ராகுல் காந்தி கருத்து: எமர்ஜென்சி ஒரு தவறு ஆனால்...

பட மூலாதாரம், Getty Images
தமது பாட்டியும், மறைந்த இந்தியப் பிரதமருமான இந்திரா காந்தி அவசர நிலையைப் பிரகடனம் செய்தது ஒரு தவறு என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
ஆனால், 1975ல் அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்டதற்கும் நாட்டில் இப்போது நிலவும் நிலைமைக்கும் வேறுபாடு இருக்கிறது என்று குறிப்பிட்ட ராகுல்காந்தி ஆர்.எஸ்.எஸ். எல்லா ஜனநாயக நிறுவனங்களையும் தங்கள் ஆட்களைக் கொண்டு நிரப்புகிறது. ஆனால், காங்கிரஸ் ஒருபோதும் ஜனநாயக நிறுவனங்களைக் கைப்பற்ற நினைத்ததில்லை என்றார்.
நினைத்தாலும்கூட அதைச் செய்யும் வல்லமை காங்கிரசிடம் இல்லை என்றும் அவர் கூறினார். தங்களுடைய கட்டமைப்பு அப்படிச் செய்ய அனுமதிப்பதில்லை என்றும் அவர் கூறினார்.
அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்த ஒரு நிகழ்வில் பிரபல பொருளாதார வல்லுநர் கௌஷிக் பாசுவுடன் இணையம் மூலம் நடந்த உரையாடலில் இதனைத் தெரிவித்தார் ராகுல்காந்தி. இந்த நிகழ்ச்சி நேற்று செவ்வாய்க்கிழமை நடந்தது.
அந்த உரையாடலை ராகுல்காந்தி தமது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
1975 முதல் 77 வரை இந்தியாவில் இந்திரா காந்தி அவசர நிலையை அமல்படுத்தினார். அப்போது பத்திரிகைகள் தணிக்கைக்கு உள்ளாயின. பேச்சுரிமை முடக்கப்பட்டது. அரசமைப்புச் சட்டத்தின் கீழ் மக்களுக்கு உள்ள உரிமைகள் நிறுத்திவைக்கப்பட்டன.
இது குறித்து ராகுல்காந்தி என்ன நினைக்கிறார் என்று கௌஷிக் பாசு கேட்டபோது 'நிச்சயமாக அது ஒரு தவறு' என்று ராகுல் காந்தி குறிப்பிட்டார்.
"அவசர நிலைக்காலத்தில் நடந்ததற்கும், இந்தியாவில் இப்போது நடந்துகொண்டிருப்பதற்கும் அடிப்படை வேறுபாடு உண்டு. நவீன ஜனநாயகங்களில் நிறுவனங்கள் சுதந்திரமாக செயல்படுகின்றன. இத்தகைய நிறுவனங்களின் சமநிலை காரணமாகவே ஜனநாயகம் செயல்படுகிறது. இத்தகைய நிறுவனங்களின் சுதந்திரம் இந்தியாவில் தற்போது ஆர்.எஸ்.எஸ். என்ற ஒரு பெரிய நிறுவனத்தால் தாக்குதலுக்கு உள்ளாகிறது. ஜனநாயகம் அரித்துச் செல்லப்படுகிறது என்று கூறமாட்டேன். ஜனநாயகம் கழுத்து நெறிக்கப்படுகிறது" என்று குறிப்பிட்ட ராகுல்காந்தி, ஒரு தேர்தலில் பாஜகவை தோற்கடித்தாலும்கூட ஜனநாயக நிறுவனங்களின் கட்டமைப்புகளில் இருந்து அவர்கள் ஆட்களை ஒழிக்க முடியாது என்று கூறினார்.
மத்தியப் பிரதேசத்தில் சமீபத்தில் ஆட்சி கவிழ்க்கப்பட்ட காங்கிரஸ் முதல்வர் கமல்நாத்துடன் நடந்த உரையாடலை ராகுல்காந்தி நினைவு கூர்ந்தார். தன்னுடைய ஆட்சி கவிழ்க்கப்படுவதற்கு முன்பே மூத்த அதிகாரிகள், தங்களுக்கு ஆர்.எஸ்.எஸ். தொடர்பு இருப்பதாக கூறி தம்முடைய உத்தரவுகளை மதிக்கவில்லை என்று கமல்நாத் கூறியதாக ராகுல் குறிப்பிட்டார்.
பிற செய்திகள்:
- திமுக, அதிமுகவிடம் தொகுதிகளைப் பெற சிறிய கட்சிகள் போராடுகின்றனவா? தீர்வு என்ன?
- எத்தியோப்பியா டீக்ரே சிக்கல்: பிபிசி செய்தியாளர் தடுத்து வைப்பு
- இமய மலையின் மர்ம ஏரி: '1200 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புக் கூடுகள்'
- கடற்கரை மணலை எடுத்து கட்டுமானமா? பாம்பன் புதிய ரயில் பாலப் பணியில் என்ன நடக்கிறது?
- கிம்முக்கு டிரம்ப் கொடுத்த அசாதாரண சலுகை - அதிர்ச்சியில் அமெரிக்கா
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:








