படலாம். மேலும் நம் இருவரையும்விட இந்த நாட்டிற்கு அரசமைப்புச் சட்டம் தேவை. விழிப்புடன் இருப்பவர்கள் சிவில் சமூகத்திற்கும் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்,"என்று மகாதேவா கூறுகிறார்.
இந்தியாவின் எதிர்காலம் குறித்துப்பேசிய அவர், "இன்று வேத சிந்தனை முறை ஆதிக்கம் செலுத்துகிறது. சகிப்புத்தன்மை கொண்ட எண்ண ஓட்டத்தை நாம் பராமரிக்க வேண்டும். உள்ளூர், பழங்குடியினர் எண்ணங்களையும் வாழ வைக்க வேண்டும். அவர்களிடம் அற்புதமான மனிதநேய உறவுகள், விழுமியங்கள் உள்ளன. நாம் அவர்களை ஆதிவாசிகள் என்று அழைத்து அவர்களை புறக்கணிக்கிறோம். அவர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு வர வேண்டும்,"என்று தெரிவித்தார்.
" வரலாற்று காரணங்களினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ ஒரே குடும்பத்தில் இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் உள்ளனர். வரலாறு இப்படி ஒரு அற்புதமான பரிசோதனையை செய்துள்ளது. அதனால்தான் அன்பும் சகிப்புத்தன்மையும் இந்த காலகட்டத்தின் தேவையாக இருக்கிறது. இந்த விழுமியங்கள் நமக்குத் தேவை. நாம் இதை தொடர்ந்து விதைக்க வேண்டும். அதன் விதைகளுக்கு நாம் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இந்தியாவின் எதிர்காலத்தைப் பற்றி நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்று எப்படி சொல்வது? இந்தியாவின் எதிர்காலத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் அனைவரும் ஒன்றாகச்சேர்ந்து சிந்திக்க வேண்டும்,"என்று குறிப்பிட்டார் மகாதேவா.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்









