புதுச்சேரியில் பா.ஜ.க. கூட்டணியைவிட்டு வெளியேறுகிறதா என்.ஆர். காங்கிரஸ்? - சட்டமன்ற தேர்தல் 2021

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகியவை ஒன்றாக இணைந்து தேர்தலைச் சந்திக்குமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது பா.ஜ.க. கூட்டணியிலிருந்து என்.ஆர். காங்கிரஸ் வெளியேற விரும்புகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
புதுச்சேரி அரசியலில் கடந்த சில நாட்களாக வீசிய புயலை அடுத்து, சில சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரசிலிருந்து வெளியேற, அக்கட்சியின் ஆட்சி கவிழ்ந்தது. இதற்குப் பிறகு அங்கிருந்த துணை நிலை ஆளுநர் கிரண் பேடி மாற்றப்பட்டு, தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூடுதல் பொறுப்பாக புதுச்சேரியையும் கவனிப்பார் என அறிவிக்கப்பட்டது.
2016ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கவும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து 17 இடங்களைப் பிடித்தன. என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் தனித்தே போட்டியிட்டன. இதில் என்.ஆர். காங்கிரஸ் 8 இடங்களையும் அ.தி.மு.க. ஓர் இடத்தையும் பிடித்தது. 30 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ.க. எல்லாத் தொகுதிகளிலும் தோல்வியடைந்தது.
2019ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் வி. வைத்தியலிங்கம் நிறுத்தப்பட்டார். இந்தத் தேர்தலின்போது என்.ஆர். காங்கிரசும் பா.ஜ.கவும் கூட்டணி அமைத்தன.

பட மூலாதாரம், @JPNadda twitter page
அந்தக் கூட்டணியின் சார்பில் என்.ஆர். காங்கிரசைச் சேர்ந்த கே. நாராயணசாமி நிறுத்தப்பட்டார். இதற்குப் பிறகு என்.ஆர். காங்கிரஸ் கூட்டணியிலேயே பா.ஜ.க. தொடர்ந்து வந்தது.
இந்த நிலையில்தான் கடந்த மாதம் புதுச்சேரியில் பல சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறினார்கள். குறிப்பாக காங்கிரசில் அதிருப்தியில் இருந்த நமச்சிவாயத்தை, முதல்வர் வேட்பாளராக அறிவிப்பதாகக் கூறி தன் பக்கம் பா.ஜ.க. இழுத்ததாகச் சொல்லப்பட்டது. நமச்சிவாயத்தின் ஆதரவாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தீப்பாய்ந்தானும் பா.ஜ.கவில் சேர்ந்தார். என்.ஆர். காங்கிரசும் அதே கூட்டணியில் இருக்கும்போது, நமச்சிவாயம் எப்படி முதல்வர் வேட்பாளராக முடியும் என்ற கேள்விக்கு யாரும் பதில் சொல்லவில்லை.
இந்த நிலையில்தான் ஜனவரி 31ஆம் தேதி மலரட்டும் தாமரை.. ஒளிரட்டும் புதுவை என்ற கூட்டத்தை நடத்தியது பா.ஜ.க. அதில் கலந்துகொண்ட பா.ஜ.கவின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, "வரும் சட்டமன்றத் தேர்தலில் புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில் 23க்கும் மேற்பட்ட இடங்களைப் பெற்று பா.ஜ.க ஆட்சி அமைக்கும்" என்று அறிவித்தார்.
இதையடுத்து பா.ஜ.க. கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் இருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்தது. இதற்குப் பிறகு இரண்டு அமைச்சர்கள், நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறியதால் அங்கு காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. இந்த நிலையில், பிப்ரவரி 28ஆம் தேதி காரைக்காலில் நடந்த தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா, "வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், பா.ஜ..க தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு புதுச்சேரியில் ஆட்சி அமைக்கும்" என்று முழங்கினார்.

பட மூலாதாரம், @Amit Shah Twitter page
இந்த முழக்கங்கள் என்.ஆர். காங்கிரசை அதிரவைத்ததாகச் சொல்லப்படுகிறது. இதற்கிடையில் என்.ஆர். காங்கிரசின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கல்யாண சுந்தரமும் அசோக் ஆனந்தும் போய் பா.ஜ.கவில் சேர்ந்தார்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் தங்களுக்கு 18 இடங்களை எடுத்துக்கொண்டு, அ.தி.மு.கவுக்கும் பா.ஜ.கவுக்கும் தலா 6 இடங்களைக் கொடுக்க நினைத்தார் என்.ரங்கசாமி. ஆனால், இதனை பா.ஜ.க. ஏற்கவில்லையெனத் தெரிகிறது. என்.ஆர். காங்கிரசிற்கு 12- 14 இடங்களை மட்டுமே பா.ஜ.க. தர முன்வந்தது. தவிர, முதல்வர் வேட்பாளராகவும் என். ரங்கசாமியை இதுவரை அறிவிக்கவில்லை.
இந்தப் பின்னணியில்தான் வரும் சட்டமன்றத் தேர்தலை என்.ஆர். காங்கிரஸ் தனித்து சந்திக்கலாமா என்ற ஆலோசனையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. செவ்வாய்க் கிழமை மாலையில் புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகளின் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளில் பலர், பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்கக்கூடாது என்றே கூறியதாகத் தெரிகிறது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
புதன்கிழமையன்று, சமீபத்தில் காங்கிரசிலிருந்து விலகிய லட்சுமி நாராயணன் என். ரங்கசாமியைச் சந்தித்து என்.ஆர். காங்கிரசில் இணைந்தார். இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய என். ரங்கசாமியுடன் கேட்டபோது, அவர் அந்தக் கேள்விக்குத் தெளிவாகப் பதிலளிக்கவில்லை. "அது குறித்து எங்கள் நிர்வாகிகளுடன் பேசிவருகிறோம்" என்று மட்டும் தெரிவித்தார். பிறகு "நேரம் வரும்போது அது குறித்து அறிவிப்போம்" என்று சொல்லிவிட்டு பத்திரிகையாளர் சந்திப்பை முடித்துக்கொண்டார்.
ஆகவே, வரவிருக்கும் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளிவருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
கூட்டணிக் கட்சியினருக்கு அரசியல்ரீதியாக இதற்கு முன்பாகவும் அதிர்ச்சிகளை அளித்தவர் என். ரங்கசாமி. 2011ஆம் ஆண்டில் என்.ஆர். காங்கிரசும் அ.தி.மு.கவும் இணைந்து போட்டியிட்டன. அதில் என்.ஆர். காங்கிரஸ் 15 இடங்களிலும் அ.தி.மு.க 5 இடங்களிலும் வெற்றிபெற்றன. கூட்டணி ஆட்சிக்காக அ.தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்திவந்த நிலையில், திடீரென சுயேச்சை எம்.எல்.ஏ. ஆதரவுடன் ஆட்சியமைத்தார் என். ரங்கசாமி. இந்த நடவடிக்கை ஜெயலலிதாவை அதிரவைத்தது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












