'அறிவும் அன்பும்' - சமூகவலைதளங்களில் வைரலாகும் கமல்ஹாசனின் கொரோனா விழிப்புணர்வு பாடல்

'அறிவும் அன்பும்' விழிப்புணர்வு பாடல்

பட மூலாதாரம், KAMAL HAASAN / TWITTER

கொரோனா தொற்று தொடர்பாக பல்வேறு நடிகர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் பாடல்கள், குறும்படங்கள் மற்றும் வீடியோக்களை பல்வேறு பிரபலங்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். அந்த வரிசையில் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் விழிப்புணர்வு பாடல் ஒன்றை எழுதி, இயக்கியிருக்கிறார்.

திங்க் மியூசிக் சார்பில் உருவாகியுள்ள 'அறிவும், அன்பும்' எனத் தொடங்கும் இந்தப் பாடலுக்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். இந்தப் பாடல் மாஸ்டர் லிடியனுடைய இசையுடன் தொடங்குகிறது.

பாடகர்கள் பாம்பே ஜெயஶ்ரீ, சித்ஶ்ரீராம், ஷங்கர் மகாதேவன், இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, அனிருத், தேவி ஶ்ரீ பிரசாத், திரைப்பட நட்சத்திரங்களான ஆண்ட்ரியா, சித்தார்த், பிக்பாஸ் பிரபலம் முகேன் ராவ், ஸ்ருதிஹாசன், உள்ளிட்டோர் இணைந்து இந்தப் பாடலை பாடியிருக்கின்றனர்.

Banner image reading 'more about coronavirus'
Banner image reading 'more about coronavirus'

இவர்கள் அனைவரும் அவரவர் வீட்டில் இருந்தபடியே இந்தப் பாடலை பாடியுள்ளனர். பின்னர் அவற்றையெல்லாம் தொகுத்து இந்தப் பாடலை வெளியிட்டுள்ளனர். தொலைபேசி அழைப்பின் மூலம் அனைவரையும் ஒருங்கிணைத்திருக்கிறார்கள்.

' பொது நலமென்பது தனிமனிதன் செய்வதே... தன் நலமென்பதும் தனிநபர்கள் செய்வதே' என இந்தப் பாடல் தொடங்குகிறது.

'அறிவும் அன்பும்' என்கிற இப்பாடலை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். இந்தப் பாடலின் பாடல் வரிகளை கமல்ஹாசன் அவருடைய ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்திருக்கிறார்.

'அறிவும் அன்பும்' விழிப்புணர்வு பாடல்

பட மூலாதாரம், KAMAL HAASAN / TWITTER

இதனையடுத்து #கமலின்_அறிவும் அன்பும் என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

முன்னதாக 'ஃபேமிலி' என்கிற குறும்படத்தை சோனி டிவி வெளியிட்டிருந்தது. நான்கு நிமிடங்களுக்கு மேலாக எடுக்கப்பட்ட அந்த குறும்படத்தில், நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், மோகன்லால், மம்மூட்டி, பிரியங்கா சோப்ரா, ரன்பீர் கபூர், சிரஞ்சீவி, ஆலியா பட், புரோசென்ஜித் சாட்டர்ஜி, சிவ ராஜ்குமார், தில்ஜித் தோஸாஞ் போன்றோர் நடித்திருந்தார்கள். அவரவர் வீட்டிலிருந்தபடியே எடுக்கப்பட்ட அந்தக் குறும்படத்தை பிரசூன் பாண்டே இயக்கியிருந்தார்.

அதே போன்று வைரமுத்து வரிகளில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விழிப்புணர்வு பாடலை பாடியிருந்தார்.

மேலும், பாடலாசிரியர் சிற்றரசு வரிகளில் 'இது என்ன உலகமடா.. கண்ணு கலங்குதடா' என்கிற பாடலை வேல்முருகன் பாடியிருந்தார்.

'உன்னை காக்கும் நேரமிது' எனத் தொடங்கும் பாடலை இயக்குநர் சீனுராமசாமி எழுதிய கொரோனா விழிப்புணர்வு பாடலை செந்தில்தாஸ் பாடியிருந்தார்.

'என்னங்க நடக்குது நாட்டுல' என கானா மணி எழுதிய பாடலை டான்ஸ் மாஸ்டர் சாண்டி பாடியிருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: