முகேஷ் அம்பானி வீட்டுக்கு அருகே வெடிகுண்டு கார், பிறகு ஒரு கொலை: விடையில்லாத மர்மங்கள்

பட மூலாதாரம், EPA
- எழுதியவர், மயங்க் பகவத் & அம்ருதா துருவே
- பதவி, பிபிசி மராத்தி, மும்பை.
பிப்ரவரி 25 அன்று காலை மும்பையின் மையமான பகுதியில் ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரும் தொழிலதிபருமான முகேஷ் அம்பானி வீட்டுக்கு அருகே வெடிபொருள்கள் ஏற்றிய கார் ஒன்று பிடிபட்டது.
அடுத்த சில நாள்களில், அந்த வண்டியின் உரிமையாளர் என்று சொல்லப்படுகிறவரின் சடலம், மும்பை கடற்கரையில் கரை ஒதுங்கியது. அந்த நபருக்கு அறிமுகமானவர் என்று சொல்லப்படுகிற போலீஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ஏராளமான கேள்விகள் நிறைந்த இந்த மர்மக் கதையை தற்போது மத்திய அரசின் தேசியப் புலனாய்வு முகமை விசாரித்துவருகிறது.
என்ன நடந்தது?
முகேஷ் அம்பானியின் 27 மாடி ஆடம்பர மாளிகை ஆன்டிலா. இந்த மாளிகையின் காவலர்கள் பிப்ரவரி 25 காலை பச்சை நிற ஸ்கார்பியோ எஸ்.யு.வி. வகை கார் அருகே நிறுத்தப்பட்டிருப்பதை பார்த்து சந்தேகம் அடைந்து தங்களுக்குத் தகவல் தந்ததாக கூறுகிறது மும்பை போலீஸ்.
வெடிகுண்டு கண்டுபிடித்து அகற்றும் வல்லுநர்களோடு அங்கு வந்த போலீசார், அந்தப் பகுதியை பாதுகாப்பு வலையத்துக்குள் கொண்டுவந்தபின், ஆளில்லாத அந்த காரை பரிசோதனை செய்தனர். உள்ளே, 2.5 கிலோ எடையுள்ள 20 ஜெலட்டின் குச்சிகள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். (ஜெலட்டின் குச்சிகள் என்பவற்றை ஸ்வீடன் வேதியியலாளர் ஆல்பிரட் நோபல் என்பவர் கண்டுபிடித்தார். அவற்றை வெடிக்க வைக்க டெட்டனேட்டர் தேவை)

பட மூலாதாரம், Mumbai Police
இந்த ஜெலட்டின் குச்சிகள் ஒன்றோடு இணைக்கப்பட்டு, வெடிக்கவைக்கும் கருவியோடு பொருத்தப்படாமல் உதிரியாகவே இருந்தன. இது தொடர்பாக, இந்தியா டுடே பத்திரிகையிடம் பேசிய எறியியல் வல்லுநர் ஒருவர், அந்த ஜெலட்டின் குச்சிகள் அந்தக் காரை தகர்ப்பதற்குப் போதுமானவை என்று தெரிவித்துள்ளார்.
அந்தக் காரில், வாகனப் பதிவெண் போர்டுகள், முகேஷ் அம்பானிக்கும், அவரது மனைவி நீட்டா அம்பானிக்கும் எழுதப்பட்ட அச்சிட்ட மிரட்டல் குறிப்பு ஆகியவற்றையும் போலீசார் அந்தக் காரில் கண்டெடுத்தனர்.
"இது ட்ரெய்லர்தான். ஆனால் அடுத்த முறை இந்த குச்சிகளை இணைத்துக்கொண்டு வருவோம். உங்கள் குடும்பம் மொத்தத்தையும் வெடிவைத்து தகர்க்க நாங்கள் ஏற்பாடுகள் செய்துள்ளோம்" என்று அந்த குறிப்பில் எழுதப்பட்டிருந்தது.

பட மூலாதாரம், Reuters
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவராக உள்ள முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு சுமார் 5.51 லட்சம் கோடி ரூபாய். இந்த கம்பெனியின் முக்கிய வணிகம், எண்ணெய் சுத்திகரிப்புதான். ஆனால், சில்லறை வணிகம், தொலைத் தொடர்பு உள்ளிட்ட வேறு பல துறைகளிலும் இது முதலீடு செய்துள்ளது.
அந்த கார் பற்றி நமக்கு என்ன தெரியும்?
மும்பையில் பணக்காரர்கள் வீடுகள் நிறைந்த கர்மிஷல் சாலையில் எப்போது அந்த மர்மக்கார் வந்து நின்றது என்பதை சிசிடிவி கேமரா பதிவுகளைப் பார்த்து ஆராய்ந்தது மும்பை போலீஸ். நள்ளிரவு வாக்கில் அந்த கார் முகேஷ் அம்பானி வீட்டில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் ஒரு பரபரப்பான சாலைச் சந்திப்பில் நின்றிருந்தது தெரிந்தது.

பட மூலாதாரம், Mumbai Police
வெடிபொருள் ஏற்றிய காரில் இருந்து உடலை மறைக்கும் மருத்துவப் பாதுகாப்பு ஆடை அணிந்த நபர் ஒருவர் வெளியே வருவதை இந்த சிசிடிவி காட்சி காட்டுகிறது.
அதிகாலை 1.40 மணி அளவில் அந்த வண்டியோடு ஒரு வெள்ளை டொயோட்டா சேர்ந்துகொண்டது. காலியாக இருந்த சாலைகள் வழியாக இரண்டு வண்டிகளும் பயணித்து கர்மிஷல் சாலையை காலை 2.30 மணி அளவில் அடைந்தன. அந்த சாலையில்தான் முகேஷ் அம்பானி குடும்பத்துடன் கடந்த 10 ஆண்டுகளாக வசிக்கிறார்.
ஸ்கார்பியோ முன்னே செல்ல, டொயோட்டா பின் தொடர்ந்து சென்றது. முகேஷ் அம்பானி வீட்டுக்கு 500 மீட்டர் தொலைவில் ஸ்கார்பியோ நின்றது. அதில் இருந்து முழு உடலையும் மறைக்கும் பிபிஇ பாதுகாப்பு ஆடை அணிந்த நபர் ஒருவர் வெளியேறி டொயோட்டா காரில் ஏறுவதை சிசிடி காட்சிகள் காட்டுகின்றன. பிறகு, டொயோட்டா கார் அங்கிருந்து கிளம்பி மறைந்துவிட்டது.
எக்ஸ்பிரஸ்வே நெடுஞ்சாலை வழியாகப் பயணித்து தானே புறநகர்ப் பகுதியில் நுழைந்து சிசிடிவி பார்க்க முடியாத பகுதிக்குள் சென்றுவிட்டது அந்த அந்த வண்டி.
வெடிபொருள் ஏற்றிய கார் யாருக்கு சொந்தம்?
வெடிபொருள் ஏற்றிய கார், தானேவில் கார் உதிரிபாகம் விற்கும் கடை நடத்தும் மன்சுக் ஹிரன் என்பவருக்கு சொந்தமானது என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். விசாரித்தபோது, அந்த கார் வேறொருவருக்கு சொந்தமானது என்றும், கார் ரிப்பேர் செய்ததற்கு அவர் பணம் தராததால் தாம் அதை எடுத்துக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Mumbai Police
பிப்ரவரி 17ம் தேதி எக்ஸ்பிரஸ் வே நெடுஞ்சாலையில் மும்பை அருகே பயணித்துக்கொண்டிருந்தபோது வண்டியின் ஸ்டியரிங் வீல் ஜாம் ஆகிவிட்டது என்றும், அதனால், அங்கே வண்டியை நிறுத்திவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டதாகவும் கூறிய அவர், மறுநாள் காலை வண்டியை எடுப்பதற்காக அங்கு வந்து பார்த்தபோது வண்டி அங்கே இல்லை என்றும் விசாரணை அதிகாரிகளிடம் அவர் குறிப்பிட்டார். கார் காணாமல் போனது பற்றி போலீஸில் தாம் ஒரு புகார் பதிவு செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.
முகேஷ் அம்பானி வீட்டின் அருகே வெடிபொருள் ஏற்றிய கார் நின்ற தகவல் அடுத்த சில நாள்களில் மகாராஷ்டிரத்தின் அரசியலில் புயலைக் கிளப்பியது.
இந்த வழக்கில் ஹிரன்தான் முக்கிய சாட்சி என்பதால் அவருக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று ஒரு எதிர்க்கட்சித் தலைவர் மார்ச் 5ம் தேதி வலியுறுத்தினார்.
அடுத்த சில மணி நேரங்களிலேயே ஹிரன் சடலம் மும்பை அருகே கடலோரத்தில் கரை ஒதுங்கியதாக செய்தி வெளியானது.
மன்சுக் ஹிரன் மரணம் குறித்து நமக்குத் தெரிந்தது என்ன?
மார்ச் 4-ம் தேதி அவர், தமது கடையில் இருந்து வீட்டுக்குக் கிளம்பிவிட்டதாக போலீஸ் கூறுகிறது.
வீட்டுக்குச் சென்றவுடன், 'ஆபீசர் தாவ்தே' என்ற போலீஸ்காரரிடம் இருந்து தமக்கு ஓர் அழைப்பு வந்ததாகவும், அவரைப் போய் பார்க்கப் போவதாகவும் வீட்டில் இருந்தவர்களிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.
அன்று இரவு அவர் வீட்டுக்குத் திரும்பவில்லை. அடுத்த நாள் அவரைக் காணவில்லை என்று குடும்பத்தினர் புகார் செய்துள்ளனர்.

பட மூலாதாரம், Mumbai Police
ஹிரன் இரவு 8 மணிக்கு வீட்டை விட்டுச் சென்றதாகவும், சுமார் 3 மணி நேரம் கழித்து அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதாகவும் போலீஸ் பிறகு தெரிவித்தது. அவரை சந்திப்பதாக சொன்னவர் யார் என்று இன்னும் அடையாளம் தெரியவில்லை.
போலீசார் புலனாய்வைத் தொடங்கியபோது, ஒரு சடலம் கடலில் கரை ஒதுங்கியதாக அவர்களுக்கு தகவல் கிடைத்தது. உப்பிக் கிடந்த அந்த உடலின் முகத்தைச் சுற்றி 4-5 கைக்குட்டைகள் சுற்றப்பட்டிருந்ததாக தெரியவந்தது.
ஆரம்ப கட்டப் பிரேதப் பரிசோதனையில் தண்ணீரில் மூழ்கி அவர் இறந்திருப்பதாக குறிப்பிடுகிறது. முழு பிரேதப் பரிசோதனை அறிக்கை இன்னும் வரவில்லை. அடையாளம் தெரியாத நபருக்கு எதிராக கொலை, குற்றச்சதி, சாட்சியைக் கலைத்தல் ஆகியவை தொடர்பான பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதற்கிடையே, வெடிபொருள் ஏற்றிய கார் தொடர்பான புலன் விசாரணையை, மத்திய அரசின் பயங்கரவாத எதிர்ப்பு போலீசான, தேசிய புலனாய்வு முகமை மேற்கொண்டுள்ளது.
போலீஸ் அதிகாரி ஏன் கைது செய்யப்பட்டார்?
முகேஷ் அம்பானி வீட்டுக்கு அருகே மர்மக் கார் நிற்பது பற்றி புகார் வந்தவுடன் அங்கே விரைந்த போலீசாரில் ஒருவர் உதவி இன்ஸ்பெக்டர் சச்சின் வாசே. மும்பை குற்றப்பிரிவில் வேலை செய்கிறார்.
லோக்கல் போலீசார் அங்கே சென்று 3-4 மணி நேரம் கழித்து தாம் அங்கே சென்றதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக அவரிடம் 12 மணி நேரம் விசாரணை நடத்திய பிறகு, மார்ச் 13ம் தேதி என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.

பட மூலாதாரம், PTI
அடுத்த நாள் மும்பை போலீஸ் கேரேஜில் காணாமல் போன டொயோட்டா கார் இருந்ததை என்.ஐ.ஏ. போலீசார் கண்டுபிடித்தனர்.
அம்பானி வீட்டுக்கு அருகே வெடிபொருள்களோடு காரை நிறுத்தும் திட்டத்தில் அவருக்கும் பங்கு உண்டு என்கிறார்கள் போலீசார். சச்சின் வாசே அதை மறுக்கிறார்.
குற்றச்சதி, மிரட்டல், வெடிபொருளைக் கையாள்வதில் பொறுப்பின்றி நடந்து கொள்ளுதல் ஆகியவை தொடர்புடைய பிரிவுகளில் அவர் மீது வழக்குத் தொடர்ந்துள்ளது என்.ஐ.ஏ. அவருக்கு பெயில் தர நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தனது கணவருக்கு வாசேவை நன்கு தெரியும் என்றும் அந்த ஸ்கார்பியோவை அவர் இரண்டாண்டுகளாகப் பயன்படுத்தி வந்ததாகவும் ஹிரன் மனைவி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
ஆனால், ஹிரன் பற்றியோ, அவரது கொலை பற்றிய தமக்கு ஒன்றும் தெரியாது என்று தெரிவித்துள்ளார் சச்சின் வாசே.
அவர் 1990ம் ஆண்டு போலீஸில் சேர்ந்தவர். என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் என்று சொல்லப்படும் ஒரு போலீஸ் குழுவில் இவர் பணியாற்றியுள்ளார்.
அம்பானி வீட்டுக்கு அருகே வெடி பொருள் ஏற்றிய கார் ஏன் நிறுத்திவைக்கப்பட்டது? அதைப் பின்தொடர்ந்து வந்த ஒரு கார் பின்னர் எப்படி போலீஸ் கேரேஜில் இருந்தது? ஹிரனை யார், ஏன் கொன்றார்கள் போன்ற கேள்விகளுக்கு விடை இல்லை.
பிற செய்திகள்:
- கொரோனா தடுப்பூசி திட்டம் கோவிட்-19 பரவல் அதிகரிப்பதை ஏன் தடுக்கவில்லை?
- கோவிட்19 தொற்று புரளிக்குப் பின் இறந்த தான்சானியா அதிபர்
- நரேந்திர மோதியை கடாஃபி, சதாமுடன் ஒப்பிட்ட ராகுல் காந்தி - ஜனநாயக தேர்தல் முறை பற்றி விமர்சனம்
- கமல், சீமான், தினகரன் அறிவித்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
- அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க நடவடிக்கை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








