தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: மேயர், துணை முதல்வராக இருந்தபோது என்ன செய்தார் ஸ்டாலின்?

குஷ்பு

பட மூலாதாரம், Kushbu Sundar

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், சென்னை நகர மேயர் ஆக ஐந்து ஆண்டுகள் இருந்தபோதும் சரி, துணை முதல்வர், தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் போன்ற பதவிகளை வகித்த ஐந்து காலத்திலும் சரி, மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்று குற்றம்சாட்டினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

சென்னையில் போட்டியிடும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி திங்கட்கிழமை ஈடுபட்டார். இதையொட்டி ஆயிரம் விளக்கு தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் குஷ்புவை ஆதரித்து வாக்கு சேகரித்த அவர், சென்னையில் மேயர் ஆகவும் துணை முதல்வராகவும் இருந்த மு.க. ஸ்டாலின் நகர மக்களின் நலனுக்காக என்ன செய்தார் என்று கேள்வி எழுப்பினார்.

ஸ்டாலின் மேயர் ஆக இருந்தபோது, மழை காரணமாக சென்னையில் 3000 வீதிகளில் மழைநீர் தேங்கியது. தமது பதவிக்காலத்தில் குடிநீர் வசதி, மழைநீர் சேமிப்பு வசதி, கால்வாய் சுத்திகரிப்பு என எந்த திட்டத்தையும் ஸ்டாலின் செயல்படுத்தவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

ஆனால், அதிமுக ஆட்சியில், 954 கி.மீ தூரத்துக்கு மழை நீர் தங்கு கடையின்றி வெளியேற நடவடிக்கை எடுத்தது என்று கூறினார் அவர். திமுகவிற்கு எடுத்துதான் பழக்கம் கொடுத்து பழக்கம் இல்லை. சென்ற ஒரு ஆண்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ 5,500 நிவாரணம் வழங்கிய ஒரே அரசு எனது தலைமையிலான அதிமுக அரசு மட்டும்தான். மீண்டும் அம்மாவின் ஆட்சி அமைப்போம், திமுகவிற்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.

எடப்பாடி பழனிசாமியை யாரும் காக்கப்போவதில்லை: மு.க. ஸ்டாலின்

ஸ்டாலின்

பட மூலாதாரம், M.K. STALIN

தம்மை மக்கள் கைவிட்டுவிட்டதை தெரிந்துகொண்ட பழனிசாமி, இயற்கையும் கடவுளும் தமக்கு துணை இருப்பதாக கதை அளக்கிறார் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராணிப்பேட்டை, அரக்கோணம், சோளிங்கர், ஆற்காடு ஆகிய தொகுதிகளில் மு.க. ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் திங்கட்கிழமை ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், கடவுள் சிலைக் களவாணிகளைக் காத்தவர்; அதிமுக ஆட்சியின் இயற்கை பேரிடர்களுக்கு நிவாரண நிதி பெறக் கூட வக்கற்றவரை இயற்கை - கடவுள் - மக்கள் என யாரும் பழனிசாமியை காக்கப் போவதில்லை என்று கூறினார்.

"ஆளும் கட்சி சார்பில் அதிமுகவுக்காக தொடர்ந்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் பழனிசாமிக்கு, தற்போது தேர்தல் ஜுரம் வந்து விட்டது. அதனால் எதையாவது உளறிக்கொண்டு இருக்கிறார். இயற்கையும், கடவுளும் தனக்கு துணையாக இருக்கும்" என பேசியிருக்கிறார். தவழ்ந்து, தவழ்ந்து, ஊர்ந்து, ஊர்ந்து போய் அவர் முதல்வரானார் என்று நாம் பிரசாரம் செய்தபோது, கோபம் அடைந்த பழனிசாமி நான் என்ன பாம்பா, பல்லியா என கேள்வி எழுப்பினார். அவற்றை எல்லாம் விட துரோகத்துக்க விஷம் அதிகம் என்று ஸ்டாலின் பேசினார்.

அதிமுக ஆட்சிக்கு வந்தால் இயற்கை பேரிடர்கள்தான் அதிகம் நடக்கிறது. இதற்கு பல சான்றுகள் உள்ளன என்றும் ஸ்டாலின் பேசினார்.

கோவையை சீரமைக்கும் செயல் திட்டம் வெளியிட்டார் கமல்ஹாசன்

கமல்ஹாசன்

பட மூலாதாரம், Makkal Neethi Maiyam

கோவையின் இந்திய முகம் நான். என்னுடைய மொத்த ஆற்றலையும் பயன்படுத்தி கோவை தெற்குத் தொகுதியை இந்தியாவின் முன்னுதாரண தொகுதியாக மாற்றிக்காட்டுவேன் என்று கூறியிருக்கார் கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன். இது தொடர்பாக காணொளி ஒன்றையும் கமல்ஹாசன் தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

அதில், அடுத்த முறை நடக்கும் தேர்தலில் நான் மக்களை சந்திக்கும்போது என்னிடம் கோவை தெற்கு தொகுதியை தந்தீர்கள். நான் என்னவெல்லாம் செய்திருக்கிறேன் பாருங்கள் என்று கூறி உங்களிடம் வாக்கு கேட்கும் அளவுக்கு திட்டங்களை செயல்படுத்துவேன் என்று கூறியிருக்கிறார் கமல் ஹாசன்.

கமல்ஹாசன் வெளியிட்டுள்ள செயல்திட்டத்தில், "கந்து வட்டி முழுமையாக ஒழிக்கப்படும், சிறு குறு தொழில் முனைவோர்களுக்கு நியாயமான வட்டியில் கடன் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும், தொகுதியில் இரத்த வங்கி அமைக்கப்படும், நீண்ட நாட்களாகப் பட்டா இன்றி வசிக்கும் மக்களுக்கு இலவச நில பட்டா வழங்கப்படும், தங்கநகை உற்பத்தியாளர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும், தொகுதி முழுவதும் '6' அடி ஆழத்தில் பாதாள சாக்கடை வசதி செய்து தரப்படும், அனைத்து வார்டுகளிலும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அமைக்கப்படும். இவை 24 மணி நேர மக்கள் குறை தீர்ப்பு மையங்களாகச் செயல்படும், பொது மக்களின் பங்களிப்போடு நீர் நிலைகள் முறையாகப் பராமரிக்கப்படும் போன்ற திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

69% இடஒதுக்கீடு குளறுபடியை சரி செய்வேன்: டி.டி.வி. தினகரன்

தினகரன்

பட மூலாதாரம், TTV DINAKARAN

69 சதவீத இடஒதுக்‍கீட்டில் உள்ஒதுக்‍கீடு என்ற பெயரில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் சரிசெய்யப்படும் என சின்னமனூர் தேர்தல் பிரசாரத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர்டிடிவி தினகரன் பேசினார்.

கம்பம் சட்டமன்றத் தொகுதி அ.ம.மு.க வேட்பாளர் P. சுரேஷுக்‍கு வாக்கு சேகரித்த அவர், தேனி மாவட்டம் சின்னமனூர் டவுன் பகுதியில், பேசும்போது, பணமூட்டைகளுக்‍கு வாக்‍களிக்‍க வேண்டாம் என்றும், எல்லாமே மக்‍களின் வரிப்பணம்தான் என்றும் குறிப்பிட்டார். 69 சதவீத இடஒதுக்‍கீட்டில் உள்ஒதுக்‍கீடு என்ற பெயரில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் சரிசெய்யப்பட்டு, அனைத்து சமூகத்திற்கும் சமநீதி கிடைக்‍க வழிவகை செய்யப்படும் என தெரிவித்தார்.

எத்தனையோ கட்சிக்கு ஓட்டு போட்டீர்கள். இம்முறை எனக்கு போடுங்கள்: சீமான்

சீமான்

பட மூலாதாரம், SEEMAN

கடந்த தேர்தல்களில் உதய சூரியனுக்கும் இரட்டை இலைக்கும் வாக்கு போட்டீர்கள். இம்முறை விவசாயிக்கு ஓட்டு போடுங்கள் என்று கேட்டுக் கொண்டார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் சீமான் அங்கு திங்கட்கிழமை இரவு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது அவர், தூய குடிநீரை இலவசமாக விநியோகிப்பேன், பயணிக்க பாதை, தடையற்ற மின்சாரம், பாதுகாப்பான சுற்றுச்சூழல், நஞ்சில்லா உணவு போன்றவற்றை நான் உறுதிப்படுத்துவேன். இது எல்லாம் ஈடேற நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் எனக்கு ஓட்டு போட வேண்டியதுததான் என்று பேசினார்.

பாஜக அரசின் முகமூடிதான் அதிமுக அரசு: பிரகாஷ் காரத்

பிரகாஷ் காரத்

பட மூலாதாரம், PRAKASH KARAT

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் முகமூடிதான் அதிமுக அரசு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத் தெரிவித்தார். திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சென்னையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அவர், எடப்பாடி பழனிசாமி அரசு சுதந்திரமான அரசாக இல்லாமல் அடிமை அரசாக உள்ளது. இந்த அரசின் கட்டுப்பாடு நரேந்திரமோதி மற்றும் அமித்ஷாவின் கைகளில் உள்ளது என்று கூறினார்.

இந்தி மற்றும் சனாதன கலாசாரத்தை பாரதிய ஜனதா கட்சி, நாடு முழுவதும் பரப்பி வருகிறது. இது சமூக கலாசார மற்றும் முற்போக்கு மரபுகளை கொண்ட தமிழ் சமூகத்திற்கு எதிரானது என்று பிரகாஷ் காரத் பேசினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: