சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் திமுக, அதிமுக மோதல் எப்படி உள்ளது? - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் திமுக, அதிமுக மோதல் எப்படி உள்ளது? - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021
    • எழுதியவர், பரணிதரன்
    • பதவி, பிபிசி தமிழ்

(எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களின் உள்ள கள நிலவரம் தொடர்பான பிபிசி தமிழின் கட்டுரை இது. இங்குள்ள தொகுதிகளில் உள்ள கள நிலைமையை விவரிக்கிறது இந்த கட்டுரை.)

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்காக அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அந்த கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் என பலரும் தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளான இன்று இறுதி கட்ட வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பல அரசியல் கட்சிகள் தமிழகத் தலைநகர் சென்னையில் தங்களின் தேர்தல் பரப்புரையை நிறைவு செய்கின்றன.

மாநிலத்தில் தலைநகராக உள்ள சென்னை மற்றும் அதற்கு அருகே செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களின் தேர்தல் சூழலை அலசுகிறது இந்தக் கட்டுரை.

இதில் சென்னை மாவட்டத்தை எடுத்துக் கொண்டால், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க.நகர், எழும்பூர், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணா நகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், மயிலாப்பூர், வேளச்சேரி என 16 தொகுதிகள் வருகின்றன.

திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல், அம்பத்தூர், மாதவரம், திருவொற்றியூர் ஆகிய 10 தொகுதிகள் உள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய நான்கு தொகுதிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் சோழிங்கநல்லூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம் ஆகிய ஏழு தொகுதிகளும் உள்ளன.

மாவட்டங்கள் வேறு, வேறாக இருப்பினும், அருகருகே உள்ள இந்த நான்கு மாவட்டங்களும் சமூகம், கலாசார, தொழில்கள், வர்த்தகம் போன்றவை ரீதியாக பின்னிப்பிணைந்துள்ளன. அதனால் அரசு இவற்றுக்கான உள்கட்டமைப்பு திட்டங்கள் என வரும்போது ஒரு மாவட்டத்தை மட்டும் கவனத்தில் கொண்டு வரைவுத்திட்டத்தை தயாரிக்காமல் அந்த திட்டம், ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துடன் தொடர்புடையதாக இருக்கும் வகையில் திட்டங்களை தயாரிப்பது வழக்கம்.

உதாரணமாக திருவள்ளூர் மாவட்டத்தின் கீழ் இருந்தாலும், சென்னையின் அங்கமாக இருக்கும் மதுரவாயல் முதல் துறைமுகம் வரையே உத்தேசிக்கப்பட்ட மேம்பாலம் திட்டத்தை கூறலாம்.

இந்த திட்டம் 2010ஆம் ஆண்டில் திமுக ஆட்சியில் கருணாநிதி முதல்வராக இருந்தபோது அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கால் திறந்து வைக்கப்பட்டது. இந்த திட்டப் பணி 1,800 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 19 கி.மீ தூரத்துக்கு மேம்பாலம் அமைப்பதற்காக கொண்டு வரப்பட்டது. திட்டம் அமலுக்கு வந்த மூன்று ஆண்டுகளில் அதாவது 2013ஆம் ஆண்டிலேயே இது நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 2011இல் நடந்த தேர்தலில் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு, பல்வேறு காரணங்களால் திட்டத்துக்கு ஒத்துழைப்பு தரவில்லை என கூறப்பட்டதால் கிடப்பில் போடப்பட்டது.

அதன் அடையாளமாக இன்றளவும் மதுரவாயல் - துறைமுகம் இடையிலான சாலை பணிகள் பாதி தொடங்கப்பட்டு அப்படியே கிடப்பில் போடப்பட்டதற்கான பல இடங்களை சென்னையில் காண முடியும். கடைசியில் திட்டத்தின் அவசியத்தை உணர்ந்தது ஒன்றிய அரசு.

மதுரவாயல் துறைமுகம் மேம்பால திட்டத்துக்கு புதிய கருத்துருவை தமிழக அரசு வழங்கினால், அதற்கு ஒப்புதல் தர தயார் என மத்திய சாலை போக்குவரத்துத்தறை அமைச்சர் நிதின் கட்கரி மூலம் கடந்த ஆண்டு இறுதியில்தான் அறிவித்தது. இப்போது இந்த திட்ட அமலாக்க பணிகளுக்காக உத்தேசிக்கப்பட்டுள்ள நிதி ரூபாய் ஐந்தாயிரம் கோடி. இது முழுக்க, முழுக்க அரசியல் போட்டியால் கிடப்பில் போடப்பட்ட திட்டமாகவே மக்கள் கருதும் அளவுக்கு இது அரசியல் பரப்புரையில் பேசுபொருளாகியிருக்கிறது.

பாஜக தமிழ்நாடு

பட மூலாதாரம், BJP TN

பாடி, அம்பத்துார், ஆவடி, திருநின்றவூர் வழியாக திருவள்ளூர் செல்லும், 22 கி.மீ., சாலை வரை, விரிவாக்கம் செய்வதற்கு, தேசிய நெடுஞ்சாலை துறை மறுத்து விட்டது. இதனால், 2013 ஏப்., 1ம் தேதி, சட்டசபையில், விதி, 110ன் கீழ், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்ததாவது: சென்னை - திருப்பதி சாலை, மாநில நெடுஞ்சாலையாக மாற்றப்படும். அதை, ஆறுவழிச் சாலையாக மாற்ற, 168 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

அடிப்படையில் சென்னை மாவட்டம் கடலோர பகுதி என்பதால் கடல்நீரை சுத்திகரிக்கும் திட்டங்கள், கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டங்கள், மிகப்பெரிய மீன் சந்தை போன்றவற்றுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், தேர்தல் அறிக்கையில் முன்னுரிமை கொடுத்துள்ளன. ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை தரக்கூடிய மருந்தக பூங்கா உருவாக்கப்படும் என அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.

TWITTER

பட மூலாதாரம், EDAPPADI PALANISWAMY TWITTER

ஆனால், மறுபுறம் ஆளும் அதிமுக உள்கட்டுமான திட்டங்கள் எதையும் சரிவர நிறைவேற்றவில்லை என்று கூறி தேர்தல் பரப்புரை மேற்கொள்ளும் திமுக, மேம்பால நெடுஞ்சாலைகள், கிழக்கு கடலோர சாலை விரிவாக்கம், சென்னை அருகே துணை நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் போக்குவரத்து பேருந்து சேவைக்காக சிறுசேரியில் புதிய பேருந்து நிலையம், சரக்கு பெட்டக கையாளல் பணிகளை எளிமைப்படுத்த துறைமுகம் அருகே கடலுடன் இணைக்கும் பாதை, பறக்கும் மேம்பால ரயில் சேவையை திருவான்மியூரில் இருந்து மகாபலிபுரம்வரை விரிவுபடுத்துவோம் என்று தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருக்கிறது.

இதேவேளை மக்கள் நீதி மய்யம் கட்சி, சென்னையில் அப்துல் கலாம் அறிவியல் ஆராய்ச்சி பூங்கா, சென்னையில் டிஜிட்டல் நூலகம், வீதிகளில் பாதசாரிகள், மிதிவண்டிகளுக்கு தனி பாதை, சிறு தொழில்களுக்கு உரிமம் வாங்கும் நடைமுறையை ஒழிப்போம், சென்னை நகரில் நீர் சுத்திகரிப்பு திட்டம் போன்றவற்றை தமது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளன.

பாரதிய ஜனதா கட்சியும் தன் பங்குக்கு பல்வேறு வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தாலும், தற்போது டெல்லியை மூன்றாக பிரித்து கிழக்கு டெல்லி, தெற்கு டெல்லி, வடக்கு டெல்லி என்பது போல சென்னை பெருநகர மாநகராட்சியை மூன்றாக பிரிப்போம் எனும் திட்டத்தை குறிப்பிட்டிருக்கிறது. கூவம் நதியை சுத்திகரிக்கச் செய்து, காசிமேடு துறைமுகத்தை நவீனப்படுத்துவதையும் தமது தேர்தல் அறிக்கையில் முக்கிய வாக்குறுதியாக பாரதிய ஜனதா கட்சி கூறியுள்ளது.

முடங்கிய நெடுஞ்சாலை திட்டம்

மதுரவாயல் சாலை திட்டம்

பட மூலாதாரம், TWITTER

தமிழ்நாட்டில் கருணாநிதி முதல்வராக இருந்த 2007ஆம் ஆண்டில் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், பாடி முதல் திருப்பதி வரை, தேசிய நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டின் கீழ், கொண்டு வரப்பட்டது. இதில், திருத்தணியை அடுத்த தமிழக எல்லையான, அலமேலுமங்காபுரத்திலிருந்து, திருநின்றவூர் அடுத்த பாக்கம் வரை, முதற்கட்டமாக, 68 கி.மீ., வரை சாலை விரிவாக்க பணியை, தேசிய நெடுஞ்சாலை துறை மேற்கொண்டது.

இதைத்தொடர்ந்து, சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ஆவடி, அம்பத்துார், பாடியைக் கடந்து, சென்னைக்குள் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலின்றி வருவதை எளிமைப்படுத்த நான்கு வழிச்சாலை அமைக்க ரூபாய் 98 கோடி ஒதுக்கப்பட்டது.

இதற்கிடையே 2011இல் ஜெயலலிதா முதல்வரான பிறகு அந்த சாலையை மாநில நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையில் ஏற்பட்ட நீண்ட தாமதத்துக்குப் பிறகு 2014இல், அந்த சாலை, மாநில நெடுஞ்சாலை துறைக்கு மாற்றப்பட்டது. ஆனால், 2016ஆம் ஆண்டில் ஜெயலலிதா இறந்த பிறகு கண்டும் காணாமல் இருந்த அத்திட்டம் தேர்தல் அறிவிப்புக்கு வெகு சில நாட்களுக்கு முன்பே அரசியல் தலைவர்களின் கவனத்தை ஈர்த்தது.

மத்தியில் நரேந்திர மோதி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அரசு முதல் முறையாக ஆட்சிக்கு வந்த 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு தொடர்ந்து 2019ஆம் ஆண்டு தேர்தலிலும் வெற்றிபெற்று ஆட்சி நடத்தி வருகிறது. இதேபோல, தமிழ்நாட்டில் 2011இல் ஆட்சிக்கு வந்த அதிமுக தலைமையிலான அரசு, 2016இலும் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைத் தொடருகிறது. இத்தகைய சூழலில், சென்னை மெட்ரோ ரெயில் முதல் கட்ட விரிவாக்கத் திட்டம் வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை ரூ.3,770 கோடி மதிப்பிலும், சென்னை கடற்கரை மற்றும் அத்திப்பட்டு இடையிலான நான்காவது ரயில் பாதையானது ரூ.293.40 கோடி மதிப்பிலும் செயல்படுத்தும் பூர்வாங்கப் பணிகளை அரசு தொடங்கியது. ஆனால், இந்தத் திட்டப்பணிகளை தொடங்க பல ஆண்டுகளுக்கு முன்பே அரசுத்துறை உத்தேசித்தாலும், அதன் அடிக்கல் நாட்டு விழா கடந்த பிப்ரவரியில் தான் நடந்தன.

இவை எல்லாம் தேர்தல் காலத்தை மனதில் கொண்டு கடைசி நேரத்தில் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்ட திட்டங்கள் என எதிர் கட்சியான திமுக குற்றம்சாட்டினாலும், நிர்வாக தொடர்பு இடைவெளியால் எழுந்த சிக்கல்களால் அவை தாமதமாக அறிவிக்கப்படுவதாக அரசு தரப்பில் விளக்கம் தரப்பட்டது.

முதல்வரின் கடைசி நேர அறிவிப்பு

டுவிட்டர்

பட மூலாதாரம், TWITTER

ஆனால், ஆட்சி நிறைவு பெறும் தருவாயில்தான் கடந்த பட்ஜெட் கூட்ட மானியக்கோரிக்கை மீது பேசிய முதல்வர் பழனிசாமி, சென்னை எல்லைச் சாலையின் நான்காம் பகுதியான ஸ்ரீபெரும்புதூர் முதல் சிங்கபெருமாள் கோயில் வரை உள்ள பகுதியில் வாகன சுரங்கப்பாதைகள், சாலை சந்திப்பு மேம்பாடு, சாலை பாதுகாப்பு ஆகிய பணிகள் உலக தரத்துடன் ரூ.531 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் , சிறுசேரி முதல் மகாபலிபுரம் வரையுள்ள 14.8 கி.மீ நீளச்சாலை, சேவை சாலைகளுடன் கூடிய 6 வழிச்சாலையாக ரூ.350 கோடியில் மேம்படுத்தப்படும், சென்னை மாவட்டத்தில் 5 சாலைகளிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் 3 சாலைகளிலும் புதிய வடிகால் மற்றும் சிறுபாலங்கள் ரூ.277 கோடி மதிப்பில் கட்டப்படும் என்று கூறினார் முதல்வர்.

சென்னை வெளிவட்ட சாலை உடன் இணையும் 12 சாலைகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த, முதற்கட்டமாக நிலத்தொகுப்பு என்ற புதிய அணுகு முறையில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும், சென்னை மாநகரின் மூன்று பிரதான சாலைகளை சீர்மிகு சாலைகளாக அமைக்கும் பணிக்கு விரிவான திட்ட அறிக்கை ரூ.9.10 கோடி மதிப்பில் மற்றும் அண்ணா சாலையில் முத்துசாமி பாலம் முதல் தாம்பரம் வரை மற்றும் தாம்பரம் முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை மாற்று வழி அமைக்க ரூ.38 லட்சம் மதிப்பில் விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும், மேலும், வண்டலூர் சந்திப்பில் பாதசாரிகளுக்கான மேம்பாலம் ரூ.16.17 கோடி மதிப்பில் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

சென்னை தகவல் தொழில்நுட்ப சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டு தரமணி முதல் சிறுசேரி வரையிலான பிரதான சாலை சந்திப்புகளான தரமணி சாலை சந்திப்பு, பெருங்குடி எம்ஜிஆர் சாலை சந்திப்பு, துரைப்பாக்கம் சாலை சந்திப்பு, சோழிங்கநல்லூர் சாலைசந்திப்பு, சிறுசேரி சாலை சந்திப்பு ஆகிய 5 இடங்களில் ரூ.500 கோடியில் மேம்பாலங்கள் அமைக்கப்படும் போன்ற அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் பழனிசாமி.

ஆட்சி நிறைவு பெறும் தருணத்தில் இதுபோன்ற திட்டங்களை அறிவிப்பதன் மூலம் அவை ஆட்சி மாற்றத்துக்கு பிறகு புதிய அரசு அமைந்தால் அவற்றின் மீதான சுமையாக இந்த திட்டங்கள் திணிக்கப்படுமா அல்லது முந்தை வரலாறுகளின்படியே இந்த திட்டங்கள் கிடப்பில் போடப்படுமா போன்ற விவகாரங்களும் பேசுபொருளாகியிருக்கின்றன.

இத்தகைய சூழலில்தான் தேர்தல் களம் காணும் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வாக்காளர்களின் கவனத்தை ஈர்க்கக் கூடியவையாக உள்கட்டமைப்பு திட்டங்கள் உள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே ஆட்சிக்கு வந்தால், முந்தைய ஆட்சியில் அதாவது வேறு கட்சி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை கிடப்பில் போடுவதும் பிறகு அதை தேர்தல் நெருங்கும் காலத்தில் செயல்படுத்த புதிய திட்டம் அல்லது திருத்தப்பட்ட திட்ட அறிவிப்பை வெளியிடுவதும் வழக்கம் என்பதை கடந்த 20 ஆண்டுகால ஆட்சிகளின் வரலாறு உணர்த்துகிறது.

அதனால்தான் இந்த உள்கட்டமைப்பு விவகாரங்கள் வாக்காளர் அளவிலான பேசுபொருளாக அமைந்தாலும், அவற்றை விரிவாக அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பரப்புரையில் விவாதிக்காமல் வசதியாகத் தவிர்த்து விடுவதை இந்த தேர்தல் பரப்புரையில் பார்க்க முடிகிறது.

இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணி, நாம் தமிழர் ஆகியவைதான் 234 தொகுதிகளும் வேட்பாளர்களை களமிறக்கியிருப்பதால், இது ஐந்து முனை போட்டி நிலவும் தேர்தலாக மாறி விட்டது.

ஆனாலும், பல தொகுதிகளில் வலுவான வேட்பாளர்களை நேரெதிர் களத்தில் கட்சிகள் களமிறக்கியிருப்பதால் இது அதிமுக கூட்டணி, திமுக கூட்டணிக்கு இடையிலான மோதலாகவே பெரும்பாலும் பார்க்க வைக்கிறது.

ஸ்டாலின் ட்விட்டர்

பட மூலாதாரம், TWITTER

அந்த வகையில் சென்னையில் கொளத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளரும் தற்போது அந்த தொகுதியின் எம்எல்வுமாக உள்ள மு.க. ஸ்டாலின் களம் காணுகிறார். அவரை எதிர்த்து அதிமுக வேட்பாளராக களம் காண்பவர் ஆதிராஜாராம்.

மயிலாப்பூர் தொகுதியில் 2016இல் நடந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் டிஜிபி ஆர்.நடராஜ் இந்த முறையும் அதிமுக வேட்பாளராக களத்தில் உள்ளார். திமுக சார்பில் த.வேலு, மக்கள் நீதி மய்யம் சார்பில் நடிகை ஸ்ரீபிரியா, அமமுக சார்பில் கார்த்திக், நாம் தமிழர் கட்சி சார்பில் மகாலட்சுமி உட்பட மொத்தம் 23 பேர் களத்தில் உள்ளனர்.

போக்குவரத்து நெரிசல், நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றம், தண்ணீர் பிரச்னை போன்றவற்றை சரிப்படுத்துவோம் என்று கூறி இங்கு போட்டியிடும் கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன. மயிலாப்பூர் மட்டுமின்றி சென்னையின் கிட்டத்தட்ட எல்லா கட்சி வேட்பாளர்களும் இதேபோன்ற வாக்குறுதியை தங்களுடைய தொகுதி தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்துள்ளனர். அந்த அளவுக்கு இவை பொதுப் பிரச்னைகளாகியிருக்கின்றன.

உத்திரமேரூர் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் போட்டியிடுகிறார். திமுகவில் தற்போதைய எம்எல்ஏ க.சுந்தர் போட்டியிடுகிறார். அதிமுகவில் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலராக இருந்து சமீபத்தில் வெளியேறிய ஆர்.வி.ரஞ்சித்குமார் அமமுக சார்பிலும், மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சியைச் சேர்ந்த ஏ.சூசையப்பர், நாம் தமிழர் கட்சி சார்பில் எஸ்.காமாட்சி உட்பட 20 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

திமுகவின் சோமசுந்தரம், உத்திரமேரூர் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்துவது, புதிய கல்லூரிகள் அமைப்பது, தொகுதிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது போன்ற வாக்குறுதிகளை வழங்கியுள்ளார்.

வி. சோமசுந்தரம்

பட மூலாதாரம், TWITTER

அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் செய்யாறு மற்றும் பாலாற்றில் தடுப்பணை அமைத்தது, ஒரக்காட்டுப்பேட்டை மேம்பாலம் அமைத்தது உள்ளிட்டவற்றை அதிமுக அரசு செய்ததாகக் கூறி வாக்கு சேகரித்து வருகிறார். புதிய தடுப்பணைகள் அமைப்பது, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த தொழிற்சாலைகளை கொண்டு வருவது உள்ளிட்ட வாக்குறுதிகளை இவர் பிரதானமாக வழங்கி வருகிறார்.

வில்லிவாக்கம் தொகுதியை எடுத்துக் கொண்டால் முக்கிய பிரச்னைகளாக ரயில்வே நிலைய மேம்பாலம் நிலுவை திட்டம், அடிக்கடி அந்த பகுதியில் ஏற்படும் கழிவுநீர் வடிகால் பிரச்னைகள் உள்ளன. இங்கு 2016ஆம் ஆண்டு தேர்தலில் திமுக வேட்பாளராக களம் கண்ட ரங்கநாதன் 9,321 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். 2011ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக வேட்பாளராக களம் கண்ட ஜே.டி.டி. பிரபாகரன் 10,782 வாக்குகள் வித்தயாசத்தில் வென்றார். இவர் இந்த தொகுதியில் ஏற்கெனவே ஐந்து முறை போட்டியிட்டவர். 1980, 2011ஆம் ஆண்டுகளில் எம்எல்ஏ ஆக இருந்திருக்கிறார்.

சைதாப்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் சைதை துரைசாமியும், திமுக சார்பில் மா.சுப்பிரமணியனும் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதியில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 2,79,562 ஆகும். கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் சி.பொன்னையனை 16,255 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் சுப்பிரமணியன் தோற்கடித்தார். கடந்த 1977ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற 10 தேர்தல்களில் அதிமுக 4 முறையும், திமுக 6 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

எழும்பூர் தொகுதியில் தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் தேர்தல் களம் காண்கிறார். அவரை எதிர்த்து திமுக செய்தித்தொடர்பாளர்களில் ஒருவரான பரந்தாமன் போட்டியிடுகிறார்.

கொளத்தூர் தொகுதி 2011ஆம் ஆண்டில் நடந்த தொகுதி மறுவரையறையின்போது உருவாக்கப்பட்டது. அதன் முதல் எம்எல்ஏ ஆக வெற்றி பெற்ற ஸ்டாலின், 2016 சட்டப்பேரவை தேர்தலும் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். அங்கு தற்போது அவர் மூன்றாவது முறையாக களம் காண்கிறார். அவருக்கு எதிராக அதிமுகவின் ஆதிராஜாராம் போட்டியிடுகிறார்.

அதிமுக சார்பில் தேர்தல் களம் காணும் வேட்பாளர்களில் ஆலந்தூரில் பா. வளர்மதி, அண்ணாநகரில் கோகுல இந்திரா, ஆவடியில் மாஃபா. பாண்டியராஜன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை அக்கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவித்துக் கொண்டு திருவொற்றியூர் தொகுதியில் களம் காண்கிறார். 2016ம் ஆண்டு சீமான் கடலூர் தொகுதியில் போட்டியிட்டார். அங்கு வெறும் 12ஆயிரத்து 500 வாக்குகள் மட்டுமே பெற்றார். கொளத்தூரில் ஸ்டாலினுக்கு எதிராக களம் காணப்போவதாக முன்பு கூறி வந்த சீமான், பிறகு தமது முடிவை மாற்றிக் கொண்டு திருவொற்றியூரில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக சார்பில் கே.பி. சங்கர் களம் காண்கிறார்.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய தொகுதிகளில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி, வேளச்சேரி, பொன்னேரி ஆகிய தொகுதிகளில் பாஜகவுடன் மோதுகிறது.

குஷ்பு

பட மூலாதாரம், @KaruNagarajan1

அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக நடிகை குஷ்பு ஆயிரம் விளக்கு தொகுதியில் தேர்தல் காணுகிறார். அவருக்கு எதிராக திமுக சார்பில் டாக்டர் எழிலன் களமிறக்கப்பட்டுள்ளார். இந்த ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ ஆக இருந்த கு.க. செல்வம் கடந்த ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். பாஜகவில் கடந்த ஆண்டு முதல் கடந்த பிப்ரவரி மாதம் வரை சேர்ந்த திமுக பிரமுகர்களில் இவரும் ஒருவர். இந்த தொகுதியில் உங்களுக்கு திமுக என்ன செய்தது என்று கேள்வி கேட்டு பிரசாரம் எழுப்பும் நடிகை குஷ்புவுக்கு அருகிலேயே கு.க. செல்வமும் நின்று கொண்டு தமது முன்னாள் தொகுதி மக்களிடையே பாஜக வேட்பாளருக்கு வாக்கு சேர்ப்பதுதான் அரசியல் விநோதம்.

திருவள்ளூர் மாவட்டத்துக்கு உட்பட்ட தொகுதியில் தேர்தல் களம் காணும் பாஜக, அதிமுக கூட்டணி, எடப்பாடி பழனிசாமி ஆட்சி மீதான அதிருப்தியலையில் இல்லை என்பதே தங்களின் வெற்றிக்கு உதாரணம் என்று நம்பிக்கையோடு கூறுகிறார், அந்த திருவள்ளூர் முன்னாள் எம்.பி டாக்டர் வேணுகோபால்.

ஜெயலலிதா

கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழகம் எதிர்கொள்ளும் முதல் சட்டமன்ற தேர்தல் இது என்றாலும், அதையும் தாண்டி, பெரிய ஆளுமைகள் இல்லாத தமிழகத்தில் வெற்றிகரமாக அதிமுக ஆட்சியை நிறைவு செய்த எடப்பாடி பழனிசாமி அரசு மீது பெரிய அதிருப்தி அலை கிடையாது. கொரோனா நெருக்கடி காலத்தில் அவரது அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது தொகுதிவாசிகளின் நன்மதிப்பை பெற்றிருக்கிறது என்று கூறுகிறார் வேணுகோபால்.

இந்த தேர்தலில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகியவை ஒன்றுக்கு ஒன்று தொடர்புபட்டு இருப்பதால், இவற்றில் அரசியல் கட்சிகள் பெறும் வெற்றி அவற்றின் மக்கள் செல்வாக்குக்கான அடையாளமாகவே திகழும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதிமுகவும், திமுகவும் பலம் பொருந்திய கட்சிகள் என்றபோதிலும், இம்முறை அமைப்பு ரீதியாக பலம் பொருந்திய கட்சியாக களத்தில் இருக்கிறது திமுக என்கிறார் மூத்த பத்திரிகையாளரான லட்சுமணன்.

தமிழக தேர்தல் தொடர்பான அவரது பார்வையை பல்வேறு ஊடகங்களிலும் பதிவு செய்து வரும் லட்சுமணன், சென்னையில் எந்த அணி வெல்லும் என ஆருடம் கூற தனக்கு விருப்பமில்லை என்றபோதும், களத்தில் உள்ள யதார்த்தத்தை பதிவு செய்ய விரும்புவதாகவும் தெரிவித்தார்.

"பொதுவாகவே தமிழ்நாட்டில் எந்த கட்சியாக இருந்தாலும் சென்னைக்கு பக்கத்தில் உள்ள மாவட்டங்களில் உள்ள தொண்டர்கள் உற்சாகத்துடன் தேர்தல் பணி செய்வார்கள். அவர்களிடம் எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்ற வெறி இருக்கும். காலையில் புறப்பட்டு சென்னைக்கு வந்து தங்களுடைய தொகுதிப்பொறுப்பு அமைச்சர்களையும் அரசுத்துறையினரையும் சந்தித்து மனு கொடுத்து விட்டு வரலாம் என்றவாறு அவர்களின் அரசியல் இருக்கும். அந்த வாய்ப்பு தொலைதூர மாவட்ட தொண்டர்களுக்கு இருக்காது. அந்த நம்பிக்கையும் தேர்தலில் வேலை செய்து வெற்றியைத் தேடித் தர வேண்டும் என்ற வெறியும் திமுகவுக்கு கூடுதலாக உள்ளது" என்கிறார் லட்சுமணன்.

"தேர்தல் கருத்துக் கணிப்புகள் ஒருபுறமிருந்தாலும் கடந்த 10 வருட அதிமுக ஆட்சி மீதான சோர்வு மக்களில் பலருக்கு இருப்பதை ஒதுக்கி விட முடியாது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பிளவுபட்டுப் போனதால் ஏற்படும் தாக்கத்தை இந்த தேர்தலில் அதிகமாகவே உணர முடிகிறது," என்று குறிப்பிடும் லட்சுமணன் அதற்கான காரணத்தையும் விவரித்தார்.

"ஜெயலலிதா உயிருடன் இருந்த காலம்வரை கட்சியில் ஒழுங்காக வேலை செய்யவில்லை என்றாலோ குறிப்பாக தேர்தல் காலங்களில் கட்டுக்கோப்புடன் வேலை செய்யவில்லை என்றாலோ அடுத்த நிமிடமே பதவி பறிக்கப்படும் என்ற பயம் அதிகமாகவே இருக்கும். அத்தகைய பயமோ குற்றவுணர்வோ தற்போது அதிமுக தொண்டர்களிடம் காணப்படாதது அந்த கட்சியின் பலவீனமாகவே பார்க்கிறேன்," என்றார்.

"அதிமுக அணியில் 10இல் ஒரு தொண்டருக்கோ தற்போது எம்எல்ஏ ஆக இருப்பவருக்கோதான் சீட் கொடுத்தார்கள். அதுவும் இல்லாமல் போனால் தங்களுடைய சீட்டை கூட்டணிக்கு கொடுத்தார்கள். மற்றொரு விஷயம், நீங்கள் குறிப்பிட்ட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களின் குறிப்பிட்ட சில தொகுதிகளில் பாமகவுக்கு வலுவான ஓட்டு வங்கி உள்ளது. அதை ஒதுக்க முடியாது. ஆனால், ஏதோ காரணத்துக்காக பாஜகவுடன் தேர்தல் மேடையை பகிர்ந்து கொள்வதில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும் அவரது மகன் அன்புமணி ராமதாஸும் ஆர்வம் காட்டாதது அக்கட்சியினருக்கு ஒருவித அரசியல் சமிக்ஞையை காட்டியிருப்பதாகவே பார்க்கிறேன். பாஜகவின் எந்தவொரு பெரிய தலைவர்கள் கலந்து கொண்ட மேடையிலும் அன்புமணி ராமதாஸையோ டாக்டர் ராமதாஸையோ பார்க்க முடியவில்லை."

கூட்டணியில் இருக்கும் ஒரு முக்கிய கட்சிக்கு முன்னுரிமை கொடுக்காதது, அதிமுக அணி எதிர்கொள்ளும் பின்னடைவுகளில் முக்கியமானது.

இதே சமயம், சென்னை மட்டுமின்றி மக்கள் நீதி மய்யம் கட்சி மீது முதலாம் வாக்காளர்கள், இல்லத்தரசிகள், தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றும் இளைய தலைமுறைக்கு ஒருவித ஈர்ப்பு இருப்பதை அறிய முடிகிறது. அது வாக்குகளாக மாறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்கிறார் லட்சுமணன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: