செஸ் ஒலிம்பியாட்: மு.க.ஸ்டாலின், நரேந்திர மோதி வெளிப்படுத்திய இணக்கம் நாகரிகமா? அரசியல் நகர்வா?

நரேந்திர மோதி - மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம், DIPR

படக்குறிப்பு, செஸ் நிகழ்வில் நரேந்திர மோதி - மு.க.ஸ்டாலின்.
    • எழுதியவர், அ.தா.பாலசுப்ரமணியன்
    • பதவி, பிபிசி தமிழ்

சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோதியை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அழைத்தது முதலே சமூக ஊடகங்களில் அது லேசாக அரசியல் விவாதமாக 'தூரத்' தொடங்கிவிட்டது.

ஜூலை 28ம் தேதி சென்னையில் நடந்த இந்தப் போட்டியின் தொடக்க விழா மேடையில் நரேந்திர மோதி - மு.க.ஸ்டாலின் இருவரும் காட்டிய அந்நியோன்னியம் பளிச்சென்ற வேறுபாடாகத் தெரிந்தது; நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசிய பேச்சு, விழாவுக்கு முன்னும் பின்னும் நடந்த நிகழ்வுகள் போன்றவையும் திமுக-வின் முந்தைய அணுகுமுறையில் இருந்து பெரிய மாற்றத்தை காட்டுகிறது என்கிறார் மூத்த பத்திரிகையாளரும் தி ஹிந்து நாளிதழின் இருப்பிடத் துணை ஆசிரியருமான டி.சுரேஷ்குமார். திமுகவின் கூட்டணிக் கட்சிகளுக்கு இது நிச்சயம் ஓர் அதிர்வைக் கொடுத்திருக்கும் என்கிறார் அவர்.

மாநில அரசு இந்திய அரசிடம் இணக்கமான உறவுக்கு முயற்சிப்பதோ, பிரதமர் என்ற முறையில் அவரிடம் முதல்வர் இணக்கமாக நடந்துகொள்வதோ இயல்பாக புரிந்து கொள்ளக்கூடிய நடவடிக்கைகளே; ஆனால், கடந்த முறை மோதி தமிழ்நாடு வந்தபோது அரசு மேடையில் நடந்த நிகழ்வுக்கும், செஸ் ஒலிம்பியாட் மேடையில் நடந்த நிகழ்வுக்கும் இடையில் பெரிய வேறுபாடு தெரிகிறது. மேடையில் இரு தலைவர்களின் உடல் மொழி வெளிப்பட்ட விதத்திலும் இந்த வேறுபாடு பிரதிபலிக்கிறது என்று கூறும் சுரேஷ்குமார், இது வெறும் அரசுகளுக்கு இடையிலான இணக்கம் மட்டுமா இல்லை இதற்கு அரசியல் ரீதியான பொருளும் இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்கிறார்.

ஆனால், பாஜகவுடன் நெருங்கினால், திமுக அதற்காக மிகப்பெரிய அரசியல் விலையைத் தரவேண்டியிருக்கும்; ஏனென்றால் பாஜக எதிர்ப்பு என்ற அரசியலே திமுகவின் முக்கியமான பலம் என்கிறார் அவர்.

இது குறித்து ஃபேஸ்புக்கில் எழுதிய பத்திரிகையாளர் மு.வி.நந்தினி பார்வை வேறு விதமாக இருக்கிறது. "சிறு கட்சிகளுக்குக்கூட பாஜகவுடன் கூட்டணி வைத்தால், தமிழகத்தில் ஓட்டு விழாது என்று தெரியும். ஆனால், திமுக பாஜகவுடன் கூட்டணி சேரப்போகிறது என புளுகித் திரிகிறார்கள். பொய் சொன்னாலும் நம்புறமாதிரி சொல்லணும்" என்கிறார் அவர்.

மேடையில் நெருக்கம்

ஆனால், மேடையில் மோதியும், ஸ்டாலினும் சிரித்துப் பேசிக்கொண்டதோ, ஒருவரை ஒருவர் தட்டி நெருக்கம் காட்டிக்கொண்டதோ மட்டுமே அல்ல விஷயம்.

செஸ் ஒலிம்பியாட் நிகழ்வுக்கு தமிழ்நாடு அரசு வைத்த விளம்பரங்களில் அத்துமீறி பிரதமர் நரேந்திர மோதி படங்களை ஒட்டிய பாஜக விளையாட்டுப் பிரிவு நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாத நிலையில், அந்தப் படத்தை அழித்த பெரியார் திராவிடர் கழகத் தொண்டர்கள் மட்டும் கைது செய்யப்பட்டிருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.

நிகழ்ச்சி விளம்பரத்தில் பிரதமர் படம் இருக்கவேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருந்தபோது இதெல்லாம் நடந்தது குறிப்பிடத்தக்கது. அதாவது, நரேந்திர மோதி படத்தை போடவேண்டும் என்று கோரி பாஜக நீதி மன்றத்தை நாடும் அளவுக்குதான் சில நாள்கள் முன்புவரை நிலைமை இருந்தது. பிரதமர் வருகை உறுதி செய்யப்படவில்லை என்பதால்தான் அவர் படம் இடம் பெறவில்லை என்று மாநில அரசுத் தரப்பில் கூறப்பட்டாலும்கூட. இந்த வேறுபாடு கவனிக்கத்தக்கது.

நிகழ்ச்சி முடிந்த பிறகு தமிழ்நாடு அரசு செய்திருந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பாராட்டியிருந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் விமர்சிப்பதும், தமிழ்நாடு பாஜக தலைவர் பாராட்டுவதும் ஒரே நேரத்தில் நிகழ்வது பலரை நெற்றி சுருக்க வைத்திருக்கிறது.

மோதி - ஸ்டாலின்

பட மூலாதாரம், DIPR

அமர் பிரசாத் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்காதது மட்டுமல்ல, கும்மிடிப்பூண்டியைத் தாண்டினால், ஸ்டாலினை யாருக்கும் தெரியாது என்று விமர்சித்த அமர்பிரசாத்துக்கு எதிராக திமுக இணைய அணியினரும் பெரிதாக எதிர்வினை ஆற்றவில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறார் சுரேஷ்குமார்.

திமுக அரசை கடுமையாக விமர்சித்துவரும் அண்ணாமலையைப் பாராட்டும் விதமாக ஒரு பேட்டியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசியிருந்ததும் இந்த நேரத்தில்தான் நடந்தது.

உ.பி. முதல்வர் ஆதித்யநாத்துக்கு செஸ் ஒலிம்பியாட் அழைப்பிதழ் நேரில் சென்று வழங்கப்பட்டதாக திமுக கூட்டணிக் கட்சியினர் சமூக ஊடகங்கள் விமர்சிக்கின்றனர்.

யோகிக்கு ஏன் அழைப்பிதழ்.

பட மூலாதாரம், facebook

படக்குறிப்பு, யோகிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதை எதிர்த்து ஒரு சிபிஎம் செயற்பாட்டாளர் வெளியிட்ட பதிவு.

எல்லா முதல்வர்களுமே அப்படி அழைக்கப்பட்டார்கள் என்று திமுக தரப்பினர் மறுபுறம் சமாதானம் கூறி வருகின்றனர்.

எதிர்க்கட்சியாக இருந்தபோது GoBackModi ஹேஷ்டேக் இயக்கத்தை முன்னின்று நடத்தியது திமுக. இப்போது ஆட்சியில் இருக்கும்போது பிரதமர் தொடர்பில் அதே மொழியில் அவர்கள் பேசமுடியாது என்பது வேறு. ஆனால், GoBackModi பதிவுகள், பலூன் பறக்கவிடுவது ஆகியவற்றை தீவிரமாக கண்காணிப்பதாக சென்னை போலீஸ் ஆணையர் தெரிவிக்கிறார். 'சேடிஸ்ட் மோதி' என்று முன்பு கூறிய ஸ்டாலின், அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், மோதி கையால் பட்டம் வாங்குவது மாணவர்களுக்குப் பெருமை என்று பேசுகிறார்.

சில வாரங்கள் முன்பு, மாநில அரசுக்குத் தெரியாமல் ஒன்றிய அமைச்சர் எல். முருகனை அழைத்ததால், மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு செல்லாமல் புறக்கணித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இந்த விழாவில் சகஜமாகப் பங்கேற்கிறார். அந்த விழாவில் எல்.முருகன் பங்கேற்றது மட்டுமல்ல, விழாவில் பேசிய துணைவேந்தர் வேல்ராஜ் ஆளுநரின் ஆலோசனைகள் பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவியாக இருப்பதாக கூறுகிறார்.

எதிர்க்கட்சி அரசியல் நிலையும், பாஜக பாய்ச்சலும்

சில வாரங்களில் பளிச்சென தெரியும் வகையில் திமுக அணுகுமுறை மாறியிருப்பதை எந்த சூழ்நிலையில் வைத்துப் புரிந்துகொள்வது என்று கேட்டபோது, டி.சுரேஷ்குமார் இரண்டு விஷயங்களை சுட்டிக் காட்டுகிறார்.

மோதி ஸ்டிக்கர்

பட மூலாதாரம், Amar Prasad Reddy/twitter

ஒன்று தேசிய அரசியல் சார்ந்தது. மற்றது, தனி நபர்கள் சார்ந்தது.

இந்திய அளவில் எதிர்க்கட்சிகள் இடையே ஒற்றுமை கைகூடவில்லை. குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளரை ஆதரித்த மம்தா பேனர்ஜி, துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாக கூறுகிறார். காங்கிரசிடம் புத்துணர்ச்சி ஏற்படவே இல்லை. ராகுலை பிரதமர் வேட்பாளர் என்றார் மு.க.ஸ்டாலின். ஆனால், தேர்தல் தோல்விக்குப் பிறகு ராகுல் தலைவர் பதவியில் இருந்து விலகினார். எதிர்க்கட்சிகளுக்குத் தலைமை வகிக்கும் வல்லமையை காங்கிரஸ் வெளிப்படுத்தவே இல்லை.

இதற்கு மாறாக பாஜக 2024 பொதுத்தேர்தலுக்கு தயாராகத் தொடங்கிவிட்டது. அவர்களிடம் சோர்வு இல்லை.

அனைத்திந்திய சமூக நீதிக்கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கினார் மு.க.ஸ்டாலின். நீட் தேர்வை எதிர்ப்பதற்கு பல மாநிலத் தலைவர்களுக்கு கடிதம் எழுதினார். ஒரு வினையூக்கியாக இருப்பதற்கு அவர் மேற்கொண்ட இந்த இரண்டு முயற்சிகளுக்கும் இந்திய அளவில் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை.

புத்துணர்ச்சி அடையாத காங்கிரஸ்

காங்கிரசிடமும் புத்துணர்ச்சி இல்லாமல், புதிய அணி சேர்க்கைக்கான முயற்சிகளுக்கும் பெரிய பலன் இல்லாத சூழ்நிலையில், 4 ஆண்டுகள் ஆட்சியை நடத்தியாகவேண்டுமே என்ற கவலையால், திமுக தன் நிலைப்பாட்டை மென்மையாக்கிக்ககொண்டிருக்கலாம் என்கிறார் சுரேஷ்குமார்.

D.Sureshkumar

பட மூலாதாரம், D.Sureshkumar

படக்குறிப்பு, டி.சுரேஷ்குமார்

அதைப் போல, மகாராஷ்டிராவில் பாஜக நிகழ்த்திய ஆட்சி மாற்றம், மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மீதான ரெய்டு நடவடிக்கை ஆகியவையும் திமுகவுக்கு ஒரு தற்காப்பு உணர்வை ஏற்படுத்தியிருக்கலாம். சில திமுக அமைச்சர்கள் ஏற்கெனவே அமலாக்கத்துறை கண்காணிப்பில் இருக்கிறார்கள். இதுவும் இந்த அணுகுமுறை மாற்றத்துக்கு காரணமாக இருக்கலாம் என்கிறார் அவர்.

அண்ணா பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் மோதியை வாயாரப் பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்த சந்தர்ப்பத்தில் நீட் மசோதா நிலுவை குறித்து கோரிக்கை எழுப்பியிருக்க முடியும். இருந்தாலும் அவர் செய்யவில்லை. செஸ் ஒலிம்பியாட் நிகழ்வில், 20 ஆயிரம் வீரர்களை திரட்டி ஒரு செஸ் போட்டியை குஜராத்தில் நடத்தியவர் என்று மோதியை ஸ்டாலின் பாராட்டினார்.

ஆனால், அப்படி ஸ்டாலினையோ, தமிழ்நாடு அரசையோ மோதி ஏதும் பாராட்டவில்லை. நிகழ்ச்சி ஏற்பாட்டைதான் பாராட்டினார். திமுகவை பாராட்டுவதில் இப்போது அவசரம் காட்ட விரும்பவில்லை என்பதையே இது காட்டுகிறது என்று சுட்டிக் காட்டுகிறார் சுரேஷ்குமார்.

அதே நேரம், செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சியில் தமிழ்நாடு வரலாற்றை நிகழ்த்திக்காட்டிய விதம், அடிபணியாத தமிழ்நாடு மைய அரசியலை ஸ்டாலின் தொடர்ந்து செய்கிறார் என்பதன் குறியீடு என்பதாக சிலர் தங்கள் கருத்துகளை முன்வைக்கின்றனர்.

எது எப்படியோ, இரண்டு பெரிய பகை முகாம்களுக்கு இடையில் திடீரெனத் தோன்றியிருப்பதாகத் தெரியும் ஓர் இணக்கம், ஒன்றிய அரசு, மாநில அரசு என்ற இரண்டு பல் சக்கரங்கள் சுமுகமாக இணைந்து சுழல்வதற்கான முயற்சி மட்டுமா? அரசியல் அணி சேர்க்கையில் இது பெயர்ச்சிகளை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விகள் வெறும் சந்தேகமாக என்றபோதும், பலருக்கும் எழுந்திருக்கிறது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: