வி.கே. சசிகலா, அ.ம.மு.கவுடன் அ.தி.மு.க கூட்டணி அமைக்க 100% வாய்ப்பில்லை: ஜெயக்குமார் - தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021

சசிகலா, அ.ம.மு.கவுடன் அ.தி.மு.க கூட்டணி அமைக்க 100 % வாய்ப்பில்லை: ஜெயக்குமார் - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021

பட மூலாதாரம், Pti

படக்குறிப்பு, ஜெயலலிதாவுடன் சசிகலா. (கோப்புப்படம்)

சசிகலாவுடனோ, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடனோ கூட்டணி அமைக்க 100 சதவீதம் வாய்ப்பில்லையென மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார். சசிகலா, தினகரனின் பலம் என்னவென்பது அ.தி.மு.கவுக்கு தெரியுமென பா.ஜ.க. தெரிவித்த கருத்தையடுத்து ஜெயக்குமார் இவ்வாறு கூறியிருக்கிறார்.

அ.இ.அ.தி.மு.க. கூட்டணியில் டிடிவி தினகரனின் அ.ம.மு.கவையும் சேர்க்க வேண்டுமென பா.ஜ.க. அழுத்தம் கொடுத்துவருவதாக கூறப்பட்டுவரும் நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநிலப் பொறுப்பாளர் சி.டி. ரவி, "சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரின் பலம் என்ன என்பது அ.தி.மு.கவுக்குத் தெரியும். அது குறித்து அவர்கள் முடிவெடுப்பார்கள்" என கூறியிருந்தார்.

இதையடுத்து, அ.ம.மு.கவையும் அ.தி.மு.க. கூட்டணிக்குள் கொண்டுவருவதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெறுகிறதா என்ற பேச்சுகள் எழுந்தன. இந்த நிலையில், மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அவரிம் சி.டி. ரவி கூறியிருப்பது குறித்து கேட்டபோது, "எங்களை யாரும் நிர்பந்தப்படுத்த முடியாது. எங்கள் கட்சி உள்விவகாரங்களில் பா.ஜ.க. தலையிடுவது கிடையாது. ஏதோ எங்களை நிர்பந்தப்படுத்துவதுபோல வதந்தியை கிளப்புகிறார்கள். டெல்லியில் முதல்வர் சொன்னதைப் போல, திருமதி சசிகலாவோ, அ.ம.மு.கவோ எங்களுடன் இணைவதற்கு 100 சதவீதம் வாய்ப்பே இல்லை. தனது தலைமையை ஏற்றுக்கொண்டால் கூட்டணி அமையுமென நேற்றுக்கூட தினகரன் சொல்கிறார். இதெல்லாம் எள்ளி நகையாடக்கூடிய கருத்து. குள்ளநரிகள் கூட்டமாக இருக்கிற கட்சி அ.ம.மு.க. சிங்கங்கள் இருக்கும் கட்சியான அ.தி.மு.க." என்றார்.

இந்தக் கூட்டணியில் அ.ம.மு.க. வரவேண்டுமென பா.ஜ.க. விரும்புகிறதா எனக் கேட்டபோது, "அ.ம.மு.கவுடன் சேர்வதா என்பது எங்கள் கட்சியின் உள்விவகாரம். அ.ம.மு.கவுடன் சேர்வது குறித்து அவர் யோசனையாக சொல்லியிருக்கலாம். ஆனால், அந்த யோசனை நிராகரிக்கப்பட்டுவிட்டது. எங்கள் கட்சியின் உள்விவகாரங்களில் தலையிடுவது ஜனநாயக பண்பாக இருக்காது என்பது அவர்களுக்கும் தெரியும்" என்றார்.

அமித் ஷாவும் முதல்வரும் சந்தித்தபோது அ.ம.மு.கவைச் சேர்க்கும்படி வலியுறுத்தப்பட்டதா எனக் கேட்டபோது, அப்படி ஏதும் நடக்கவில்லையென ஜெயக்குமார் மறுத்துவிட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: