சத்தீஸ்கர் தாக்குதலில் எத்தனை நக்சல்கள் பலி? புதிய தகவல்கள்

பட மூலாதாரம், PLGA
சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாபூர், சுக்மா காட்டுப்பகுதிகளில் நக்சல்வாதிகள் தேடுதல் வேட்டையின்போது நடத்தப்பட்ட தாக்குதலில் காணாமல் போன ஒரு வீரரின் நிலை குறித்து விசாரித்து வருவதாக இந்திய ரிசர்வ் காவல் படை தலைமை இயக்குநர் குல்தீப் சிங் தெரிவித்துள்ளார்.
மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த பிஜாபூர் காட்டுப்பகுதியில் ஹித்மா என்ற மாவோயிஸ்டு தலைவரை தேடி காட்டுக்குள் நுழைந்த படையினரை இலக்கு வைத்து ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தினார்கள். அதில் 24 வீரர்கள் பலியானார்கள். மேலும் ஒரு வீரரின் நிலை என்ன என்றே தெரியவில்லை.
நடந்த தாக்குதலில் மாவோயிஸ்டுகள் தரப்பில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது பற்றிய விவரமும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த நிலையில், தங்கள் தரப்பில் நான்கு பேர் பலியானார்கள் என்ற தகவலை மாவோயிஸ்டுகள் வெளியிட்டுள்ளனர்.

பட மூலாதாரம், PLGA
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையுடன் பலியான தங்களின் சகாக்கள் நான்கு பேரின் படத்தை மாவோயிஸ்டுகள் வெளியிட்டுள்ளனர். அதில், ஒரு பெண் போராளியின் உடலை திரும்பப் பெற இயலவில்லை என்றும் தாக்குதலில் உயிரிழந்த ஒரு கிராமவாசி உள்பட அனைவருக்கும் அஞ்சலி செலுத்துகிறோம் என்றும் கூறப்பட்டுள்ளது.
மாவோயிஸ்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தண்டகரன்யா சிறப்பு மண்டல கமிட்டியின் (பிஎல்ஜிஏ) செய்தித் தொடர்பாளர் விகல்ப் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் பிஜாபூர், சுக்மா மாவட்டங்களுக்குள் துணை ராணுவ படையினர் நுழைய முற்பட்டபோது எதிர் தாக்குதல் நடத்த நேர்ந்ததாக கூறப்பட்டுள்ளது.
மாவோயிஸ்டு தலைவர்கள் உள்ளிட்ட 150க்கும் அதிகமான கிராமவாசிகள் கொல்லப்பட்ட பிறகு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் படையினருக்கு எதிராக தாங்கள் நடத்தி வரும் தாக்குதலின் தொடர்ச்சியாக சமீபத்திய தாக்குதல் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிஆர்பிஎஃப்பின் கோப்ரா படையணியைச் சேர்ந்த ராகேஷ்வர் சிங் என்ற ஜவான் தங்கள் வசம் இருப்பதாகவும் அரசு மத்தியஸ்தர் பெயரை அனுப்பி வைத்தால் அவர்களிடம் அந்த வீரரை ஒப்படைப்போம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், நக்சல்வாதிகளின் இந்த கூற்றை தனிப்பட்ட முறையில் பிபிசியால் உறுதிப்படுத்த முடியவில்லை.
இதேவேளை, நக்சல்வாதிகள் தரப்பில் 28 முதல் 30 பேர் பலியானதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. மத்திய படையினருடன் கடந்த சனிக்கிழமை மோதலில் ஈடுபட்ட ஆயுதக்குழுக்களில் 750 முதல் 800 பேர்வரை நவீன ஆயுதங்கள் மற்றும் துல்லிய தாக்குதல்களை நடத்த பயிற்சி பெற்றவர்களாக அறியப்படுகின்றனர்.
இந்த தகவலை மத்திய ரிசர்வ் காவல் படை தலைமை இயக்குநரும் உறுதிப்படுத்தியுள்ளார். நடந்த தாக்குதலின்போது மத்திய படையினர் தங்களுடைய ஆயுதங்களை பத்திரப்படுத்தியதுடன் காயம் அடைந்த படையினரை பத்திரமாக மீட்கவும் உதவியதாக குறிப்பிட்டார்.
மத்திய துணை ராணுவப் படை வீரர் ஒருவர் தற்போது காணாமல் போயிருப்பதால் அவர் மாவோயிஸ்டுகள் கட்டுப்பாட்டிலேயே இருப்பதாக சந்தேகப்படுகிறோம். இது தொடர்பாக விசாரித்து வருகிறோம். காணாமல் போன வீரரை தேடும் பணியை முடுக்கி விட்டுள்ளோம் என்று அவர் கூறினார்.
பிற செய்திகள்:
- அசாமில் 90 வாக்காளர்கள் கொண்ட பூத்தில் 181 வாக்குகள் பதிவு
- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021: வாக்குப் பதிவு தொடங்கியது
- சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பது எப்படி? - 400 சொற்களில் எளிய விளக்கம்
- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இன்று வாக்குப்பதிவு - 10 முக்கிய தகவல்கள்
- 'மிஸ்ஸஸ் ஸ்ரீ லங்கா' - அழகிப் பட்டத்தை சில நிமிடங்களில் மேடையிலேயே இழந்த பெண்
- சத்தீஸ்கர் மாவோயிஸ்டு தாக்குதல்: இந்திய படையினர் திட்டமிட்டு கொல்லப்பட்டது எப்படி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












