தங்கம் விலை சரிவுக்கு காரணம் என்ன? எவ்வளவு விலை வீழ்ச்சி கண்டிருக்கிறது?

தங்கம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், கெளதமன் முராரி
    • பதவி, பிபிசி தமிழுக்காக

கடந்த 2020-ம் ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு பக்கம் அதிவேகமாக அதிகரித்தது என்றால், மறுபக்கம் தங்கம் விலை அதைவிட வேகமாக உயர்ந்தது.

2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் சுமார் 4,100 ரூபாயாக இருந்த ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை, 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சுமார் 5,900 ருபாய் வரை தொட்டது குறிப்பிடத்தக்கது. இன்று (04 மார்ச் 2021) அதே 24 கேரட் ஒரு கிராம் தங்கம் விலை சுமார் 4,620 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

ஆக, கடந்த ஆகஸ்ட் 2020 உச்ச விலையில் இருந்து, ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை சுமார் 1,280 ரூபாய் சரிந்திருக்கிறது. இவ்வளவு பெரிய சரிவுக்குக் காரணமென்ன?

1. பங்குச் சந்தை உயர்வு

பொதுவாக உலக அளவில் பங்குச் சந்தைகள் உட்பட முதலீடுகள் மோசமான வருமானத்தைக் கொடுத்தால் தங்கத்தின் பக்கம் முதலீட்டாளர்கள் திரும்புவார்கள். ஆனால் தற்போது உலக அளவில் பெரும்பாலான பங்குச் சந்தைகள் நல்ல ஏற்றம் கண்டு வருகின்றன. அமெரிக்காவின் நாஸ்டாக், எஸ் & பி 500, பிரான்சின் சிஏசி, லண்டனின் எஃப்டிஎஸ்இ, ஜெர்மனியின் டிஏஎக்ஸ், இந்தியாவின் சென்செக்ஸ் என பல நாட்டுக் குறியீடுகளும் கடந்த ஆறு மாதமாக நல்ல ஏற்றத்தில் இருக்கின்றன. எனவே முதலீட்டாளர்களின் கவனம் பங்குச் சந்தைகளில் குவிந்திருப்பதால் தங்கத்தில் முதலீடுகள் குறைந்துவிட்டன. எனவே தங்கத்தின் விலை சரிந்து கொண்டிருக்கிறது.

உதாரணமாக இந்திய பங்குச் சந்தையில் வெளிநாட்டு ஃபோர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் கடந்த நவம்பர் 2020 முதல் பிப்ரவரி 2021 வரையான நான்கு மாத காலத்தில் 1.72 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்திருக்கிறார்கள் என செபி வலைதளம் கூறுகிறது.

2. தங்கத்தில் முதலீடு சரிவு

உலகின் மிகப் பெரிய `கோல்டு எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட்` என்றழைக்கப்படும் இ.டி.எஃப்-ஐயை எஸ்.பி.டி.ஆர் கோல்ட் டிரஸ்ட் தான் நடத்தி வருகிறது. இந்த டிரஸ்டின் தங்க கையிருப்பு கடந்த ஆகஸ்ட் 2020 காலத்தில் சுமார் 1,250 டன்னாக இருந்தது. அக்டோபர் 2020 காலத்தில் 1,275 டன் வரை கையிருப்பு அதிகரித்தது. அதாவது தங்கத்தில் முதலீடு அதிகரித்தது. ஆனால் நேற்று (2021 மார்ச் 03-ம் தேதி) இந்த டிரஸ்டின் கையிருப்பு 1,082 டன்னாகக் குறைந்திருக்கிறது. கிட்டத்தட்ட 15 சதவீதம் கையிருப்பு குறைந்திருக்கிறது. கடந்த நான்கு மாத காலமாக தங்கத்தில் முதலீடு சரிந்து வருகிறது என்பதற்கு இதுவே சாட்சி. தங்கத்தில் முதலீடு சரிவு என்பதால், அதன் விலையும் தொடர்ந்து சரிந்துவிட்டது.

3. சர்வதேச தங்கம் விலை

கடந்த 2020 ஆகஸ்டில் ஒரு அவுன்ஸ் சர்வதேச ஸ்பாட் தங்கத்தின் (XAU:USD) விலை 2,063 அமெரிக்க டாலர் வரைத் தொட்டு வர்த்தகமானதாகக் கூறுகிறது ப்ளூம்பெர்க் வலைதளம். ஆனால் இன்று அதே ஒரு அவுன்ஸ் சர்வதேச ஸ்பாட் தங்கத்தின் விலை 1,714 அமெரிக்க டாலருக்கு வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது. சர்வதேச விலை சரிந்தாலே, பெரும்பாலும் இந்தியாவின் ஆபரணத் தங்கம் விலையும் சரிவது இயற்கையானது.

4. அமெரிக்க டாலர் Vs இந்திய ரூபாய்

இந்தியாவில் ஆபரணத் தங்கம் விலை மாற்றத்தில் அமெரிக்க டாலருக்கு மிக முக்கிய பங்கு உண்டு. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிகிறது என்றால் தங்கம் விலை அதிகரிக்கும். இதுவே இந்திய ரூபாய் மதிப்பு அதிகரிக்கிறது என்றால் தங்கம் விலை குறையும். கடந்த நவம்பர் 2020-ல் 74.70 ரூபாயாக இருந்த அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, இன்று 72.8 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது. இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்தது (அமெரிக்க டாலரின் மதிப்பு சரிவு என்றும் கூறலாம்) ஆபரணத் தங்கத்தின் விலையில் எதிரொலிக்கிறது.

5. குறையும் கொரோனா - செயல்படத் தொடங்கிய பொருளாதாரங்கள்

கொரோனா காலகட்டத்தில், ஊரடங்கு உத்தரவால் பல நாட்டுப் பொருளாதாரங்கள் செயல்படாமல் இருந்தன. எனவே முதலீடுகள் பங்குச் சந்தை, கடன் பத்திரம், கரன்சி மியூச்சுவல் ஃபண்ட் போன்றவைகளில் இருந்து பாதுகாக்க வேண்டி தங்கத்தை நோக்கிப் படை எடுத்தன.

இப்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் நோயாளிகள் எண்ணிக்கை கொஞ்சம் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதால், பெரும்பாலான பொருளாதாரங்கள் செயல்படத் தொடங்கி இருகின்றன. பணம் பொருளாதாரம் சார்ந்த முதலீடுகளை நோக்கிச் சென்றுவிட்டன. இதுவும் தங்கம் விலை சரிவுக்கு ஒரு முக்கிய காரணம்.

காணொளிக் குறிப்பு, தங்கத்தில் மாஸ்க் செய்து அசத்தும் வியாபாரி

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: