தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: `நரேந்திர மோதியின் படத்தை அதிமுக தவிர்ப்பது ஏன்?' பா.வளர்மதி சொல்லும் புதுக் காரணம்

வளர்மதி

பட மூலாதாரம், ஆலந்தூர் பா. வளர்மதி/Facebook

    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும 10 நாட்களே இருப்பதால், கடும் வெப்பத்தை பொருட்படுத்தாமல் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் விறுவிறுப்பாக வாக்கு சேகரித்து வருகிறார்கள். அதிலும், தேர்தல் வாக்குறுதிகளை பிரதானமாக முன்வைத்து அ.தி.மு.க வேட்பாளர்கள் பிரசாரம் செய்கின்றனர்.

முதல்வரின் தொடர் பிரசாரம் ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் சசிகலா குறித்த பேச்சுகள் அ.தி.மு.க முகாமில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன. இது குறித்து மேலும் அறிய முன்னாள் அமைச்சரும் ஆலந்தூர் தொகுதி அ.தி.மு.க வேட்பாளருமான பா.வளர்மதியை பிபிசி தமிழுக்காக தொடர்பு கொண்டோம்.

` பழவந்தாங்கல் சுரங்கப் பாதை அருகே மாலை 4 மணிக்குப் பிரசாரம் செய்ய உள்ளேன். அங்கே வாருங்கள்' என்றார் பா.வளர்மதி.

பேட்டிக்காக நாம் சென்ற நேரம், வளர்மதியை வரவேற்பதற்காக தாரை தப்பட்டைகள் முழங்க நடனக் கலைஞர்கள் நடனம் ஆடிக் கொண்டிருந்தனர். 2016ஆம் ஆண்டு தேர்தலின்போது, `பா.வளர்மதிக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள்' என ஜெயலலிதா பேசிய வார்த்தைகளை `வடசென்னை' படத்தின் பின்னணி இசையுடன் தொடர்ந்து ஒலிக்க வைத்தனர். சரியாக 4.45 மணிக்கு பிரசாரக் களத்துக்கு வந்த பா.வளர்மதி, அருகில் இருந்த கோயிலில் வழிபாடு நடத்திவிட்டு மக்களிடம் வாக்கு கேட்கத் தொடங்கினார். அவரிடம் பிபிசி தமிழுக்காக சில கேள்விகளை முன்வைத்தோம்.

அ.தி.மு.கவின் தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?

``தேர்தல் வாக்குறுதி என்பது அ.தி.மு.கவுக்கு மிகப் பெரிய பலம். இந்தத் தேர்தல் அறிக்கையை மக்கள் மிகவும் விரும்புகிறார்கள். அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அளவுக்கு தேர்தல் அறிக்கை உள்ளது. இதில் குறை சொல்வதற்கு வாய்ப்பில்லை. ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் என்பது பெண்களுக்கு மிகவும் தேவையான ஒன்று. அதனை அவர்கள் வரவேற்கின்றனர். சாதாரணமான குடும்பத்தில் எல்லாம் வாஷிங்மெஷின் வாங்குவது என்பது சிரமமான ஒன்று. இதுதொடர்பான எங்கள் வாக்குறுதியை மக்கள் வரவேற்கின்றனர். அதேபோல், இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரத்து ஐநூறு ரூபாய் என்பது மிக முக்கியமான ஒன்று. குடும்பங்களில் பெண்களுக்கு கைச்செலவுக்குப் பணம் கொடுக்க மாட்டார்கள். கணவர்களும் பணம் கொடுக்க மாட்டார்கள். குழந்தைகளுக்குத் தேவையானதை வாங்கிக் கொடுக்க முடியாமல் தாய்மார்கள் தவிக்கின்றனர். அவர்களின் கைச்செலவை ஈடுகட்டுவதற்கு இந்தப் பணம் உதவியாக இருக்கும்."

தமிழ்நாட்டின் கடன் சுமை ரூ. 5 கோடியைத் தாண்டிவிட்டது. `தமிழக மக்களின் தலையில் கடன் சுமை ஏறிக் கொண்டே செல்கிறது' என்கிறாரே கமல்ஹாசன்?

``அவர் ஆட்சிக்கு வருவோம் எனச் சொல்கிறார். அப்படி வந்தால் கடன் வாங்காமல் கமல்ஹாசன் ஆட்சி நடத்துவாரா? அ.தி.மு.க அரசு கடன் வாங்கி மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துகிறது. கடன் சுமையைப் பற்றி தி.மு.க பேசினாலும் சரி.. கமல் பேசினாலும் சரி. கடன் வாங்கித்தான் ஓர் அரசாங்கம் செயல்பட முடியும். அந்தப் பணம் கூடியிருக்கலாம் அல்லது குறைந்திருக்கலாம். தி.மு.க தலைவர் கருணாநிதி காலத்தில் கடன் வாங்கித்தான் ஆட்சியை நடத்தினார். இப்போது நாங்கள் அறிவித்துள்ள சலுகைகளைப் பார்த்தவுடன் அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனை ஏற்க முடியாமல் இவ்வாறெல்லாம் பேசுகிறார்கள்.

கமல்

கடன் வாங்காமல் எங்காவது ஆட்சி நடத்த முடியுமா? இவர்கள் வந்ததும் 5 லட்சம் கோடி கடனை உடனே அடைத்துவிடுவார்களா? நேர்மையான ஆட்சி, நிலையான ஆட்சி என்றெல்லாம் சொல்கிறார்களே, இவர்களது சொத்துகளை விற்று ஆட்சி நடத்தப் போகிறார்களா? அதெல்லாம் சாத்தியமாகாது. நாங்கள் கூறுவது எல்லாம் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய வாக்குறுதிகள். இந்த அரசின் மீது குறை சொல்வதற்கு எதுவுமில்லை. முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றதும் பல்வேறு குறைகளைக் கூறினார்கள். அவர் நிலைத்து நின்றுவிட்டார். இதனை குறை சொல்லும் விதமாக கடன் பிரச்னையைப் பற்றிப் பேசுகிறார்கள்."

`அ.தி.மு.க பலம் பெறுவதற்கு பா.ஜ.க உதவியது' என்கிறார் முதல்வர். `அ.தி.மு.க வெற்றி பெற்றாலும் அவர்கள் பா.ஜ.கவின் உறுப்பினர்கள்தான்' என ஸ்டாலின் சொல்கிறார். நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

``அ.தி.மு.க ஒன்றும் புதிய கட்சி கிடையாது. நாங்கள் நேற்று முளைத்து வந்தவர்கள் அல்ல. யாருடைய ஆதரவிலும் வளர்ந்த கட்சி அல்ல. மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர் தன்னந்தனியாக, `கருணாநிதி ஒரு தீயசக்தி' என்று சொல்லி சொல்லித்தான் இந்தக் கட்சியை வளர்த்தார். அவரது மறைவுக்குப் பிறகு அம்மாவும் தன்னந்தனியாக களத்தில் நின்று போராடினார். 45 ஆண்டுகால வரலாறு இந்தக் கட்சிக்கு இருக்கிறது. பலரும் உயிரைக் கொடுத்துதான் இந்தக் கட்சியை வளர்த்தார்கள். நாங்கள் இன்னொரு கட்சியை சார்ந்து அவர்களது உறுப்பினர்களாக ஏன் மாற வேண்டும்?

காங்கிரஸ் வெற்றி பெற்றால், அவர்களை தி.மு.க உறுப்பினர்கள் என்று சொல்லலாமா? ம.தி.மு.க வெற்றி பெற்றால் தி.மு.க உறுப்பினர்கள் என்று சொல்லலாமா? `கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு' என்பதை முதல்வரும் துணை முதல்வரும் பலமுறை தங்களுடைய விளக்கத்தைத் தெரிவித்துவிட்டனர். அ.தி.மு.கவுக்கு என தனியாக வலுவும் வாக்கு வங்கியும் இருக்கிறது. எங்களை ஏன் பா.ஜ.க உறுப்பினர்கள் எனக் கூற வேண்டும். அவர்கள் எங்களின் கூட்டணிக் கட்சி அவ்வளவுதான்."

நீங்கள் இவ்வாறு கூறினாலும்கூட, அ.தி.மு.க வேட்பாளர்களின் பிரசாரங்களில் பிரதமரின் படத்தைத் தவிர்க்க வேண்டிய காரணம் என்ன?

``அப்படியெல்லாம் எதுவும் இல்லை. எங்களின் பிரசாரத்தைப் பாருங்கள். பா.ஜ.கவின் கொடிதான் முன்னே சென்று கொண்டிருக்கிறது. அதற்குப் பிறகு பா.ம.க, புரட்சி பாரதம், த.மா.கா கொடி செல்கிறது. எங்களின் பிரசாரத்துக்கு பா.ஜ.கவினர் வரும்போது, `நீங்கள் வர வேண்டாம்' எனக் கூறவில்லையே. எங்களுடைய கழக தோழர்கள் எப்போதுமே ஆர்வத்தின் காரணமாக தங்களது கட்சியைக் காட்ட வேண்டும் என்பதற்காக அம்மாவின் படம், முதல்வர், துணை முதல்வர் ஆகியோரது படங்களைப் போட்டு அவரவர் விருப்பத்துக்குத் தக்கவாறு பெயரைப் போட்டுக் கொள்வது வழக்கம். அது அவர்களது ஆர்வம். கட்சி வெற்றி பெற வேண்டிய சூழலின் காரணமாகச் செயல்படுகிறார்கள். நாங்கள் யாரையும் தவிர்ப்பதில்லை. கூட்டணி என வைத்துக் கொண்டு எப்படித் தவிர்க்க முடியும்? இதெல்லாம் தேர்தலுக்காகச் செய்யப்படுகின்ற பொய்ப் பிரசாரங்களாகப் பார்க்கிறேன்."

தேர்தல் தேதி நெருங்கிக் கொண்டிருக்கிறது. `பல தொகுதிகளில் அ.தி.மு.கவின் அடிப்படை வாக்குகளை அ.ம.மு.க பிரிக்கலாம்' எனக் கூறப்படுகிறது. `அ.ம.மு.க பற்றிக் கேட்டாலே அடிப்பேன்' என்கிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. ஏன் இவ்வளவு ஆவேசம்?

``அ.ம.மு.க என்பது ஒரு தனிக்கட்சி. அந்தக் கட்சியைப் பற்றி நாங்கள் விமர்சனம் செய்ய விரும்பவில்லை. அந்தக் கட்சிக்கு என எந்த வரலாறும் இல்லை. அதற்கு கொள்கை என்ன, கோட்பாடு என்ன என்பதும் தெரியாது. அவர்களுக்கு வாக்கு வங்கி உள்ளதா என்பதை இந்தத் தேர்தல்தான் நிரூபிக்க வேண்டும். புதிதாக வந்த கட்சியைப் பற்றி விமர்சனம் செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை."

தினகரன்

`அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற கட்டமைப்பை ஏற்றுக் கொண்டு சசிகலா வந்தால் பரிசீலிப்போம்' என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியிருக்கிறார். இது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தாதா?

``இதில் எந்தவிதக் குழப்பங்களும் இல்லை. அவரிடம், `சேர்த்துக் கொள்வீர்களா?' எனக் கேள்வி கேட்கின்றனர். அதற்கு அவர் பதில் அளிக்கிறார். என்னிடமே உள்ளூர் பகுதிச் செயலாளர் ஒருவர், `இங்கு அ.ம.மு.க நிர்வாகி ஒருவர் இருக்கிறார். அவரைச் சேர்த்துக் கொள்ளலாமா?' எனக் கேட்டால், என்னால் உடனே பதில் அளிக்க முடியாது. `முதல்வர், துணை முதல்வரிடம் ஆலோசித்துவிட்டு சேர்த்துக் கொள்ளலாம்' என்பேன். இது வழக்கமான நடைமுறை. இதற்கு புதிய சாயம் பூச வேண்டிய அவசியம் இல்லை."

அப்படிப் பார்த்தால் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசும்போது, `அம்மா மரணத்தில் எந்தவித சந்தேகங்களும் இல்லை. சசிகலா மீது குறை சொல்வது நியாயமில்லை' என்கிறாரே? `100 சதவிகிதம் சசிகலாவை சேர்த்துக் கொள்ள வாய்ப்பில்லை' என முதல்வர் கூறிய பிறகு, இதுபோன்ற வார்த்தைகள் தொண்டர்கள் மத்தியில் விளைவுகளை ஏற்படுத்தாதா?

``தேர்தல் களத்தில் விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய வார்த்தை இது கிடையாது. அவர் அரசியலை விட்டு ஒதுங்குவதாகக் கூறிவிட்டார். மிகவும் நாகரிகமாக, `அக்கா பெயரைச் சொல்லி ஆட்சி நடந்தால் போதும்' என ஒதுங்கிவிட்டார். இதன்பிறகு அவரை விமர்சிப்பது அரசியல் நாகரிகமே அல்ல. அதைத்தான் அவர் கூறியிருக்கிறார்."

அப்படியானால், சசிகலா வந்தால் பரிசீலிப்போம் என்பதாக உங்கள் கருத்தைப் பார்க்கலாமா?

``அதெப்படி அப்படிப் பார்க்க முடியும். முதல்வர், துணை முதல்வரைக் கேட்டுவிட்டுத்தான் முடிவெடுக்க முடியும். எங்களுக்கும் தலைவர்கள் இருக்கிறார்கள். நாங்கள் அவர்களைத்தான் கேட்க முடியும்."

பா.ஜ.வின் தேர்தல் அறிக்கையில், `மதமாற்றத் தடைச் சட்டம், பசுவதை தடுப்புச் சட்டம் போன்றவற்றை அமல்படுத்துவோம்' எனக் கூறியுள்ளனர். `இந்த வாக்குறுதிகளை அ.தி.மு.க ஏற்றுக் கொள்கிறதா?' என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்புகிறாரே?

``தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்தபோது, எல்லாவற்றையுமே செய்து முடித்துவிட்டார்களா என்ன? அதற்கெல்லாம்தான் காலம் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறது. அவர் கேட்கக் கூடிய கேள்விகளுக்கான சரியான பதிலை, வரக் கூடிய பொதுத்தேர்தல் சொல்லும்."

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: