பிரசார இறுதி நாள்: நாளிதழ்களில் செய்திகள் போல விளம்பரம்; அனிதா குரலை திருத்தி வீடியோ

- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளான இன்று, தமிழ்நாட்டில் வெளியாகும் நாளிதழ்களின் முதல் நான்கு பக்கங்களில் அ.தி.மு.க. சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளம்பரங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
அதேபோல, நீட் பிரச்சனையால் தற்கொலை செய்துகொண்ட அனிதா அ.தி.மு.கவுக்கு வாக்கு கேட்பதைப் போல வீடியோ ஒன்றும் கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதியன்று சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடக்கவிருக்கும் நிலையில், இன்றுடன் தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் வெளியாகும் நாளிதழ்களின் முதல் நான்கு பக்கங்களில் தி.மு.கவின் கடந்த ஆட்சிக்காலத்தில் அதை விமர்சித்து வெளியான பத்திரிகை செய்திகள் தொகுக்கப்பட்டு விளம்பரமாக வெளியாகியுள்ளன.
அந்தந்தத் தருணத்தில் நாளிதழ்கள், மின் ஊடகங்களில் வெளியான இந்த செய்திகள் சேகரிக்கப்பட்டு, நாளிதழைப் போல வடிவமைக்கப்பட்டு விளம்பரமாக வெளியிடப்பட்டிருந்தன.
தமிழ்நாட்டின் பாரம்பரிய செய்தித்தாள்கள் அனைத்திலும் இந்த நான்கு பக்க விளம்பரங்கள், விளம்பரம் என குறிப்பிடாமல் வெளியிடப்பட்டிருந்தன. ஒவ்வொரு பக்கத்தின் கீழேயும் "இப்பக்கங்களில் இடம்பெற்றுள்ள செய்திகள் யாவும் பல்வேறு செய்தித் தாள்களிலும் இணைய செய்தித் தளங்களிலும் தொலைக்காட்சிகளிலும் வெளியிடப்பட்டவை. எதுவும் கற்பனை அல்ல" என்றும் கூறப்பட்டிருந்தது. நான்காம் பக்கத்தில் மட்டும் பொதுநலன் கருதி வெளியிடுவோர்: அ.இ.அ.தி.மு.க. என கூறப்பட்டிருந்தது.
தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளில் வெளியான இந்த விளம்பரங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இது தொடர்பாக கடும் விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின். சென்னை சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலினுக்காக பிரசாரம் மேற்கொண்ட அவர், "இன்றைக்குக் காலையில் எல்லா நாளிதழ்களிலும் பக்கம் பக்கமாக விளம்பரங்கள். அதாவது, தி.மு.க. என்னென்ன அக்கிரமங்களை செய்திருக்கிறது. கடைகளில் புகுந்து அடித்து உடைத்திருக்கிறது என்றெல்லாம் தலைப்புச் செய்திகளைப் போட்டு தி.மு.க. பெறும் வெற்றியை தடுத்து நிறுத்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. பத்து வருடமாக யார் ஆட்சியில் இருப்பது, தி.மு.கவா ஆட்சியில் இருக்கிறது? அ.தி.மு.க தான் ஆட்சியில் இருக்கிறது. நம் மீது தவறு இருந்திருந்தால், அது தொடர்பாக வழக்குப் போட்டிருக்கிறார்களா? ஒரு வழக்கு உண்டா? அது நிரூபிக்கப்பட்டிருக்கிறதா?

பட மூலாதாரம், Getty Images
நம் மீது தவறு இருந்திருந்தால், அது உண்மையாக இருந்திருந்தால் வழக்குப் போட்டிருக்க வேண்டும்; கைது செய்திருக்க வேண்டும். அதற்குரிய தண்டனையை கொடுத்திருக்க வேண்டும். அப்படியேதும் நடக்கவில்லை.
பத்தாண்டு காலம் ஆட்சியில் இருந்தபோது அதைப்பற்றி சிந்திக்காதவர்கள், நினைக்காதவர்கள் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக இப்படி ஒரு விளம்பரத்தைக் கொடுத்து மக்களை திசைதிருப்ப நினைக்கிறார்கள். அந்த விளம்பரத்தைப் பார்த்தால், ஏதோ விளம்பரம் போல அமைக்கப்படவில்லை. இன்றைக்கு நேற்று நடந்த செய்தியைப் போல வெளியிட்டிருக்கிறார்கள். யாராவது விவரம் தெரியாதவர்கள் படித்துப் பார்த்தால் செய்தியாகத் தான் படிப்பார்கள். விளம்பரமாக பார்க்க மாட்டார்கள்" என விமர்சனம் செய்திருக்கிறார்.
அதேபோல, நீட் தேர்வின் காரணமாக மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காமல் தற்கொலை செய்துகொண்ட அனிதா, அ.தி.மு.கவிற்கு வாக்கு கேட்பதைப் போன்ற ஒரு வீடியோவை தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மஃபா பாண்டியராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
நீட் தேர்வால் தனக்கு மருத்துவ இடம் கிடைக்காமல் போய்விட்டது குறித்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட அனிதா வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோக்கள் ஊடகங்களில் இருந்து சேகரிக்கப்பட்டு ஒலிமாற்றம் செய்யப்பட்டிருந்தது. அதில், "வருடத்திற்கு 400 பேருக்கு மேல் அரசுப் பள்ளியிலிருந்து மருத்துவம் படிப்பதென்பது தமிழக சரித்திரத்திலேயே கிடையாது. இந்த வாய்ப்பை ஜெயலலிதா அம்மாவின் ஆட்சி தந்திருக்கிறது.
இதுபோல பாசிட்டிவான விஷயங்களைச் செய்யாமல் எங்களை சாகடிச்சு உங்களோட அரசியல் வாழ்க்கைக்கு ஏன் தீனியாக்குறீங்க? எங்கள் கனவுகளை நாசமாக்கிய தி.மு.கவை மன்னிக்காதீங்க" என்று அனிதா கூறுவதைப்போல அந்த வீடியோ ஒலிமாற்றம் செய்யப்பட்டிருந்தது. இது சமூக வலைதளங்களில் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியது.
தகவல் இல்லை
மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.Facebook பதிவின் முடிவு
இதையடுத்து மறைந்த அனிதாவின் சகோதரர் மணிரத்னம், அமைச்சரின் செயலைக் கண்டித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். "உங்களுக்கு ஒரு பெண் இருந்திருந்து, அவர் இறந்திருந்தால் இப்படிச் செய்வீர்களா? இது எங்களுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் மனவேதனையை ஏற்படுத்தியிருக்கிறது. தயவுசெய்து அந்த வீடியோவை எடுத்துவிடுங்கள்" என்று அந்த வீடியோவில் அவர் கூறியிருந்தார்.
செந்துறை காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளிக்கப்போவதாகவும் அவர் ஊடகங்களிடம் தெரிவித்தார். இந்த நிலையில், தனது ட்விட்டர் பக்கத்திலிருந்து அந்த ட்வீட்டை நீக்கியிருக்கிறார் அமைச்சர் கே. பாண்டியராஜன்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
மேலும், இன்று காலை நீட் தொடர்பான ட்விட் பதிவு தன் அனுமதி இல்லாமல் பதிவேற்றப்பட்டதாகவும், தனக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் தன் ட்விட்டர் கணக்கில் ஒரு விளக்கக் காணொளியைப் பதிவேற்றம் செய்திருக்கிறார் அமைச்சர் கே. பாண்டியராஜன்.
பிற செய்திகள்:
- பிளாஸ்டிக் பாட்டில்களில் சிறுநீர் கழித்த அமேசான் ஓட்டுநர்கள்: மன்னிப்பு கேட்ட நிறுவனம்
- இளம் பெண்ணுடன் நின்று கொண்டிருந்த இளைஞர் மீது இந்து அமைப்பினர் சரமாரி தாக்குதல்
- வீரர்களுக்கு பதிலாக 'கில்லர் ரோபோக்கள்' இனி போரிடுமா?
- அனிதா இறப்பும் அரசியலும்: "நீட் தேர்வால் தமிழகம் இழந்தது அதிகம்" - விலக்குப் பெறுவது சாத்தியமா?
- "நான் ஏன் அகண்ட திராவிடம் பேசக்கூடாது?": கமல்ஹாசன் பேட்டி #BBC_Exclusive
- சுல்தான் - சினிமா விமர்சனம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:








