நிலம்பூர் ஆயிஷா - ஒரு முஸ்லிம் பெண் கலைஞராக மேடை ஏறுவதில் இவர் சந்தித்த சவால்கள் என்னென்ன?

நிலம்பூர் ஆயிஷா

பட மூலாதாரம், CV LENIN

படக்குறிப்பு, நிலம்பூர் ஆயிஷா
    • எழுதியவர், இம்ரான் குரேஷி
    • பதவி, பிபிசி இந்தி

அது 1953ம் ஆண்டு. நிலம்பூர் ஆயிஷாவுக்கு 18 வயது. ஆயிஷா மேடையில் ஒரு வசனத்தைப் பேசிக் கொண்டிருக்கையில், அவரை நோக்கி ஒரு தோட்டா பாய்ந்தது.

"தோட்டா என் மீது பாயவில்லை. அது மேடையில் இருந்த திரை மீது பாய்ந்தது," என்று நிலம்பூரில் இருக்கும் அவரது வீட்டில் இருந்தபடி தன் நினைவுகளை மீட்டெடுத்துக் கூறுகிறார் 87 வயதான ஆயிஷா. நிலம்பூர் ஆயிஷா கேரளாவில் நிலம்பூர் (இது அவருக்கு மேடை பெயரானது) என்ற பகுதியைச் சேர்ந்தவர்.

முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பெண்கள் நடிக்கக்கூடாது என்று கருதும் மத ரீதியான பழமைவாதிகளுள் ஒருவர்தான் அவரை துப்பாக்கியால் சுட முயன்றவர். ஆயிஷா என்ற முஸ்லிம் பெண்ணை மேடை ஏற விடாமல் செய்வதே அவரது நோக்கம்.

ஆனால், தன்னை நோக்கி எறியப்படும் கற்கள், தன் மேல் விழும் அடிகள் எனப் பல்வேறு நெருக்கடிகளைத் தாண்டி, "மக்களின் மனநிலையை மாற்ற முடிந்தது," என்று கூறும் வரை, அவர் தொடர்ந்து நடித்தார்.

சரி இப்போது ஏன் இவரது கதையைப் பேச வேண்டும்?

அன்று ஆயிஷாவை நோக்கி தோட்டா பாய்ந்தபோது, அவர் நடித்துக் கொண்டிருந்த மலையாள நாடகம் - 'இஜு நல்லோரு மன்சனகன் நோக்கு' (நீ ஒரு நல்ல மனிதனாக முயற்சி செய் என்பது இதன் அர்த்தம்). கேரளாவில் கடந்த மாதம், இன்றைய கால நடிகர்களைக் கொண்டு இந்த நாடகம் மீண்டும் அரங்கேறியது.

இந்தப் புதிய நாடகம், ஆயிஷா மீது நடந்த துப்பாக்கிச் சூடு முயற்சியில் இருந்து தொடங்கியது. இது பழைய நாடகத்தைப் போலவே, முஸ்லிம் மதத்தில் இருக்கும் மத ரீதியான பழமைவாதத்தைக் குறி வைத்துப் பேசியது. மத கோட்பாடுகள் தொடர்பாக நடக்கும் பல்வேறு சம்பவங்களை உள்ளடக்கிய ஒரு நிகழ்வாக இந்தப் புதிய நாடகம் இருந்தது. குறிப்பாக, பெண்களுக்கு எதிராக நடக்கும் ஒடுக்குமுறைகள் பற்றிப் பேசியது.

உதாரணமாக, சில வாரங்களுக்கு முன்னர், கேரளாவில் ஒரு முஸ்லிம் தலைவர், ஒரு நிகழ்ச்சியில் விருது வாங்க மாணவி ஒருவரை மேடைக்கு அழைத்தமைக்காக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களைத் திட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

நிலம்பூர் ஆயிஷா

பட மூலாதாரம், Getty Images

2014ஆம் ஆண்டு, இந்து தேசியவாத கட்சியான பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியைப் பிடித்தது முதல், 200 மில்லியன் பேர் கொண்ட மிகப் பெரிய சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

இதையொட்டி, சிறுபான்மையின சமூகம் ஓர் அரசியல் குழப்பத்தை எதிர்கொண்டு வருகிறது. அவர்கள் மத அடையாளங்கள் என ஆதரித்து, பின்பற்றப்படும் பழமைவாத நடைமுறைகளை சில சமயங்கள், மத ரீதியாக நடுநிலையாக உள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க முடியாமல் திணறுகின்றனர்.

இந்தியாவின் மிகவும் முற்போக்கான மாநிலங்களில் ஒன்றாகக் கருதப்படும் கேரளா உட்பட, இந்தியாவில் 1950களில், 1960களில் ஆயிஷாவும் அவரது சக கலைஞர்களும் எந்த பழமைவாதத்தை எதிர்த்துப் போராடினார்களோ, அது இப்போது ஆழமாக வேரூன்றியிருப்பது கவலையளிக்கிறது என்று ஆயிஷா கூறுகிறார்.

"அப்போது நாங்கள் மக்களின் மனப்போக்கை மாற்ற நினைத்தோம். ஆனால், இப்போது, ஓர் இளம் பெண் மேடை ஏறுவதற்கு எதிர்ப்பு கிளம்புகிறது. இது கொடுமையான நாட்களுக்கு நாம் திரும்புவதைப் போல் உள்ளது," என்கிறார்.

யார் இந்த நிலம்பூர் ஆயிஷா?

நிலம்பூர் ஆயிஷா வசதியான குடும்பத்தில் பிறந்தவர். ஆனால், அவரது தந்தையின் மறைவுக்கு பிறகு, அவரது குடும்பம் கடினமான சூழ்நிலையைச் சந்தித்தது. அவரது குடும்பம் கடினமான சூழ்நிலையில் இருந்தப்போது, அவரது சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள் யாரும் உதவி செய்யவில்லை.

அவரது குடும்ப சூழ்நிலை கடினமாக இருந்தது. ஆனால், அவருக்கு வீட்டில் இருப்பது மகிழ்ச்சியாகவே இருந்தது. அவர் அந்த வீட்டை விட்டு சில காலமே விலகியிருந்தார். ஆம். அவருக்கு 14 வயது இருந்தபோது, 47 வயதான ஒருவருடன் திருமணமானது. ஆனால், ஆயிஷா திருமணமான நான்கு நாட்களிலேயே, அந்த திருமண உறவில் இருந்து வெளியில் வந்தார். அதன் பிறகு தான், அவர் கர்ப்பமாக இருப்பது அவருக்குத் தெரியவந்தது. பிறகு, அவர் விவகாரத்தும் பெற்றார்.

ஒரு நாள் அவர் கிராமஃபோனில் பாட்டு கேட்டபடியே, பாடிக்கொண்டு இருந்தார். "எங்கள் வீட்டில் மீதம் இருந்த ஒரே விலையுர்ந்த பொருள் அதுவே", அப்போது அவரது சகோதரரும், சகோதரின் நண்பரும் நாடக இயக்குநருமான இ.கே அயமு வீட்டிற்குள் நுழைந்தனர்.

அந்த சமயத்தில், கம்யூனிஸ்டுகளின் ஆதரவுடன் ஒரு முற்போக்கான நாடகக் குழு நாடகங்கள், அரசியல் சார்ந்த பாடல்கள் மற்றும் பிற கலை நிகழ்ச்சிகள் கேரளாவில் நல்ல வரவேற்பைப் பெற்று வந்தது. இது பல சிறிய குழுக்களை நாடகங்கள் எழுதுவதற்கும் அரங்கேற்றுவதற்கும் தூண்டியது.

ஆனால் அதில் பெரும்பாலான கதாபாத்திரங்களில், பெண் வேடம் உட்பட, ஆண்களே நடித்தனர்.

1957ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் முதலமைச்சராகப் பதவியேற்றார் இஎம்எஸ்.நம்பூதிரிபாட். கேரளாவில் அவரது தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தபோது, இந்த நாடகங்களில் ஒன்றைப் பார்த்தார். அப்போது, அவர் பெண்களுக்காக எழுதப்பட்ட கதாபாத்திரங்களில், பெண்களை நடிக்க வைக்குமாறு அயமுவிடம் பரிந்துரைத்தார்.

நிலம்பூர் ஆயிஷா பல மேடை நாடகங்களில் நடித்துள்ளார்.

பட மூலாதாரம், NILAMBUR AYISHA

படக்குறிப்பு, நிலம்பூர் ஆயிஷா பல மேடை நாடகங்களில் நடித்துள்ளார்.

ஆயிஷா பாடுவதைக் கேட்ட அயமு, ஒரு நாடகத்தில் ஜமீலா என்ற குடும்பத் தலைவியாக வரும் முக்கிய பாத்திரத்தில் நடிப்பீர்களா என்று கேட்டார்.

அதற்கு ஆயிஷா தயாராக இருந்தார். ஆனால் மதத் தலைவர்களால் அவர்கள் ஒதுக்கி வைக்கப்படுவார்கள் என்று அவரது தாய் கவலையடைந்தார்.

"நாம் கஷ்டத்தில் இருந்தபோது அவர்கள் உதவி செய்ய வரவில்லை. இப்போது அவர்கள் நம்மை எப்படித் தண்டிக்க முடியும் என்று நான் அவரிடம் கேட்டேன்," என்று ஆயிஷா கூறுகிறார்.

அந்த நாடகம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. ஆனால் அது பலரையும் கோபமடையச் செய்தது.

"எங்கள் மீது தாக்குதல்கள் பல நடந்தன. தங்கள் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் மேடையில் தோன்றுவதை முஸ்லிம் பழமைவாதிகள் அவமானமாகக் கருதினர்," என்று நாடகத்தில் ஆயிஷாவின் கதாபாத்திரத்தின் மகனாக நடித்த வி.டி.கோபாலகிருஷ்ணன் கூறுகிறார்.

ஆயிஷா நடிக்கும் போது மக்கள் கல்லெறிந்தனர். அவரைப் பாதுகாக்க முயன்ற சக கலைஞர்களும் தாக்கப்பட்டனர்.

ஒருமுறை, ஒரு நபர் மேடையில் ஏறி குதித்து, ஆயிஷாவை அறைந்ததில், அவரது காது சேதமடைந்தது. அது அவருக்கு நிரந்தரமான செவித்திறன் குறைபாட்டை ஏற்படுத்தியது. அவரை துப்பாக்கியால் சுட முயன்றவர் பிடிபடவே இல்லை.

தனது வாழ்க்கை பயணம் குறித்து ஆயிஷா சிந்திக்கையில், தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்கிறார்.

பட மூலாதாரம், C V LENIN

படக்குறிப்பு, தனது வாழ்க்கை பயணம் குறித்து ஆயிஷா சிந்திக்கையில், தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்கிறார்.

இந்தத் தாக்குதல்கள் அவரைப் பயமுறுத்தியதா என்று கேட்டேன்.

"இல்லவே இல்லை. அது என் பலத்தை அதிகரிக்கத்தான் செய்தது," என்கிறார் ஆயிஷா.

"மனிதர்களிடம் உள்ள நல்ல குணத்தை வெளிக்கொணர்வது, மற்றவர்களை அவர்களின் பின்னணி எது என்று பார்க்காமல் ஒருவரை நேசிப்பது போன்ற மனிதத் தன்மைகளைக் கூறும் நாடகம் அது. அதனால்தான் எங்கள் குழு பல முறை குறிவைக்கப்பட்டது," என்று அவர் கூறுகிறார்.

மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் ஆயிஷாவுக்கு இருந்த துணிச்சல், கேரள வரலாற்றில் மறுக்க முடியாத இடத்தைப் பெற்றுத் தந்துள்ளது," என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஜானி ஓகே.

"அவர் கலை, கலாச்சாரத்தின் மூலம் மாற்றத்தை ஏற்படுத்திய சமூக சீர்திருத்த இயக்கத்தின் ஒரு பகுதியாக இருந்தார்," என்று அவர் கூறுகிறார்.

ஆயிஷா பல நாடகங்கள் மற்றும் படங்களில் நடித்தார். ஆனால் சிறிது காலத்திற்குப் பிறகு, அவருக்கு வாய்ப்புகள் குறைந்தன.

அதற்குப் பிறகு, அவர் சவுதி அரேபியாவிற்கு வீட்டு வேலை செய்யும் பணிக்குச் சென்றார். "எவ்வளவு காலம் பணி செய்தேன் என்று எனக்கு நினைவு இல்லை," என்கிறார்.

அவர் கேரளாவுக்குத் திரும்பியதும், மலையாள திரைப்படங்களில் மீண்டும் நடிக்கத் தொடங்கினார். அவருடைய நடிப்புக்காக சில விருதுகளையும் பெற்றார். பட்டறைகள், நிகழ்ச்சிகளில் பேச அவர் அழைக்கப்படுகிறார். அங்கு அவரை பலரும் ஒரு முன்மாதிரியாகப் பார்க்கின்றனர்.

தனது வாழ்க்கைப் பயணம் குறித்து ஆயிஷா சிந்திக்கையில், தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்கிறார்.

"நேரடியான தாக்குதல்கள் உட்பட அனைத்தையும் நான் தாங்கியிருக்கிறேன். இன்று, 87 வயதில், நான் உலகின் முன் பெருமையுடன் தலைநிமிர்ந்து நிற்க முடியும்," என்கிறார் ஆயிஷா.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: