கொரோனா வைரஸ்: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அர்ச்சகருக்கு கோவிட்-19 தொற்றா?

MADURAI MEENAKSHI TEMPLE

பட மூலாதாரம், MADURAIMEENAKSHITEMPLE.COM

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பணியாற்றும் அர்ச்சர் ஒருவருக்கு கொரோனா இருப்பதாக செய்தி பரவியதையடுத்து வியாழக்கிழமையன்று பரபரப்பு ஏற்பட்டது.

கொரோனாவுடன் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

மதுரை மேலமாசி வீதியில் வசித்துவந்த பெண்மணி ஒருவருக்கு நேற்று கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. 72 வயதான அவருடைய இரண்டு மகன்களும் மீனாட்சி அம்மன் கோயிலில் பணியாற்றுபவர்கள் என்பதால், கோவில் அர்ச்சகர்களுக்கு கொரோனா என செய்தி பரவியது.

அந்த மூதாட்டி நீண்ட காலமாகவே இருத நோய் உள்ளிட்ட பல உடல்நலப் பிரச்சனைகளுக்காக சிகிச்சை எடுத்துவந்த நிலையில், சில நாட்களாக அவருக்கு கொரோனாவுக்கான அறிகுறிகள் தென்பட்டன.

முதலில் எடுத்த சோதனையில் கொரோனா நோய் உறுதிப்படுத்தப்படாத நிலையில், நேற்று மீண்டும் சோதனைகள் நடத்தப்பட்டன.

Banner image reading 'more about coronavirus'

அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடத்தப்பட்ட சோதனையில் அந்தப் பெண்மணிக்கு கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதற்குப் பிறகு அவரது வீட்டில் இருந்த குடும்ப உறுப்பினர்கள் ஏழு பேர், வீட்டில் பணியாற்றிய பெண் ஒருவர், அந்தப் பெண் பணியாற்றிய வேறு வீடுகளில் இருந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா சோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

கொரோனா தொற்று

அந்த மூதாட்டியின் மகன்கள் இருவரும் கோயில் அர்ச்சகர்கள் என்றாலும் சில நாட்களாக அவர்கள் கோயிலுக்குச் செல்லவில்லையெனச் சொல்லப்படுகிறது.

இருந்தபோதும் அவரது வீட்டிற்கு அருகில் உள்ளவர்கள் கோயிலில் பணியாற்றியதால், நேற்று முதல் மதுரைக் கோயிலைச் சுத்தம் செய்யும் பணிகள் துவங்கின.

கோயிலில் பணியாற்றிய காவலர்கள், அர்ச்சகர்கள், அவர்களது குடும்பத்தினர் என 180 பேருக்கு கொரோனா சோதனை எடுக்கப்பட்டிருப்பதாக மதுரையின் சுகாதாரத் துறை அதிகாரி வினோத் பிபிசியிடம் தெரிவித்தார்.

வெளிநாடு சென்றுவந்த கோவில் அர்ச்சகர்கள் அதனை மறைத்துவிட்டதாகவும், அவர்களுக்கு கொரோனா ஏற்பட்டுவிட்டதாகவும் சில ஊடகங்களில் நேற்று செய்தி வெளியான நிலையில், இதனை அக்கோயிலில் உள்ள ஆதி சிவாச்சாரியார்கள் சங்கம் மறுத்திருக்கிறது.

இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த அந்த மூதாட்டி அதிகாலையில் உயிரிழந்த நிலையில், அவரது உடல் இன்று காலையில் தகனம் செய்யப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: