ரிலையன்ஸ் முகேஷ் அம்பானிக்கு வெடிகுண்டு மிரட்டல் வழக்கு: மஹாராஷ்டிராவில் புயலை கிளப்பும் ஐ.பி.எஸ் அதிகாரி பரம்பீர் சிங் கடிதம்

பரம்பீர் சிங்
    • எழுதியவர், பிபிசி மராத்தி குழு
    • பதவி, .

இப்போது மகாராஷ்டிர மாநிலத்தில் ஊர்க் காவல் படையின் தலைமைப் பொறுப்புக்கு மாற்றப்பட்டிருக்கும் மும்பையின் முன்னாள் காவல் ஆணையர் பரம்பீர் சிங் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு அனுப்பியுள்ள கடிதம், மும்பையில் அதிர்ச்சி அலைகளை எழுப்பியுள்ளது.

அந்தக் கடிதத்தில் பரம்பீர் சிங் கையெழுத்திடவில்லை என்பது கவனிக்கத்தக்கது. அதன் தலைப்பிலும் கீழேயும் அவரது பெயர் அச்சிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கைச் சூழ்ந்துள்ள முக்கியத்துவத்தை மனதில் கொண்டு, இதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த பிபிசி பரம்பீர் சிங்கை அணுகியது.

பரம்பீர் சிங்கை மும்பை காவல்துறை ஆணையர் பதவியிலிருந்து ஊர்க் காவல் படைத் தலைவராக மாற்றியது குறித்து உள்ளூர் ஊடகம் ஒன்றுக்கு, மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் அளித்த பேட்டியில் வெளியிட்ட கருத்துகளுக்குப் பதிலளிக்கும் வகையில் இந்தக் கடிதம் உள்ளது.

பிப்ரவரி 25ஆம் தேதி, தெற்கு மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் வீட்டருகே ஒரு ஸ்கார்பியோ காரில் வெடிபொருள் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்த வழக்கை மும்பை காவல்துறைவிசாரித்தபோது, தாமும் தமது அலுவலகமும் நடத்திய ஆரம்பகட்ட விசாரணையில் குறைபாடுகள் இருந்தன என்று உள்ளூர் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் உள்துறை அமைச்சர் கூறினார் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அக்கடிதத்தில், தமது தலைமையிலான மும்பை காவல்துறை, மகாராஷ்டிர பயங்கரவாத தடுப்புப் படை மற்றும் தேசிய புலனாய்வு அமைப்புக்கு நியாயமான விசாரணை நடத்தத் தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் அளித்ததாகவும் அவர் கூறுகிறார்.

ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் குற்றம் சாட்டியதற்குப் பதிலளிக்கும் விதத்தில் இக்கடிதம் உள்ளது.

உள்துறை அமைச்சரைப் பற்றிப் பல தீவிரமான சந்தேகங்களை எழுப்பும் மேலும் பல பின்னணிகளை இந்தக் கடிதம் வெளிப்படுத்துகிறது.

உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்

பட மூலாதாரம், Anil Deshmukh facebook

படக்குறிப்பு, மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்

அனில் தேஷ்முக் தமது ட்வீட்டுகள் மூலம் பரம்பீர் சிங்கின் கடிதத்தில் கூறப்பட்டுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார். ஆனால் இந்த நிகழ்வுகள், மாநிலத்தில் அரசாங்கத்தை நடத்தும் மூன்று கட்சி கூட்டணிக்கு மற்றொரு பின்னடைவாகக் கருதப்படுகிறது.

கடிதத்தில் பரம்பீர் சிங் என்ன கூறியுள்ளார்?

தனது எட்டு பக்கக் கடிதத்தில் பரம்பீர் சிங் பல சந்திப்புகள் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அம்பானி வீட்டுக்கு வெளியே வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டது குறித்து, மாநில முதல்வருடனான தமது முதல் சந்திப்பின் போது, "உள் துறை அமைச்சரின் பல தவறான செயல்கள் மற்றும் முறைகேடுகள்" குறித்து தாம் முதலமைச்சரிடம் சுட்டிக்காட்டியதாகக் கூறுகிறார்.

இது குறித்து, மாநிலத்தின் துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜித் பவாரிடமும் விளக்கமாகக் கூறியுள்ளதாகவும் குறிப்பிடுகிறார்.

உள்துறை அமைச்சருக்கு 'நிதி சேகரிப்பதில் உதவி' என்று கூறி, உள்துறை அமைச்சர் பல முறை சச்சின் வாஸேவைத் தனது இல்லத்திற்கு அழைத்திருக்கிறார் என்றும் மாதத்திற்கு நூறு கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சச்சின் வாஸேவிடம் கூறியுள்ளார் என்றும் அந்தக் கடிதம் குறிப்பிடுகிறது.

ஸ்கார்பியோ காரின் உரிமையாளர் மன்சுக் ஹிரான் என்பவர் மர்மமாக இறந்து கிடந்தார்

பட மூலாதாரம், Mumbai police

படக்குறிப்பு, ஸ்கார்பியோ காரின் உரிமையாளர் மன்சுக் ஹிரான் என்பவர் மர்மமாக இறந்து கிடந்தார்

(முகேஷ் அம்பானி வீட்டின் அருகே வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனம் நிறுத்தப்பட்டத்தில் தொடர்பு இருப்பதாகக் கூறி காவல் அதிகாரி சச்சின் வாஸே தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த ஸ்கார்பியோ காரின் உரிமையாளர் மன்சுக் ஹிரான் என்பவர் மர்மமாக இறந்து கிடந்தது தொடர்பாகவும் சச்சின் வாஸே விசாரிக்கப்பட்டு வருகிறார். தமது கணவர் மன்சுக் ஹிரானை சச்சின் வாஸே கொன்றதாக அவரது மனைவி புகார் அளித்துள்ளார். சச்சின் வாஸே கடந்த நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை அந்த ஸ்கார்பியோ காரை தமது கணவரிடம் இருந்து வாங்கியிருந்தார் என்றும் அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.)

மேற்கூறிய நூறு கோடி ரூபாய் இலக்கை அடைவதற்கு, மும்பையில் சுமார் 1,750 பார்கள், உணவகங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் உள்ளன என்றும், இவர்கள் தலா 2-3 லட்சம் வசூலித்தால், மாதந்தோறும் ரூ. 40-50 கோடி ரூபாய் அடைய முடியும் என்றும் மீதமுள்ள தொகையை வேறு விதமாகத் திரட்டலாம் என்றும் உள்துறை அமைச்சர் கூறியதாக அக்கடிதம் தெரிவிக்கிறது.

சச்சின் வாஸே, தம்மைத் தமது அலுவலகத்தில் சந்தித்து இதைத் தெரிவித்ததாகவும், இதைக் கேட்டு தாம் அதிர்ச்சியடைந்ததாகவும் பரம்பீர் சிங்க் குறிப்பிடுகிறார்.

மும்பையிலுள்ள 1750 பார்கள், உணவு விடுதிகள், பிற நிறுவனங்கள் மூலம், 40 முதல் 50 கோடி வரை திரட்டும் இலக்கு குறித்து, உள்துறை அமைச்சர் அவரது உதவியாளர் மூலம் தெரிவிக்கும் இன்னொரு சந்திப்பும் இரண்டு மூத்த காவல் துறை அதிகாரிகளுடன் நடந்ததாகவும் இந்தக் கடிதம் குறிப்பிடுகிறது.

காவல் துறை விசாரணைகளில் உள்துறை அமைச்சரின் தலையீடுகள் குறித்தும் இந்தக் கடிதம் விவரிக்கிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் மோஹன் டெல்கர் தெற்கு மும்பையில் ஒரு விடுதியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதையும் பிறகு ஒரு தற்கொலைக் கடிதம் கண்டெடுக்கப்பட்டதையும் நினைவு படுத்தி, இதை உள்துறை அமைச்சரின் தலையீட்டுக்கு உதாரணமாக அவர் அக்கடிதத்தில் குறிப்பிடுகிறார்.

கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வுகளையும் வெளியாகும் விவரங்களையும் தாம் சுட்டிக்காட்டும் விவரங்களையும் ஒன்று சேர்த்துப் பார்த்தால், குற்றவாளிகளைத் தப்புவிக்க, தாம் ஒரு பலிகடா ஆக்கப்பட்டது தெளிவாகத் தெரிவதாக அக்கடிதம் முடிகிறது.

இது வரை நடந்தது என்ன?

அம்பானிக்கு வெடிகுண்டு மிரட்டல் வழக்கு: புயலை கிளப்பும் ஐ.பி.எஸ் அதிகாரியின் கடிதம்

பட மூலாதாரம், Mumbai police

படக்குறிப்பு, பிப்ரவரி 25ஆம் தேதி ஜெலிக்னைட் குச்சிகளுடன் அம்பானியின் 'ஆன்டிலியா' இல்லம் அருகே இருந்த வாகனம்.

மார்ச் 13 அன்று, மன்சுக் ஹிரேன் மரணம் தொடர்பாகவும், அம்பானி வீட்டருகே வெடி பொருள் கண்டெடுப்பு விவகாரம் தொடர்பாகவும் மும்பை காவல் துறையின் 'என்கௌன்டர் ஸ்பெஷலிஸ்டான' சச்சின் வாஸேவை தேசிய புலனாய்வு முகமை கைது செய்தது.

வாஸே கைதுக்குப் பிறகு, மும்பை காவல் ஆணையர் பதவியிலிருந்து பரம்பீர் சிங், பணியிடம் மாற்றப்பட்டு ஊர்க்காவல் படைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, உள்ளூர்ச் செய்தி ஊடகங்களுக்குப் பேட்டியளித்த உள்துறை அமைச்சர், விசாரணையில் தொய்வுகள் பல இருந்ததாகக் குற்றம் சாட்டினார்.

அந்தப் பேட்டிகளுக்குப் பதிலளிக்கும் விதமாக சிங், இப்போது முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் என்ன சொல்கிறார்?

"மன்சுக் ஹிரேனின் மரணத்தில் சச்சின் வாஸேவின் பங்களிப்பு குறித்து தெளிவு ஏற்பட்டு வருவதால், தன்னை நோக்கி வரும் ஆபத்துகளிலிருந்து தப்ப, பரம்பீர் சிங் இப்படிக் குற்றம் சாட்டுவதாக" மகாராஷ்டிராவின் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

இத்தனை நாட்களாக பரம்பீர் சிங் அமைதி காத்தது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மாநில அரசின் மீதான தாக்கம் என்ன?

இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரர் முகேஷ் அம்பானியின் இல்லம்

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரர் முகேஷ் அம்பானியின் இல்லம்

இது உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் குறித்த கடுமையான குற்றச்சாட்டுகள் என்றும் இதன் விளைவுகள் அரசியல் அளவில் மிகப்பெரியதாக இருக்கும் என்றும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

அனில் தேஷ்முக், மூத்த அரசியல்வாதியான சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். சிவசேனா, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இக்கட்சி கூட்டணியாக ஆட்சி அமைத்துள்ளது.

இதற்கிடையில், எதிர் கட்சித் தலைவர்கள் ஏற்கெனவே தேஷ்முக் பதவி விலக வேண்டும் என்று கோரியுள்ளனர்.

இக்கடிதம் வெளியானதும், பாஜக-வைச் சேர்ந்த கிரித் சோமையா ஓர் அறிக்கையை காணொளி மூலமாக வெளியிட்டுள்ளார்.

"மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கை சச்சின் வாஸே பலமுறை சந்தித்துள்ளார் என்றும் 'பப்' போன்ற நிறுவனங்களிடமிருந்து பணம் பறித்துக் கொண்டிருந்தார் என்றும் மும்பை முன்னாள் காவல்துறை ஆணையர் பரம்பீர்சிங் குற்றம் சாட்டுகிறார். அனில் தேஷ்முக் அமைச்சரவையிலிருந்து உடனடியாக நீக்கப் பட வேண்டும் என்பது பாஜகவின் கோரிக்கை," என்று அவர் கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: