கொரோனா வைரஸ்: கடும் நெருக்கடியில் வங்கதேச ஆடை தயாரிப்புத்துறை - 20 லட்சம் பேருக்கு வேலை இழப்பா?

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், அக்பர் ஹுசைன்
    • பதவி, பிபிசி பெங்காலி செய்தியாளர்

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக வங்கதேசத்தில் ஆயத்த ஆடை தயாரிப்பு தொழில் மிகுந்த நெருக்கடியில் சிக்கியுள்ளது. அதில் ஈடுபட்டுளள 4 மில்லியன் தொழிலாளர்களில், பாதி பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

டாக்காவின் புறநகர்ப் பகுதியில் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் சபீனா அக்தர் வேலை பார்க்கிறார். ஐரோப்பிய சந்தைக்கு சட்டைகளை தயாரிக்கும் அந்த நிறுவனத்தில் 800 பேர் வேலை பார்க்கின்றனர்.

கொரோனா வைரஸ் நோய்த் தாக்குதல் காரணமாக ஐரோப்பாவில் தங்களிடம் சட்டைகளை வாங்கும் நிறுவனங்கள் ஆர்டர்களை ரத்து செய்துள்ளதால், நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்த முடியாது என்று சில நாட்களுக்கு முன்பு அவருடைய முதலாளி அறிவித்தார்.

``நான் எப்படி வாழப் போகிறேன் என்று தெரியவில்லை. என் வேலை போய்விட்டது. உணவுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை'' என்று அந்தப் பெண்மணி வருந்துகிறார்.

வங்கதேசப் பொருளாதாரத்தின் உயிரோட்டமாக ஆயத்த ஆடை தொழில் நிறுவனங்கள் இருக்கின்றன. அந்தத் தொழிலில் 4 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்க்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள்.

ஊதியம் வேண்டி போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஊதியம் வேண்டி போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்

அனிஷா பேகத்துக்கும் வேலை போய்விட்டது. டாக்காவின் புறநகர்ப் பகுதியில் ஏழு பேர் கொண்ட தன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார் அனிஷா.

'வாழ்க்கைக்கு எந்த வழியும் இல்லை'

தானும், தன் கணவரும் தினம் ஒரு வேளை சாப்பாட்டுடன் நாட்களைக் கடத்திவிட முடியும், ஆனால் குழந்தைகளால் அது முடியாது என்று அவர் கூறினார். ``உதவி செய்ய அரசு முன்வராவிட்டால், நாங்கள் வாழ்வதற்கு எந்த வழியும் இருக்காது'' என்றார் அவர்.

தான் வேலை பார்த்த நிறுவனத்தின் உரிமையாளர், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், அனைவரையும் வேலையில் இருந்து நீக்க முடிவு செய்துவிட்டதாக கலீதா பர்வீன் தெரிவிக்கிறார்.

``தேசிய விடுமுறை நாள் என்பதால் என் கிராமத்திற்கு வீட்டுக்கு சென்றிருந்தேன்'' என்று கலீதா கூறினார்.

``எங்கள் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனம் ஏப்ரல் 5 ஆம் தேதி திறந்திருக்க வேண்டும். அன்றைக்கு நான் வேலைக்குச் சென்றபோது, அனைவரும் வேலைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக அங்கே அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருந்தது'' என்று அவர் குறிப்பிடுகிறார்.

அந்த நிறுவனத்தில் 1000க்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்த்ததாக அவர் தெரிவித்தார்.

கோப்புப்படம்

வங்கதேசத்தின் வருவாயில் சுமார் 83 சதவீதம், ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி தொடர்பான துறைகள் மூலம் கிடைக்கிறது. ஆண்டுக்கு 32 பில்லியன் டாலருக்கும் அதிகமான வருவாய் இதன் மூலம் கிடைக்கிறது.

பெரிதும் ஏற்றுமதியை சார்ந்திருக்கும் நிலை

ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வதை மட்டுமே நம்பி இந்தத் தொழில் நடைபெறுகிறது. அந்த நாடுகள் இவற்றை வாங்குவதை நிறுத்திவிட்டால், ஒட்டுமொத்தமாக உள்நாட்டு தொழில் ஸ்தம்பித்துவிடும்.

உலகில் சில முன்னணி பிராண்ட் நிறுவனங்கள் 3 பில்லியன் டாலருக்கும் அதிகமான அளவுக்கு ஆர்டர்களை ரத்து செய்துவிட்டன.

Gap, Zara மற்றும் Primark போன்ற நிறுவனங்கள் ஆர்டர்களை ரத்து செய்துள்ளன. Primark நிறுவனம் இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், ஆஸ்திரியா மற்றும் பிரிட்டனில் உள்ள விற்பனை நிலையங்களை மூடிவிட்டது. Zara நிறுவனம் தற்காலிகமாக அதன் விற்பனை நிலையங்களை மூடியுள்ளது.

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

தார்மீகப் பொறுப்பை ஏற்கவில்லை என குற்றச்சாட்டு

சில மேற்கத்திய ஆயத்த ஆடை பிராண்ட் நிறுவனங்களின் போக்கிற்கு மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. ஆயத்த ஆடைகளைத் தொழிலாளர்கள் தயார் செய்துவிட்ட நிலையில், எந்த நிதி அல்லது தார்மிகப் பொறுப்பும் ஏற்காமல், பல விற்பனை நிறுவனங்கள் ஆர்டர்களை ரத்து செய்துள்ளதாக அந்த அமைப்பு புகார் கூறியுள்ளது.

விமர்சனங்களும், நெருக்குதல்களும் அதிகரித்ததை அடுத்து H & M நிறுவனமும், Zara வின் Inditex நிறுவனமும், இப்போதைய ஆர்டர்களுக்கு முழுமையாகப் பணம் செலுத்திவிட முன்வந்துள்ளன.

ஆனால் ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதால், ஆயத்த ஆடை தொழிலுக்கும், அதில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கும் பெரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்று உலகளாவிய தொழிலாளர்களின் உரிமைகளுக்கான மையம் அண்மையில் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

பணம் தர மறுக்கும் வாடிக்கையாளர் நிறுவனங்கள்

ஆர்டர்களை ரத்து செய்தபோது, அவற்றை வாங்குவதாக இருந்தவர்களில் 72.1 சதவீதம் நிறுவனங்கள் ஏற்கனவே ஆயத்த ஆடை நிறுவனங்களால் வாங்கப்பட்டுவிட்ட மூலப் பொருட்களுக்கு பணம் தர மறுத்துவிட்டன. 91.3 சதவீத நிறுவனங்கள், உற்பத்தி வேலை முடிந்துவிட்ட ஆடைகளுக்குப் பணம் தர மறுத்துவிட்டன என்றும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதன் விளைவாக, கணக்கெடுப்பு நடத்திய ஆயத்த ஆடை நிறுவனங்களில், 58 சதவீத நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. ``2 மில்லியனுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இதனால் வேலை இழப்பார்கள்'' என்று வங்கதேச ஆயத்த ஆடை தயாரிப்பாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ருபானா ஹக் எச்சரித்துள்ளார்.

``எந்த வாடிக்கையாளர் நிறுவனங்களும் இப்போது சட்டை, பேண்ட்களை வாங்காது. நோய்த் தொற்று சூழ்நிலையில் உணவு மற்றும் மருந்துக்கான செலவுகளை அதிகரிப்பதில் அவை கவனம் செலுத்துகின்றன'' என்று அவர் தெரிவித்தார்.

முதலாளிகளுக்கும் பாதிப்பு

மிசாமி ஆயத்த ஆடை லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருப்பவர் மீரான் அலி. H & M நிறுவனத்துக்கான ஆடைகளை இவருடைய நிறுவனம் 1991ஆம் ஆண்டில் இருந்து தயாரிக்கிறது.

``நாங்கள் பெரிய நிதிச் சிக்கலை சந்தித்துக் கொண்டிருக்கிறோம்'' என்று அவர் கூறினார்.

Banner image reading 'more about coronavirus'
Banner image reading 'more about coronavirus'

அவருடைய நிறுவனத்தில் சுமார் 16 ஆயிரம் பேர் வேலை பார்க்கிறார்கள். விரைவில் நிறுவனத்தைத் திறந்துவிட வேண்டும் என்று அவர் விரும்புகிறார். ஆனால் சமூக இடைவெளியைப் பராமரிப்பது என்பது பெரிய சிக்கலை உருவாக்கும் என்கிறார் அவர்.

ஊதியங்களுக்கு மானியம் தர ஊக்கத் திட்டங்களை அரசு அளிக்கிறது என்றாலும், சவால்கள் பெரியவையாக உள்ளன.

அச்சம் நிறைந்த சூழ்நிலை

வங்கதேசத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதை அடுத்து மார்ச் 26ஆம் தேதியில் இருந்து முடக்கநிலை அமலில் உள்ளது.

ஏப்ரல் 23 ஆம் தேதி நிலவரத்தின்படி, அங்கு 4,186 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, 127 மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: