அசாமில் 90 வாக்காளர்கள் கொண்ட பூத்தில் 181 வாக்குகள் பதிவு

பட மூலாதாரம், Getty Images
(இன்று 06.04.2021 செவ்வாய்கிழமை) இந்தியாவில் உள்ள சில முக்கிய நாளிதழ்களிலும், அவற்றின் இணைய தளங்களிலும் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)
அசாமில் 90 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் கொண்ட பூத்தில் 181 வாக்குகள் பதிவாகி இருந்தது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளதாக தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது.
அசாமில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி 2வது கட்ட வாக்கு பதிவு நடந்தது. இதில், திமா ஹசாவ் மாவட்டத்தில் ஹப்லாங் தொகுதிக்கு உட்பட்ட பூத் ஒன்றில் 181 வாக்குகள் பதிவாயின. ஆனால், அந்த பூத்திற்கு உட்பட்ட பகுதியில் 90 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களே உள்ளனர்.
181 வாக்குகள் பதிவாகி உள்ள விவரம் தெரிய வந்தது தேர்தல் ஆணையத்திற்கு அதிர்ச்சி அளித்தது. இதனை தொடர்ந்து 6 தேர்தல் அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த பூத்தில் மறு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது என கூறப்படுகிறது.
கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜ.க.வின் பீர் பத்ரா ஹேக்ஜர் இந்த தொகுதியை வென்றுள்ளார். தற்போது நடந்து முடிந்த வாக்கு பதிவில் 74 சதவீத அளவுக்கே வாக்குகள் பதிவாகி உள்ளது என அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் பிளஸ் 2 பொதுத்தோ்வு ஒத்திவைப்பா? அதிகாரிகள் விளக்கம்

பட மூலாதாரம், Getty Images
சென்னை: தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக பிளஸ் 2 பொதுத்தோ்வு ஒத்திவைக்கப்படுமா என்பது குறித்து கல்வித் துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளதாக தினமணியில் செய்தி வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக 2020 - 21 கல்வியாண்டில் பெரும்பாலான நாள்கள் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. பின்னா், ஜன.19-ஆம் தேதி பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு, வரும் மே மாதம் 3-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை பொதுத்தோ்வுகள் நடத்த அரசு தோ்வுத்துறை அறிவித்திருந்தது.
மாநிலம் முழுவதும் இந்தத் தோ்வினை 9 லட்சம் மாணவா்கள் எழுத உள்ளனா். மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்பால் கட்டுப்பாடுகளை அதிகரிக்க மக்கள் நல்வாழ்வுத்துறை திட்டமிட்டுள்ளது. இதனால், தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மாணவா்களை பள்ளிக்கு நேரில் வரவழைத்து தோ்வு நடத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியது: மாணவா்களின் உயா்கல்விக்கு பிளஸ் 2 மதிப்பெண் அவசியம். எனவே, தோ்வை ரத்து செய்ய முடியாது. அதேநேரம் கொரோனா பரவல் தொடா்ந்து அதிகரித்து வருவதும் பெரும் சிக்கலாக உள்ளது. இதனால் தோ்வை பாதுகாப்பாக நடத்துவதற்கான சாத்தியங்களை ஆராய்ந்து வருகிறோம்.
பொதுத் தோ்வை திட்டமிட்டபடி நடத்துவதா அல்லது ஒத்திவைக்கலாமா என விவாதித்து வருகிறோம். இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. தற்போது சுகாதாரத்துறையிடம் அறிக்கை கேட்டுள்ளோம். அறிக்கை கிடைத்தபின் அடுத்தகட்ட முடிவுகள் மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்திய இடைத்தரகருக்கு ரூ.8.60 கோடி லஞ்சம்: ரஃபேல் போர் விவகாரத்தில் காங்கிரஸ் குற்றச்சாட்டு

பட மூலாதாரம், Getty Images
இந்திய விமானப் படைக்கு பிரான்ஸ் நிறுவனத்திடமிருந்து ரஃபேல் போர் விமானங்கள் வாங்கிய விவகாரத்தில் சுமார் ரூ.8.60 கோடியை தஸ்ஸால்ட் நிறுவனம், இந்திய இடைத்தரகருக்கு லஞ்சமாக கொடுத்ததாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளதாக இந்து தமிழ் திசையில் செய்தி வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக பிரான்ஸிலிருந்து வெளியாகும் மீடியாபார்ட் என்ற புலனாய்வு பத்திரிகையில் வெளியான தகவலை அடிப்படையாகக் கொண்டு குற்றம் சாட்டியுள்ளது. இவ்விதம் லஞ்சம் பெற்ற இடைத்தரகர் மீது மற்றொரு ராணுவ பேர வழக்கில் அந்நியச் செலாவணி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த சுஷேன் குப்தா என்பவருக்குச் சொந்தமான டெப்சிஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனத்துக்கு அளித்ததாக இன்வாய்ஸ் அளிக்கப்பட்டது. ஆனால் இவர்மீது சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை இயக்குநரகம் முக்கியப் பிரமுகர்களுக்கு ஹெலிகாப்டர் வாங்கியதில் அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்திடமிருந்து லஞ்சம் பெற்றது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.
இந்தியாவில் தஸ்ஸால்ட் நிறுவனத்தின் துணை ஒப்பந்ததாரராக டெப்சிஸ் நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் சுஷேன் குப்தா மீது ஹெலிகாப்டர் பேர வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
ஏஎப்ஐ அறிக்கையை ஆய்வு செய்த மீடியாபார்ட் நிறுவனம் வழக்கமாக அளிக்கப்படும் நன்கொடைக்கு மாறாக மிகப் பெரிய தொகை டெப்சிஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனத்துக்கு மார்ச் 30, 2017-ல் வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.
டெப்சிஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனம் மொத்த ஆர்டர் தொகையில் 50 சதவீதமான 10,17,850 யூரோ (ரூ.8.6 கோடி) ரஃபேல் மாதிரி (டம்மி) உருவாக்கத்துக்கு அளித்ததாக இன்வாய்ஸ் குறிப்பிட்டுள்ளது. ஒவ்வொரு மாடல் விலையும் 20 ஆயிரம் யூரோவாகும்.
ஆனால் மாதிரி ரஃபேல் விமானங்கள் தயாரித்தது தொடர்பான ஆவணங்களையோ அல்லது அது பற்றிய தகவல்களையோ தஸ்ஸால்ட் நிறுவனம் அளிக்கவில்லை. ஆனால் இந்தத் தொகையானது வாடிக்கையாளருக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரஃபேல் விமான பேரத்தில் நடைபெற்ற ஊழலை மறைக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோதி பேசியதற்கு உரிய விளக்கத்தை இப்போது அளிக்குமாறு மீடியாபார்ட் அறிக்கையை ஆதாரமாகக் கொண்டு காங்கிரஸ் குற்றம் கூறியுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறும்போது, "பிரான்ஸை சேர்ந்த லஞ்ச ஒழிப்பு நிறுவனமான ஏஎப்ஏ 2016-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம் தொடர்பாகவும், இதில் சுமார் 11 லட்சம் யூரோக்கள் டெப்சிஸ் சொல்யூஷன் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டதாகவும் அறிக்கை மூலம் கண்டறிந்தது. அதில் வாடிக்கையாளர்களுக்கு அன்பளிப்பு வாங்கியதற்கான தொகையாக 11 லட்சம் யூரோ குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்" என கூறியுள்ளாதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021: வாக்குப் பதிவு தொடங்கியது
- சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பது எப்படி? - 400 சொற்களில் எளிய விளக்கம்
- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இன்று வாக்குப்பதிவு - 10 முக்கிய தகவல்கள்
- 'மிஸ்ஸஸ் ஸ்ரீ லங்கா' - அழகிப் பட்டத்தை சில நிமிடங்களில் மேடையிலேயே இழந்த பெண்
- சத்தீஸ்கர் மாவோயிஸ்டு தாக்குதல்: இந்திய படையினர் திட்டமிட்டு கொல்லப்பட்டது எப்படி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












