கொரோனாவுக்கு பின் நரேந்திர மோதியின் முதல் வெளிநாட்டு பயணம்: வங்கதேசம் என்ன எதிர்பார்க்கிறது ?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், காதிர் கொலால்
- பதவி, பிபிசி வங்காள சேவை, டாக்கா
கொரோனா காலத்துக்கு பிறகு முதல் வெளிநாட்டு பயணமாக வங்கதேசம் செல்லவுள்ளார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி.
இருநாட்டு உறவில் வங்கதேசம் அதிருப்தியாக இருக்கும் சூழலில்தான் அங்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார் நரேந்திர மோதி.
இந்தியாவில் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் முஸ்லிம்களை நோக்கிய நரேந்திர மோதி அல்லது பாஜகவின் ஆட்சியின் செயல்பாடுகள் வங்கதேசத்தில் ஒரு விரும்பத்தகாத சூழலை உருவாக்கியது.
இந்தியாவிற்குப் போக்குவரத்து உட்படப் பல வசதிகளை செய்து கொடுத்தபின் வங்கதேசம் திரும்பப் பெற்றது என்ன என்ற கேள்வியும் எழுகிறது.
அப்போதைய மேற்கு பாகிஸ்தானுடனான வங்கதேச விடுதலை போரின் 50ஆம் ஆண்டு விழா, வங்கதேசத்தைத் தோற்றுவித்த ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா, மற்றும் இந்தியாவுடனான வங்கதேசத்தின் 50 ஆண்டுகால உறவு ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி இரண்டு நாள் பயணமாக மார்ச் 26ஆம் தேதியன்று வங்கதேசம் செல்லவுள்ளார்.
ஃபெனி நதியின் மேல் இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் வங்கதேசத்தை இணைக்கும் பாலம் ஒன்று மார்ச் 9ஆம் தேதியன்று திறந்து வைக்கப்பட்டது.
வங்கதேசத்தில் உள்ள சட்டோகிராம் துறைமுகத்திலிருந்து இந்த பாலம் வழியாக இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களுக்கு எளிதாக சரக்கு போக்குவரத்து நடைபெறும்.
இந்தியாவுக்கான தரை மற்றும் கப்பல் போக்குவரத்து சட்டோகிராம் துறைமுகத்தில் ஐந்து வருடங்களுக்கு முன் தொடங்கியது. இருப்பினும் வங்கதேசத்திற்குள் எழுந்த அதிருப்திகளால் சில விவாதங்களும் ஏற்பட்டன.
`இந்தியா அனைத்தையும் பெற்றுக் கொண்டது`
வங்கதேசத்தின் முன்னாள் வெளியுறவுச் செயலர்களில் ஒருவரான தெளஹித் ஹொசைன், இந்தியா தனக்கு வேண்டியதெல்லாம் பெற்றுக் கொண்டது. ஆனால் வங்கதேசம் பதிலுக்கு எதையும் பெறவில்லை அதுவே இங்கே பெரும் கோபத்தை உண்டாக்கியுள்ளது என்கிறார்.
"வங்கதேசம் தொடர்பாக இந்தியாவிற்கு சில கவலைகள் இருந்தன இந்தியாவின் வட கிழக்கு மாநிலத்தை சேர்ந்த பிரிவினைவாத குழுக்கள் தங்களின் உறுப்பினர்களை அங்கு செயல்பட வைத்திருந்தன. அதேபோல போக்குவரத்து குறித்தான கேள்விகளும் எழுந்தன. ஆனால் வங்கதேசம் இந்தியாவின் கோபத்தைக் குறைக்கும் அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டன" என்கிறார் தெளஹித்.

பட மூலாதாரம், Getty Images
"ஃபெனி நதியின் மேல் பாலம் அமைத்தது போக்குவரத்தை மேலும் அதிகரித்தது. திரிபுராவில் உள்ள மக்கள் இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்தும், உலகின் பிற பகுதிகளில் இருந்தும் சரக்கை கொண்டுவரவும் கொண்டு செல்லவும் அது உதவும்," என்கிறார் தெளஹித்.
"இது ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, வங்கதேசம் வைத்த எந்த கோரிக்கையும் செவி சாய்க்கப்படமால் இருந்தது," என்கிறார் தெளஹித்.
மேலும், "ஒன்றுக்கும் மேற்பட்ட உத்தரவாதம் வழங்கியதால் டீஸ்டா ஒப்பந்தம் கையெழுத்தாகும் என உறுதியாக இருந்தோம். ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது ஆனால் அது இப்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதுதான் கோபத்துக்கு காரணம்," என்கிறார்.
"எல்லையில் நடக்கும் கொலைகளை இந்தியா ஓர் எளிய நடவடிக்கையின் மூலம் தடுக்கலாம். ஆனால் இந்தியாவில் உள்ள தலைவர்கள் அது குறித்து பெரிதும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை," என அவர் மேலும் தெரிவிக்கிறார்.
டீஸ்டா நதி பங்கீடு ஒப்பந்தம் இந்தியப் பிரதமரின் வருகையால் மட்டும் மீண்டும் எழுப்பப்படவில்லை.
நரேந்திர மோதியின் பயணத்துக்கு முன்பாக இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தாக்காவிற்கு பயணம் மேற்கொண்டார். பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு டீஸ்டா நதி விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு மாறவில்லை என தெரிவித்தார்.
இருப்பினும் எல்லையையொட்டி நடைபெறும் குற்றவியல் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து அவர் அழுத்தமாக பேசினார், "குற்றங்கள் மற்றும் எல்லை கொலைகள் இல்லாத சூழல் வேண்டும்" என்றார்.
எனவே வங்கதேசத்தின் இரு முக்கிய விஷயங்களில் உறுதியற்ற நிலை எழுந்துள்ளது. மாறாக ரோஹிஞ்சா முஸ்லிம்கள் விவகாரத்தில் இந்தியாவின் உதவி வங்கதேசத்திற்கு அவ்வளவாகக் கிடைக்கவில்லை.
இருநாட்டு உறவும் எப்படி உள்ளது?

பட மூலாதாரம், Getty Images
டாக்கா பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் துறை பேராசிரியராக இருக்கும் லைலுஃபர் யாஸ்மின், வங்கதேசத்தின் கவலைகளில் இந்தியா கவனம் செலுத்தவில்லை என்கிறார்.
"இரு நாடுகளுக்கான உறவுகளில் தேசிய நலன்கள் முன்னுரிமை பெறுகின்றன. வடகிழக்கில் பிரிவினைவாதிகளை கட்டுப்படுத்தவும் மற்றும் பிற துறைகளிலும் வங்கதேசம் இந்தியாவிற்கு ஆதரவு வழங்க, ரோஹிஞ்சா விவகாரத்தில் இந்தியா ஒரு நடுநிலையான நிலைப்பாட்டையாவது எடுக்க வேண்டும் என நாங்கள் எதிர்பார்த்தோம்," என்கிறார் அவர்.
மேலும், "வங்கதேசத்தில் ஒரு கோபம் நிலவுகிறது. இந்தியாவுடனான உறவு கேந்திர முக்கியத்துவம் பெறாமல், தந்திரமானதாக உள்ளது என அந்நாடு கருதுகிறது. அதன்பொருள் இருநாட்டு உறவுகளும் தேவையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாக உள்ளது," என்கிறார் யாஸ்மின்.
இந்தியா இருநாடுகளுக்குமான உறவு நீண்டநாட்கள் நிலைத்திருக்க வேண்டும் என நினைக்கவில்லை. இந்தியா வங்கதேசத்தின் கவலைகளைத் தீவிரமாக கருதவில்லை என்கிறார் அவர்.
"இந்தியாவின் அண்டை நாட்டுக் கொள்கை நன்றாக உள்ளது. ஆனால் அவர்கள் வங்கதேசத்தின் தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என நான் எப்போதும் நினைப்பதுண்டு," என்கிறார்.
2017ஆம் ஆண்டு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா இந்தியாவிற்கு வந்தபோது இருதரப்பும் மொத்தம் 22 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். இருப்பினும் அதிகம் விவாதிக்கப்பட்ட டீஸ்டா நிதி பங்கீட்டு ஒப்பந்தம் ஏற்படுவது எளிதானதாக இல்லை.
கிடப்பு நிலையில் டீஸ்டா ஒப்பந்தம்
டீஸ்டா நதி பங்கீடு ஒப்பந்தம் எட்டப்படாத நிலையில் இருப்பதற்கு இந்தியா மேற்கு வங்க முதல்வர் மமதாவை பல வருடங்களாக காரணம் காட்டி வந்தது. இதுகுறித்து பேசும் முன்னாள் வெளியுறவுச் செயலர் தெளஹித் ஹொசைன் மேற்கு வங்க மாநிலமோ, அல்லது இந்தியாவின் மத்திய அரசோ இதற்கு பொறுப்பேற்க விரும்பவில்லை என்று தெரிவித்தார்.
மேலும் இந்தியா தனக்கான பிரச்னைகள் குறித்து மட்டுமே கவலை கொள்வதாகவும், வங்கதேசத்தின் தேவைகள் குறித்து கண்டு கொள்ளவில்லை எனவும் கருதுகிறார் தெளஹித்.
"ஒவ்வொரு நாடும் தனது தேசிய நலன் குறித்துதான் சிந்திக்கும். இருப்பினும் பிறரின் விஷயங்களிலும் கவனம் செலுத்த முனைய வேண்டும். இந்தியா தனது உள்நாட்டு அரசியலில் மட்டுமே அதிக தீவிரத்தை காட்டுகிறது" என்கிறார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
"இறுதி முடிவு என்பது மத்திய அரசைப் பொறுத்தது. நாங்கள் மேற்கு வங்கத்துடன் ஒப்பந்தம் கையெழுத்திட முடியாது. மத்திய அரசு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தாலும் மமதா அந்தளவிற்கு அதிருப்தியாகியிருக்க மாட்டார். தங்களின் அரசியல் நலன்களுக்காக மம்தாவோ அல்லது பாஜகவோ டீஸ்டா ஒப்பந்தம் தொடர்பான பொறுப்பை எடுத்துக் கொள்ள விரும்பவில்லை," என்கிறார் தெளஹித்.
வகுப்புவாதம் குறித்த கவலைகள்
ஷேக் ஹசினா 2009ஆம் ஆண்டு பதவிக்கு வந்தபின் இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்ட அவர், இருநாட்டு உறவில் புதிய கோணத்துக்கு வித்திட்டார்.
அப்போது காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருந்தது. 2011ஆம் ஆண்டு அப்போதைய இந்தியப் பிரதமர் மம்மோகன் சிங் வங்கதேசத்திற்குப் பயணம் மேற்கொண்டார்.
இந்தியாவில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் இருநாட்டு உறவும் வலுப்பெற்றதாக இருதரப்பும் தெரிவித்தன. ஆனால் வங்கதேசத்தில் 12 கால அவாமி லீக் ஆட்சியில் வங்கதேசத்தின் எதிர்பார்ப்புகள் பல எடுப்படமால் இருந்தன.
மறுபுறம், மோதி ஆட்சியின் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான அரசியல் என வங்கதேசத்தில் உள்ள பலரை கவலை கொள்ள வைத்தது.
அமெரிக்கன் பப்ளிக் யூனிவர்சிட்டி சிஸ்டத்தின் பேராசிரியர் இஃப்தேகார் அகமது, இந்தியாவில் உள்ள பாஜகவின் அரசு வங்கதேசத்தில் மதம் சார்ந்த அரசியலைத் தூண்டுவதாக தெரிவிக்கிறார்.
"உயரிய தலைவர்கள் மற்றும் இந்திய உள்துறை அமைச்சர் இந்தியாவிலிருந்து சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவோம் என வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். அதேபோல வங்கதேசம் குறித்து அவர்கள் பல எதிர்மறையான கருத்துகளையும் தெரிவித்துள்ளனர். ஆனால் இதற்கு முன்பு இம்மாதிரியான கருத்துகளை தான் கேட்டதில்லை," என்கிறார் அகமது.
"1947ஆம் ஆண்டுக்கு முன் நிலைப்பெற்றிருந்த வகுப்புவாத அரசியலை அவர்கள் மீண்டும் கொண்டு வந்துவிட்டனர். அவர்கள் அந்த வகுப்புவாத சொல்லாடலை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். இது இருதரப்பு உறவில் ஒரு புதிய கோணம்."
"இதன் விளைவாக வகுப்புவாத அரசியலும், இந்தியாவுக்கு எதிரான போக்கும் வங்கதேசத்தில் அதிகரிக்கிறது," என்கிறார் சயீத் இஃப்டேகார் அகமது.
வங்கதேசத்துக்குக் கவலை அளிக்கும் எத்தனை விஷயங்கள் மோதியின் பயணத்தின்போது விவாதிக்கப்படும் என நிபுணர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
`கவலைக் கொள்ள ஒன்றுமில்லை`
இருப்பினும் வங்கதேசம் தற்போது இந்தியாவுடன் ஒரு நேர்மறையான உறவைப் பேணி வருவதாகவே கருதுகிறது.
பல தசாப்தங்களாக நிலவி வந்த, இருதரப்பிலும் எல்லைப் பகுதிகளை சார்ந்த பிரச்னைகள் தீர்க்கப்பட்டதும், 1974ஆம் ஆண்டு முஜிபுர் ரஹ்மான் - இந்திரா நில எல்லை ஒப்பந்தம் செயல்படுத்தப்பட்டதும் இதற்கு எடுத்துக்காட்டாக கூறப்படுகிறது.
"நரேந்திர மோதி, ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா, சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்த விழாவில் கலந்து கொள்ள வருகிறார். கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு மோதி மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணம் இது. நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்," என வங்கதேச வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
"நாங்கள் பெரிய பிரச்னைகள் அனைத்தையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துவிட்டோம். எனவே அதிருப்திக்கு இடமில்லை. எல்லை கொலைகள் போன்ற சில பிரச்னைகள் உள்ளன. இருப்பினும் இருதரப்பு அரசுகளும் எல்லையில் யாரும் கொல்லப்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளன." என்கிறார்.
"செயல்படுத்துவதில் சில இடையூறுகள் இருக்கலாம். ஆனால் நாங்கள் அதிருப்தியாக இல்லை. எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்த நாங்கள் கூட்டாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்."
டீஸ்டா நீர் பங்கீடு விவகாரத்தை பொறுத்தவரை, "டீஸ்டா ஒப்பந்தம் கையெழுத்தானது இருப்பினும் இந்தியா தரப்பில் உள்ள சில பிரச்னைகளால் அதை செயல்படுத்த முடியவில்லை. இருப்பினும் ஒப்பந்தத்தால் கிடைக்கும் நீரை நாங்கள் ஏற்கனவே பெற்றுக் கொண்டிருக்கிறோம். எனவே இதுகுறித்து நீங்கள் கவலை கொள்ள வேண்டாம்." என்கிறார் அவர்.
இந்திய ஆய்வாளர்கள் என்ன சொல்கிறார்கள்?
பல இந்திய ஆய்வாளர்களும் இருநாட்டு உறவை நேர்மறையானதாகவே பார்க்கின்றனர். விவேகானந்தா இண்டர்நேஷனல் ஃபவுண்டேஷனின் ஸ்ரீராதா தத்தா, இந்திய வங்கதேச உறவுகள் குறித்து பணியாற்றி வருகிறார்.
இருதரப்பு உறவை பொறுத்தவரை பலதரப்பட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்கிறார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
"வங்கதேசத்தை பொறுத்தவரை நீர் பங்கீடுதான் முக்கிய பிரச்னையாக உள்ளது என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன்."
"இந்த ஒப்பந்தம் குறிப்பிட்ட ஒரு மாநிலத்தால் தேங்கியுள்ளது என இந்தியப் பிரதமர் மோதி பல தருணங்களில் தெரிவித்துள்ளார். வங்கதேசம் இந்திய உறவு ஒரு கூட்டாளி உறவைக் காட்டிலும் விரிவானது. எனவே வங்கதேசம் என்ன நினைக்கிறது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்பது மறுக்க முடியாத ஒன்று." என்கிறார் அவர்.
தொடர்பும் வர்த்தகமும்
இருநாடுகளுக்கும் இடையே போக்குவரத்து வசதியை ஏற்படுத்துவது சமீபத்திய முக்கிய முயற்சிகளில் ஒன்று.
வங்கதேசத்தின் வர்த்தக ஆர்வம் குறித்தும் தற்போது விவாதிக்கப்பட்டு வருகிறது. டாக்காவில் உள்ள ஆய்வு நிறுவனமான சிபிடியின் நிர்வாக இயக்குநர் ஃபஹமிதா காட்டூர், இருதரப்பு வர்த்தகத்தில் வங்கதேசம் பல எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளது என்கிறார்.
"வங்கதேச வளர்ச்சியில் பின் தங்கிய நாடுகள் பட்டியலில் இருந்து வளரும் நாடுகளின் பட்டியலுக்கு வர முயற்சிக்கிறது. அதன் விளைவாக வரி சலுகைகளை அது இழக்க வேண்டும். இருப்பினும் இந்தியா அந்த சலுகையை வழங்க வங்கதேசம் எதிர்பார்க்கிறது" என்கிறார் ஃபமிடா.
இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே போக்குவரத்து அதிகரித்தால் வர்த்தகம் மற்றும் பொருளாதார ரீதியாக வங்கதேசம் பயனடையும் என அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
"அதிகரித்துள்ள வர்த்தகம் மற்றும் தொலைத்தொடர்பால் அதிக பயனடைந்து வருகிறோம். இந்தியாவிற்கான எங்களின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது."
"இந்த போக்குவரத்து தொடர்பால் நாங்கள் பயனடைவோம் என நம்புகிறோம்," என அமைச்சர் தெரிவித்துள்ளார். இருநாட்டின் ஆழமான உறவை கருத்தில் கொண்டு தீர்க்கப்படாத பிரச்னைகள் உடனடியாக தீர்க்கப்படும் என தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் வங்கதேசம் கள நிலவரங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் அதிருப்திக்கு பின்னால் உள்ள காரணங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
பிற செய்திகள்:
- அம்பானிக்கு வெடிகுண்டு மிரட்டல் வழக்கு: புயலை கிளப்பும் ஐ.பி.எஸ் அதிகாரியின் கடிதம்
- 'ஐநாவில் இலங்கைக்கு இந்தியா ஆதரவளிக்க கூடாது' - மோதியை வலியுறுத்தும் ஸ்டாலின்
- மேற்கு வங்கத்தில் மம்தா பேனர்ஜி முதல்வர் பதவியை தக்கவைப்பாரா? மார்க்சிஸ்ட் கணக்கு என்ன?
- ஷேவிங் ப்ளேடால் 8ஆம் வகுப்பு படித்தவர் செய்த அறுவை சிகிச்சை: தாய், சேய் பலி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












