பாஜக அண்ணாமலை: கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு கூடுதல் அழுத்தம் ஏன்? போலி ஆவண பாஸ்போர்ட் புகார் பற்றி விரிவான நேர்காணல்

- எழுதியவர், பரணிதரன்
- பதவி, பிபிசி தமிழ்
- போலி ஆவண கடவுச்சீட்டு விவகாரத்தில் ஆதாரங்களைத் திரட்டிய பிறகே புகார் கொடுத்துள்ளோம்.
- ஒன்றிரண்டு கடவுச்சீட்டுகள் அல்ல, நூற்றுக்கணக்கில் கடவுச்சீட்டுகள் போலி ஆவணங்கள் அடிப்படையில் தரப்படுவது சாதாரண விஷயம் அல்ல.
- நாங்கள் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு காவல்துறையோ அரசாங்கமோ மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட முடியுமா?
- ரவுடிகளை பாஜக சேர்த்துக் கொள்வதாக விமர்சிப்பவர்களுக்கு, அவர்களுடைய சொந்த கட்சியில் எத்தனை ரவுடிகள் உள்ளனர் என்பது தெரியுமா?
- இபிஎஸ் தலைவராக தேர்வானபோது அவரைத்தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தேன். ஓபிஎஸ் உடன் நட்பாக இருக்கிறேன்.

தமிழ்நாட்டில் போலி ஆவணங்கள் மூலம் கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்ட விவகாரத்தை எழுப்பியுள்ள அண்ணாமலை, அது தொடர்பாக மாநில ஆளுநர், உள்துறை அமைச்சகத்துக்கு புகார் கடிதங்களை அளித்திருக்கிறார். இது தவிர கள்ளக்குறிச்சி மாணவி இறந்த விவகாரத்திலும் அவர் ஆளும் கட்சி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். இதற்கு இடையே எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவிடமே கட்சி அலுவலக சாவியை ஒப்படைக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளதால் இனி பாரதிய ஜனதா கட்சி மேலிடம் யாருடன் கைகோர்க்கும்? போன்ற கேள்வி எழுகிறது.
அண்மையில் டெல்லி வந்த தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் கே. அண்ணாமலை பிபிசி தமிழிடம் இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளித்தார். அவரது நேர்காணலில் இருந்து...
தமிழ்நாட்டில் காவல்துறை உளவுப்பிரிவு கூடுதல் தலைமை இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகளை போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் தொடர்புபடுத்தி ஆளுநர், மத்திய அரசிடம் மனு கொடுத்து வருகிறீர்கள். நேரடியாகவே பல குற்றச்சாட்டுகளை அவர்கள் மீது சுமத்துகிறீர்கள். இதை பார்க்கும்போது இப்போதும் ஒரு போலீஸ் அதிகாரி போல நீங்கள் நடந்து கொள்வதாகத் தெரிகிறதே....
ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கும் போது, அதை தனி மனித குற்றச்சாட்டாக நாங்கள் வைப்பதில்லை. நாங்கள் குற்றம்சாட்டும் விஷயம், தேசிய இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு முக்கியமானது. அதுவும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நடந்த தவறுகளைத்தான் நாங்கள் குறிப்பிடுகிறோம். 2012இல் நடந்த சம்பவம். நீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பித்த பிறகும் அதன் மீதான விசாரணை குறித்த காலத்தில் முடிக்கப்படவில்லை. ஆவணங்களை அழித்துள்ளனர். விசாரணையை முடக்கியுள்ளனர். சம்பந்தப்பட்டவர்களுக்கு விளக்கம் கேட்டு ஒரு நோட்டீஸ் கூட கொடுக்கப்படவில்லை.
ஒரு கடவுச்சீட்டு என்பது மிகவும் உயரிய ஒருமைப்பாடு ஆவணம். ஒரு காவல் நிலையம் மூலம் 72 கடவுச்சீட்டுகள் குறுகிய காலத்தில் சரிபார்க்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன, 600 மீட்டர் தூரத்தில் 53 கடவுச்சீட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. முகவரியில் வசிக்காத ஒருவருக்கு ஆள் இருந்ததாககள் சரிபார்ப்புச்சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளன. வெளியுறவு அமைச்சகம் காவல்துறைக்கு வழங்கியுள்ள டேப் சாதனத்தில் நள்ளிரவு 1.17 மணிக்கு ஒரு வீட்டுக்குச் சென்று ஆள் சரிபார்ப்பு சோதனை நடத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர். இதை எல்லாம் பார்க்கும்போது எப்படி அதிகாரிகள் இதுபோன்ற தவறுகளை செய்து விட்டோ செய்ய அனுமதித்து விட்டோ, சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியும் என்பதற்காகத்தான் செய்தியாளர் சந்திப்பில் எங்களுடைய கண்டுபிடிப்புகளை வெளியிட்டேன். ஆளுநர், உள்துறை செயலாளரிடமும் இது குறித்து புகார் மனுவை அளித்துள்ளோம்.

இதில் நிச்சயமாக நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழ்நாடு அரசு இருக்கிறது. காரணம், போலி கடவுச்சீட்டுகள் பல தேச விரோதிகளுக்கு கிடைக்க அதிகாரிகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ உடந்தையாக இருந்திருக்கிறார்கள். ஏனென்றால் இருவரை பிடித்த பிறகுதான் மொத்த விஷயமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உயர் நீதிமன்ற மதுரை கிளை மூன்றரை மாதங்களில் இந்த விஷயத்தை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவு வெளிவந்து இப்போது ஒன்றரை வருடங்களாகிறது.கோப்புகள் எந்த முன்னேற்றமும் இல்லாமல் அப்படியே இருக்கின்றன. அவனியாபுரம், மதுரை காவல் ஆணையர் அலுவலகங்களில் இது தொடர்பான பரிவர்த்தனை ஆவணங்களை அழித்து விட்டனர். இந்த பிரச்னையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
நீங்களே ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர். மற்றொரு ஐபிஎஸ் உயரதிகாரி மீது பெரிய அளவிலான குற்றச்சாட்டை சுமத்தும்போது அதை மேலோட்டமாக சொல்கிறீர்களா இல்லை உரிய ஆதாரம் அல்லது தடயங்களை வைத்துக் கொண்டு குற்றம்சுமத்துகிறீர்களா?
ஆளுநரிடம் நாங்கள் கொடுத்த மனுவிலேயே எல்லா தகவல்களையும் குறிப்பிட்டுள்ளோம். இந்த பேட்டியில் தேவையின்றி சில அதிகாரிகள், கடைநிலை ஊழியர்களின் பெயரை சொல்வது சரியாக இருக்காது. ஒரு உதவி ஆணையர் நான் குற்றம்சாட்டும் கடவுச்சீட்டு விண்ணப்பம் தொடர்புடைய சரிபார்ப்பு ஆவணங்களில் கையெழுத்திட்டிருக்கிறார். அவனியாபுரத்தில் ஒரேயொரு காவலர்தான் இந்த ஆவணங்களை சரிபார்த்துள்ளார். ஒரேயொரு ஆய்வாளர்தான் அதை உறுதிப்படுத்தியுள்ளார். ஆணையர் அலுவலக உளவுப்பிரிவு உதவி ஆணையர்தான் இதை எல்லாம் 'சரி' என பதிவு செய்துள்ளார். இந்த நால்வரும் நேரடி குற்றவாளிகள். வேறு அதிகாரிகளுக்கு தொடர்பே இல்லை. அதுவும் மதுரை நகர காவல் ஆணையராக இருந்தவருக்கு கடவுச்சீட்டு அலுவலகத்தில் இருந்து கொடுக்கப்பட்ட 'டாங்கல்' சாதனம்தான் இந்த பணிக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனால்தான் உயர் நீதிமன்றம் விசாரித்து இன்னொரு உயரதிகாரியிடம் இந்த வழக்கை விசாரித்து அறிக்கை தர உத்ததவிட்டது. அந்த அதிகாரி, இன்னார் மீது எல்லாம் விசாரிக்க அனுமதி வேண்டும் என்று கேட்டு கடிதம் எழுதுகிறார். அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இத்தனை பேர் சம்பந்தப்பட்ட இந்த விவகாரத்தில் இதை விட ஒரு ஆதாரம் தேவையா...
ஒரு புலனாய்வு அதிகாரி செய்ய வேண்டிய வேலையை அரசியல் கட்சி தலைவரான பிறகு அண்ணாமலை செய்ய வேண்டிய தேவை ஏன் எழுகிறது?
ஏனென்றால் பொறுப்பில் உள்ள சம்பந்தப்பட்டவர்கள் தங்களுடைய கடமையை செய்ய மறுக்கிறார்கள்.

இன்னும் உங்களை போலீஸ் அதிகாரியாகவே நினைத்துக் கொண்டு செயல்படுகிறீர்களா?
இல்லை. இந்த விவகாரத்தின் தாக்கத்தைப் பார்த்தீர்கள் என்றால் மிகவும் கடுமையானதாக இருக்கிறது. இது ஏதோ ஒரு அதிகாரி செய்த தவறு என்பதைத்தாண்டி இதுபோன்ற செயல்கள், நமது தேசத்தின் இறையாண்மையைப் பாதிக்கக் கூடியதாக உள்ளது. கடந்த ஒரு வருடத்தில் 19 போராட்டங்கள், மூன்று உண்ணாவிரத போராட்டத்தை நடத்தியுள்ளோம். அத்துடன் இதுபோன்ற விஷயத்தையும் நாங்கள் கையில் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அப்படி செய்யா விட்டால், நாளையே தீவிரவாதிகள் உள்ளே நுழையலாம்.வெடிகுண்டு வைக்கலாம், மக்களை கொல்லலாம். அதனால் இந்த விஷயத்தை முன்வைப்பதையும் எங்களுடைய முக்கிய கடமையாக பார்க்கிறோம்.
மத்தியில் ஆளும் பாஜக எந்தெந்த மாநிலங்களில் எல்லாம் ஆட்சியில் இல்லையோ அந்தந்த மாநிலங்களில் எல்லாம் 'அச்சுறுத்தல்' இருப்பதாகக் கூறி சில குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் என்ற ஒரு கூற்று எதிர்கட்சிகளால் பேசப்படுவதுண்டு. ஆட்சியைப் பிடிக்கும் நோக்குடனும் மக்களை கவர்ந்து வாக்குகளை ஈர்க்கவும் இதுபோன்ற 'திகிலூட்டும்' குற்றச்சாட்டுகளை பாஜக முன்வைப்பதாக கூறப்படுகிறதே.. அதற்கு உங்களுடைய பதில் என்ன?
நாம் இப்போது பேசிக்கொண்டிருக்கும் வேளையில் கூட தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தமிழ்நாட்டில் சோதனை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் நடந்த ஈஸ்டர் குண்டுவெடிப்புக்கும் தமிழ்நாட்டுக்கும் நேரடி தொடர்பு உள்ளது. அது தொடர்பாகவும் என்ஐஏ புலனாய்வு செய்து நான்கு பேரை பிடித்துச் சென்றது. தமிழ்நாடு மிகவும் பதற்றமான, நுட்பமான மாநிலம். இந்திய இறையாண்மைக்கு எதிராக இருக்கக் கூடிய நிறைய பேர் தமிழ்நாட்டில் உள்ளனர். அதற்கு சில காவல்துறை அதிகாரிகள் உடன்போகும்போது, கேட்க வேண்டியது பாரதிய ஜனதா கட்சியின் கடமை. ஏனென்றால் திமுக எதிர்த்துப் பேசாது. இன்னும் அவர்கள் 'தனித்தமிழ்நாடு வேண்டும்', 'சுயாட்சி வேண்டும்' என மேடைகளில் பேசி வருகிறார்கள். அவர்களுக்கு தேசிய ஒருமைப்பாடு, தேசிய ஒற்றுமை பற்றி எந்த அளவுக்கு தெரியும் என எனக்கு விளங்கவில்லை. ஆனால், தமிழ்நாடுதான் இந்தியாவின் விஷ்வ குருவாக இருக்க வேண்டும் என்பதற்காக இதை எழுப்புவது எங்களுடைய கடமை. இதை திகிலூட்டும் குற்றச்சாட்டு என சொல்வதை நான் ஏற்கவில்லை. , நாங்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளை மறுத்தோ எதிர்வினையாற்றியோ ஒரு அறிக்கையையாவது இந்த அரசாங்கத்தால் வெளியிட முடியுமா...
(இது தொடர்பாக அண்ணாமலை தெரிவித்த மேலும் சில தகவல்கள், தற்போது காவல்துறையின் புலனாய்வில் இருப்பதால் அவற்றை விரிவாக இங்கே பதிவிடவில்லை)
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
கள்ளக்குறிச்சியில் வெகு சமீபமாக மாணவி மரணம் அடைந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மீதும் மாநில காவல்துறை மீதும் பாஜக அடுக்கடுக்காக குற்றம்சாட்டி வருகிறது. இந்த விஷயத்தில் உங்கள் கட்சி அதிக அழுத்தம் தருவது போல தோன்றுகிறதே?
தமிழ்நாட்டில் இப்படியெல்லாம் நடப்பதை நான் மிக வருத்தமாக பார்க்கிறேன். கடந்த இரண்டு, மூன்று வருடங்களில் நான்கு, ஐந்து சம்பவங்கள் நடந்துள்ளன. இப்போது மிகப்பெரிய அளவில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டு துப்பாக்கி சூடு கூட நடத்தப்பட்டுள்ளது. காரணம், இப்படி எல்லாம் தமிழ்நாட்டில் நடப்பது இல்லை. கள்ளக்குறிச்சி விஷயத்தில் மாணவி இறந்த உடனேயே எதுவும் நடக்கவில்லை. ஐந்தாம் நாளில்தான் வன்முறை பெரிய அளவில் நடக்கிறது. இந்த அரசுக்கு ஆளுகை செய்யத் தெரியுமா, அதிகாரிகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது தெரியுமா என்று கேட்டால் 'இல்லை' என்றுதான் கூற வேண்டும். பிரச்னை மிகவும் பெரிதான போதும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எங்கு இருந்தார் என்றே தெரியவில்லை. ஊடகங்களிடம் யாரும் பேசவில்லை, குறைந்தபட்சம் ட்விட்டரில் கூட கருத்து பதிவிடவில்லை. ஐந்தாவது நாளில்தான் அமைச்சர் சம்பவ பகுதிக்கே வருகிறார். அதுவே பெரிய மர்மமாக உள்ளது. இந்த சம்பவம் நடந்த அன்று காலை மாநில டிஜிபி ஒரு சைக்கிள் திருவிழாவில் பங்கேற்றுக் கொண்டிருக்கிறார்.
எல்லா சம்பவத்துக்கும் ஒரு டிஜிபியே செல்ல வேண்டும் என சொல்ல வருகிறீர்களா...?
இல்லை. ஒரு நுட்பமான பிரச்னை நடக்கும்போது சம்பவ பகுதிக்கு உடனடியாக காவல்துறை சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியையாவது ஒரு காவல் படையின் தலைவர் என்ற முறையில் மாநில டிஜிபி அனுப்பியிருக்க வேண்டாமா? முதல்வர் ஒரு இடத்துக்கு செல்வதாக இருந்தால் 10 ஆயிரம் பேர் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுகிறார்கள். 10 எஸ்பிக்கள் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறார்க்ள். ஒரு வீட்டுக்கு இட்லி சாப்பிட முதல்வர் செல்லும்போது இரண்டாயிரம் பேர் நிறுத்தப்படுகிறார்கள். ஒரு காவல் படையின் தலைவர் என்ற முறையில் அவரது முன்னுரிமை என்னவாக இருந்திருக்க வேண்டும்? அல்லது உள்துறை பொறுப்பை வகிக்கும் முதல்வர் டிஜிபியை தொடர்பு கொண்டு 'உடனே சம்பவ பகுதிக்கு செல்லுங்கள்' என சொல்லியிருக்க வேண்டாமா... 'யாராக இருந்தாலும் விடாதீர்கள், பிடித்து உள்ளே போடுங்கள்' என கண்டிப்பாக உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டாமா? காலம் தாழ்த்தி சில கைதுகளை நடத்தியிருக்கிறார்கள். இந்த உத்தரவை ஏன் முன்பே முதல்வரோ டிஜிபியோ பிறப்பிக்கவில்லை. ஐந்தாயிரம் பிள்ளைகள் படிக்கும் பள்ளி வளாகத்தில் தினமும் மக்கள் கேரோ செய்யவும் தொடர் போராட்டம் நடத்தவும் அனுமதித்து விட்டு ஐந்தாம் நாள் பிரச்னை பெரிதானவுடன் நடவடிக்கை எடுப்பதாக அரசு தரப்பில் கூறுகிறார்கள். சம்பவ நாள் காலையில் டிஜிபி செய்தியாளர்களிடம் பேசும்போது "பள்ளி நிர்வாகம் மீது தவறில்லை' என்று கூறினார். அந்த முடிவுக்கு அவர் எப்படி வந்தார்? அதே டிஜிபி 18 மணி நேரத்துக்குப் பிறகு நிர்வாகத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூறுகிறார். இப்படி மாறி, மாறி பேசினால் உயர் பொறுப்பில் உள்ளவர் மீது சாமானியர்களுக்கு எப்படி மரியாதை வரும்? கடினமாக உழைக்கக் கூடிய காவல்துறைக்கும் திமுக ஆட்சியில் கெட்டப்பெயர்தான் வருகிறது. எங்காவது ஒன்று நடந்தால் பரவாயில்லை. இந்த ஆட்சியில் பாலியல், கொலை, கூட்டுப்பாலியல், நடுரோட்டில் வெட்டிக் கொல்வது போன்ற நிகழ்வுகள் பரவலாகவும் தொடர்ச்சியாகவும் நடக்கின்றன. 'மாவட்ட பொறுப்பு அமைச்சர்' சொல்பவர்தான் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் பதவிகளில் நியமிக்கப்படுகிறார்கள். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி போலீஸ் அமைப்பு உருவாக்கப்பட்டு அதுவே போலீஸ் பணியாளர்கள் இடமாற்றத்தை செய்ய வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் அது பின்பற்றப்படுவதே இல்லை.


உங்களுடைய கட்சி, சமூகத்தில் விளிம்பு நிலையில் இருக்கக் கூடியவர்களின் பிரச்னைகளை மையப்படுத்தியே அரசியல் செய்கிறதே... அவர்களுடைய வாக்கு வங்கியை கவர இதுபோன்ற பிரச்னைகளை கையில் எடுக்கிறீர்களா?
ஒரு அரசியல் கட்சியின் இயல்பான வளர்ச்சி என்பது, அனைத்து தரப்பு மக்களையும் கொண்டதாக அது இருக்க வேண்டும் என கருதுகிறோம். அதுதான் பண்டிட் உபாத்யாய வழங்கிய சித்தாந்தம். அது கடைகோடியில் உள்ள மனிதனுக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பது. அந்த வகையில் கடைகோடியில் இப்போது இருப்பவர்கள் மலைவாழ் பழங்குடி மக்கள். அவர்களுக்கு மரியாதை கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியாவின் முதல் குடிமகளாக அந்த சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை கொண்டு வர பிரதமர் நரேந்திர மோதி முயற்சி எடுத்திருக்கிறார். இதன் மூலம் அவர்களுக்கு ஏதோ கைமாறு எல்லாம் செய்து விடவில்லை. அவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டியதை பாஜக வழங்குகிறது. ஆனால், காங்கிரஸுடைய அரசியல் வேறு.

கடந்த சில மாதங்களாக பல மாவட்டங்களில் ரவுடிகளாக அழைக்கப்பட்ட பலரை உங்களுடைய கட்சியில் சேர்த்து அவர்களுக்கு முக்கிய பொறுப்புகளை தந்துள்ளதாகவும் அவர்களை வைத்து அண்ணாமலை ஏதோ பெரிதாக திட்டமிடுகிறார் என்றும் உங்கள் மீது குற்றம்சாட்டப்படுகிறதே. உங்களுடைய செயலை எப்படி நியாயப்படுத்துகிறீர்கள்?
இதில் நியாயப்படுத்த ஒன்றுமே இல்லை. ரவுடிகளால் வளர்ந்த கட்சி என்றால் திமுகவைத்தான் சொல்வார்கள். இன்றும் தமிழ்நாட்டில் பார்த்தீர்கள் என்றால், ஒரு அமைச்சர் உதவி கேட்டு வரும் நபரை நோக்கி கையை ஓங்குகிறார், இன்னொரு அமைச்சர் தலையில் தட்டுகிறார். கேட்டால் செல்லமாக தட்டினேன் என்கிறார்கள். இதுதான் திமுகவின் மாடல். இன்றைய தேதியில் திமுகவின் கடலூர் எம்பி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர். அவர் பிணையில்தான் வெளியே இருக்கிறார். இப்படி பலரை சொல்லிக்கொண்டே போகலாம். பாஜக அசுர வேகத்தில் வளர்கிறது. மக்களை நோக்கி எங்களுடைய கட்சி வளர்ந்து வருகிறது. இதைப் பார்த்து பொறுக்க முடியாமல் திமுகவினர் எங்களை விமர்சிக்கிறார்கள். எங்களுடைய கட்சியில் தப்பு செய்தவர்களுக்கும் தப்பு செய்யப்போகும் எண்ணத்தில் வந்தவர்களுக்கும் எப்போதும் இடமே கிடையாது. அதே சமயம், ஒரு காலகட்டத்தில் அப்படி இருந்தவர்கள் நான் திருந்தி விட்டேன். ஜனநாயக முறையில் மக்கள் பணியாற்ற விரும்புகிறேன் என்று கூறி அரசியலுக்கு வந்து பாஜகவில் இணைந்தால் அவர்களைத் தடுக்க எனக்கு எந்த உரிமையும் கிடையாது. வழக்கு பதிவானவர்கள் எல்லாம் அரசியலுக்கு வரக்கூடாது என்றால், தமிழ்நாடு முதல்வர் மீதும் பல முதல் தகவல் அறிக்கைகள் உள்ளன. வருமான வரித்துறை சோதனை கூட நடத்தப்பட்டுள்ளது. என் மீதும் பல வழக்குகள் உள்ளன.
உங்களுடைய கட்சியில் பல பழைய தலைவர்கள், இப்போது அதிகம் பொதுவெளிக்கு வருவதில்லை. உங்களுடைய அணுகுமுறை தடாலடியாக திராவிட கட்சிகளுக்கு இணையானதாக காட்சிப்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இப்படி செயல்பட மேலிடம் உங்களுக்கு ஏதேனும் சுதந்திரத்தை கொடுத்துள்ளதா?
அண்ணாமலைக்கு 'டெல்லி மேலிடம்' எந்த சுதந்திரத்தையும் தரவில்லை. ஆனால், பாஜக மாநில தலைவருக்கு 'அந்த சுதந்திரத்தை' கொடுத்திருக்கிறது. அனைவரும் சேர்ந்துதான் இந்தத் தேரை இழுக்க வேண்டும். பொன்னார், சிபிஆர், ஹெச். ராஜா, வி.பி. துரைசாமி, கரு. நாகராஜன் உள்பட எல்லோரையும் அரவணைத்துத்தான் இந்த தேரை இழுக்க வேண்டும். 2024, 2026இல் தமிழக மக்களுக்கு ஒரு ஆட்சியை தருவதற்கான முயற்சியில் பாஜக இறங்கியிருக்கிறது. அனைவரையும் அரவணைத்துச் செல்வது இந்த கட்சியினுடைய சித்தாந்தம். அதை நான் தவறாமல் கடைப்பிடிக்கிறேன். நான் மூத்த தலைவர்களுடன் தொடர்பில் இருக்கிறேன், ஆலோசிக்கிறேன். இதற்கென கட்சியில் உயர்நிலைக்குழு கூட உள்ளது. இவை எல்லாம் வெளியே தெரிவதில்லை. எல்லோரும் எனது முயற்சிக்கு ஒத்துழைப்பை வழங்குகிறார்கள்.
தமிழ்நாட்டில் எதிர்கட்சியான அதிமுக இரண்டு அணிகளாக செயல்படத் தொடங்கியுள்ளது. அதில் எடப்பாடி பழனிசாமி தலைமைவசம் கட்சி அலுவலகத்தை ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஒரு சார்பு அதிமுக தலைமைக்கு நெருக்கமானவர்களின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வருத்துறை, அமலாக்கத்துறை சோதனை நடத்தப்படுகிறது. இனி உங்களுடைய கட்சி யாருடைய தலைமையை ஏற்றுச்செல்லப்போகிறது?
எங்கோ ஒரு தொழிலதிபரின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடந்தால் கூட அதில் பாஜகவை தொடர்புபடுத்துவது ஊடகங்களுக்கு வழக்கமாகி விட்டது. இதை நான் ஏற்க மாட்டேன். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் மத்திய புலனாய்வுத்துறையை 'கூண்டுக்கிளி' என உச்ச நீதிமன்றமே விமர்சித்தது. அத்தகைய நிலை இப்போது இல்லை. அதிமுகவுடனான உறவை பொறுத்தவரை, நாங்கள் யாருக்கும் எந்தவித தொந்தரவும் கொடுக்க விரும்பவில்லை. தேசியத்துக்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய வளர்ச்சி உள்ளது. அதை நோக்கி தனித்தன்மையுடன் செல்கிறோம். இன்னொரு கட்சியில் என்ன நடக்கிறது என்பது எங்களுடைய வேலை இல்லை. வாஜ்பேயி ஆட்சியின்போது 35 கட்சிகள் கூட்டணியில் இருந்தன. அவற்றுடனேயே அவர் தமது ஐந்து வருட ஆட்சியை நிறைவு செய்தார். அதனால் வேறு கட்சிக்குள் தலையிடுவது எங்களுக்கு தேவையில்லாத விஷயம்.

ஆனால், உங்கள் கட்சியைச் சேர்ந்த பிரதமர் தானே சில வருடங்களுக்கு முன்பு பிரிந்து கிடந்த ஓபிஎஸ்-இபிஎஸ் ஆகியோரின் கரங்களைப் பிடித்துச் சேர்த்து வைத்தார் - இப்போது என்ன செய்யப்போகிறீர்கள்?
அந்த காலகட்டத்தில் பிரதமர் தமிழ்நாடு வந்தபோது, அதிமுகவில், ஒரு கட்சி என்ற அளவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என தேர்வாக பரஸ்பரம் யோசனை இருந்தது. அப்படி வந்தவர்கள், மாநில முதல்வர், துணை முதல்வர் யார் என்பதை தங்களுக்குள்ளாகவே பேசி முடிவு செய்து எங்களிடம் சொன்னார்கள். ஒரு கட்சியாக அவர்களை கூட்டணியில் வைத்திருக்கிறோம். தனி மனிதராக அவர்களில் எவரையும் நாங்கள் பார்க்கவில்லை. நாளைக்கு மொத்தமாக எல்லோரும் சேர்ந்து 'இவர்தான் தலைவர்' என்று சொன்னால் பாஜக அந்த தலைமையுடன்தான் அரசியல் உறவை வைத்துக் கொள்ளும். இப்படி செய்வதால் மீதமுள்ள தலைவர்களை ஒதுக்குவோம் என்று கருதக்கூடாது. எங்களுடைய நட்பு என்பது எல்லோருடனும் உள்ளது. இபிஎஸ் தலைவராக தேர்வானபோது அவரைத்தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தேன். ஓபிஎஸ் உடன் நட்பாக இருக்கிறேன். ஓபிஎஸ்-க்கு கொரோனா வந்தபோது அவரை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தேன். பாஜகவும் அதிமுகவும் உள்ள உறவு கட்சிக்கும் கட்சிக்கும் இடையிலானது. இதில் அண்ணாமலை என்பவர் கூட தனி மனிதர் தானே. அவர் யாருடன் உறவைப் பேணுகிறார் என்பது பிரச்னையே இல்லை.

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













