இந்தியாவில் கொரோனா தடுப்பூசி திட்டம் கோவிட்-19 பரவல் அதிகரிப்பதை ஏன் தடுக்கவில்லை?

கொரோனா

இந்தியாவில் ஜனவரி 2020-ல் மெதுவாகத் தொடங்கிய தடுப்பூசி வழங்கல், இப்போது மெதுவாக சூடு பிடித்து வருகிறது. தடுப்பூசி வழங்கத் தொடங்கிவிட்டால், தொற்றுப் பரவல் எண்ணிக்கை குறையும் என்று பலரும் நம்பிய நிலையில், நிலைமை தலைகீழாக உள்ளது. புள்ளி விவரங்களின் அடிப்படையில் இதற்கான காரணங்களை ஆராய்வோம். வாருங்கள்.

தடுப்பூசி போட்டுக் கொள்ளும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இருந்தாலும் புதிதாகப் பரவும் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பது கவலையளிக்கிறது. பெரும்பாலான மாநிலங்களில் இந்த தினசரி எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. உதாரணமாக, மகாராஷ்டிரா 13,000 க்கும் மேற்பட்ட புதிய தொற்று நோயாளிகளை மீண்டும் பதிவுசெய்துள்ளது, இது ஒரு காலத்தில் ஜனவரி மாதத்தில் ஒரு நாளில் 3,000 க்கும் குறைவான எண்ணிக்கையிலேயே இருந்தது. ஜனவரி தொடக்கத்தில் 300 க்கும் குறைவான தினசரி புதிய நோயாளிகளைப் பதிவு செய்து வந்த பஞ்சாப் போன்ற சிறிய மாநிலங்களில் இப்போது இந்த எண்ணிக்கை 1200 க்கும் மேல் செல்கிறது. இது ஜனவரி மாதத்தில் இருந்ததை விட 5 மடங்கு அதிகமாகும்.

தடுப்பூசியின் விளைவு

கொரோனா

தடுப்பூசி, நோய் பரவலைத் தடுக்க முடியுமா?

இதைப் புரிந்து கொள்ள, இந்தியாவின் மக்கள் தொகையில் ஏற்கனவே தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எத்தனை பேர் என்பதைப் பார்ப்பது முக்கியம். இந்தியாவில் 100 பேர் வசிக்கிறார்கள் என்றால், இப்போது வரை, அவர்களில் 2.04 பேர் மட்டுமே தடுப்பூசி பெற்றுள்ளனர். இந்த புள்ளிவிவரங்களும் ஒரு எச்சரிக்கையை விடுக்கின்றன. இந்த 2.04—ல் கூட சுகாதார / முன் களப் பணியாளர்கள் அல்லது இணை நோய்கள் உள்ள 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் அல்லது 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் அதிகம் உள்ளனர்.

இப்போது, தமிழகத்தின் உதாரணத்தைப் பார்ப்போம், இது தினசரி புதிய நோயாளிகளின் பாலினம் மற்றும் வயதின் அடிப்படையில் தரவை வெளியிடுகிறது.

மார்ச் 1 ஆம் தேதி பொது மக்களுக்குத் தடுப்பூசி வழங்கல் தொடங்கப்பட்டதிலிருந்து, அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்குப் புதிதாக நோய் பாதிப்பது குறைந்துள்ளது. ஜனவரி தொடக்கத்தில் இவர்களின் எண்ணிக்கை தினசரி எண்ணிக்கையில் 24% ஆக இருந்தது. இப்போது, மார்ச் 1-க்குப் பிறகு, இது 22-23 சதவிகிதம் வரை குறைந்துள்ளது.

தமிழ்நாட்டில் 60+ வயதினரிடையே நோய் பரவும் வேகம் குறைந்துள்ளது என்றாலும், இது குறிப்பிடத்தக்க அளவில் இல்லை. இதைத் தடுப்பூசியின் விளைவு என்று நாம் அழைக்க முடியுமா? அனைத்து வயதினரிடையேயும் ஒரே மாதிரியாக வைரஸ் பரவி வருவதால், இப்படி முடிவு செய்வது இப்போது கடினம்.

அப்படியானால், தடுப்பூசியால் தொற்றுப்பரவல் குறைவது எப்போது?

வரும் மாதங்களில், வயதானவர்கள் பாதிக்கப்படுவது தொடர்ந்து குறைந்து வந்தாலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் பெரும்பாலும் இளம் வயதினராக இருந்தாலோ தான் தடுப்பூசிகள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று கொள்ளலாம்.

கேரளாவில், தடுப்பூசி நடைமுறைக்கு வந்தபின் புதிய நோயாளிகளில் சுகாதார ஊழியர்களின் சதவீதம் வெகுவாகக் குறைந்தது. இது முந்தைய மாதங்களை விட கிட்டத்தட்ட 40 சதவீதம் குறைந்தது. சமீபத்திய நாட்களில் மாநிலங்களில் எண்ணிக்கை அதிகரித்தாலும், தடுப்பூசி புதிய நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்க உதவுகிறது என்றே மாநிலங்களின் ஆரம்ப காலப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

நகர்ப்புறம் - ஊரகம் வேறுபாடு

கொரோனா

தடுப்பூசிகள் பெருமளவில் செலுத்தப்பட்டு வந்தாலும், மகாராஷ்டிரா, கேரளா மற்றும் கர்நாடகா போன்ற பெரிய மாநிலங்களில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற வேறுபாடுகள் பெருமளவில் காணப்படுகிறது. (இந்த மாநிலங்களுக்கு மட்டுமே மாவட்ட வாரியான தரவுகள் கிடைத்தன). நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு பெற்றிருப்பது ஒரு காரணம். இதனால் அவர்கள் அதிக அளவில் பதிவு செய்து மருத்துவமனைகளுக்குச் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர்.

உதாரணமாக, மும்பையில், 60 வயதுக்கு மேற்பட்ட 190,000 க்கும் அதிகமானோர், மார்ச் 12 ஆம் தேதி முதல் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இதேபோல் புனே மற்றும் நாக்பூர் ஆகிய பெரிய நகரங்களை உள்ளடக்கிய மற்ற மாவட்டங்களில் முறையே 90,000 மற்றும் 49,000 முதியவர்கள் முதல் சுற்று தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். பீட் மற்றும் துலே போன்ற கிராமப்புற மாவட்டங்களில் 9,000 க்கும் குறைவான மக்களே முதல் சுற்று தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

வைரஸின் பரவலானது மக்கள்தொகை கொண்ட நகர்ப்புற நகரங்களையும் தாண்டி, சிறிய கிராமப்புற மாவட்டங்களிலும் தனது கோர முகத்தைக் காட்டத் தொடங்கியுள்ளது. சில வாரங்களுக்கு முன்பு, மகாராஷ்டிராவின் மற்றொரு மாவட்டமான அமராவதி தினசரி புதிய நோயாளிகளின் மையப்புள்ளியாக மாறியது. தடுப்பூசி வழங்கலில் அமராவதி எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆராய்ந்தபோது - ஒரு தெளிவான இடைவெளி இருப்பது கண்டறியப்பட்டது. மார்ச் 12 ஆம் தேதி நிலவரப்படி, 16,000 க்கும் மேற்பட்ட முதியவர்கள் முதல் தடுப்பூசி பெற்றனர் - இது அஹ்மத்நகர் மற்றும் கோலாப்பூர் போன்ற பிற மாவட்டங்களை விட மிகக் குறைவு.

தடுப்பூசி போடுவதில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாவட்டங்களுக்கிடையிலான இடைவெளி குறைந்தால், மாநிலங்களின் தினசரி எண்ணிக்கையைக் குறைக்க உதவும்.மார்ச் 14 ஆம் தேதி நிலவரப்படி, கோவிட் -19 தடுப்பூசி இந்தியாவில் 2.9 கோடி பேருக்கு மேல் வழங்கப்பட்டுள்ளது. இதில், 18 சதவீதம் பேர் ஏற்கனவே இரண்டாவது சுற்று தடுப்பூசியையும் போட்டுக்கொண்டு விட்டனர். சிக்கிம், அருணாச்சல பிரதேசம் மற்றும் டெல்லி போன்ற சிறிய மாநிலங்கள் ஒரு மில்லியன் மக்களுக்கு அதிக எண்ணிக்கையிலான தடுப்பூசிகளை வழங்கியுள்ளன. மற்ற மாநிலங்களும் வேகம் காட்டி வருகின்றன. கேரளா, ராஜஸ்தான் மற்றும் கோவா ஏற்கனவே அவற்றின் ஒரு மில்லியன் மக்கள்தொகைக்கு 35,000 பேருக்குத் தடுப்பூசி வழங்கியுள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: