தமிழகத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் ஊரடங்கு அமலாகிறதா? தமிழ்நாடு அரசு சொல்வது என்ன?

பட மூலாதாரம், Facebook
(இந்தியாவில் உள்ள சில முக்கிய நாளிதழ்களிலும் அவற்றின் இணையதளங்களிலும் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)
மீண்டும் தமிழ்நாட்டில் பொதுமுடக்கம் தேவையா?
தமிழகத்தில் பொது முடக்கத்தை அமல்படுத்த வேண்டிய அவசியம் தற்போது இல்லை என்றும், அதேவேளையில் தேவைப்பட்டால் சில கட்டுப்பாட்டுகளை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார் என தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை, கோவை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. நோய்த் தொற்று தீவிரமடைந்துள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட 46 மாவட்டங்களில், தமிழகத்தில் அந்த மூன்று மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன.
தற்போதைய சூழலில், தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் மட்டுமே இரண்டு சதவீதம் பாதிப்பு உள்ளது. மற்ற இடங்களில் அதிக பாதிப்பு இல்லை.
மாநிலத்தில் மீண்டும் பொதுமுடக்கத்தை அமல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. கடந்தாண்டு தடுப்பு மருந்துகள் ஏதும் இல்லாத நிலையில், பொது முடக்கத்தை அமல்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. தற்போது அது தேவையில்லை. அதேவேளையில், தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தால், அத்தியாவசியமற்ற பணிகளுக்கு படிப்படியாக கட்டுப்பாடு விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், அதுகுறித்து எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை என்றார் ராதாகிருஷ்ணன்.
'சிங்கம்போல் தனியாக நிற்கிறோம்' - சீமான்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் சிங்கம் போல் தனியாக நிற்கிறோம் என்று சீமான் பேசினார் என்கிறது தினத்தந்தி செய்தி.
கடலூர் மாவட்டத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்தார்.
"சிங்கம்போல் தனியாக களத்தில் நிற்கிறோம். எங்களுக்கு இந்த ஒரு முறை வாய்ப்பு தாருங்கள். இந்த மண்ணும், மக்களும் பயன்பெற வேண்டுமென தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுகிறோம். இந்த இனம் வாழ வேண்டும் என்பதே நாம் தமிழர் கட்சியின் நோக்கம்," என்று அவர் அப்போது பேசியுள்ளார்.
திமுகவின் ஆ. ராசா மீது வழக்குப்பதிவு

பட மூலாதாரம், Getty Images
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாகப் பேசியதாக திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ. ராசா மீது சென்னை மாநகரக் காவல் துறையின் மத்தியக் குற்றப் பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த வெள்ளியன்று ஆயிரம் விளக்கில் நடந்த பிரசாரத்தின்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து ராசா கூறிய ஓர் உவமை சர்ச்சைக்கு உள்ளானது.
அதிமுக வழக்கறிஞர் அணியின் இணைச் செயலாளர் திருக்குமரன் அளித்த புகாரின் அடிப்படையில் ராசா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- “தமிழர்கள் நரேந்திர மோதி முன் தலைவணங்க விரும்பவில்லை” - ராகுல் காந்தி
- நெருங்கி வந்த ஆபத்து; அடுத்த 100 ஆண்டுகளுக்கு கவலை இல்லை என கூறிய நாசா
- இதுவரை 400 பேருக்கு மேல் பலி; கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மியான்மர் ராணுவத்துக்கு எதிர்ப்பு
- சென்னை மாநகராட்சி: எந்த தொகுதியில் என்ன பிரச்னை? வாக்காளர்கள் எதிர்பார்ப்பு என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:








