எடப்பாடி Vs ஸ்டாலின்: வார்த்தைப்போரில் மோதும் தலைவர்கள் உச்சகட்ட பிரசாரம் #தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021

பட மூலாதாரம், EDAPPADI PALANISWAMY TWITTER
தமிழகம் முழுவதும் ஊர் ஊராகச் சென்று என்னைப் பற்றி தெரியாது என்று பேசி அனைவருக்கும் தெரிய வைத்ததற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் "திமுக தலைவர் ஸ்டாலின் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி வருகிறார்.அவர் போடாத வேடங்கள் இல்லை. ஆனாலும் ஸ்டாலின் வெற்றிக் கனவு பலிக்காது," என்றார்.
"அதிமுகவிற்கு இயற்கையும், மக்களும் சாதகமாக இருக்கின்றனர். தமிழகத்தில் ஏழை என்ற ஜாதி எதிர்காலத்தில் இல்லாத நிலையை உருவாக்குவோம் என்றும் பேசினார். தமிழகம் முழுவதும் ஊர் ஊராக சென்று என்னைப் பற்றி தெரியாது என்று பேசி அனைவருக்கும் தெரிய வைத்ததற்கு ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார். திமுகவை அண்ணா இறப்பிற்கு பிறகு சூழ்ச்சி செய்து முதல்வரானவர் கருணாநிதி. தனது உடல்நிலை குன்றிய போதிலும் ஸ்டாலினை நம்பி திமுக தலைவர் பதவியை கருணாநிதி கொடுக்கவில்லை. அவரே ஸ்டாலினை நம்பவில்லை. அப்படி இருக்கும்போது நாட்டு மக்கள் எப்படி அவரை நம்புவார்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.
இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி திமுக தான். எனவே காலத்தால் அழிக்க முடியாத கரும்புள்ளியை திமுக பெற்றுள்ளது. இந்தியாவிலேயே ஜனநாயகமான கட்சி அதிமுக தான். தற்போது விஞ்ஞான உலகம் என்பதால் ஸ்டாலின் அவிழ்த்து விடும் பொய்களை இளைஞர்கள் நம்ப மாட்டார்கள். எந்த காலத்திலும் ஸ்டாலின் முதல்வராக முடியாது என்றார் பழனிசாமி. திமுகவில் 20 பேரின் வாரிசுகளை வேட்பாளராக நிறுத்தி உள்ளனர். அவர்கள் எல்லாம் வெற்றி பெற்று வந்தால் நாடு தாங்குமா? என்றும் கேள்வி எழுப்பினார் பழனிசாமி.சேலம் மேச்சேரி பகுதியில் மேட்டூர் சட்டமன்ற தொகுதி பாமக வேட்பாளர் சதாசிவத்தை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் செய்தார். அப்போது அவர், "அதிமுக கூட்டணி கட்சி தலைவர்களை திமுகவினர் அவதூறாக பேசி வருகின்றனர். திமுக ஒரு கட்சி அல்ல. அது ஒரு கம்பெனி. அங்கு அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டும்தான் பதவியில் இருக்க முடியும். எனவே தமிழகத்தில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக இந்த சட்டமன்ற தேர்தல் அமையும். திமுக குடும்பமே சேலத்தை சுற்றி சுற்றி வந்து பிரசாரம் செய்து வந்தது. எத்தனை முறை சுற்றி வந்தாலும் சேலத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் மட்டுமே வெற்றி பெற முடியும் என்றும் பேசினார் எடப்பாடி பழனிசாமி.
இயற்கை வளங்களை சுரண்டும் பாஜக: மு.க. ஸ்டாலின்

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரசார பொதுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அதில் பேசிய ஸ்டாலின், திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாகக் கருத்துக்கணிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. அதை தாங்கிக் கொள்ள முடியாத பாரதிய ஜனதா கட்சி, எப்படியாவது வெற்றியைத் தடுக்கும் வேலையை செய்து கொண்டு வருகிறது என்றார்.
"புதுச்சேரியில் கடந்த ஐந்தாண்டுகளாக மத்திய பாஜக அரசு காங்கிரஸ் கூட்டணிக்குத் தொல்லை கொடுத்தது. கடந்த இரண்டு மாதங்களாக புதுச்சேரியில் அமைச்சர்கள், சபாநாயகர் பதவி வகித்தவர்களை மிரட்டி தங்கள் பக்கம் இழுத்தது பாஜக. பாஜக, என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக ஆகிய கட்சிகளுக்கு, மக்களை நம்பவைத்து ஏமாற்றுவது தான் வேலை."
"இந்தியாவில், பாஜக தவிர மற்ற கட்சிகள் எந்த மாநிலத்திலும் ஆட்சியில் இருக்கக் கூடாது என்ற கொள்கையுடன் செயல்பட்டு வருகிறது. எப்போது மத்தியில் மோதி பிரதமராக வந்தாரோ அப்போதிலிருந்து அதிக பெரும்பான்மையுடன் ஆட்சி செய்த மாற்றுக் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆட்சியைக் கலைத்தனர். புதுச்சேரியிலும் அதை நிகழ்த்தினர். அனைத்து மாநிலங்களிலும் ஆட்சியைக் கலைக்கின்ற மத்திய பாஜகவைக் கலைக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியைக் கவிழ்ப்பது தான் மோதி அரசின் கொள்கையாக உள்ளது என்றார் ஸ்டாலின்.
"புதுச்சேரியில் கடந்த சட்டமன்ற தேர்தலில், பாஜக வெறும் 19 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்றது. ஆனால் ரங்கசாமி மற்றும் அதிமுகவை மிரட்டி தற்போது 9 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது. இதற்கு ரங்கசாமி கட்சியும், இங்கிருக்கும் அதிமுகவும் தலையசைத்துள்ளன. இதே போன்ற முறை தான் தமிழகத்திலும் நிகழ்கிறது," எனக் கூறினார் ஸ்டாலின்.
தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி நடந்து வரும் தேர்தல் பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை மாலையுடன் ஓய்கிறது. இதையொட்டி இரவு 7 மணிக்கு முன்பாக இறுதி கட்ட வாக்கு வேட்டையில் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் வேட்பாளர்களும் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த தேர்தல் முடிவுகள் வரும் மே மாதம் 2ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றைய தினமே மாலையில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிற செய்திகள்:
- சுல்தான் - சினிமா விமர்சனம்
- "நான் ஏன் அகண்ட திராவிடம் பேசக்கூடாது?": கமல்ஹாசன் பேட்டி #BBC_Exclusive
- பாஜக vs திமுக: கொள்கைகள் மோதும் கொங்கு மண்டலம் யாருக்கு வெற்றி தரப்போகிறது?
- திமுக வேட்பாளராக எம்ஜிஆர் களம் கண்ட தேர்தல் மற்றும் பிற சுவையான தகவல்கள்
- சீனாவில் இருந்து வெளியேற கட்டாயம் ஏற்பட்டது ஏன்? - பிபிசி செய்தியாளரின் கசப்பான உண்மை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












