கொரோனா வைரஸ்: தமிழ்நாட்டில் மேலும் 72 பேருக்குக் கோவிட் -19 தொற்று

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டில் மேலும் 72 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 114 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். இருவர் உயிரிழந்துள்ளனர்.

தமிழக சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமையன்று வெளியிட்டுள்ள தகவல்களின்படி, மாநிலத்தில் இன்று புதிதாக 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,755ஆக உயர்ந்துள்ளது.

1846 பேர் நோய் அறிகுறிகளுடன் மருத்துவனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். 114 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 866ஆக உயர்ந்துள்ளது.

தற்போது மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை நேற்று 908ஆக இருந்த நிலையில், இன்று அந்த எண்ணிக்கை 864ஆக குறைந்துள்ளது.

Banner image reading 'more about coronavirus'

கடந்த 24 மணி நேரத்தில் 6,426 பேருக்கு சோதனைகள் செய்யப்பட்டிருக்கும் நிலையில், இதுவரை தமிழகத்தில் 72,403 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன. 25,503 பேர் அவரவர் வீடுகளிலும் 19 பேர் அரசின் தனிமைப்படுத்தும் முகாம்களிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இன்று பாதிக்கப்பட்டவர்களில் அதிகமானோர் சென்னையைச் சேர்ந்தவர்கள். 72 பேரில் 52 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதனால், சென்னையில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 452ஆக உயர்ந்துள்ளது. கோவையில் ஏழு பேரும் மதுரையில் 4 பேரும் இன்று தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

மதுரையில் வாகனத்திற்கான அனுமதிச் சீட்டைப் பெற குவிந்த கூட்டம்

இதனிடையே, மதுரையில் மாநகராட்சிப் பகுதியில் வாகனங்களை குறிப்பிட்ட நேரங்களில், குறிப்பிட்ட பணிகளுக்காக பயன்படுத்துவதற்கான அனுமதிச் சீட்டைப் பெறுவதற்கு பெரும் எண்ணிக்கையில் மக்கள், குவிந்ததால் பழைய நடவடிக்கையே தொடருமென அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் ஏற்கனவே பலருக்கும் அத்தியாவசியப் பணிகளுக்காக பாஸ்கள் வழங்கப்பட்டிருந்த நிலையில், வாகனங்களின் எண்ணிக்கை வீதிகளில் அதிகரித்தது. ஆகவே, புதிதாக க்யூ - ஆர் கோடுடன் பாஸ்களைப் பெற வேண்டுமென மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.

இந்த பாஸ் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் வழங்கப்படுமென தகவல் வெளியானதும் பெரும் எண்ணிக்கையில் மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர்.சமூக இடைவெளி ஏதும் கடைப்பிடிக்காமலும் முகக் கவசம் அணியாலும் பலர் பாஸ்களை வாங்க முண்டியடித்தனர்.

மதுரையில் வாகனத்திற்கான அனுமதிச் சீட்டைப் பெற குவிந்த கூட்டம்

பட மூலாதாரம், Getty Images

காவல்துறையினர் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முயன்றாலும் மேலும் மேலும் ஆட்கள் வாகனங்களுடன் குவிந்ததால், ஆட்சியர் அலுவலகத்தின் வாசல் அடைக்கப்பட்டது.

இதற்குப் பிறகு, பழைய முறையே கடைப்பிடிக்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டது.

மதுரை மாநகராட்சிப் பகுதியில் வெள்ளிக்கிழமையன்று ஒரு பெண் கொரோனாவுக்கு உயிரிழந்திருக்கும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை முதல் புதன்கிழமை இரவு வரை எல்லாக் கடைகளையும் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவையில் காவலர்களுக்கு கொரோனா

கொரோனா

கோவையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 6 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை போத்தனூர் காவல்நிலையத்தில் பணிபுரிந்து வரும் 3 ஆண் காவலர்கள் மற்றும் 3 பெண் காவலர்களுக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, போத்தனூர் காவல்நிலையத்தை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. தற்காலிகமாக, வேறு இடத்தில் காவல்நிலையம் இயங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், பாதிக்கப்பட்டவர்களோடு பணியாற்றிய காவலர்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: