இந்தியாவில் 'இரட்டை பிறழ்வுடைய' கொரோனா வைரஸ் திரிபு: நீங்கள் கவலைப்பட வேண்டுமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
- பதவி, பிபிசி
இந்தியாவில் சேகரிப்பட்ட மாதிரிகளில் புதிய ‘இரட்டை பிறழ்’ திரிபு கொண்ட கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
இரண்டு பிறழ்வுகள் ஒன்றாக இணைந்து வந்துள்ள இந்த திரிபு மிகவும் பயங்கரமானதா, தடுப்பு மருந்துகளால் பாதிப்பு குறைவாக உள்ளவையாக இருக்கக்கூடியதா என்பதை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
’இரட்டை பிறழ்வு’ திரிபு என்றால் என்ன?
எல்லா வைரஸ்களை போலவும், ஒருவரிடமிருந்து மற்றொருவரிடம் செல்லும் போது, கொரோனா வைரஸும் தொடர்ந்து சிறு, சிறு வகையில் மாறி வருகிறது.
இத்தகைய பிறழ்வுகள், பெரும்பாலும் பின்விளைவுகள் இல்லாமலும், பொதுவாக அந்த வைரஸ் செயல்படும் தன்மையில் பெரிய மாற்றத்தை உருவாக்காதவையாகவே இருக்கும்.
ஆனால் சில பிறழ்வுகளோ, வைரஸ்கள் பொதுவாக எந்த புரதச்சத்தை பிடித்துக்கொண்டு மனித அணுக்களுக்குள் செல்லுமோ அவற்றில் உடனடியாக ஓர் உயர்வை ஏற்படுத்தும். இத்தகைய பிறழ்கள், மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகவும், நோயை தீவிரப்படுத்துவதாகவும், தடுப்பு மருந்துகளிடமிருந்து தப்பித்துக் கொள்ளும் வகையிலும் அமையும்.
SARS-Cov2 போன்று சுவாசத்தை பாதித்து, கோவிட் -19 நோயை உருவாகும் நோய்க் கிருமிகளிடமிருந்து பாதுகாத்து, ஆண்டிபாடிக்களை உடலில் உருவாக உதவுபவை தடுப்பு மருந்துகள்.
ஆன்டிபாடிகளை செயலிழக்க வைத்தால், உடலில் வைரஸ் நுழைவதை அவை தடுத்துவிடும், நம்மை காத்துக்கொள்ள இதுவே சிறந்த வழியாக இருக்கும்.
இந்தியாவில் மரபணு குறித்து ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள், இந்தியாவில் ‘இரட்டை பிறழ்வு கொண்ட கொரோனா வைரஸ் உள்ளதை கண்டறிந்துள்ளனர்.

பட மூலாதாரம், Reuters
மகாராஷ்டிர மாநிலத்தில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்ததைவிட E484Q மற்றும் L452R ஆகிய பிறழ்வுகளின் அளவு அதிகமாக உள்ளதாக அரசு தெரித்துள்ளது.
”இத்தகைய (இரட்டை) பிறழ்வுகள், நமது நோயெதிர்ப்பு சக்தியிலிருந்து தப்பிப்பதோடு, நோயின் பாதிப்பையும் அதிகரிக்கும்.” என்று சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த E484Q பிறழ்வு என்பது, தென் ஆஃப்ரிக்காவில் கண்டறியப்பட்ட B.1.351இல் இருந்த மற்றும் பிரேசிலில் கண்டறியப்பட்ட P.1இல் இருந்த E484K பிறவை ஒத்ததாகவே உள்ளது என்கிறார், லூசியானா மாநில பல்கலைக்கழகத்தின் ஹெலித் சைன்ஸ் செண்டர் ஷ்ரெவேபோர்டில் பணியாற்றும் டாக்டர் ஜெரமி கமில்.
ஒரே வைரஸின் குடும்பத்தில் இத்தகைய பிறழ்வுகள் நடக்க ஆரம்பித்தால், அந்த வைரஸின் செயல்பாடு மாறவும், அதன் பரம்பரை ‘கவலையளிக்கக்கூடிய பிறழ்வுகள்’ வகையில் வரலாம்.
இந்தியாவில் கண்டறியப்பட்ட ‘இரட்டை பிறவில்’ இடம்பெற்றுள்ள L452R பிறவைப் பொருத்த வரையில், B.1.427/B.1.429 வைரஸ் வகைப்பரம்பாரையில் அமெரிக்காவில் இருந்தது என்பதனால் கவனம் பெற்றது. இதை “கலிபோர்னியா திரிபு” என்றார்கள் என்கிறார் மருத்துவர் கமில்.
’இரட்டை பிறழ்வு’ அரிதானதா?
அப்படி எல்லாம் இல்லை என்று கூறும் மருத்துவர் கமில், சமீபத்தில், அமெரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் வளர்ந்துவரும் ஏழு பரம்பரை குறித்த ஆய்வுக் கட்டுரையை விஞ்ஞானிகளுடன் இணைந்து எழுதியுள்ளார்.
“ஸ்பைக் செய்யும் மரபணுக்களிடமிருந்து நம்மை காத்துக்கொண்டாலும்கூட, ஒன்றுக்கும் மேற்பட்ட பிறழ்வுகளை காண்பது இயல்பான ஒரு விஷயமாக மாறியுள்ளது.” என்கிறார்.
இந்த பெருந்தொற்று தொடங்கிய காலத்தில், ஸ்பைக் மரபணுக்களில் D614G என்ற ஒரே வகையான பிறழ்வு மட்டுமே காணப்பட்டது. அந்த பிறழ்வு தற்போது பல இடங்களிலும் உள்ளது, “அதனால், மற்றவை அதற்கும் மேலாக உள்ளதை நம்மால் காண முடிகிறது,” என்கிறார் ஜமில்.

பட மூலாதாரம், Getty Images
சொல்லப்போனால், GISAID என்கிற திறந்தவெளி தரவுகளுக்கான தளத்தில், இந்தியாவில் கண்டறியப்பட்ட E484Q மற்றும் L452R ஆகிய பிறழ்வுகள் கொண்ட 43 வகையான வைரஸ்களை அதில் வகைபடுத்தியுள்ளனர்,
ஐக்கிய ராஜ்ஜியத்தில் மார்ச் மாதம் சேகரிக்கப்பட்ட ஒரு மாதிரியில், ஒன்பது ஸ்பைக் பிறழ்வுகள் இருந்ததாக கமில் தெரிவிக்கிறார். “அது உண்மையிலேயே அதிகம்தான். இந்தியாவில் இரண்டு ஸ்பைக் பிறழ்வுகள்தான் உள்ளன என்பது நிச்சயமாக நமக்கு தெரியுமா?” என்று கேள்வி எழுப்புகிறார்.
இந்திய ஆய்வாளர்கள் தங்களின் தரவுகளை GISAID தளத்தில் பதிவேற்றியவுடன், உலகிலுள்ள பல விஞ்ஞானிகளும், இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள ‘இரட்டை பிறழ்வுகள்’ பிரிட்டனில்கண்டறியப்பட்டவையின் பரம்பரையா, அல்லது இந்தியாவிலேயே தன்னிச்சையாக உருவானவையா என்பதை கண்டறியும் முயற்சியில் இறங்குவார்கள்.
புதிய பிறழ்வுகள் - எத்தகைய கவலையான விஷயம் இது?
ஸ்பைக் மரபணுக்களால், குறிப்பிட்ட வைரஸ் மக்களை தாக்குவதை இன்னும் ‘மேம்பட்ட’ முறையில் செய்ய உதவ முடியும் அல்லது, ஆண்டிபாடிகளை செயலிழக்கச் செய்வதிலிருந்து வைரஸ்களை அதனால் தப்புவிக்கவும் முடியும்.
அப்படியென்றால், இந்த வைரஸின் பிறழ்வு சரியான முறையில் நடந்தால், ஏற்கனவே கோவிட்-19இல் பாதித்த ஒருவரை மீண்டும் அதனால் தாக்க முடியும்.
ஆனால், தடுப்பு மருந்து போட்டுக்கொண்டவர்களுக்கோ, ஏற்கனவே கோவிட்-19 பாதிப்பு வந்து குணமடைந்தவர்களுக்கோ, மீண்டும் அது தாக்கும்போது, அதன் தாக்கம் மிகவும் குறைவாகவே இருக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
இந்த வைரஸால் மீண்டும் தாக்க முடியும் என்றால், அது ஹெர்ட் இம்மியூனிட்டியை பாதித்து உள்ளிறங்கும் என்கிறார் கமில். (ஹெர்ட் இம்மியூனிட்டி என்பது, ஒரு சமூகத்தைச் சேர்ந்த பெரும்பான்மையான மக்கள், தடுப்பு மருந்து எடுத்துக்கொண்டதன் மூலமாகவோ, அதிகமானோர் வைரஸால் பாதிக்கப்பட்டு மீண்டதாலோ இந்த வைரஸின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ளப்படுவதாகும்.)
குழுக்கள் மூலமாக சென்று முதியவர்களிடம் இவை சேரக்கூடும் என்பதால், இதன்மூலம் அதிக ஆபத்தில் இருப்பது மூத்த குடிமக்களே.

பட மூலாதாரம், getty images
மற்ற திரிபுகள்போல இல்லாமல், இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள இந்த இரட்டை பிறழ்வு, அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகவோ, வேகமாக பரவும் தன்மை கொண்டதாகவோ இருக்காது என்றும், ஆனால் அதை உறுதிப்படுத்த கூடுதல் தரவுகள் தேவை என்றும் அவர் கூறுகிறார்.
இந்தியாவில் கோவிட் இரண்டாம் அலைக்கு இதுதான் காரணமா?
கடந்த புதன்கிழமை வெளியான தரவுகளின்படி, இந்தியாவில் 47,262 பேர் கோவிடால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 275 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டிலேயே, கோவிட் பாதிப்பு திடீரென அதிகரித்த நேரம் இதுவே.
ஹைதராபாத்தில் இயங்கும் செல்லுலார் மற்றும் மாலிக்யுலர் பயாலஜி மையத்தின் இயக்குநனரான மருத்துவர் ராகேஷ் மிஸ்ரா, அதிக பாதிப்பை கண்டுள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில், பாதிக்கப்பட்டவர்களில் 20 சதவிகிதம் பேருக்கு இந்த இரட்டை பிறழ்வு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
“இந்த திரிபுதான் இந்தியாவில் இரண்டாம் அலைக்கு காரணமா என்ற சந்தேகம் உள்ளது. ஆனால், நான் இல்லை என்பேன். நாங்கள் எடுத்த மாதிரிகளில் 80% பேருக்கு இந்த திரிபு இல்லை. நாங்கள் எடுத்த ஆயிரக் கணக்கான மாதிரிகளில் வெறும் 230 பேருக்கு மட்டுமே இந்த திரிபு உள்ளது.”
மிகவும் கவலையளிக்கும் வகையில் இருக்கும் திரிபுபிரிட்டனில் கண்டறியப்பட்ட கெண்ட் திரிபுதான். இதுவே பிரிட்டனின் பெரும்பாலான இடங்களில் பரவியுள்ளதோடு, 50 நாடுகளுக்கும் பரவியுள்ளது. இந்தியாவில் சோதனை செய்யப்பட்ட 10,787 மாதிரிகளில் 736 மாதிரிகளில் இந்த கெண்ட் திரிபு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த திரிபு, மிகவும் கடுமையான இரண்டாம் அலைக்கு பங்களிக்கக்கூடும் என்று கமில் கூறுகிறார், (இந்த திரிபு 50% கூடுதலாக பரவும் தன்மை கொண்டது என்றும், 60% கூடுதல் நச்சுத்தன்மை கொண்டது என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.)
”எப்படி இருந்தாலும், மனிதர்கள் நடந்துகொள்ளும் விதத்தை வைத்தே இரண்டாம் அலை இருக்கும்.” என்கிறார் கமில்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












