வைகோ தலைமையில் மதிமுக உருவானது எப்படி? 1996ல் கருணாநிதி 4-வது முறையாக முதல்வரானது எப்படி? தமிழ்நாடு அரசியல் வரலாறு

கருணாநிதி

பட மூலாதாரம், DIBYANGSHU SARKAR/AFP via Getty Images

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

ராஜீவ் காந்தியின் மரணத்திற்குப் பிறகு நடந்த தேர்தலில் பெரும் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, மலிவுவிலை மதுவை தடை செய்யும் உத்தரவில் தனது முதல் கையெழுத்தை இட்டார். அந்தத் தருணத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் விசாரணைகள் தீவிரமடைந்ததால், புலிகள் இயக்கம், அதன் ஆதரவாளர்கள் மீதான ஒடுக்குமுறையும் தீவிரமாக இருந்தது. தடா என்ற சட்டத்தின் கீழ் பலர் கைதுசெய்யப்பட்ட நிகழ்வும் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

விலைவாசி உயர்வைக் கண்டித்து 1992ஆம் ஆண்டு, பிப்ரவரி மூன்றாம் தேதி ஆளுநர் மாளிகையை நோக்கி சென்ற தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சியினரின் ஊர்வலத்தின் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டு, பலர் காயமடைந்தனர்.

ஜெயலலிதாவின் இந்த முதலாவது ஆட்சிக்காலத்தில் பத்திரிகைகள் கடும் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டன. நக்கீரன், தினகரன், "இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி", "முரசொலி", "மாலை முரசு" ஆகிய பத்திரிகைகள் மீது வழக்குகள் தொடரப்பட்டன.

மெல்ல, மெல்ல அ.தி.மு.க. அரசு மீதான விமர்சனங்கள் அதிகரித்துவந்த நிலையில், 1992 பிப்ரவரி மாதம் கும்பகோணத்தில் நடந்த நிகழ்வு, ஜெயலலிதா அரசுக்கு பெரும் கரும்புள்ளியாக அமைந்தது. கும்பகோணத்தில் நடந்த மகாமகத்தில் ஜெயலலிதாவும் அவரது தோழி சசிகலாவும் பங்கேற்ற நிலையில், அந்நகரில் கடும் நெரிசல் ஏற்பட்டு, அதில் சிக்கியும் கட்டட இடிபாடுகளில் சிக்கியும் சுமார் 60 பேர்வரை உயிரிழந்தனர். இந்த நிகழ்வு, நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதே ஆண்டு மே மாதம் 19ஆம் தேதி ஐ.ஏ.எஸ்.அதிகாரியாக இருந்த எஸ். சந்திரலேகா மீது அமிலம் வீசப்பட்டது. இவர் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் பொறுப்பில் இருந்தபோது ஸ்பிக் நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பதில், அரசுக்கு ஒத்துழைக்கவில்லை என ஏற்கெனவே பேச்சுகள் இருந்த நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றது.

இதற்கிடையில், விவசாயிகளின் ஆத்திரத்தை ஏற்படுத்தும் வகையிலான ஒரு நடவடிக்கையை அறிவித்தார் ஜெயலலிதா. அதன்படி விவசாய பம்ப்செட்களுக்கு முந்தைய தி.மு.க அரசால் வழங்கப்பட்ட இலவச மின்சாரத்தை ரத்துசெய்வதாக அறிவித்தார். இது கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியதால், அந்த உத்தரவு பிறகு திரும்பப் பெறப்பட்டது.

இந்த நிலையில்தான், அ.தி.மு.கவின் வெற்றியைக் கொண்டாட வீர வரலாற்றின் வெற்றி மாநாடு என்ற பெயரில் ஒரு மிகப் பெரிய மாநாட்டை மதுரையில் நடத்தினார் ஜெயலலிதா. இந்த மாநாட்டில் பேசிய ஜெயலலிதா, "கடந்த தேர்தலில் அ.தி.மு.கவுக்கு மக்கள் அளித்த மகத்தான வெற்றிக்கு ராஜீவ் காந்தி மரணத்தால் ஏற்பட்ட அனுதாப அலைதான் காரணம் என்று சொல்வதை ஏற்க முடியாது" என்றார். அவரது இந்தப் பேச்சு காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

1995ல் ஜெயலலிதா அவரது வளர்ப்பு மகன் சுதாகரனின் திருமண ஊர்வலத்தில்

பட மூலாதாரம், ARUNKUMAR

படக்குறிப்பு, 1995ல் ஜெயலலிதா அவரது வளர்ப்பு மகன் சுதாகரனின் திருமண ஊர்வலத்தில்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த வாழப்பாடி கே. ராமமூர்த்தி, ஜெயலலிதாவின் அரசை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தார். இதன் விளைவாக மத்திய அரசுக்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக்கொண்டார் ஜெயலலிதா.

அதே நேரம், ஜெயலலிதாவின் அரசு மீதான ஊழல் புகார்கள் குவிந்தபடி இருந்தன. அரசுக்குச் சொந்தமான டான்சி நிலத்தைக் குறைந்த விலைக்கு வாங்கியதாகக் குற்றச்சாட்டு, ஸ்பிக் நிறுவன பங்குகளை விற்பதில் ஊழல், அரசுக்குச் சொந்தமான பீர் தொழிற்சாலையை டெண்டர் விடாமல் தனியாருக்கு விற்றதில் ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அரசு எதிர்கொண்டிருந்த நிலையில், ஜெயலலிதா நடத்திய ஒரு திருமணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலாவின் அக்காள் மகனான வி.என். சுதாகரனை தனது வளர்ப்பு மகனாகத் தத்தெடுத்த ஜெயலலிதா, அவருக்கு திருமணம் செய்ய முடிவெடுத்தார். அதன்படி நடிகர் சிவாஜி கணேசனின் பேத்தியோடு திருமணம் நிச்சயமானது. இந்தத் திருமணத்திற்காக செய்யப்பட்ட செலவும், ஏற்பாடுகளும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இந்தத் திருமணத்திற்காக அரசு எந்திரம் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது.

திமுக-வில் மீண்டும் பிளவு - வெளியேறிய வைகோ

தி.மு.க. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டது என்று குற்றம்சாட்டி ஆட்சிக்கு வந்த ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் விடுதலைப் புலிகள் என்று கூறி சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தவர்கள் அடிக்கடி தப்பிக்கும் நிகழ்வுகள் நடைபெற்றன.

ஜெயலலிதாவின் ஆட்சி இத்தகைய குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருந்த நிலையில், தி.மு.கவிலும் நிலைமை அமைதியாக இல்லை. கட்சிக்குச் சொல்லாமல் வைகோ யாழ்ப்பாணத்திற்கு ரகசிய பயணத்தை மேற்கொண்ட விவகாரம் கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதையடுத்து தமிழக அரசின் தலைமைச் செயலரிடமிருந்து கருணாநிதிக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. அந்த கடிதத்தில் விடுதலைப் புலிகளால் அவரது உயிருக்கு ஆபத்து வரலாம் என மத்திய அரசுக்கு தகவல் தெரிய வந்திருப்பதால், அவருக்கு உரிய பாதுகாப்பை வழங்க முதலமைச்சர் கூறியிருப்பதாக அந்த கடிதம் தெரிவித்தது. இந்தச் செய்தியை செய்தியாளர்களிடம் தெரிவித்தார் கருணாநிதி.

இதையடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட வைகோ, "மத்திய அரசின் உளவுத் துறையினர் தி.மு.கவில் குழப்பத்தை ஏற்படுத்த கடந்த சில மாதங்களாக முயன்று வருவதாக தலைவர் கலைஞர் பலமுறை கூறியிருப்பதை நினைவுகூர்கிறேன். என்னால் தி.மு.க. தலைவர் கலைஞருக்கோ கட்சிக்கோ கடுகளவும் கேடுவராமல் தடுக்க என்னைப் பலியிடத்தான் வேண்டுமென்றால் அதற்கும் நான் சித்தமாகவே இருக்கிறேன்" என்று தெரிவித்திருந்தார். அவருக்கு ஆதரவாக தி.மு.கவில் ஒரு பிரிவினர் திரள ஆரம்பித்தனர்.

இதன் உச்சகட்டமாக வைகோவுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பினார் பொதுச் செயலாளர் க. அன்பழகன். முடிவில் 1993ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் தேதி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் வைகோ. அவருடன் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் பிரிந்து சென்றனர். இதையடுத்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் புதிய கட்சியைத் துவங்கிய வைகோ, அ.தி.மு.கவுக்கும் தி.மு.கவுக்கும் மாற்றாக அந்தக் கட்சியை முன்வைத்தார்.

வைகோ

பட மூலாதாரம், FACEBOOK

ஜெயலலிதாவின் ஐந்தாண்டு கால ஆட்சி முடிவை நெருங்கியபோது, ஜெயலலிதா மீதும் அவரது அமைச்சர்கள் பலர் மீதும் பெரும் ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தன. பாட்ஷா படத்தின் வெள்ளி விழாவில் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து ரஜினிகாந்த் குறிப்பிட்ட கருத்துகளுக்கு மேடையில் இருந்த ஆர்.எம். வீரப்பன் மறுப்புத் தெரிவிக்கவில்லையென்பதால், அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினார் ஜெயலலிதா.

இதற்காக ஆர்.எம். வீரப்பனிடம் மன்னிப்புக்கேட்ட ரஜினிகாந்த், 1995 செப்டம்பர் மாத இறுதியில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் "அ.தி.மு.கவினரும் எம்.ஜி.ஆர். ரசிகர்களும் தொண்டர்களும் செல்வி ஜெயலலிதா தலைமையில் மறுபடியும் ஆட்சி அமைத்துக் கொடுத்தால் தமிழக மக்களை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது" என்று கூறியிருந்தார்.

இப்படியாக காட்சிகள் நகர்ந்து கொண்டிருக்க, தமிழகத்தில் தேர்தல் நெருங்கியது. ஜெயலலிதா மீது கடுமையான எதிர்ப்புணர்வு உருவாகியிருந்த நிலையில், கூட்டணிகளை அமைப்பதில் மும்முரம் காட்டியது தி.மு.க.

இன்னொரு பக்கம், ரஜினிகாந்தை முன்னிலைப்படுத்தி, காங்கிரஸ் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்துகொண்டிருந்தன. இந்த நிலையில், திடீரென அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைக்கப்போவதாக அறிவித்தார் பிரதமர் பி.வி. நரசிம்மராவ். இந்த அறிவிப்பு தமிழக காங்கிரஸ் தலைவர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அ.தி.மு.க மீது அதிருப்தி அலை எழுந்திருப்பதால், அக்கட்சியுடன் கூட்டணி வைக்கக்கூடாது என மூப்பனார் உள்ளிட்ட தலைவர்கள் தில்லி சென்று வலியுறுத்திவந்த நிலையிலும், இந்தக் கூட்டணி அறிவிப்பு வெளிவந்தது.

இதையடுத்து, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்தது. மூப்பனார், ப. சிதம்பரம் தனியாகப் பிரிந்து தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியை உருவாக்கினர். அந்தக் கட்சி தி.மு.கவுடன் கூட்டணி அமைத்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இந்த கூட்டணியில் இணைந்தது. இதற்கு ரஜினிகாந்தின் ஆதரவும் இருந்தது.

எஞ்சியிருந்த, ம.தி.மு.க., பா.ம.க., சி.பி.எம்., ஜனதா தளம் ஆகியவை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால், கூட்டணிக்கு யார் தலைமை ஏற்பது என்பது தொடர்பாக உடன்பாடு எட்டப்படாததால், ம.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி ஏற்படவில்லை. ஆகவே ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட ஒரு கூட்டணியை உருவாக்கினார் வைகோ. பாட்டாளி மக்கள் கட்சி, வாழப்பாடி ராமமூர்த்தி தலைமையில் இருந்த திவாரி காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் சேர்ந்து ஒரு கூட்டணியை அமைத்தது.

அ.தி.மு.க. கூட்டணியைப் பொறுத்தவரை சட்டமன்ற தேர்தலில் அக்கட்சி 168 தொகுதிகளிலும் காங்கிரஸ் 66 தொகுதிகளிலும் போட்டியிடுவதென முடிவானது. நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, அ.தி.மு.கவுக்கு 10 இடங்களும் காங்கிரசிற்கு 30 இடங்களும் ஒதுக்கப்பட்டன.

தி.மு.க. கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 40 சட்டமன்றத் தொகுதிகளும் 20 நாடாளுமன்றத் தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 11 சட்டமன்றத் தொகுதிகளும் 2 நாடாளுமன்றத் தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. முஸ்லீம் லீக், அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சி ஆகியவற்றுக்கு 5, 2 என சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. முடிவாக தி.மு.க. 176 சட்டமன்றத் தொகுதிகளிலும் 17 நாடாளுமன்ற தொகுதிகளிலும் போட்டியிட்டது.

ஜெயலலிதா

பட மூலாதாரம், Getty Images

பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணியில் அக்கட்சி 116 இடங்களில் போட்டியிட்டது. திவாரி காங்கிரஸ் 50 இடங்களில் போட்டியிட்டது. ம.தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. 175 இடங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 40 இடங்களிலும் ஜனதா தளம் 17 இடங்களிலும் சமாஜ்வாதி கட்சி இரண்டு இடங்களிலும் போட்டியிட்டன. வைகோ விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டார்.

அ.தி.மு.க மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தாலும், தொட்டில் குழந்தைத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை முன்வைத்து பிரமாண்டமான பிரசாரத்தில் இறங்கினார் ஜெயலலிதா. ஆனால், தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியின் பிரச்சாரம் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் நடந்த முறைகேடுகளை குறிவைத்து இருந்தது.

இந்த முறை தமிழ்நாட்டில் தேர்தல் இரண்டு கட்டங்களாக ஏப்ரல் 27ஆம் தேதியும் மே 2ஆம் தேதியும் நடைபெற்றன. எதிர்பார்த்தபடியே தி.மு.க. கூட்டணி அபார வெற்றிபெற்றிருந்தது. அந்த அணிக்கு மொத்தமாக 220 இடங்கள் கிடைத்தன. அதில் தி.மு.க. மட்டும் 173 இடங்களிலும் த.மா.கா. 39 இடங்களிலும் சி.பி.ஐ. 8 இடங்களிலும் ஃபார்வர்ட் பிளாக் ஒரு இடத்திலும் வெற்றிபெற்றன.

நாடாளுமன்ற தேர்தலைப் பொறுத்தவரை, புதுச்சேரியை தவிர, அனைத்து இடங்களையும் தி.மு.க கூட்டணி கைப்பற்றியது.

அ.தி.மு.க கூட்டணி சார்பில் பி.ஆர். சுந்தரம், திருநாவுக்கரசு, தாமரைக்கனி, கருப்பசாமி ஆகிய நான்கு பேர் மட்டுமே வெற்றிபெற்றிருந்தனர். காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, புதுச்சேரி மக்களவைத் தொகுதியைத் தவிர வேறு எந்தத் தொகுதியிலும் வெல்லவில்லை. பாட்டாளி மக்கள் கட்சி நான்கு சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றியது. ஆனால், வைகோவின் கூட்டணியில் ம.தி.மு.க. அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்தது. கூட்டணி கட்சியான ஜனதா தளத்திற்கும் சி.பி.எம்மிற்கும் தலா ஒரு இடம் கிடைத்தது.

இந்த தேர்தலில் ஜெயலலிதா, வைகோ உள்ளிட்ட தலைவர்கள் தோற்றுப்போயினர்.

ஆளுநர் சென்னா ரெட்டி பதவிப் பிரமாணம் செய்துவைக்க, மே 13ஆம் தேதி நான்காவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் மு. கருணாநிதி. இதற்கு முன்பு, காமராஜர், எம்.ஜி.ஆர்., மு. கருணாநிதி ஆகியோர் மூன்று முறை முதல்வராகப் பதவியேற்றிருந்தனர். மு. கருணாநிதி அமைத்த அமைச்சரவையில் க. அன்பழகன், நாஞ்சில் மனோகரன், ஆற்காடு வீராசாமி, கே.என். நேரு, ரகுமான்கான் உள்ளிட்ட 28 பேர் இடம்பெற்றிருந்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: