தமிழகம் வந்த இலங்கை தமிழர்கள்: “கைக்குழந்தைக்கு மருந்துகூட வாங்க முடியவில்லை”

- எழுதியவர், பிரபுராவ் ஆனந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக உணவு, அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் மருந்து தட்டுப்பாட்டால் இலங்கையில் இருந்து இதுவரை 75 இலங்கை தமிழர்கள் தமிழகத்திற்கு வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியுள்ள நிலையில், திங்கள் கிழமை அதிகாலை 2 மாத கை குழந்தையுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மேலும் 5 பேர் அகதிகளாக ராமேஸ்வரம் வந்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு யாழ்ப்பாணம் மாவட்டம் நெடுந்தீவு கடற்கரையில் இருந்து ஒரு பைப்பர் படகில் புறப்பட்ட வவுனியா மாவட்டம் சிதம்பராபுரம் பகுதியை சேர்ந்த ராஜலெட்சுமி, தயாளன், லதா மற்றும் அவரது ஆறு வயது மகள் மற்றும் 2 மாத கை குழந்தை என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 இலங்கை தமிழர்கள் திங்கள் கிழமை அதிகாலை 2 மணி அளவில் ராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை கடற்கரையில் வந்து இறங்கினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ராமேஸ்வரம் மரைன் போலீசார் இலங்கை தமிழர்களை மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு பின் இந்த 5 இலங்கைத் தமிழர்களை மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைத்தனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி முதல் இன்று வரை 80 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர்.
இரண்டு மாத கை குழந்தையுடன் உயிரை பணயம் வைத்து தமிழகம் வர என்ன காரணம்?
இலங்கையில் இருந்து இரண்டு மாத கை குழந்தையுடன் வந்த லதா பிபிசி தமிழிடம் பேசுகையில்,
இலங்கையில் குழந்தைகளுக்கு பால் மாவு, மருந்து என அடிப்படை பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அப்படி கிடைத்தாலும், அது அதிக விலைக்கு விற்கப்படுவதால் எங்களால் அதை வாங்கி சாப்பிடும் அளவுக்கு வசதியும் இல்லை. என் கணவருக்கு வேலையும் இல்லை.
நாங்கள் இருக்கும் பகுதியில் போதிய தண்ணீர் வசதி இல்லாததால் விவசாயம் செய்ய முடியவில்லை. எனவே இனி இலங்கையில் நிம்மதியாக வாழ முடியாது, பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக இந்தியாவுக்கு வர வேண்டும் என முடிவு செய்து அகதிகளாக படகு மூலம் இன்று (2.4.2022) காலை ராமேஸ்வரம் வந்து இறங்கியுள்ளோம்.
அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் கொடுக்கக்கூட மறுக்கிறார்கள் காரணம் கேட்கும்போது காகிதம் இல்லாததால் பிறப்புச் சான்றிதழ் வழங்க முடியாது என்கிறார்கள். அதேபோல் அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு மருந்துகள் போதிய அளவு இல்லாமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் தற்போது குழந்தைகளுக்கான அடிப்படை மருந்துகள் கூட கிடைப்பதில்லை. 30 ரூபாய்க்கு விற்ற மருந்து 450 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. கேட்டால் மருந்து இறக்குமதி இல்லை என்கின்றனர்.
எங்களுக்குச் சொந்தமான இடத்தையும், வீட்டையும் விற்று அதில் கிடைத்த பணத்தை வைத்து இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ளோம், என்றார் லதா.
போரின் போது கூட இலங்கை இப்படி இல்லை
இலங்கையில் இருந்து அகதியாக வந்த ராஜலெட்சுமி பிபிசி தமிழிடம் பேசுகையில், இலங்கையில் சரியான கஷ்டம். அங்கு உயிர் வாழ சாப்பாடு, குடிக்க தண்ணீர் என மக்களுக்கு எந்த அடிப்படை வசதியும் இல்லை. ஒரு பேரல் தண்ணி 250 ரூபாய் கொடுத்து வாங்கி குடித்தோம்.
ஒரு கிலோ சீனி 450 ரூபாய், குழந்தைகளின் அடிப்படை உணவான பால் மாவு மற்றும் குழந்தைகளுக்கான மருந்துகள் கிடைப்பதில்லை. இலங்கையில் தொடர்ந்து நாங்கள் வசிக்கும் பகுதியில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டதால் குழந்தைகளுக்கு கை வைத்தியம் மட்டுமே பார்க்க முடிந்தது.
எங்களுடைய நிலத்தை விற்று அதிலிருந்து கிடைத்த பணத்தை வைத்து நாங்கள் படகில் உயிரை பணயம் வைத்து வாழ்வோமா சாவோமா என்று தான் இந்தியா வந்துள்ளோம். நேற்று 'என் குழந்தை படகில் கீழே விழுந்து விட்டது. கடல் உப்பு தண்ணீரில் நனைந்த குழந்தையை தூக்கிக்கொண்டு இந்தியா வந்துள்ளோம்'. குழந்தைக்கு ஏற்கனவே மூச்சு திணறல் பிரச்னை உள்ளது. ஆனால் அதற்கு ஏற்ற மருந்துகள் இலங்கையில் கிடைக்கவில்லை. அதனால்தான் இங்கு வந்தோம்.
இந்தியா தான் எங்கள் உயிருக்கு உத்தரவாதம் கொடுக்க வேண்டும். இத்தனை ஆண்டுகாலம் இலங்கையிலிருந்தும் எங்களுக்கு என்று சொந்தமாக ஒன்றுமில்லாமல் ஆதரவற்று நிற்கிறோம்.

பிறப்பு சான்றிதழ் தர இலங்கையில் காகிதம் இல்லை
இலங்கையில் இருந்து அகதியாக வந்த வவுனியாவை சேர்ந்த தயாளன் பிபிசி தமிழிடம் பேசுகையில்,
நான் அங்கு கட்டடத் தொழில் செய்து வருகிறேன். சிமெண்ட் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அங்கு கட்டட தொழில் முற்றிலுமாக முடங்கியுள்ளது. இதனால் எனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. என்னைப் போல பலரும் வேலை இழந்துள்ளனர்.
எனவே வாழ வழியில்லாமல் தமிழகத்திற்கு அகதியாக வந்துள்ளேன். இந்திய அரசு எங்களை பார்த்துக் கொள்ளும் என்ற நம்பிக்கையில் நாங்கள் வந்துள்ளோம். நாளுக்கு நாள் அரிசி, கோதுமை, பால் மாவு, சீனி விலை அதிகரித்து வருகிறது. எரிபொருள் டீசல், மண்ணெண்ணெய் கிடைப்பதில்லை. பல மணி நேரம் மின் தடை ஏற்படுகிறது.
மின் தடையால் கோடை காலத்தில் குழந்தைகளை வைத்துக் கொண்டு அங்கு இருக்க முடியாது. வரும் ஜீன் மாதம் இன்னும் விலை உயரும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

நாங்கள் வசிக்கும் பகுதியில் தொடர்ந்து அரசுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆனால் இதுவரை எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. இனியும் கிடைக்குமா என்பது சந்தேகமே. எனவே தான் இரண்டு மாத கைக்குழந்தையுடன் உயிரை பணயம் வைத்து கடைசியில் ஒரு வழியாக தமிழகம் வந்துள்ளேன்.
தினந்தோறும் பசி பட்டினியுடன் இலங்கையில் கஷ்டப்படுவதற்கு பதிலாக ஒரு நாள் கடலில் கஷ்டப்படுவோம் என உயிரைப் பணயம் வைத்து குழந்தையின் எதிர்காலத்திற்காக தமிழகத்திற்கு அகதிகளாக வந்துள்ளேன்" என தயாளன் தெரிவித்தார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












