ஞான்வாபி மசூதி நிலம் காசி விஸ்வநாதா் கோயிலுக்கு சொந்தமானதா? தொல்லியல் ஆய்வு நடத்த நீதிமன்றம் உத்தரவு

காசி விஸ்வநாதர் ஆலயம்

பட மூலாதாரம், Getty Images

(இன்று 09.04.2021 வெள்ளிக்கிழமை இந்தியாவில் உள்ள சில முக்கிய நாளிதழ்களிலும் அவற்றின் இணையதளங்களிலும் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)

உத்தர பிரதேச மாநிலம், வாராணசியில் காசி விஸ்வநாதா் கோயிலுக்கு அருகே உள்ள ஞான்வாபி மசூதி நிலப் பிரச்னை வழக்கில் இந்திய தொல்லியல் துறை ஆய்வு நடத்த கீழமை நீதிமன்றம் நேற்று (08.04.2021 வியாழக்கிழமை) உத்தரவிட்டுள்ளதாக தினமணியில் செய்தி வெளியாகியுள்ளது.

முகலாய மன்னா் ஒளரங்கசீப், காசி விஸ்வநாதா் கோயிலின் பகுதியை அகற்றி மசூதியைக் கட்டினார் என்றும், ஞான்வாபி மசூதி இருக்கும் நிலம் காசி விஸ்வநாதா் கோயிலுக்குச் சொந்தமானது எனவும் கோரி வழக்குரைஞா் விஜய் சங்கா் ரஸ்தோகி சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது.

கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள இந்த வழக்கில், சிவில் விரைவு நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி ஆசுதோஷ் திவாரி மேற்கண்ட உத்தரவை வியாழக்கிழமை பிறப்பித்ததாக மனுதாரா் சார்பில் ஆஜராகும் வழக்குரைஞா் விஜய் சங்கா் ரஸ்தோகி தெரிவித்தார்.

அந்த உத்தரவில், 'வேறு ஏதாவது மாற்றங்கள் செய்யப்பட்டு ஞான்வாபி மசூதி கட்டுப்பட்டுள்ளதா என்பது குறித்து இந்திய தொல்லியல் ஆராய்ச்சித் துறையின் ஐந்து போ் கொண்ட நிபுணா் குழுவை உத்தர பிரதேச அரசு நியமித்து ஆய்வு நடத்த வேண்டும். குழுவில் குறைந்தது இரண்டு நபா்களாவது சிறுபான்மையினராக இருக்க வேண்டும்' என்று நீதிமன்றம் வியாழக்கிழமை பிறப்பித்துள்ள உத்தரவில் குறிப்பிட்டுள்ளதாக ரஸ்தோகி தெரிவித்தார்.

இதனிடையே, இந்த உத்தரவுக்கு எதிராக அலகாபாத் உயா்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என உத்தர பிரதேச சன்னி மத்திய வஃக்பு வாரியம் தெரிவித்துள்ளதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழிபாட்டிடத்தின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் நுழைந்து ஆய்வு செய்ய இந்தக் குழுவுக்கு அதிகாரம் உண்டு என்றும், முதலில் தரையை ஊடுருவிப் பார்க்கும் ரேடார் அல்லது ஜியோ ரேடியாலஜி முறையில் ஆய்வு செய்து பார்த்தபிறகு தேவை ஏற்பட்டால் ஒரே நேரத்தில் நான்கு சதுர அடிக்கு மிகாத இடத்தில் அகழ்வாய்வு செய்து பார்க்கலாம் என்றும் நீதிமன்றம் கூறியிருப்பதாக தி ஹிந்து ஆங்கில நாளிதழ் தமது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

கொரோனாவால் ஒரு கிராமமே தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கொரோனா தொற்று காரணமாக ஒரு கிராமமே தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதையடுத்து, அனைத்து மாவட்டங்களிலும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 94 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அங்கு தற்போது 338 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், திண்டுக்கல் மாவட்டத்திற்குட்பட்ட அசோக் நகர் மற்றும் நாராயணன் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள தெருக்களை மாநகராட்சி அதிகாரிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவித்து சீல் வைத்தனர்.

இதே போல் நிலக்கோட்டை அருகே உள்ள ஜல்லிப்பட்டி கிராமத்தில் கொரோனா தொற்று பரவல் கண்டறியப்பட்டதையடுத்து, அந்த கிராமமே தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'சிஆர்பிஎப் வீரர்களை தடுக்கச் சொல்வதா?'- மம்தா மீது தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்

மமதா பேனர்ஜி

பட மூலாதாரம், Getty Images

மேற்குவங்க சட்டப்பேரவைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் கூச் பெஹார் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில், ''வாக்குச் சாவடிகளில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ள சிஆர்பிஎப் வீரர்கள், வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் தடுக்கின்றனர். அவர்களை கண்காணிக்க வேண்டும். பெண் வாக்காளர்கள் சிஆர்பிஎப் வீரர்களை முற்றுகையிட வேண்டும். ஒரு குழுவினர் சிஆர்பிஎப் படையினருடன் பேச்சு கொடுத்துக் கொண்டிருக்கும் போது இன்னொரு குழுவினர் வாக்களிக்க வேண்டும். அப்போதுதான் எல்லாரும் வாக்களிக்க முடியும்'' என பேசியதாக இந்து தமிழ் திசையில் கூறப்பட்டுள்ளது.

இது சர்சையை கிளப்பியுள்ளது. மம்தாவின் பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மம்தா மீது தலைமை தேர்தல் ஆணையத்தில் புகாரளித்துள்ளது பாஜக.

மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் மேற்குவங்க பாஜக தலைவர் சிஷிர் பஜோரியா புகார் அளித்துள்ளார். சிஆர்பிஎப் வீரர்கள் குறித்து மம்தா தெரிவித்துள்ள கருத்துக்கள் தேசத்துரோகம் என்றும், மம்தா பானர்ஜியின் பிரச்சாரத்துக்கு தடை விதித்து அவரது கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.

தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''புகார் குறித்து கூச் பெஹார் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அறிக்கை அளிக்குமாறு கேட்டுள்ளோம்'' எனக் கூறியுள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: