ஞானவாபி மசூதி - பாபர் மசூதி: இரண்டையும் ஒப்பிடுவது எவ்வளவு சரியானது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சரோஜ் சிங்
- பதவி, பிபிசி ஹிந்தி சேவை
ஞானவாபி மசூதி விவகாரம் தொடர்பான வழக்கு, வாரணாசியின் கீழ் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதற்கிடையில், ஞானவாபி மசூதியின் ஆய்வு சட்டவிரோதமானது என்றும், அயோத்தியில் பாபர் மசூதியில் மேற்கொள்ளப்பட்ட அதே வடிவம்தான் இதற்கும் கொடுக்கப்படுகிறது என்றும் AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி கூறுகிறார். இது குறித்து இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் ட்வீட் பதிவு செய்திருந்தார். ட்வீட்டுடன், 2019ல் தான் வெளியிட்ட கருத்தின் கிளிப்பையும் அவர் இணைத்துள்ளார். அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு வெளியான பிறகு அவர் இந்த அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
அயோத்தி தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, ஞானவாபி, மதுரா மற்றும் நாட்டின் பிற மசூதிகளையும் பாதிக்கும் என்று ஓவைசி அப்போது தனது அறிக்கையில் அச்சம் தெரிவித்திருந்தார்.
மக்கள் தங்கள் நினைவைப் புதுப்பிக்க வேண்டும் என்று தனது அறிக்கையில், அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் ஓங்கி ஒலிக்கும் முஸ்லிம் குரல்களில் ஒன்று அசாதுதீன் ஓவைசியினுடையது. மக்களவை எம்.பி.யாக இருப்பதன் காரணமாக அவர், அரசியலமைப்பு பதவியை வகிக்கிறார்.
இப்படிப்பட்ட நிலையில் ஞானவாபி மசூதி வழக்கும் பாபர் மசூதியின் பாதையில் செல்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இரண்டு வழக்குகளின் ஒப்பீடு சரியானதா?
இந்தக் கேள்விக்கான பதிலைக் கண்டுபிடிக்க, 80 மற்றும் 90 களின் பத்திரிகையாளர்களிடம் பிபிசி பேசியது. இவர்கள் மத்தியப்பிரதேச, உத்தரப் பிரதேச அரசியல் போக்குகளை கூர்ந்து கவனித்தவர்கள். கூடவே இன்று ஞானவாபி மசூதி விவகாரத்தையும் அவர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
காங்கிரஸ் - பாஜக அரசுகளுக்கு இடையிலான வேறுபாடு
"அயோத்தி சர்ச்சை: ஒரு பத்திரிகையாளரின் டைரி" ஐ எழுதிய அரவிந்த் குமார் சிங் அவர்களில் ஒருவர்.
பாபர் மசூதி நிகழ்வுக்கும் ஞானவாபி மசூதி வழக்குக்கும் இடையே சில ஒற்றுமைகள் இருந்தாலும், சில விஷயங்களில் வேறுபாடு இருப்பதாக பிபிசி உடனான உரையாடலில், அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், SAMEERATMAJ MISHRA
இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் பற்றி முதலில் அவர் பேசினார்.
1991-ல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியும், உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியும் இருந்தது என்பதுதான் மிகப்பெரிய வேறுபாடு என்கிறார் அவர்.
அயோத்தியில் ராம ஜென்மபூமியில் கோவில் கட்ட வேண்டும் என்று நாடு முழுவதும் போராட்டம் உச்சகட்டத்தில் இருந்தது. நாடு முழுவதும் குறிப்பாக உத்தரபிரதேசத்தில் வகுப்புவாத பதற்றம் நிலவியது. அத்தகைய நேரத்தில், அயோத்தி சர்ச்சையின் நிழல் மற்ற மதத் தலங்களில் படக்கூடாது என்பதற்காக, அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் ஒரு முன்முயற்சியை மேற்கொண்டார். 1991, செப்டம்பர் 18 ஆம் தேதி வழிபாட்டு தலச் சட்டத்தை இயற்றினார்.
ஆனால் இன்று மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக ஆட்சிதான் உள்ளது.
1991ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வழிபாட்டுத் தலச் சட்டத்தின் செல்லுபடியாக்கம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இந்த வழக்கு இரண்டு ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. நீதிமன்றம் மத்திய அரசிடம் பதில் கேட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு இதுவரை பதில் மனு தாக்கல் செய்யவில்லை.
இந்த கண்ணோட்டத்தில், இரண்டு நிகழ்வுகளிலும் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது.
1991 இல் இயற்றப்பட்ட வழிபாட்டுத் தலச் சட்டம்
"அயோத்தி வழக்கு நீதிமன்றத்துக்கு வந்தபோது, 1991ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலச் சட்டம் நடைமுறையில் இருக்கவில்லை," என்று அரவிந்த் குமார் குறிப்பிட்டார்.
வழிபாட்டுத்தலங்களில் 1947 ஆகஸ்ட் 15 வரை எந்த சமயத்தை சேர்ந்த மக்கள் வழிபாடுகள் செய்து வந்தார்களோ அதே நிலை தொடரவேண்டும். அதில் எந்த மாற்றமும் செய்யப்படக்கூடாது என்பதற்காக 1991 ல் சட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்தக் கண்ணோட்டத்தில் ஞானவாபி வழக்கில் இந்தச் சட்டம் இப்போது வரை கவசமாகச் செயல்பட்டு வருகிறது.
அதேசமயம், அயோத்தி சர்ச்சை தொடர்பான வழக்கு சுதந்திரத்திற்கு முன்பில் இருந்தே நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால், அந்த விவகாரம் 1991 ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலச் சட்டத்தின் கீழ் வரவில்லை.
1991-ல் சட்டம் வந்த பிறகுதான் ஞானவாபி வழக்கு நீதிமன்றத்தை எட்டியது. முன்பும் ஒருமுறை மசூதியை ஆய்வு செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் இந்த சட்டத்தின் காரணமாக அது தடை செய்யப்பட்டது.
எனவே அயோத்தி சர்ச்சையையும் ஞானவாபி சர்ச்சையையும் ஒப்பிடுவது சரியல்ல.

பட மூலாதாரம், RAM DUTT TRIPATHI-BBC
காசியில் ஏற்கனவே உள்ள கோவில்
மூன்றாவது முக்கிய வேறுபாட்டைக் குறிப்பிட்ட அரவிந்த் குமார், "காசியில் ஞானவாபி மசூதிக்கு அருகில் விஸ்வநாதர் கோவில் உள்ளது. அதே நேரம் பாபர் மசூதியில் 1949 இல் சிலைகள் வைக்கப்பட்டன. இந்த சம்பவத்திற்கு பலபேர் சாட்சிகளாக உள்ளனர்," என்றார்.
1949 டிசம்பரில் பாபர் மசூதியில் சிலைகள் வைக்கப்பட்டன.
இந்த விவகாரத்தைத் தீர்க்க நீதிமன்றம் முயன்றுவந்த வேளையில் சிலை வைக்கப்பட்டதால், முழு விஷயமும் சர்ச்சைக்குரிய ஒன்றாக மாறியது என்று பல வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். கூடவே கோவில் கட்டுவதற்காக துறவிகள் சமூகத்தால் அன்று எடுக்கப்பட்ட உறுதிமொழி நிறைவேறுவதற்கான பாதை உருவாகத்தொடங்கியது. .
1949 ஆம் ஆண்டு. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு அரசமைப்பு சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பான இடைப்பட்ட காலம். மத்தியில் ஆட்சியில் இருந்தார் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு. உத்தரபிரதேச முதல்வராக இருந்தார் கோவிந்த் வல்லப் பந்த்.
அதே ஆண்டில், காங்கிரஸுக்கும் சோஷியலிஸ்டுகளுக்கும் இடையே ஏற்பட்ட பிளவு காரணமாக, அயோத்தியில் இடைத்தேர்தல் நடந்தது. அதில் இந்து சமுதாயத்தின் மாபெரும் துறவியான பாபா ராகவ் தாஸ் வெற்றி பெற்றார். அவர் எம்.எல்.ஏ., ஆனவுடனேயே, இந்து சமுதாயத்தில் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது.
பாபர் மசூதி வழக்கு அதுவரை சட்டப் போராட்டமாகவே இருந்து வந்தது. இந்த விவகாரத்தை அரசியலாக்குவது அது வரை தொடங்கவில்லை.
பாபா ராகவ் தாஸ் 1949 ஆம் ஆண்டு ஜூலை மாதம் உத்தரப்பிரதேச அரசுக்கு கோவிலை கட்ட அனுமதி கேட்டு கடிதம் எழுதினார். உத்தரப் பிரதேச அரசின் துணைச் செயலர் கேஹர் சிங், ஃபைசாபாத் துணை ஆணையர் கே.கே. நாயரிடம் 1949 ஜூலை 20 அன்று, நிலம் அரசுக்குச்சொந்தமானதா அல்லது நகராட்சிக்குச் சொந்தமானதா என்பதை உடனடியாக தெரிவிக்கும்படி கேட்டார். இது அரசுக்கு சொந்தமானது என்றும் கோவில் கட்ட அனுமதி வழங்குவதில் எந்தத் தடையும் இல்லை என்றும் நாயர் பதில் அளித்தார்.
1949 , 22-23 டிசம்பர் இரவு, அபய் ராம்தாஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் சுவர் ஏறிக் குதித்து, ராமர்- சீதை, லட்சுமணர் சிலைகளை மசூதிக்குள் வைத்து, ராமர் அங்கு தோன்றி தான் பிறந்த இடத்தை மீண்டும் தன்வசம் எடுத்துகொண்டதாக அறிவித்தனர்.

பட மூலாதாரம், Getty Images
இரண்டு மசூதிகளின் வரலாறு
இது தவிர, இரு மசூதிகளின் வரலாற்றிலும் ஒரு சிறிய வேறுபாடு உள்ளது.
பாபர் மசூதி முகலாய பேரரசர் பாபரின் உத்தரவின் பேரில் அவரது கவர்னர் மீர் பாக்கியால் கட்டப்பட்டது. மசூதியில் உள்ள கல்வெட்டுகளும், அரசு ஆவணங்களும் இதற்கு சான்றாக உள்ளன.
அக்பரின் நவரத்தினங்களில் ஒருவரான ராஜா தோடர்மல், தென்னிந்திய அறிஞர் நாராயண் பட்டின் உதவியுடன் விஸ்வநாதர் கோயிலைக் கட்டியதாக ஒரு பொதுவான நம்பிக்கை உள்ளது.
கோவில் இடிக்கப்பட்ட பிறகு ஞானவாபி மசூதி கட்டப்பட்டது என்றும் ஒளரங்கசீப் கோவிலை இடிக்க உத்தரவிட்டதாகவும், வரலாற்று ரீதியாக நம்பப்படுகிறது.
இருப்பினும், இப்போது வரலாற்றின் இந்தப் பக்கங்கள் மீண்டும் புரட்டிப்பார்க்கப்படுகின்றன.
பாபர் மசூதிக்கும் ஞானவாபி மசூதிக்கும் இடையிலான இத்தகைய வேறுபாட்டைக் குறிப்பிடும் அரவிந்த் குமார், இரண்டு விஷயங்களிலும் இருக்கும் ஒற்றுமை பற்றியும் சுட்டிக்காட்டுகிறார்.

பட மூலாதாரம், UTPAL PATHAK
ஞானவாபி பற்றி விஎச்பி, ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் அறிக்கைகள்
பாபர் மசூதி விவகாரம் ஆரம்பத்தில் நீதிமன்றங்களில் இருந்தது. விஎச்பியும் பாஜகவும் இதில் பின்னர் இணைந்தன.
இதேபோல், ஞானவாபி மசூதி சர்ச்சை 1991 முதல் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளது. தற்போது இந்த வழக்கு வாரணாசி சிவில் நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
ஆனால் இந்த விவகாரத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி), ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்ஆர்எஸ்) மற்றும் பாஜகவுடன் தொடர்புடைய தலைவர்களின் அறிக்கைகளும் இப்போது வெளிவரத் தொடங்கியுள்ளன.
விஎச்பி தேசிய பொதுச் செயலாளர் மிலிந்த் பரண்டே, டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், அயோத்தி மற்றும் ஞானவாபி வழக்குகளுக்கு இடையே உள்ள ஒற்றுமைகள் பற்றி குறிப்பிட்டு, முகலாய படையெடுப்பாளர்கள் இரு இடங்களிலும் இந்து அடையாளங்களை அழிக்க முயன்றனர் என்றும் இதை சரிசெய்ய இந்துக்கள் பல தசாப்தங்களாக போராட வேண்டியுள்ளது என்றும் கூறினார். இந்த விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுக்காக விஎச்பி காத்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு ஆர்எஸ்எஸ் தலைவர் இந்திரேஷ் குமாரின் அறிக்கையும் வெளியாகியுள்ளது.
" ஞானவாபி, தாஜ்மஹால், கிருஷ்ண ஜென்மபூமி போன்ற இடங்களின் உண்மை வெளிவர வேண்டும் என்ற விவாதம் இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் நடந்து வருகிறது. இந்த உண்மைகளை அனைவரும் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். இதில் எந்த விதமான துவேஷமோ, வன்முறையோ, அரசியலோ இல்லை. எவ்வளவு அதிகமாக உண்மை தெரிந்து கொள்ளப்படுகிறதோ, அவ்வளவு அதிகமாக நாடு சரியான பாதையில் செல்ல முடியும் என்று மக்கள் நினைக்கிறார்கள்," என்று ஏஎன்ஐ செய்தி முகமையிடம் அவர் தெரிவித்தார்.
இது குறித்து உத்தரபிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மெளரியாவும் விளக்கம் அளித்துள்ளார். புத்த பூர்ணிமாவின்போது ஞானவாபியில் பாபா மகாதேவ் வெளிப்படுவது நாட்டின் இந்து பாரம்பரியத்திற்கு ஒரு புராண செய்தியை அளித்துள்ளது என்று மே 16 ஆம் தேதி அவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான கிரிராஜ் சிங், இது குறித்து ஒரு டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில், "நாடு பிரிந்தபோது, ஆக்கிரமிப்பாளர்களின் அடையாளங்களை நேரு அழித்திருக்க வேண்டும். ஆனால் திருப்திப்படுத்தும் அரசியலுக்காக நேரு, காசி, மதுரா மற்றும் அயோத்தி சர்ச்சையைi தொடர அனுமதித்தார்,"என்று குறிப்பிட்டார்.
ஞானவாபி மசூதி விவகாரத்திற்கு மெல்ல மெல்ல அரசியல் சாயம் பூசப்படுவது இந்த அறிக்கைகள் மூலம் தெளிவாகிறது.
ஞானவாபியில் 'சிவலிங்கம்' மற்றும் அயோத்தியில் 'ராம் லல்லா'
கீழ் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் ஞானவாபி மசூதியின் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மூன்று நாட்களாக நடந்த இந்த மசூதி வளாக ஆய்வின்போது, சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்தப் பகுதியை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றமும் கூறியுள்ளது.
1949ஆம் ஆண்டு அயோத்தியில் ராம் லல்லா சிலை கிடைத்ததாக கூறப்படுவது போலவே இந்தக்கூற்று அமைந்துள்ளது.
80களில் இருந்து பாபர் மசூதி இடிப்பு மற்றும் ராம ஜென்மபூமி இயக்கம் குறித்து செய்திகளை வழங்கிவந்த பத்திரிக்கையாளர் நீரஜா சௌத்ரி, முழு இயக்கத்திலும் அது மிகவும் முக்கியமான நாள் என்று கூறுகிறார். இந்த சிலைகள் உடனடியாக அகற்றப்பட்டிருந்தால் இந்த தகராறு இவ்வளவு தூரம் வளர்ந்திருக்காது என்று உயர்நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போதும் கூறப்பட்டது.
"1949 க்குப் பிறகு, 1964 இல் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் உருவாக்கம், அதைத் தொடர்ந்து 1984 இல் விஎச்பி-யின் விரிவாக்கம் மற்றும் அவை ஏற்பாடு செய்த யாத்திரைகள் காரணமாக நாடு முழுவதும் ஒரு சூழ்நிலை உருவானது. பின்னர் 1989 இல், பாரதிய ஜனதா கட்சி பாலம்பூர் செயற்குழுவை அமைத்து தீர்மானம் நிறைவேற்றியது. பின்னர் இந்தப் பிரச்சனை பாஜகவின் பிரச்சனையாக மாறியது,"என்று பிபிசி யிடம் அவர் தெரிவித்தார்.
"இந்தக் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும்போது, ஞானவாபி வழக்கும் அதே பாதையில் செல்வதாகத் தெரிகிறது. இந்து மற்றும் இந்துத்துவ சண்டை பல சின்னங்களின் மூலமாக நடக்கிறது. மீண்டும் இந்த உணர்வுகள் இந்தியாவில் அதிகரித்து வருகின்றன. இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த விவகாரம் நீதிமன்றத்தில் தீர்ந்துவிட்டது என்றால் பரவாயில்லை. இல்லையென்றால், பாபர் மசூதி போல் இது நீண்ட காலம் இழுத்துச் செல்லும். நாட்டில் மக்களவை தேர்தல் நடக்கவிருக்கும் 2024 வரையிலும் இது செல்லலாம். இரண்டு இடங்களிலும் மசூதிகளின் இடத்தில் முன்பு கோவில் இருந்ததாக இதை முன்னெடுப்போரால் சொல்லப்படுகிறது. இரண்டு நிகழ்வுகளிலும் ஒற்றுமை உள்ளது என்பதை இது காட்டுகிறது. இரண்டு இடங்களிலும் வரலாற்றில் தவறு நடந்துவிட்டதாகவும் அதை சரி செய்ய வேண்டும் என்றும் ஒரு வாதம் வைக்கப்படுகிறது. இந்த உணர்வு இப்போது இந்துக்களிடையே எழுந்துள்ளது."
உச்சநீதிமன்றத்தில் ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கை விசாரிக்கும் நீதிமன்ற ஆயத்தில் நீதிபதிகள் டிஒய் சந்திரசூட், நீதிபதி பிஎஸ் நரசிம்மா ஆகியோர் உள்ளனர். இந்த இரண்டு நீதிபதிகளும் அயோத்தி தீர்ப்பிலும் ஒரு பகுதியாக இருந்துள்ளனர். அதேபோல், ஞானவாபி மசூதி வழக்கில், மனுதாரர்களான ஐந்து பெண்களின் வழக்கறிஞர் ஹரிசங்கர் ஜெயின். பாபர் மசூதி வழக்கில் இந்து மகாசபாவின் வழக்கறிஞராக அவர் இருந்துள்ளார். மசூதி வளாகத்தில் 'சிவலிங்கம்' இருந்ததாக கூற்றுகள் வைக்கப்படும் நிலையில், அங்கு சீல் வைப்பதற்கான மனுவும் அவர் பெயரில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








