'அமெரிக்காவுக்காக சீனாவை உளவு பார்க்க டெஸ்லா கார்கள்' - ஈலான் மஸ்க்கின் பதில் என்ன?

Elon Musk denies Tesla cars are used for spying in China

பட மூலாதாரம், EPA

தங்கள் நிறுவனத்தின் வாகனங்கள் சீனாவை உளவு பார்ப்பதற்காக பயன்படுத்தப்பட்டால் தங்களது நிறுவனமே இழுத்து மூடப்படும் என்று அமெரிக்க எலக்ட்ரிக் கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரி ஈலான் மஸ்க் கூறியுள்ளார்.

டெஸ்லா தயாரித்த கார்கள் தங்களை உளவு பார்க்க பயன்படுத்தப்படுவதால் அவற்றை சீன ராணுவம் தடை செய்துள்ளதாக வெளியான செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்து பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

டெஸ்லா நிறுவனம் தயாரிக்கும் எலக்ட்ரிக் கார்களில் பொருத்தப்பட்டுள்ள கேமரா சேகரிக்கும் தரவுகள் குறித்து சீன ராணுவம் கவலைகள் வெளியிட்டிருந்தது.

அமெரிக்காவிற்கு பிறகு சீனாதான் டெஸ்லா கார் நிறுவனத்துக்கு மிகப்பெரிய சந்தையாக உள்ளது. 2020ஆம் ஆண்டு டெஸ்லா நிறுவனம் விற்பனை செய்த எலக்ட்ரிக் கார்களில் சுமார் நான்கில் ஒரு பங்கு கார்கள் சீனாவில் விற்பனை செய்யப்பட்டிருந்தன.

"ஒரு தொழில் நிறுவனம் வெளிநாட்டு அரசை உளவு பார்க்கும் வேலையில் ஈடுபட்டிருந்தால், அது அந்த நிறுவனத்தின் மீது உண்டாக்கும் எதிர்மறைத் தாக்கங்கள் மிகவும் மோசமானதாக இருக்கும்," என்று சனிக்கிழமை அன்று மஸ்க் தெரிவித்துள்ளார்.

தாங்கள் சேகரிக்கும் எந்தவிதமான தரவுகளையும் கசிய விடாமல் ரகசியமாக வைத்துக்கொள்வதற்கு தங்களுக்கு மிகுந்த உந்துதல் இருப்பதாகவும் சீனா அல்லது வேறு நாட்டில் உளவு பார்ப்பதற்காக டெஸ்லா நிறுவனத்தின் கார்கள் பயன்படுத்தப்பட்டால் அவை இழுத்து மூடப்படும் என்றும் சீன தொழிலதிபர்கள் கலந்துகொண்ட ஓர் இணையதள கூட்டத்தில் ஈலான் மஸ்க் தெரிவித்திருந்தார். இந்தக் கூட்டத்தில் காணொலிக் காட்சி வாயிலாக அவர் பங்கேற்றார்.

சீனாவில் அமெரிக்காவை சேர்ந்த பெரிய நிறுவனங்கள் செயல்படுவது மற்றும் அமெரிக்காவில் சீனாவைச் சேர்ந்த பெரிய நிறுவனங்கள் செயல்படுவது ஆகியவற்றில் நீண்ட காலமாகவே ஓர் அசௌகரியமான சூழ்நிலை நிலவி வருகிறது.

உலகின் முதல் மிகப்பெரிய பொருளாதாரங்களாக உள்ள சீனா மற்றும் அமெரிக்கா இடையே கடந்த சில ஆண்டுகளாகவே மோசமான உறவு நீடித்து வருகிறது.

Tesla: Elon Musk

பட மூலாதாரம், Getty Images

கடந்த வாரம் சீனாவின் உயரதிகாரிகள் மற்றும் ஜோ பைடன் நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள் ஆகியோர் இடையே அலாஸ்காவில் நடந்த சந்திப்பின்போது மிகவும் கோபமான சொல்லாடல்கள் பயன்படுத்தப்பட்டன.

சீனா மற்றும் அமெரிக்கா இடையே இன்னும் அதிகமான பரஸ்பர நம்பிக்கை உருவாக்கப்பட வேண்டுமென்று ஈலான் மஸ்க் வலியுறுத்தியுள்ளார்.

மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் இருந்து இயங்குகிறது.

"தொழில் நிறுவனங்கள் தாங்கள் சார்ந்துள்ள நாடுகளிடம், தாங்கள் சேகரிக்கும் தரவுகளை பகிர்ந்து கொள்வது குறித்து அதிகம் கவலை கொள்ளத் தேவையில்லை," என்று ஈலான் மஸ்க் தெரிவித்திருந்தார் சீனாவை சேர்ந்த டிக்டாக் செயலியைக் குறிப்பிட்டு அவர் இவ்வாறு தெரிவித்தார்.

டிக்டாக் செயலி மூலம் சேகரிக்கப்படும் அமெரிக்க பயனாளர்களின் தரவுகள் சீன அரசுடன் பகிர்ந்துக்கொள்ளப்படுவதாக கடந்த ஆண்டு குற்றம் சாட்டி இருந்த அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், டிக்டாக் செயலியை அமெரிக்காவில் தடை செய்யப் போவதாகவும் எச்சரித்திருந்தார்.

"ஒருவேளை இந்த செயலிகள் உளவு பார்ப்பதற்காகவே பயன்படுத்தப்பட்டாலும் அந்த தகவல்களை பெறும் நாடு எதை கற்றுக் கொள்ளும், அது உண்மையாகவே பிரச்னையா," என்று கேள்வி எழுப்பினார் மஸ்க்.

டெஸ்லா நிறுவனம் கடந்த 2018ஆம் ஆண்டு ஷாங்காயில் தொழிற்சாலை அமைப்பதற்கு சீன அரசிடம் ஒப்புதல் பெற்றது.

வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுக்கு முழுமையாகச் சொந்தமான வாகன உற்பத்தி தொழிற்சாலை சீனாவில் நிறுவப்படுவது அதுவே முதல் முறையாகும்.

தற்போது உலகிலேயே மிகப்பெரிய கார் சந்தையாக சீனா நிலவுகிறது. எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த சீன அரசு ஊக்குவித்து வருகிறது.

சீனாவில் கார் சந்தையில் நிலவும் தேவைகள் டெஸ்லா நிறுவனம் 2020ஆம் ஆண்டு 721 மில்லியன் அமெரிக்க டாலர் லாபம் சம்பாதிப்பதற்கு உதவியாக இருந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :