இலங்கையில் பாஜக கட்சி ஆரம்பிக்கிறதா? - அண்ணாமலை கூறியது என்ன?

கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்வதற்கு இந்தியர்களுக்கு இலவச விசா நடைமுறையொன்றை இலங்கை அரசாங்கம் அமல்படுத்த வேண்டும் என, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள அண்ணாமலை, கொழும்பில் நேற்று (மே 03) ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கச்சத்தீவில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவுக்கு இந்திய பக்தர்களை அனுமதிக்கும் வகையில், ஆண்டுக்கு ஒரு முறை இலவச விசா நடைமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்பதே தனது கோரிக்கை என அவர் கூறுகின்றார்.
இவ்வாறு இலவச விசா நடைமுறையொன்று அறிமுகப்படுத்தப்படும் பட்சத்தில், மீனவர்களின் பார்வை மாறிவிடும் என அவர் தெரிவித்தார்.
சில சந்தர்ப்பங்களில் இறுதித் தருணத்தில் அனுமதி மறுக்கப்படுகின்றமையினால், தாம் அரசியல் ரீதியிலான முன்நகர்வுகளை மேற்கொண்டு, பக்தர்களுக்கு அனுமதியை பெற்றுக்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் அண்ணாமலை பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
கேள்வி: யாழ்ப்பாணத்தை அண்மித்த மூன்று தீவுகள் இந்தியாவினால் கையகப்படுத்தப்பட்டது. சீனாவுக்கு வழங்கப்படவிருந்த நிலையில், இறுதியில் இந்தியா அவற்றை கையகப்படுத்தியது. இவ்வாறு கச்சத்தீவுகள் கையகப்படுத்தப்படுமா?
பதில் : கையகப்படுத்துகின்றோம் என்ற வார்த்தை சரியில்லை என்பது என்னுடைய நிலைப்பாடு. காரணம், அது மூன்றும் சீனாவுக்கு சென்று, சீனா தொழில்நுட்ப ஆய்வுகளில் தகுதி பெறாதமையினால், இலங்கை அரசாங்கம் இவற்றை இந்தியாவுக்கு வழங்கியது. இந்தியா வலுக்கட்டாயமாக வந்து எடுக்கவில்லை. அது கையகப்படுத்தப்படவில்லை.
கேள்வி: இலங்கையிலிருந்து அகதிகளாக இந்தியாவுக்கு பலர் சென்று கொண்டிருக்கின்றனர். இவர்கள் தொடர்பில் எதிர்காலத்தில் எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படும்?

பதில்: இன்றைக்கு தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 43 ஆயிரம் இலங்கை அகதிகள் முகாம்களில் இருக்கின்றார்கள். அந்த ஒரு லட்சத்து 43 ஆயிரம் சகோதர, சகோதரிகளுக்கு முகாம் அனுமதிப் பத்திரம் இருக்கின்றது. நிறைய பேர் சென்னையில் வேலை செய்கின்றனர். பலர் பல பல்கலைக்கழகங்களில் படிக்கின்றார்கள். உள்நாட்டில் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை. இப்படி இருக்கும்போது, இலங்கையில் பொருளாதார சிக்கல் ஏற்பட்டதை அடுத்து, கிட்டத்தட்ட 70 பேருக்கு மேல் வந்துள்ளனர். தமிழகத்திலுள்ள ஊடகங்கள் பயன்படுத்தும் அந்த வார்த்தையை நான் பயன்படுத்த மாட்டேன்.
பொருளாதார அகதிகள் என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றார்கள். அதை நான் பயன்படுத்த மாட்டேன். ஒரு அவசர நிலைமையில் அவர்கள் இந்தியாவுக்கு வருகின்றார்கள். அவர்களை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும். அதைவிடுத்து, சட்டவிரோதமாக செயற்பட்டார்கள், கடவுச்சீட்டு முறையை மீறி விட்டார்கள் என்ற கடுமையான சட்டங்கள் எப்போதும் கிடையாது. இந்திய அரசாங்கம் அதேபோன்று, பிரதமர் மோதி தெளிவாக இருக்கின்றார். இலங்கையிலிருந்து யார் இந்தியாவுக்குள் வந்தாலும், மனிதாபிமான அடிப்படையிலேயே நாம் அதனை பார்க்க வேண்டும். கடுமையான சட்ட திட்டங்களுடன் இதை பார்த்தால், பல நூற்றாண்டு கால உறவுக்கு பாதிப்பு ஏற்படும் என்பது என்னுடைய பார்வை.
கேள்வி: உங்களின் கருத்து அகதிகளை இந்தியாவுக்குள் வரவேற்கும் வகையில் இருக்கின்றதை போன்று தோன்றுகின்றது?
பதில்: வரவேற்கும் வகையில் இருக்கின்றது என்று சொல்வதை விட, ஒரு நாட்டை விட்டு யாருமே போக வேண்டும் என விரும்ப மாட்டார்கள். ஒரு வீட்டை விட்டு, சொந்தக்காரர்களை விட்டு, இருக்கின்ற இடத்தை விட்டு செல்ல யாருமே விருப்பப்பட மாட்டார்கள். அதையெல்லாம் தாண்டி, படகில் ஆபத்தையும் கடந்து வருகின்றார்கள் என்றால், அவர்களுக்கு இருக்கக்கூடிய பெரும் அழுத்தத்திற்கு மத்தியில் அவர்கள் வெளியில் வாருகின்றார்கள். பாகிஸ்தான், வங்கதேச எல்லைகளிலிருந்து வருகின்றவர்கள், பாஸ்போர்ட் பிரச்னைகள் போன்றவற்றினால் வருபவர்களை ஒவ்வொரு வாரமும் அவர்களுடைய எல்லைக்குள் நாங்கள் அனுப்புகின்றோம். எனினும், இந்தியா - இலங்கைக்கு இடையில் அந்த மாதிரியான கடுமையான நடவடிக்கைகள் எடுக்காமல், ஒரு மனிதாபிமான விதத்திலேயே அதனை இந்தியா பார்க்கின்றது. ஏனைய நாடுகளை விடவும், எமது நாடுகளுக்கு இடையிலான உறவு முழுமையாக வேறுபட்டது.
கேள்வி: யுத்தக் காலத்தில் வருகைத் தந்த அகதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகள், இந்த நெருக்கடி காரணமாக வருகைத் தரும் அகதிகளுக்கு கிடைக்குமா?
பதில்: அது கொள்கை ரீதியிலான முடிவு. அதற்கு நான் பதில் சொன்னால் சரியாக இருக்காது. அது மத்திய அரசு மற்றும் தமிழக மாநில அரசு ஆகியவற்றின் கொள்கை ரீதியிலான முடிவு. என்னை பொருத்த வரை இந்த பொருளாதார நெருக்கடி விரைவில் வழமைக்கு வந்து விடும். அவர்கள் தொடர்ந்து வந்துகொண்டிருப்பார்கள் என நான் பார்க்கவில்லை. வந்தால் கூட என்ன பண்ண போறோம். மனிதாபிமான ரீதியில் அவர்களை நடத்த வேண்டும். எந்த மாதிரியான சலுகைகள் கொடுக்க வேண்டும் என்பது கொள்கை ரீதியிலான தீர்மானம். காத்திருந்து பார்க்க வேண்டும்.

மீனவப் பிரச்னை
கேள்வி: கடந்த காலங்களில் இந்தியா மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையில் மோதல் இடம்பெற்றது. இரண்டு உயிர்கள் காவுக் கொள்ளப்பட்டன. இனிவரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது தடுத்துக்கொள்ள முடியுமா?
பதில்: 2017ம் ஆண்டிலிருந்து இரண்டு நாடுகளுடைய மீன் வளத்துறை அமைச்சகத்தின் செயலாளர்கள் மற்றும் வெளிவிவகார அமைச்சகத்தின் செயலாளர்கள் 6 மாதங்களுக்கு ஒரு முறை இரண்டு நாடுகளின் செயலாளர்களும் கலந்துரையாடுகின்றோம். 6 மாதங்களுக்குள் இருக்கின்ற பிரச்சினைகளை தீர்த்து வருகின்றோம். மீனவர்கள் இதை வேண்டும் என்றே பண்ணுறார்கள் என்பதை விட, கையை தாண்டி செல்கின்றது. எங்களுடைய எல்லையில் கடற்படையாக இருக்கலாம். அல்லது கடல் பாதுகாப்பு பிரிவாக இருக்கலாம். இரண்டு தரப்பும் சிறந்த முறையில் பணியாற்றுகின்றார்கள். இரண்டு நாடுகளுக்கு இடையில் ஒன்றிணைந்த கலந்துரையாடல் நடத்தப்பட்டு வருகின்ற நிலையில், இரு நாடுகளும் துப்பாக்கி சூடு நடத்துவதில்லை. படகுகள் சேதமாகுவதில்லை. மீனவர்களுக்கு உயிர் சேதம் ஏற்படுவதில்லை. அனைத்து பிரச்னைகளையும் 6 மாதங்களுக்கு ஒரு முறை தீர்க்கின்றோம்.
கேள்வி: மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதில்லை என கூறுகின்றீர்கள். ஆனால், இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. கடந்த காலங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்தன
பதில்: குறிப்பாக தற்போது அவ்வாறு இல்லை. ஒன்று இரண்டு சம்பவங்கள் நடக்கும், ஏனென்றால் நாம் மனிதர்கள். மனிதர்களிடம் தவறுகள் நடக்கும். நாம் அனைவரும் தவறு செய்கின்றோம். எனினும், நாளாந்தம் செய்கின்றார்கள், வாரம் வாரம் செய்கின்றார்கள் என்ற நிலைமை இரண்டு பக்கம் இல்லை. இதை பெரிய விசயமாக பார்க்க வேண்டாம். எல்லை தாண்டி சென்றிருக்கின்றார்கள். பேசிக் கொண்டிருக்கின்றோம். அதேபோன்று, இலங்கையிலிருந்து வருகின்றவர்களையும் மனிதாபிமானமாக நடத்த வேண்டும். இந்தியா இதை அரசியல் ரீதியாக பார்க்காது.
இதேவேளை, இலங்கை வாழ்கின்ற இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு ஓ.சி.ஐ அனுமதியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
பாஜக இதற்கான முன்நகர்வுகளை நடத்தும் என்பதை தான் உறுதியாக கூறுகின்றேன் என அண்ணாமலை தெரிவித்தார்.

பாஜக இலங்கையில் கட்சி ஆரம்பிக்கின்றதா?
இலங்கையில் தமது கட்சியை ஆரம்பிப்பதற்கான எண்ணம் தமக்குக் கிடையாது என பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
பாஜக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சமயம் சார்ந்த அரசியலில் ஈடுபடாது என கட்சியின் அங்கத்துவ பட்டியலில் 4வது சரத்தில் நாங்கள் தெளிவாக கூறியுள்ளோம் என அவர் பதிலளித்தார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












