கொரோனா வைரஸ்: "இந்தியாவில் எந்த திட்டமும் இல்லாமல் முடக்கநிலை அறிவிக்கப்பட்டது" - ஸ்டீவ் ஹான்கே

பட மூலாதாரம், Getty Images
ஸ்டீவ் ஹான்கே அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் பயன்பாட்டு பொருளாதாரத்தின் பேராசிரியராகவும், ஜான் ஹாப்கின்ஸ் இன்ஸ்டிடியூட் ஃபார் அப்ளைடு எகனாமிக்ஸ், குளோபல் ஹெல்த் மற்றும் பிசினஸ் எண்டர்பிரைஸ் ஸ்டடீஸின் நிறுவனர் மற்றும் இணை இயக்குநராகவும் உள்ளார். உலகின் முன்னணி பொருளாதார நிபுணரான பேராசிரியர் ஸ்டீவ், பிபிசி செய்தியாளர் ஜுபைர் அகமதுவுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள முடக்க நிலை, மோதி அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார்.
கொரோனா வைரஸ் நெருக்கடியை எதிர்த்துப் போராட இந்திய அரசு தயாராக இருக்கவில்லை என்று பிரபல பொருளாதார நிபுணரும் பேராசிரியருமான ஸ்டீவ் ஹான்கே கூறுகிறார். பிபிசிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், "இந்த தொற்றுநோய்க்கு எதிரான போருக்கு இந்தியா தயாராக இல்லை. இந்தியாவில் கோவிட்-19 நோய்த்தொற்றை பரிசோதிக்கும் அல்லது சிகிச்சை அளிக்கும் திறன் குறைவாக உள்ளது" என்று அவர் கூறுகிறார்.
இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள முடக்க நிலை சில அத்தியாவசிய சேவைகளையும் பாதிப்பதாக அவர் விமர்சிக்கிறார்.

முழு முடக்க நிலை சரியான நடவடிக்கை அல்ல
இந்திய பிரதமர் நரேந்திர மோதி நாட்டில் முடக்க நிலையை அமல்படுத்தப்படுத்தியபோது அதை ஆதரிப்பதாக குறிப்பிடப்பட்ட பேராசிரியர் ஸ்டீவ், தான் முழு முடக்கத்தை ஆதரிக்கவே இல்லை என்று பிபிசியிடம் கூறினார். “முழு முடக்கத்துக்கு நான் எப்போதும் ஆதரவாக இருந்ததில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். தென் கொரியா, ஸ்வீடன், ஐக்கிய அரபு அமீரகத்தை போன்று புதுமையான, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்ட திட்டங்களையே நான் ஆதரித்துள்ளேன்.”

“மோதி அமல்படுத்திய முடக்க நிலையின் அடிப்படை பிரச்சனையே அது எவ்வித திட்டமும் இல்லாமல் அமல்படுத்தப்பட்டதுதான். மோதிக்கு ‘திட்டம்’ என்றால் என்னவென்று கூட தெரியாது என்று நான் கருதுகிறேன்” என்று அவர் இந்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டை முன்வைக்கிறார்.
இந்தியாவில் மார்ச் 24ஆம் தேதி முழு முடக்க நிலை அறிவிக்கப்படுவதற்கு முன்னர், அதற்கு ஒத்திகையாக மார்ச் 22ஆம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோதி அறிவித்த, “மக்கள் ஊரடங்கு” நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. முழு முடக்க நிலைக்கு தயாராவதற்கு மக்களுக்கு வெறும் நான்கு மணிநேரம் மட்டுமே அவகாசம் கிடைத்தது.

பட மூலாதாரம், Getty Images
இந்த நிலையில், இந்தியாவில் ஏன் மிகவும் தாமதமாக முடக்க நிலை அமல்படுத்தப்பட்டது என்றும், அதை எதன் அடிப்படையில் அரசு முடிவுக்கு கொண்டுவர உள்ளது என்றும் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். பிப்ரவரி 24ஆம் தேதி குஜராத்தின் அகமதாபாத் நகரில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி பிரமாண்டமான வரவேற்பை கொடுத்த சமயத்தில் சிங்கப்பூர், இத்தாலி, ஜப்பான் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளில் பகுதியளவு முடக்க நிலை அமலில் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்தியாவில் முதல் கொரோனா பாதிப்பு கேரளாவில் ஜனவரி 30ஆம் தேதியே உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
ஏழைகளையே பெரிதும் பாதிக்கிறது
இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள முடக்க நிலையால் ஏழை மக்களே பெரிதும் பாதிக்கப்படுவதாக பேராசிரியர் ஸ்டீவ் கருதுகிறார். “மோதி தயாராக இல்லை, இந்தியாவில் தேவையான மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. மோதியின் இந்த நடவடிக்கை இந்தியாவின் மிகவும் ஏழை மக்களிடையே மிகுந்த பீதியை உண்டாக்கி உள்ளது. கிட்டத்தட்ட 81 சதவீத இந்தியர்கள் நாட்டின் முறைசாரா பொருளாதாரத்திற்கு பங்களிப்பவர்களாக உள்ளனர். இந்தியாவில் உள்ள தேவையற்ற மற்றும் அடக்குமுறை அரசாங்க விதிமுறைகள், பலவீனமான சட்ட விதிகள் மற்றும் நிச்சயமற்ற சொத்து உரிமைகளே முறைசாரா பொருளாதாரத்திற்கு காரணமாக உள்ளது.”

- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் குணமடைந்த பின்னும் மீண்டும் தாக்குமா?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
"பொருளாதாரத்தை சீர்திருத்துவது, சட்டத்தின் ஆட்சியை அமல்படுத்துவது, ஊழல் நிறைந்த அரசமைப்பு மற்றும் நீதி அமைப்புகளை சீர்திருத்துவது போன்றவையே இந்தியாவில் முறைசாரா பொருளாதாரத்தை குறைப்பதற்கான ஒரே வழி. பணமதிப்பிழப்பு போன்ற திட்டமிடப்படாத சீர்த்திருத்தங்களின் மூலம் இந்தியர்களை நவீன, முறைசார் பொருளாதாரத்துக்கு மாற்ற முடியாது” என்று அவர் மேலும் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
மோசமான சுகாதார கட்டமைப்பு
“இந்தியாவில் ஒவ்வொரு 1,000 மக்களுக்கும் 0.7 படுக்கை வசதிகள், 0.8 மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். உதாரணமாக, 12.6 கோடி மக்கள் வசிக்கும் மகாராஷ்டிராவிலுள்ள அரசு மருத்துவமனைகளில் வெறும் 450 வென்டிலேட்டர்கள் மற்றும் 502 தீவிர சிகிச்சை பிரிவுகள் மட்டுமே உள்ளது இந்தியாவின் திறனை காட்டுகிறது. கொரோனா வைரஸில் மிகப் பெரிய பிரச்சனையே நோய் அறிகுறியற்றவர்கள் தங்களை அறியாமலேயே நோய்த்தொற்றை பலருக்கும் பரப்ப கூடும் என்பதுதான். எனவே, அதை எதிர்கொள்வதற்கு ஒரே வழி சிங்கப்பூரை போன்று பரிசோதனை செய்து நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிவதுதான். ஆனால், அதை செயல்படுத்துவதற்கான திறன் இந்தியாவில் மிகவும் குறைவாகவே உள்ளது.”
கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஆலோசனை வழங்கி வரும் பேராசிரியர் ஸ்டீவ், “கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் வெற்றிகண்டுள்ள அனைத்து நாடுகளும் இலக்கற்ற திட்டங்களை தவிர்த்தன. மாறாக துல்லியமான இலக்குகளை கொண்ட திட்டங்களை செயல்படுத்தினார்கள்” என்று கூறுகிறார்.
“பாகிஸ்தான் ஒரு நிர்வகிக்க முடியாத நாடு”
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பாகிஸ்தான் முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள முடக்கத்தை மீறி அந்த நாட்டு மதத்தலைவர்கள் ரம்ஜானை ஒட்டி நாடு முழுவதும் மசூதிகள் திறந்தே இருக்கும் என்று அறிவித்துள்ளார்கள்.

பட மூலாதாரம், Getty Images
இதுகுறித்து கருத்துத் தெரிவித்த பேராசிரியர் ஸ்டீவ், “இஸ்லாமிய மதத்தலைவர்கள் சட்டத்தின் ஆட்சியை மதிக்கவில்லை. பாகிஸ்தானின் பிரச்சனை என்னவென்றால் நிர்வகிக்கவே முடியாத ஒரு நாட்டுக்கு இம்ரான் கான் பிரதமராக இருக்கிறார். அங்கு சட்டத்தின் ஆட்சி அமலில் இல்லை. மாறாக, அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளை பிடிக்காத மதத் தலைவர்கள் அதை சர்வ சாதாரணமாக மீறுகிறார்கள்” என்று பேராசிரியர் ஸ்டீவ் கூறுகிறார்.
கிட்டத்தட்ட பாகிஸ்தானை தவிர்த்து உலகின் மற்ற அனைத்து இஸ்லாமிய நாடுகளும் கொரோனா வைரஸின் தீவிரத்தை உணர்ந்து பெரியளவிலான மத வழிபாட்டு கூடலுக்கு தடைவிதித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
அரசின் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும்?
இந்தியா மட்டுமல்ல உலகின் பல்வேறு நாடுகளின் அரசுகளின் மீதும் கொரோனா வைரஸ் விவகாரத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள பேராசிரியர் ஸ்டீவ், “இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் உலகம் மிகப் பெரிய நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதுபோன்ற சமயத்தில் அரசின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் ஒருபுறம் வைத்து விட்டு, இனி என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க வேண்டும். அரசு தனது நோக்கத்தையும், திட்டங்களையும் விரிவுபடுத்த வேண்டும். அரசு தனது பலத்தையும், அதிகாரத்தையும் பயன்படுத்த வேண்டும்.”

ஆனால், இந்த விவகாரத்தில் இந்திய பிரதமர் மோதியின் செயல்பாட்டை பேராசிரியர் ஸ்டீவ் விமர்சிக்கிறார். அரசின் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த “எழுச்சியூட்டும் மற்றும் நேர்மறையான செய்திகளை” வெளியிடுமாறு ஊடகங்களுக்கு அறிவுறுத்துவது, காஷ்மீரில் நீண்டகாலமாக இணைய முடக்கம் செய்துள்ளது போன்ற வகைகளிலே அதிகாரத்தை நரேந்திர மோதி பயன்படுத்துவதாக அவர் குற்றஞ்சாட்டுகிறார்.
டிரம்பின் செயல்பாடு

பட மூலாதாரம், Getty Images
கொரோனா வைரஸின் பரவல் குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கைவில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இதுகுறித்து கருத்துத் தெரிவித்த 77 வயதாகும் பேராசிரியர் ஸ்டீவ், “கொரோனா வைரஸ் பரவலுக்கான முழு குற்றச்சாட்டையும் உலக சுகாதார நிறுவனத்தின் மீது டிரம்ப் சுமத்தவில்லை. பெருத்தொற்று விவகாரத்தை உலக சுகாதார நிறுவனம் முற்றிலும் தவறாக கையாண்டதுடன், சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஊதுகுழலாக செயல்பட்டது என்றுதான் அவர் கூறி வருகிறார்.”
“உலக சுகாதார நிறுவனமும், அதன் தலைவரும் சீனாவுக்கு ஆதராக செயல்பட்டுள்ளது தெளிவாக தெரிகிறது. உலகில் மிகவும் அரசியல்மயமாக்கப்பட்ட அதிகார அமைப்புகளில் ஒன்றான உலக சுகாதார நிறுவனம் வெகுகாலத்திற்கு முன்பே கட்டுப்படுத்தப்பட்டு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்க வேண்டும்” என்று அவர் மேலும் கூறுகிறார்.
சிங்கப்பூரின் செயல்பாடு.
சிங்கப்பூரின் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையை பேராசிரியர் ஸ்டீவ் பெரிதும் பாராட்டுகிறார். “சிங்கப்பூரை பாருங்கள். 1965ஆம் ஆண்டில் சுதந்திரம் பெற்றபோது, ஒரு வறிய, மலேரியாவால் பாதிக்கப்பட்ட தீவாக இருந்த சிங்கப்பூர் தற்போது உலகத் தரம் வாய்ந்த நிதி அதிகார மையமாக மாற்றப்பட்டுள்ளது. லீ குவான் யூவின் ‘சிறிய அரசு, தடையற்ற சந்தை பார்வையின்’ விளைவாக, இன்று, சிங்கப்பூர் ஒரு சிறிய, ஊழல் இல்லாத மற்றும் திறமையான அரசாங்கத்தைக் கொண்ட உலகின் சிறந்த தடையற்ற சந்தை பொருளாதாரங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது.”
“கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை மற்ற உலக நாடுகளை விட சிங்கப்பூர் திறம்பட எதிர்கொள்வதில் வியப்பேதும் இல்லை” என்று அவர் கூறுகிறார்.
அதிகளவிலான பரிசோதனைகளை மேற்கொள்ளல்
அனைத்துவிதமான சிக்கலுக்கும் தீர்க்கமான செயல்முறையே திறம்பட போராட உதவும் என்று பேராசிரியர் ஸ்டீவ் கூறுகிறார். “நெருக்கடி நிலைகளின்போது, நேரமே நமக்கு எதிரி. அதிகபட்ச செயல்திறனுக்காக, ஒருவர் தீர்க்கமாகவும், தைரியமாகவும், விரைவாகவும் செயல்பட வேண்டும். அதிபர் டிரம்ப் அவ்வாறு செய்யவில்லை. ஆனால், அவர் மட்டுமல்ல, பல அரசாங்கங்களும் மந்தமாக செயல்பட்டன. வுஹானில் என்ன நடக்கிறது என்பதை சீனா மறைத்ததும் அதற்கு உலக சுகாதார நிறுவனம் துணைபோனதுமே அதற்கு முக்கிய காரணம். இன்று வரை கூட தங்களது நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பரிசோதனைகள் குறித்த தரவை சீனா வெளியிடவில்லை” என்று அவர் கூறுகிறார்.
பிற செய்திகள்:
- பத்திரிகையாளர் அர்னாப் தாக்கப்பட்டாரா? சோனியாவை சீண்டியதற்காக குவியும் வழக்குகள்
- "அலாதி அன்பிருந்தால் அனாதை யாருமில்லை" வைரலாகும் கமல்ஹாசனின் கொரோனா விழிப்புணர்வு பாடல்
- இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்தது
- உலகளவில் இறைச்சி சந்தைகளுக்கு புதிய வழிமுறைகள் - வுஹான் பாதிப்பு எதிரொலி?












