தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: “அப்பா எங்கம்மா… என்ன பார்க்க வரமாட்டாரா?” - கணவனை இழந்த பெண்களின் குடும்பங்கள் #TamilNaduOnWheels

தஞ்சியம்மா
    • எழுதியவர், அபர்ணா ராமமூர்த்தி
    • பதவி, பிபிசி தமிழ்

(தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வெவ்வேறு துறையை சேர்ந்த நான்கு பெண் பைக்கர்கள் பிபிசி தமிழ் குழுவினரோடு சுமார் 1,300 கி.மீ., பயணித்து சாமானியர்களின் வாழ்வாதார பிரச்னைகளை பேசி, அந்த கதைகளை கேட்டு காணொளி வாயிலாக உங்களிடம் பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள். அந்த வரிசையில், இந்த பயணம் குறித்து பிபிசி தமிழ் வெளியிடும் கட்டுரையின் 2ஆம் பகுதி இது.)

இடம்: முருகப்பாடி கிராமம், சந்தவாசல், திருவண்ணாமலை

"எனக்கு 19 வயசுல கல்யாணம் ஆச்சு. 20 வயசுல என் கணவர் இறந்துட்டாரு. எனக்கு இப்போ 5 வயசுல குழந்தை இருக்கு" என்று பச்சையம்மாள் கூறும்போது, அவரது கண்கள் கண்ணீரால் நிறைந்திருக்கிறது.

பச்சையம்மாள் போல அந்த கிராமத்தில் வேறு சிலரும் இளம் வயதிலேயே தங்களது கணவரை இழந்திருக்கிறார்கள். அதுவும் ஒரே சம்பவத்தில் அவர்கள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுகாவில் உள்ள முருகப்பாடி கிராமத்தில் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு கூட்டமாக சில ஆண்கள் பிழைப்பு தேடி வெளியூர் செல்ல, மீண்டும் அவர்கள் உயிருடன் ஊர் திரும்பவில்லை.

செம்மர கடத்தல் விவகாரம்

2015ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி ஆந்திர மாநிலத்தின் சேஷாச்சலம் வனப்பகுதியில் ஆந்திர காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் தமிழகத்தைச் சேர்ந்த 20 பேர் கொல்லப்பட்டனர். இது அப்போது பெரும் பரபரப்பையும் விமர்சனத்தையும் எழுப்பியது.

அவர்கள் அனைவரும் செம்மரக்கடத்தல்காரர்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரிலேயே இந்த சம்பவம் நடந்தது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்பங்களைதான் பிபிசி தமிழ் குழு சந்தித்தது.

"என் கணவர் கட்டட வேலைக்குதான் சென்றார். ஆனால், அவரை செம்மரக்கடத்தல்காரர் என்று கூறி சுட்டுவிட்டனர்" என கூறுகிறார் 38 வயதாகும் செல்வி.

சம்பவம் நடந்து 5 ஆண்டுகள் ஆன பிறகும், இவர்கள் அதிலிருந்து மீளாமல் இருப்பது அவர்களது கண்ணீரில் வெளிபட்டது.

தந்தையின்றி தவிக்கும் குழந்தைகள்

முருகப்பாடி கிராமத்தில் மட்டும் ஐந்து பெண்களுக்கும் மேற்பட்டோர் இந்த செம்மரக் கடத்தல் விவகாரத்தில் தங்கள் வீட்டில் ஒருவரை இழந்திருக்கிறார்கள்.

முதலில் இந்த பெண்கள், எங்களிடம் பேச தயங்க, பிறகு சில மணி நேரங்கள் கழித்தே பேச ஒப்புக் கொண்டார்கள்.

செம்மரக்கடத்தல் விவகாரத்தில் கணவரை இழந்து பாதிக்கப்பட்ட செல்வி (38), தஞ்சியம்மாள் (26), பச்சையம்மாள் (25), சித்ரா (47) ஆகியோரை சந்தித்தோம்.

உள்ளூரில் வேலை இல்லை… வறட்சியால் விவசாயம் இல்லை என்ற காரணத்திற்காக வேலை தேடி வெளியூர் சென்ற ஆண்கள் பலரும், மீண்டும் வீடு திரும்பவில்லை.

தஞ்சியம்மா

"அப்போது மழை இல்லை. விவசாயம் இல்லை. உள்ளூரில் வேலை இல்லை. அதனால் வெளியூருக்கு கட்டட வேலைக்கு செல்வதாக என் கணவர் கூறிவிட்டு சென்றார். ஆனால், திரும்பி வந்தது அவரது அடையாளம் தெரியாத உடல்தான்" என்கிறார் தன் 19 வயதில் கணவரை இழந்த பச்சையம்மாள். தற்போது இவருக்கு 6 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது.

"எனக்கு ஒரு பொண்ணு, ஒரு பையன். அப்பா இல்லாம ரொம்ப கஷ்டப்படுறாங்க. திடீர்னு இரவு எழுந்து அப்பா எங்கனு என் பொண்ணு கேக்கறா. என்ன பதில் சொல்றதுனு தெரில. நான் திட்டினா, இரு நான் அப்பா கிட்ட சொல்றேனு சொல்றா. நான் சாதம் கொடுத்தா, இரும்மா நான் அப்பாக்கு ஊட்டிட்டு வர்ரேனு சொல்றா. பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு" என்கிறார் 26 வயதாகும் தஞ்சியம்மாள்.

இப்படி அங்கு ஒவ்வொருவருக்கும் ஒரு சோகக் கதை இருக்கிறது.

செம்மர கடத்தலில் ஈடுபட்டதாக இவர்கள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டாலும், இந்த பெண்கள் அனைவரும் அதனை மறுக்கின்றனர்.

உள்ளூரில் வேலைவாய்ப்பு இல்லையா?

அதிகம் காசு சம்பாதிக்கலாம் என்று தெரிந்தே செம்மரம் கடத்தப் போகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் ஒரு பக்கம் நிலவுகிறது. குறிப்பாக, ஜவ்வாது மலைவாழ் மக்கள்தான் இதில் அதிகம் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு உள்ளது. இது குறித்து, ஜவ்வாது ஒன்றியத்தின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாமிநாதனிடம் பேசினோம்.

பிபிசி பைக்கர் குழு

அதற்கு பதிலளித்த அவர், "ஒரு சிலர் தெரியாமல் போய் இதில் சிக்கிக் கொள்கிறார்கள். உயிரை விடுகிறார்கள். ஆனால் மறுபக்கம் செம்மரம் கடத்துவது சட்டவிரோதமானது என்று தெரிந்தும், மக்கள் அதற்காக செல்வதற்கு காரணம், அவர்களது குடும்ப சூழ்நிலை. இங்கு மக்களிடம் நிலம் இல்லை. பெரும்பாலும் இவர்கள் நிலமற்ற விவசாயக் கூலிகளாகவே இருக்கிறார்கள். விவசாயமும் எப்போதும் கைக்கொடுப்பதில்லை. வயிற்றுப் பிழைப்பிற்கு வழி தெரியாமல் சிலர் இதற்கு செல்கிறார்கள். தனது மகனை படிக்க வைக்க வேண்டும். மகளுக்கு திருமணம் செய்ய வேண்டும். இதற்கெல்லாம் பணம் வேண்டும் என்ற நிர்பந்தத்தில் வேறு வழியில்லாமல் இதை செய்கிறார்கள்.

திருவண்ணாமலை

ஆனால், செம்மரம் வெட்டப் போகும் பாதி பேர் தான் எதற்கு போகிறோம் என்று தெரியாமலேயே இதில் மாட்டிக் கொள்கிறார்கள். இந்த வேலைக்கு ஆள் அழைத்து செல்ல குறைந்தது 6-7 இடைத்தரகர்கள் இருப்பார்கள். அந்த இடைத்தரகர்களுக்குகூட, இதற்காகதான் ஆட்களை கூட்டிச் செல்கிறோம் என்று தெரியாது.

உள்ளூரில் வேலைவாய்ப்பு இருந்தால் ஏன் இந்த நிலைமை வரப்போகிறது?" என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

வேலைவாய்ப்பின்மை

"திருவண்ணாமலை மாவட்டத்தில் தொழிற்சாலைகள் இல்லை. இந்த மாவட்ட மக்களுக்கு பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டும் அது வெறும் காகிதத்தில்தான் இருக்கிறதே தவிற, நடைமுறைப்படுத்தப்படவில்லை என்கிறார் People's Craft Training Centre என்ற லாபமற்ற அமைப்பின் சேவியர் மரியதாஸ்.

எது எப்படி இருந்தாலும், இந்த மாவட்டமும் அதன் பிரச்சனைகளும் தேர்தல் முக்கியத்துவம் பெற்றவை இல்லை என்பதால், இவர்களின் நிலைக்கு விடிவுகாலம் பிறக்குமா என்பது கேள்விக்குரியதாக இருக்கிறது என்று அவர் தெரிவிக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: