கோவையை சேர்ந்த ஆன்லைன் இதழின் ஆசிரியர் கைது; அரசியல் தலைவர்கள் கண்டனம்

கோவையை சேர்ந்த ஆன்லைன் இதழின் ஆசிரியர் கைது

பட மூலாதாரம், FACEBOOK

அரசு ஊழியர்களை போராடத் தூண்டும் வகையில் பொய்யான செய்திகளை வெளியிட்டதாக கோயம்புத்தூரைச் சேர்ந்த ஆன்லைன் இதழின் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு தி.மு.க., அ.ம.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

கோவையை மையமாக வைத்து இயங்கி வரும் ஆன்லைன் இதழான சிம்பிளிசிட்டியில் கடந்த 14ஆம் தேதி கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் பயின்று வரும் முதுகலை மருத்துவ மாணவர்களுக்கு முறையான உணவு வழங்கப்படவில்லை என்ற செய்தி வெளியிடப்பட்டது.

இதனையடுத்து, கோவை அரசு மருத்துவக்கல்லூரி தலைவர் அசோகன் இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்குப் பிறகு கடந்த 17ஆம் தேதி, ரேஷன் கடை ஊழியர்கள், பொதுமக்களுக்கான நிவாரணத் தொகையில் முறைகேடு செய்வதாக அந்த இதழில் செய்தி வெளியானது.

இந்தச் செய்திகள் தொடர்பாக, கோவை மாநகராட்சியில் பணியாளர் நிர்வாகத்தின் உதவி ஆணையாளராக பணிபுரியும் சுந்தரராஜன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அவர் அளித்த புகாரில், சிம்பிளிசிட்டி செய்தி நிறுவனம் நோய்த்தொற்று பரவிவரும் இந்த காலகட்டத்தில் பொய்யான தகவல்களை வெளியிட்டு அரசு ஊழியர்களை போராடத் தூண்டுவதாகவும், இந்த செய்திகளினால் அரசு நிர்வாகம் இயங்குவதில் இடர்பாடுகள் ஏற்படும் எனவும் குறிப்பிட்டிருந்தது. சிம்ப்ளிசிடி இதழின் நிறுவனர் மற்றும் ஆசிரியரான ஆண்ட்ரூஸ் சாம் என்பவர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், வியாழக்கிழமையன்று காலையில் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் புகைப்படக் கலைஞர் பாலாஜி, செய்தியாளர் ஜெரால்டு அருள்தாஸ் ஆகியோர் ஆர்.எஸ். புரம் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர், நிறுவனத்தின் உரிமையாளர் சாமும் அவரது வழக்கறிஞர்களும் காவல் நிலையத்திற்கு வந்தனர்.

Banner image reading 'more about coronavirus'

பின்னர், இரவு 8.30 மணி அளவில் புகைப்படக்கலைஞரும் செய்தியாளரும் விடுவிக்கப்பட்டனர். சாம் மீது ஐ.பி.சி 188, 505 (1) (b) Epidemic disease act ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, அவிநாசி சிறையில் அடைக்கப்பட்டார்.

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பத்திரிகையாளரை உடனடியாக விடுதலைசெய்ய வேண்டுமெனக் கோரியுள்ளார். அவர் விடுத்துள்ள கண்டன அறிக்கையில், "ஊடகத்தினர் மீது வன்மம் கொண்டு, ஏற்கனவே அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செயல்பட்ட நிலையில், தற்போது முதலமைச்சரின் நிழலாக வலம்வரும் அமைச்சர் வேலுமணியும் காவல்துறையைப் பயன்படுத்தி, அதிகார அத்துமீறல் நடத்தி ஆட்டம் போடுவதை தி.மு.கழகத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ்

"தவறுகளை சரி செய்யாமல், உண்மையை சொன்னதற்கு சிறையில் அடைப்பது சர்வாதிகாரம். ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிக்கை துறையை முடக்காதீர்கள். கைது செய்தவரை விடுதலை செய்யுங்கள்" என மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.

"அரசு நிர்வாகத்தில் ஏற்படும் தவறுகளைச் சுட்டிக்காட்டினாலே கைதுசெய்வது என்பது ஜனநாயக நாட்டில் மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்." என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

பல்வேறு பத்திரிகையாளர் அமைப்புகளும் இந்த கைது நடவடிக்கையை கண்டித்துள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: