தங்க பத்திரத்தை எவ்வாறு வாங்கலாம்? தங்க நகைகள் தவிர பிற முதலீடுகள் என்னென்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், கமலேஷ்
- பதவி, பிபிசி செய்தியாளர்
இந்தியாவில் தங்கத்தில் முதலீடு செய்யும் பாரம்பரியம் நீண்டகாலமாக உள்ளது. வீடுகளில் ஏதாவது கஷ்டம் வரும்போது கைகொடுக்கும் துணை என்றும் தங்கம் கருதப்படுகிறது. தங்க நகைகளை அணிவதோடு பெண்கள் அவசரகாலத்தில் உதவிக்காவும் அதை பாதுகாத்து வைக்கிறார்கள்.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்திலும் தங்கம் ஒரு பாதுகாப்பான மாற்றுவழியாக இருப்பதை பார்க்க முடிகிறது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடையும் போதும், தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. ரூபாய் மதிப்பு உயரும்போதும் கூட , தங்கம் அதன் இடத்தைத் தக்க வைத்துக் கொள்கிறது.
ஆனால் நகைகளை வாங்கும் பாரம்பரிய முதலீட்டு முறைக்கு கூடுதலாக இந்தப்புதிய யுகத்தில் தங்கத்தில் முதலீடு செய்வதற்கான பல மாற்று வழிகளும் வந்துள்ளன.
உதாரணமாக, மார்ச் மாதத்தில் இந்திய ரிசர்வ் வங்கி தங்கப் பத்திரங்களின் (எஸ்ஜிபி) 12 வது தொடரில் முதலீடு செய்வதற்கான வழியை அறிவித்தது. மார்ச் 1 முதல் 5 வரை இந்த sovereign gold bond ல் முதலீடு செய்ய கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இது போல தங்கத்தில் முதலீடு செய்ய வேறு வழிகளும் உள்ளன. அவற்றைப் பற்றி இங்கு விரிவாகப்பார்ப்போம்.
அரசு தங்கப் பத்திரம்
தங்கத்தில் முதலீடு செய்வதற்கான ஒரு சிறந்த வழி, தங்கப் பத்திரங்களை வாங்குவது. இதன் மூலம் நீங்கள் வட்டியை பெறலாம்.
இதில் நகைகள், தங்க நாணயங்கள் அல்லது கட்டிகள் போன்ற வடிவத்தில் தங்கம் உங்களுக்கு கிடைக்காது. பாண்ட்(பத்திரம்) என்றால் ஒரு வகையான பாதுகாப்பு அதாவது, நீங்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு அரசு உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறது.
இந்திய ரிசர்வ் வங்கி, தங்கப் பத்திரங்களை வெளியிடுகிறது மற்றும் அதற்கு ஒரு குறிப்பிட்ட விலையை நிர்ணயிக்கிறது. இந்த முறை அதன் விலை கிராமுக்கு ரூ .4662 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
எஸ்ஜிபி எட்டு ஆண்டுகளில் முதிர்ச்சியடைகிறது. நீங்கள் பத்திரத்தைத் திருப்பித் அளிக்கும்போது, எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இருக்கும் தங்கத்தின் விலையின்படி நீங்கள் தொகையைப் பெறுவீர்கள். மேலும் அந்த நேரத்தில் கிடைக்கும் லாபத்தின் மீது வரியும் இல்லை. நீங்கள் ஒரு லட்சம் ரூபாய்க்கு பத்திரங்களை வாங்கி, அதை திருப்பித்தரும்போது ஒன்றரை லட்சம் ரூபாய் கிடைத்தால், அந்த கூடுதல் 50 ஆயிரம் ரூபாய்க்கு வரி கிடையாது.
இந்த பத்திரங்கள் ஒவ்வொரு மாதமும் வழங்கப்படுகின்றன மற்றும் அவற்றின் விலைகள் வேறுபடுகின்றன. அவற்றின் விலையை மும்பையைச் சேர்ந்த இந்தியன் புல்லியன் மற்றும் ஜூவல்லர்ஸ் அசோசியேஷன் (Indian bullion and jewellers association) தீர்மானிக்கிறது.
தேவைப்பட்டால் நீங்கள் எட்டு ஆண்டுகளுக்கு முன்பே பத்திரங்களை விற்கலாம். ஆனால், ஐந்தாண்டுகள் நிறைவடைவதற்கு முன்பே பத்திரத்தை விற்றால், உங்களுக்கு கிடைக்கும் லாப தொகைக்கு வரி செலுத்த வேண்டும்.
பத்திரங்களை வாங்குவது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
அரசு வெளியிடும் இந்தப் பத்திரங்களை ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் ஆகிய இரண்டு வழிகளிலும் வாங்கலாம். ஆஃப்லைன் பயன்முறையில், வங்கி, எஸ்.எச்.சி.ஐ.எல் அலுவலகம், நிர்ணயிக்கப்பட்ட அஞ்சல் அலுவலகம் மற்றும் முகவர்களிடமிருந்து படிவங்களை பெற்று பத்திரங்களில் முதலீடு செய்யலாம்.
ரிசர்வ் வங்கியின் வலைத்தளம் மற்றும் வங்கிகளின் ஆன்லைன் விண்ணப்ப வசதி மூலமாகவும் நீங்கள் படிவத்தை பெறலாம். ஆன்லைனில் வாங்கும்போது 50 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இதில் இன்னொரு நல்ல விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு ஆண்டும் 2.5 சதவிகித வட்டி கிடைக்கிறது. இந்த வட்டி ஆறு மாத இடைவெளியில் இரண்டு பகுதிகளாக அளிக்கப்படுகிறது. ஆனால், இந்த வட்டிக்கு வரி செலுத்தவேண்டும். உதாரணமாக, நீங்கள் ஒரு லட்சம் ரூபாயை முதலீடு செய்தால், 2500 ரூபாய் வட்டி கிடைக்கும். இந்த வட்டி உங்கள் வருமானத்தில் சேர்க்கப்பட்டு வரி விதிக்கப்படும்.
இதில் உள்ள ஒரே குறைபாடு என்னவென்றால், பத்திரங்களை ஆறு மாதங்களுக்குப் பிறகு விற்க வேண்டிய நிலை ஏற்பட்டு அப்போது பத்திர விலை குறைவாக இருந்தால், அதை மலிவான விலையில் விற்க வேண்டியிருக்கும்.
எஸ்.ஜி.பியில் தனிநபர் முதலீடாக ஒரு நிதியாண்டில், ஒரு கிராம் முதல் அதிகபட்சம் நான்கு கிலோகிராம் தங்கம் வரை செய்ய முடியும். அதே நேரத்தில், அறக்கட்டளை மற்றும் இதுபோன்ற பிற அமைப்புகள், 20 கிலோ வரை தங்கத்தில் முதலீடு செய்யலாம்.
”தங்கப் பத்திரம், கையில் இருக்கும் தங்கத்தை விட பாதுகாப்பானது. தூய்மையைப் பொருத்தவரை, மின்னணு வடிவத்தில் இருப்பதால் அது முற்றிலும் தூய்மையானது. ஏனென்றால் முழு 24 காரட்டில் தங்க நகைகள் உங்களுக்கு கிடைப்பதில்லை,” என்று ஆர்.டி இன்வெஸ்ட்மெண்ட்ஸின் இயக்குநரும் முதலீட்டு நிபுணருமான ராஜேஷ் ரோஷன் கூறுகிறார்.
கையில் இருக்கும் தங்கம்
கையில் இருக்கும் தங்கம் என்றால் நீங்கள் தொட்டு உணரக்கூடிய தங்கம் என்று பொருள். இதில் தங்க நகைகள், தங்க நாணயங்கள் அல்லது தங்க கட்டிகள் அடங்கும். தங்க நாணயங்கள் மற்றும் கட்டிகளை நீங்கள் நகைக்கடைகள் தவிர வங்கியிலிருந்தும் வாங்கலாம்.
நகைகளை ஒப்பிடும்போது நாணயங்கள் மற்றும் தங்ககட்டிகளை வாங்குவதில் சில வேறுபாடுகள் உள்ளன. செய்கூலியில் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.
நகைகளின் செய்கூலி 20 முதல் 22 சதவிகிதம் ஆகும். அதாவது ஒரு லட்சம் ரூபாய்க்கு தங்கத்தை வாங்கும்போது, 20 ஆயிரம் ரூபாய் வரை செய்கூலி கொடுக்கவேண்டும். ஆனால் நாணயங்கள் மற்றும் பார்களை வாங்கும்போது செய்கூலி இரண்டு முதல் நான்கு சதவிகிதம் மட்டுமே.
இதற்குக் காரணம் நகைகளில் நுண்ணிய வேலைப்பாடு உள்ளது. இதை செய்துமுடிக்க அதிக நேரமும் உழைப்பும் தேவை.
சில ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் தங்கத்தை விற்கும்போது,உங்களுக்கு செய்கூலி திருப்பிக்கிடைப்பதில்லை. அந்த நேரத்தில் தங்கத்தின் விலைக்கு ஏற்ப உங்களுக்கு பணம் கிடைக்கும். ஆகவே சிறிதளவு இழப்பை நீங்கள் சந்திக்கவேண்டியிருக்கும்.
இது தவிர, தங்கத்தை பாதுகாப்பாக வைப்பதிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும், அதே நேரத்தில் தங்கப் பத்திரங்கள் அல்லது பிற முறைகளில் பாதுகாப்புப் பிரச்னை இல்லை.
ஆனால் நீங்கள் தங்கம் அணிய விரும்புகிறீர்கள் என்றால் நகைகளை வாங்குவது நல்லது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அவை, அணியும் ஆனந்தம் மற்றும் முதலீடு ஆகிய இரண்டையும் அனுமதிக்கின்றன. நீங்கள் தங்கத்தில் முதலீடு மட்டுமே செய்ய விரும்பினால், பிற வழிகள் சிறந்தவை.
தங்க பரிவர்த்தனை வர்த்தக நிதி
தங்க பரிவர்த்தனை வர்த்தக முதலீடு என்பது பங்குச் சந்தையில் முதலீடு செய்வதைப் போன்றது. இது பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. பங்குகளை வாங்குவது போலவே, நீங்கள் இதை வாங்கலாம்.
இதற்கு நீங்கள் டீமேட் கணக்கைத் திறப்பது அவசியம். இதன் மூலம் இந்த நிதியை வாங்கலாம் . இதில் தினமும் வர்த்தகம் நடைபெறுகிறது.
சில நிறுவனங்கள் ‘தங்க ஈடிஎஃப்’ ஐ வழங்குகின்றன, நீங்கள் அவற்றை வாங்கலாம். அதன் அடிப்படை பாதுகாப்பு தங்கம் மட்டுமே. உங்களுக்குத் தேவைப்படும்போது அல்லது நிதியின் விலைகள் அதிகரிக்கத் தொடங்கினால் அவற்றை நீங்கள் விற்கலாம்.
இதில் ஒரு சிரமம் உள்ளது. அதுதான் பணப்புழக்கம். நீங்கள் விற்க விரும்பும் நாளில் நிதி விற்குமா இல்லையா என்பது ஒரு பிரச்னை. அதாவது நீங்கள் உங்கள் தங்கத்தை விற்க முயற்சிக்கிறீர்கள், ஆனால் வாங்குவதற்கு யாரும் இல்லை என்பதைப்போன்றது.
இருப்பினும் இது மிகவும் அரிதாகவே நிகழ்கிறது. பெரிய நிறுவனங்களில் வாங்குவதற்கும் விற்பதற்கும் நிறைய பேர் உள்ளனர் என்பதால் விற்பதில் எந்த பிரச்சனையும் இருக்காது. ஆனால் சிறிய நிறுவனங்களில் இது ஒரு பிரச்சனையாக இருக்கலாம். ஏனெனில் அதிக வாங்குதல் மற்றும் விற்பனை அங்கு இருக்காது.
இந்தியாவில் ’தங்க ஈடிஎஃப்’ அத்தனை பிரபலமாக இல்லை. அமெரிக்கா போன்ற பெரிய சந்தைகளில் இது மிகவும் பிரபலமானது. எனவே நீங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய விரும்பினால், ’கோல்ட் ஈடிஎஃப்’ ஐ தேர்வு செய்யலாம்.

பட மூலாதாரம், Getty Images
பரஸ்பர நிதி
மியூச்சுவல் ஃபண்டுகள் மூலம் தங்க நிதியில் முதலீடு செய்யலாம். இதை 500 ரூபாய் முதல் தொடங்கலாம். சிறிய முதலீட்டிற்கு இது ஒரு நல்ல தேர்வாக கருதப்படுகிறது.
மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் பல அஸெட் மேலாண்மை நிறுவனங்களும் (ஏஎம்சி) தங்க நிதியில் முதலீடு செய்கின்றன.
அவர்கள் உங்கள் பணத்தை தங்க நிதியில் போட்டு, சந்தையில் வர்த்தகம் செய்வார்கள். சந்தை விலையில் உள்ள ஏற்ற இறக்கங்களின்படி, தங்க நிதியின் பணத்தை நீங்கள் திரும்பப் பெறுவீர்கள். இது ’ஈடிஎஃப்’ லிருந்து சற்று மாறுபட்டது.
இது என்ஏவி( Net Asset Value) முறையின் கீழ் வருமானத்தை வழங்குகிறது. நிறுவனங்கள் அந்த நாளுக்கான செலவுகளை கழித்துக்கொண்டு ”என்ஏவி” ஐ ன அறிவித்து அதை உங்களுக்கு வழங்குகின்றன.
தங்க பரிவர்த்தனை வர்த்தக நிதி போல இதில் பணப்புழக்க பிரச்னை இல்லை.
நீங்கள் ஒரு நிறுவனத்தின் தங்க நிதியில் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த பணம் உங்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தேவைப்படுகிறது எனும்போது நிறுவனம் அந்தப் பணத்தை தந்தே ஆகவேண்டும். பணப்புழக்கத்திற்காக சந்தையை சார்ந்து இருக்கத்தேவையில்லை. நீங்கள் ஒவ்வொரு மாதம், மூன்று மாதங்கள், ஆறு மாதங்கள் மற்றும் வருடத்திற்கு ஒரு முறை கூட பணத்தை முதலீடு செய்யலாம்.
இருப்பினும், தங்கத்தின் செய்கூலி போலவே, இந்த இரண்டு நிதிகளிலும் சில கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன.
’ஈடிஎஃப்’ இல் டீமேட் அக்கவுண்டிற்காக ஒவ்வொரு ஆண்டும், பராமரிப்பு மற்றும் தரகு கட்டணம் தரவேண்டும். மியூச்சுவல் ஃபண்டுகளிலும், ஒன்று முதல் இரண்டு சதவிகிதம் வரை செலவு விகிதம் இருக்கும். அதை நிறுவனங்கள் எடுத்துக்கொள்கின்றன. நீங்கள் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து, ஒரு சதவிகித செலவு விகிதத்தைக் கொண்டிருந்தால், நிறுவனம் உங்களுக்காக 99000 ரூபாய் மட்டுமே முதலீடு செய்யும்.
தங்கத்தில் முதலீடு செய்வதன் நன்மைகள்
"நீங்கள் முதலீடு செய்யும் போது, அதில் பன்முகத்தன்மை இருக்கிறது. ஏனெனில் ஒவ்வொரு முதலீட்டு முறைக்கும் நிறை குறைகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, பங்குகள் மற்றும் தங்கத்தின் விலையிலும் ஏற்ற இறக்கம் இருக்கிறது. FD மீதான வட்டி விகிதமும் ஏறி இறங்கி வருகிறது,” என்று ராஜேஷ் ரோஷன் சுட்டிக்காட்டுகிறார்.
"அதனால்தான் மொத்த முதலீட்டில் ஐந்து முதல் பத்து சதவிகிதம் தங்கத்தில் வைத்திருப்பது சரியானதாக கருதப்படுகிறது. பங்குசந்தை வீழ்ச்சியடைந்தாலும் தங்கத்தின் விலை உயரத் தொடங்குகிறது. பங்குச்சந்தை ஏறுமுகமாக இருக்கும்போது கூட, தங்கத்தின் விலை ஒருபோதும் அவ்வளவு அதிகமாகக் குறையாது. எனவே தங்கத்தில் ஆபத்து குறைவாகவும் பாதுகாப்பு அதிகமாகவும் உள்ளது,” என்கிறார் அவர்.
பெண்கள் செய்யும் முதலீட்டை மேல்வாரியான கண்ணோட்டத்தில் பார்த்தால், அதில் இரண்டு பிரிவுகள் உள்ளன. வீட்டுச் செலவுகள் மற்றும் வேறு சில சேமிப்புகளுக்குப் பிறகு மிச்சமான பணத்தை கையில் வைத்திருப்பதற்கு பதிலாக முதலீடு செய்ய விரும்பும் இல்லத்தரசி.
இது தவிர வேலை செய்யும் பெண்கள் தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியிலிருந்து மேலும் பணத்தை சம்பாதிக்க விரும்புகிறார்கள்.
இல்லத்தரசிகளிடம் பெரும்பாலும் சிறிய சேமிப்பு இருக்கும். அவர்கள் ரிஸ்க் எடுப்பது எளிதல்ல. அத்தகைய சூழ்நிலையில், தங்கத்தில் முதலீடு செய்வது அவர்களுக்கு ஒரு சிறந்த வழி. அதிக ரிஸ்கை எடுக்க விரும்பினால், பிற வழிகளும் அவர்களுக்கு உள்ளன என்கிறார் ராஜேஷ் ரோஷன்.
அதே நேரத்தில், பணிபுரியும் பெண்களை எடுத்துக்கொண்டால், அதிக இடர்களை சந்திக்க துணிவு இருந்தால், அதிக கொந்தளிப்பான முதலீடுகளை அவர்கள் செய்யலாம். ஆனால், சந்தையைப் பற்றி அதிகம் தெரியாவிட்டால், சிறிய மற்றும் குறைந்த இடர் கொண்ட முதலீடுகளுடன் தொடங்கலாம்.
பிற செய்திகள்:
- கொரோனாவுக்கு பின் மோதியின் முதல் வெளிநாட்டு பயணம்: என்ன எதிர்பார்க்கிறது வங்கதேசம்?
- அம்பானிக்கு வெடிகுண்டு மிரட்டல் வழக்கு: புயலை கிளப்பும் ஐ.பி.எஸ் அதிகாரியின் கடிதம்
- 'ஐநாவில் இலங்கைக்கு இந்தியா ஆதரவளிக்க கூடாது' - மோதியை வலியுறுத்தும் ஸ்டாலின்
- மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி முதல்வர் பதவியை தக்கவைப்பாரா? மார்க்சிஸ்ட் கணக்கு என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












