தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: 'விளை நிலங்களை சிதைக்கும் பொருளாதார வளர்ச்சி': சிமெண்ட் ஆலைகளால் விவசாயிகள் கண்ணீர் #TamilNaduOnWheels

- எழுதியவர், நடராஜன் சுந்தர்
- பதவி, பிபிசி தமிழுக்காக, அரியலூரில் இருந்து
(தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வெவ்வேறு துறையை சேர்ந்த நான்கு பெண் பைக்கர்கள் பிபிசி தமிழ் குழுவினரோடு சுமார் 1,300 கி.மீ., பயணித்து சாமானியர்களின் வாழ்வாதார பிரச்னைகளை பேசி, அந்த கதைகளை கேட்டு காணொளி வாயிலாக உங்களிடம் பகிர்ந்து கொள்கிறார்கள். அந்த வரிசையில், இந்தப் பயணம் குறித்து பிபிசி தமிழ் வெளியிடும் தொடர் கட்டுரைகளின் 4ஆம் பகுதி இது.)
"எங்கள் மாவட்டத்தில் பார்க்கும் இடமெல்லாம் சுண்ணாம்பு வளங்கள். தமிழகத்தின் வளமிகுந்த பூமியாக இருக்கிறது எங்கள் ஊர். ஆனால், இதுவே எங்களுக்கு மிகப்பெரிய சாபமாக அமைந்து விட்டது," என்கிறார் அரியலூரைச் சேர்ந்த கணேஷ்.
வளர்ச்சி என்ற பெயரில் கிராமங்கள் அழிக்கப்படுகிறதா? இதற்கான விடையைத் தெரிந்து கொள்ள பிபிசி தமிழ் முற்பட்டது.
தமிழகத்தில் மிகச் சிறிய மாவட்டங்களில் ஒன்றாகஅரியலூர் மாவட்டம் இருக்கிறது. சிறிய மாவட்டம் என்றாலே அதைக் கவனித்துக்கொள்வதும், நிர்வகிப்பதும் சுலபமாக இருக்கும். ஆனால் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளே உள்ள இந்த மாவட்டம் தமிழகத்திலேயே பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றாக இருக்கிறது.
வளங்கள் நிறைந்த பூமி என்று ஒருபக்கம் பெருமைப்படும் மக்கள் ஏன் அந்த பூமியையே சாபமாகப் பார்க்கின்றனர் என்று அவர்களிடமே கேட்டறிய பிபிசி தமிழ் குழு அரியலூருக்குப் பயணித்தது.

காவிரி டெல்டா பகுதியை ஒட்டிய பகுதியான இந்த மாவட்டத்தில் ஒரு புறம் பயிர், சிறுதானியம் என செழுமையான விவசாயத்தைக் காண முடிந்தது. மறுபக்கத்தில், தொழிற்சாலைகளையும் காண முடிந்தது.
ஊரை சுற்றிலும் பல சிமெண்ட் ஆலைகள். அதற்கு முக்கிய காரணம், அங்குள்ள மண்ணில் புதைந்துள்ள சுண்ணாம்புக் கற்கள். இந்த சுண்ணாம்பு வளத்தை நம்பியே இங்கு 6 அரசு மற்றும் தனியார் சிமெண்ட் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
புதுப்பாளையம் என்ற கிராமத்திற்கு சென்று அங்குள்ள மக்களை சந்தித்தோம். இந்த பகுதியில் மட்டும் இரண்டு சிமெண்ட் ஆலைகள் செயல்படுகின்றன.
"அதிகாரத்தில் இருந்த நாங்கள், இன்று அடிமைகளாக வாழ்கின்றோம்" என்று பேச ஆரம்பித்த விவசாயிகள், தொடர்ந்து பல விஷயங்களை பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டனர்.
சிமெண்ட் தொழிற்சாலைகளால் விவசாயிகள் வேதனை
30 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு வசிக்கும் திருவேங்கடம் அங்கு என்ன பிரச்னை இருக்கிறது என்பது குறித்து பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

"ஒரு காலத்தில் நெல் உள்பட அனைத்து விதமான பயிர்களும் விளையக்கூடிய அற்புதமான பூமியாக எங்கள் மண் இருந்தது. அப்படிப்பட்ட எங்கள் மண்ணில் தொழிற்சாலைகள் நிறுவப்பட்ட பிறகு அந்த நிலை தலைகீழாக மாறியது. இதோ… எனது நிலத்தைச் சுற்றி சுரங்கம் தோண்டி இருக்கிறார்கள். பயிர் எல்லாம் இறந்து போகிறது. விதிமுறைகளின்படி, விவசாய நிலத்திற்கும் சுரங்கம் தோண்டும் இடத்திற்கும் குறிப்பிட்ட மீட்டர் இடைவெளி விட வேண்டும்.
எங்களால் இந்த நிலத்தை விட்டு வெளியே செல்ல முடியாது. தலைமுறை தலைமுறையாக இந்த நிலத்தையும், விவசாயத்தையும் நம்பித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தமிழக அரசு சில பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது. அதைப்போன்று அரியலூர் மாவட்டத்தையும் அறிவித்தால்தான் விவசாயிகளால் வாழ முடியும்," என்று அரசிடம் கோரிக்கை வைக்கிறார் திருவேங்கடம்.
அரியலூர் மாவட்டத்தில் விவசாயம் முழுவதுமாக அழிந்து விடவில்லை. ஆனால் இருப்பதைப் பாதுகாக்கவில்லை என்றால், இந்த பகுதியில் விவசாயமும் அழிந்து, விவசாயம் காணாமல் போய்விடுவோம் என வேதனை மல்க அங்கிருந்த விவசாயிகள் தெரிவித்தனர்.

"இங்கே ஒவ்வொரு சுரங்கத்திலிருந்து கனிமங்கள் வெளியே எடுத்துச் செல்கின்றனரே தவிர, அந்த சுரங்கத்தை மீண்டும் மூடி சமப்படுத்தாமல் இருக்கின்றனர். இங்கே இவர்கள் சட்ட விதிமுறைகளைப் பின்பற்றுவதாகக் கூறுகின்றனர். ஆனால், அரசு அதிகாரிகளிடம், ஒரு சில பகுதியில் மட்டும் அவர்கள் பின்பற்றும் விதிமுறைகளை மொத்த சுரங்கத்திற்கும் பின்பற்றுவது போல காட்டி கண் துடைப்பு செய்கின்றனர்," என திருவேங்கடம் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, புதுப்பாளையம் கிராமத்திற்குள் சென்ற போது, கிராம மக்கள் பிரச்னைகளுக்குத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் மென்பொறியாளரும், சமூக செயல்பாட்டாளருமான அருள்மொழி வர்மன் என்பவரைச் சந்தித்தோம்.
"முதன் முதலில் சுரங்கம் வருவதற்கு முன்பு அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள மக்களுக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுப்பதாகவும், சுத்தமான குடிநீர், மருத்துவ வசதி, பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளுக்கு ஏற்பாடு செய்து கொடுக்கிறோம் என பொய்யான வாக்குறுதிகளை சிமெண்ட் நிறுவனங்கள் கொடுத்தன. அதை அப்போதிருந்த படிப்பறிவில்லாத பாமர மக்கள் ஆசை வார்த்தைகளைக் கேட்டு அவர்களது நிலங்களை மிகக் குறைந்த விலைக்கு விற்றனர்.
சொந்தமாக நிலங்களை வைத்து விவசாயம் செய்து வந்த முதலாளிகள் அந்த நிலங்களை விற்று தற்போது வயிற்றுப் பிழைப்பிற்காக வாழ வேறு வழியின்றி இந்த சிமெண்ட் தொழிற்சாலைகளில் கிடைக்கும் வேலைகளுக்குச் சென்று வருகின்றனர். இதில் வேலை செய்யும் அனைவருமே வாழ்வாதாரத்திற்காக இந்த வேலைகளைச் செய்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதில் சில மக்கள் இந்த ஊரே வேண்டாம் என்று கூறி, வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்குப் புலம்பெயர்ந்து சென்றுவிட்டனர்," என்றார் அவர்.

தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் நச்சு கலந்த புகையானது விவசாய நிலத்தில் படிகிறது, அதைத்தான் நாங்களும் சுவாசிக்கிறோம். இதனால் இங்கே பலருக்கு நுரையீரல் தொற்று, மூச்சு கோளாறு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். குறிப்பாக கடந்த ஒரு மாதத்தில் தங்கள் கிராமம் மற்றும் அருகில் உள்ள கிராமம் உட்பட ஐந்து பேர் நுரையீரல், சிறுநீரக தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக கூறுகிறார் அருள்மொழி வர்மன்.
"வெட்டிய சுரங்கத்தை மூட வேண்டும் என்பது விதிமுறை. சுரங்கத்திற்கான கால அவகாசம் முடிந்த பிறகு, அதை முழுவதுமாக மூடிய பிறகு அதில் மரங்கள் நட்டு, பசுமை பகுதியாக மாற்றி அங்கு காப்புக் காடுகள் போல உருவாக்க வேண்டும். ஆனால் அதை மூடாமல் இருக்கின்றனர். மேலும் உபயோகமற்ற சீமைக் கருவேலமரங்கள்தான் அங்கு வளர்ந்து வருகின்றன."
"இதுபோன்று எங்கள் நிலங்களை சிறிது சிறிதாக அழிப்பதற்கு பதிலாக, எங்களை மொத்தமாக காலி செய்துவிட்டு, இந்த மாவட்டத்தை சிமெண்ட் உற்பத்தி செய்ய மட்டுமே பயன்படுத்தி இருக்கலாம். இந்த அரியலூர் மனிதர்கள் வாழத் தகுதியற்ற மாவட்டம் என அரசாங்கம் அறிவித்துவிடலாம்" என்று அருள்மொழி வர்மன் தெரிவித்தார்.
"அரியலூர் மாவட்டம் வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகக் கூறினாலும், உயிர் வாழ்வதற்கே வழி இல்லாத இந்த இடத்தில் அரசு எவ்வளவு நலத் திட்டங்கள் கொடுத்தாலும் எந்த பயனும் இருக்காது," என்கிறார் அரியலூரைச் சேர்த்த கார்த்திக் குமார்.

இந்த சிமெண்ட் தொழிற்சாலைகளின் சட்ட மீறல்கள் அதிக அளவில் இருக்கின்றன. எங்களால் இவர்களை எதிர்த்து ஜெயிக்க முடியுமா என்பது தெரியவில்லை, ஆனால் இவர்களை எதிர்த்துக் குறைந்தபட்சம் கேள்வியையாவது கேட்டு இவர்களை மேலும் விதி மீறல்களில் ஈடுபடாமல் பார்த்துக் கொள்வதே எங்களது செயல்பாடாக இருக்கிறது என்கிறார் கார்த்திக் குமார்.
சுற்றுச்சூழல் நிபுணர் சொல்வது என்ன?
விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கூறிய பாதிப்பின் தன்மை குறித்து அறிய அரியலூரைச் சேர்த்த சுற்றுச்சூழல் பொறியாளர் இளவரசனை சந்தித்தோம்.
அப்போது விளக்கமளித்த அவர், "இவர்களுக்கு அனுமதி கொடுக்கும்போதே, ஆறு, வாரி, ஏரி, குளம், குட்டை, அரசு புறம்போக்கு நிலங்கள், கோயில் உள்ளிட்டவை இருந்தால் 50 மீட்டர் பாதுகாப்பு இடைவெளி விட வேண்டும். அதுவே வயல்வெளிகள் இருந்தால் 10 மீட்டர் இடைவெளி விடவேண்டும். இது விதிமுறை. ஆனால், இங்கே உள்ள சுரங்களுக்கும், விவசாய நிலத்திற்கும் இடையே தேவையான பாதுகாப்பு இடைவெளி இல்லை."
"ஒவ்வொரு சுரங்கத்தில் ஆண்டிற்கு இரண்டு முறை காற்று கண்காணிப்பு (Air monitoring) செய்யப்பட வேண்டும். ஆனால், இதை இங்குள்ள தொழிற்சாலைகள் முறையாகச் செய்வதில்லை. சுரங்கத்தில் சுண்ணாம்புக் கற்களை வெட்டி எடுக்கும்போது சல்பர்-டையாக்ஸைடு அதிக அளவில் வெளியேறும். அந்த சிலிகோசிஸ் தூசியைச் சுவாசிக்கும்போது நுரையீரல் சார்ந்த புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. சிலிக்கோசிஸ் தூசி அதிகபட்சம் 25 மைக்ரான் போகலாம். ஆனால் 25 மைக்ரானுக்கு அதிகமான தூசி வெளியானால், அந்தக் காற்றை சுவாசிப்பவர்களுக்கு கண்டிப்பாக நுரையீரல் புற்றுநோய், கண் எரிச்சல் ஏற்படும். "

"தூசியை கட்டுப்படுத்த தண்ணீர் தெளிப்பதாகத் தொழிற்சாலை சொல்கிறது. ஆனால், அங்குள்ள சுரங்கத்தில் தண்ணீர் தெளிப்பான் பயன்படுத்துவது போலத் தெரியவில்லை. இரண்டு, மூன்று முறை லாரிகள் சென்றாலே தண்ணீர் வற்றிவிடும். பின்னர் மீண்டும் அந்த தூசி பறக்கத் தொடங்கிவிடும்" என சுற்றுச்சூழல் பொறியாளர் இளவரசன் தெரிவிக்கிறார்.
தொழிற்சாலைகள் விதிமுறைகளை பின்பற்றவில்லையா?
மக்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து அரசு மற்றும் சிமெண்ட் தொழிற்சாலைகள் இரு தரப்பினரிடமும் விளக்கம் கேட்க பிபிசி தமிழ் குழு முயன்றது.
அதில் முதல் கட்டமாகச் சுரங்க பணிகளைக் கண்காணிக்கும் அரியலூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறையை தொடர்பு கொண்டோம்.
அதற்கு பதிலளித்த புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநர் சரவணன், "தனியார் தொழிற்சாலைகள், பட்டா நிலத்திலிருந்து அரசு குத்தகைக்கு விட்ட இடத்திற்கு இடையேயான பாதுகாப்பு தூரம் முறையாகப் பின்பற்றப்படுகிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை," என்று தெரிவித்தார்.
இந்த பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக இந்திய சுரங்க பணியகம் மற்றும் சுரங்க பாதுகாப்பு இயக்குநரகம் இருவரும் மாதத்திற்கு ஒருமுறை தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாக கூறினார் அவர்.

"அரியலூர் மாவட்டத்தில் பெரும்பாலாக தரைப் பகுதிகளிலேயே சுண்ணாம்புக் கற்கள் கிடைக்கிறது. ஆகவே அதுபோன்ற பகுதிகளில் மணலைத் தோண்ட வேண்டிய அவசியமில்லை, நேரடியாகத் தரை மட்டத்தில் உள்ள சுண்ணாம்புக் கற்களை எடுக்கின்றனர். சுரங்கங்களில் சில பகுதிகள் மணல் மூடாமல் இருப்பதற்குக் காரணம், சுரங்க இடங்களில் தரை மட்டத்திலேயே சுண்ணாம்புக் கற்கள் கிடைத்து விடுகிறது என்பதுதான்.
சுரங்கம் தோண்டிய பள்ளத்தை மீண்டும் மூடும் பொழுது அதற்கு தேவையான அளவு மண் அங்கே இருப்பதில்லை. இருந்தாலும் இவர்கள் சுரங்கத்தில் சுண்ணாம்பு கனிமம் தீரத் தீர அந்த பகுதிகளைத் தொழிற்சாலைகள் மூடி வருகின்றனர். இதில் சில இடங்களில் சுரங்க பணிக்குக் குத்தகைக்குக் கொடுத்த பகுதிகளில் கால அவகாசம் முடிவு பெறவில்லை. அதுபோன்ற பகுதிகளில் அவர்களுக்கான கால நேரம் முடிந்து பிறகு உறுதியாக மூடப்படும்," எனத் தெரிவித்துள்ளார்.
இந்த சுரங்க பணிகளால் பொது மக்களுக்குப் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு இருந்தால் அரசு சார்பில் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரியலூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை தெரிவித்துள்ளது.
சிமெண்ட் தொழிற்சாலை தரப்பில் கூறுவது என்ன?
அரசு தரப்பு விளக்கத்தை தொடர்ந்து அங்குள்ள இரண்டு தனியார் சிமெண்ட் தொழிற்சாலைகளை தொடர்பு கொள்ள முயன்றோம். அவர்களிடம் மக்கள் வெளிப்படுத்திய குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அவர்கள் கவனத்திற்குக் கொண்டு சென்றோம். அதில் ஒரு தனியார் தொழிற்சாலை சார்பில் மக்கள் தொடர்பு அதிகாரி ஆனந்த் என்பவர் மட்டும் எங்களுக்குப் பதிலளித்தார்.
"அரசு வகுத்துள்ள ஆணை மற்றும் வழிகாட்டுதலின்படி முழுவதையும் முறையாகப் பின்பற்றி வருகிறோம். மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், சுரங்கத் துறை, பொதுப்பணித் துறை என அனைத்து அரசு துறையும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால், அவர்கள் சேர்ந்து வகுக்கும் விதிமுறைகளை நாங்கள் நடைமுறைப்படுத்துகிறோம். இப்போது இருக்கின்ற தொழில்நுட்ப வளர்ச்சியில், யாரும் சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்பட முடியாது. ஒவ்வோர் அசைவையும் ஜிபிஎஸ் மூலமாக கண்காணித்து வருகின்றனர். நாங்கள் எந்த சட்டவிரோத செயல்களிலும் ஈடுபடவில்லை," என்றார் அவர்.
"சுரங்க பணிக்காக உருவாக்கப்பட்ட குழிகள் முறையாக மூடப்படுகின்றன. அரசு வழிகாட்டுதல்களின்படி சில குழிகளின் குறிப்பிட்ட பகுதிகளில் நீர்த்தேக்கங்கள் அமைக்கப்படுகின்றன. அதில் தோட்டங்கள், தடுப்பு வேலிகள் அமைக்கப்படுகின்றன. குழிகளை மூடிய பிறகு, சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகளால் ஆய்வுகள் மேற்கொண்டு அதற்கான சான்று அளிக்கின்றனர். சுரங்க குழிகளிலிருந்து அரசாங்க உத்தரவுப்படி விவசாய நிலங்கள், மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தேவையான பாதுகாப்பு இடைவெளி சரியான முறையில் பின்பற்றப்பட்டு வருகிறது," என்று பதிலளித்தனர்.
வெளியேறும் தூசி மற்றும் சுற்றுப்புற மாசு அளவைக் கட்டுப்படுத்த ஆலை முழுவதும் 42% பச்சை மண்டலத்தால் மூடப்பட்டுள்ளது. தூசி கட்டுப்படுத்த நீர் தெளிப்பான்கள் நிறுவப்பட்டுள்ளன. சுரங்க, சுற்றுச்சூழல் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி நடப்பதாகத் தனியார் தொழிற்சாலை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு மற்றும் சிமெண்ட் ஆலைகள் தரப்பில் விளக்கம் தரப்பட்டாலும், சுற்றுச்சூழல் மற்றும் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டிருப்பதை பிபிசி குழுவால் கண்கூடாகப் பார்க்க முடிந்தது.
பிற செய்திகள்:
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: சிக்கிய ரூ. 265 கோடி - சிக்காமல் தப்பியது யார்?
- கன்னியாஸ்திரிகளை ரயிலில் இருந்து இறக்கிய போலீஸ் - என்ன நடந்தது?
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: நீங்கள் அறிய வேண்டிய முக்கிய தகவல்கள்
- கரூரில் ரயில் நிலையத்தின் பெயரை சமஸ்கிருதம் கலந்து எழுத முயற்சி - எதிர்ப்புகளால் மாற்றிய நிர்வாகம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












