திமுக, அதிமுகவிடம் தொகுதிகளை பெறுவதில் கம்யூனிஸ்ட் , விசிக, மதிமுக, பாமக போன்ற கட்சிகளுக்கு என்ன நெருக்கடி? - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021

பட மூலாதாரம், ARUN SANKAR/getty images
- எழுதியவர், அ.தா.பாலசுப்ரமணியன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு எதிர்பார்த்ததைவிட முன்கூட்டியே நடக்கவுள்ளது.
பிரசாரத்தை முழு வீச்சில் முன்னெடுப்பதற்கு முன்பாக இரண்டு கூட்டணிகளும் தோழமைக் கட்சிகளுக்கு இடையில் தொகுதிகளைப் பங்கிட்டுக்கொள்ளவேண்டும்.
இது மிக கொந்தளிப்பான அரசியல் நடவடிக்கை. தொகுதிப் பங்கீடு காலத்தில் கூட்டணிகள் உடைவது, மாறுவது, புதிய கூட்டணிகள் உருவாவது ஆகிய அதிரடிக் காட்சிகள் இடம்பெற்றதுண்டு.
தேர்தல் நிதி, எந்த சின்னத்தில் போட்டியிடுவது போன்ற பிரச்னைகளின் அடிப்படையில் முரண்பாடுகள் தோன்றும். சில கட்சிகளுக்கு கடைசி நேரத்தில் அணி மாறி முதன்மைக் கட்சிகளைத் திணறடிக்கும் உள் நோக்கம் இருக்கும் என்ற குற்றச்சாட்டும் உண்டு.
ஆனால், எல்லாவற்றுக்கும் மேலாக எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்பதில்தான் அடிக்கடி முரண்பாடு ஏற்படும். சிறிய கட்சிகள் தாங்கள் நியாயமாக நடத்தப்படவில்லை என்று புகார் கூறும். தங்கள் பலத்துக்கு மீறி எதிர்பார்ப்பதாக சிறிய கட்சிகள் மீது பெரிய கட்சிகளுக்கும் புகார் இருக்கும்.
சிறிய கட்சிகளுக்கு என்னதான் பிரச்னை?
தொகுதிப்பங்கீட்டுக் காலப் பேச்சுகளை, பேட்டிகளை இலக்கியமாகத் தொகுத்தால் அதில் இரண்டு மேற்கோள்கள் மறக்க முடியாதபடி இருக்கும்.
"மேலும் ஒதுக்குவதற்கு இதயத்திலே இடம் உண்டு. ஆனால், தொகுதிகள்தான் இல்லை" என்று திமுக தலைவர் கருணாநிதி ஒரு தேர்தலின்போது கூறிய சொற்கள் அடிக்கடி மேற்கோள் காட்டப்படும்.
ஆனால், கூட்டணிக் கட்சிகளுக்கு அதிமுகவைவிட, குறிப்பாக ஜெயலலிதாவைவிட கண்ணியமான முறையில் தொகுதிகளைப் பங்கிட்டுக் கொடுத்துவிட்டு அதன் பிறகு எல்லோருடைய தேவைகளையும் நிறைவு செய்ய முடியாத நிலையில்தான் கருணாநிதி அப்படிக் கூறினார். தொகுதிகளையே ஒதுக்க முடியாது என்ற பொருளில் அவர் கூறவில்லை என்கிறார்கள் திமுகவினர்.

பட மூலாதாரம், DMDK party
ஆனால், ஒரு தொகுதியைக்கூடப் பெற முடியாத அனுபவங்கள் அதிமுக-வுடன் கூட்டணிக் கட்சிகளுக்கு ஏற்பட்டதுண்டு. "ஒரு தொகுதிக்கும் குறைவாக கேட்க முடியாது என்பதால் ஒரு தொகுதி கேட்கிறோம்" என்று 2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் இருக்க விரும்பிய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஒருவர் கூறினார்.
2011 சட்டமன்றத் தேர்தலில் தொகுதிப் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும்போதே, கூட்டணிக் கட்சிகளுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா. கம்யூனிஸ்ட் தலைவர்கள் தலையிட்டுப் பேசிய பிறகு, சசிகலா உறவினர் ராவணன் என்பவர் தமக்குத் தெரியாமல் வெளியிட்டுவிட்டதாக விளக்கம் கூறினார் ஜெயலலிதா. மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி, தேமுதிக-வுக்கு இடங்கள் ஒதுக்கி கூட்டணி உறுதி செய்யப்பட்டது.
கூட்டணியில் இருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கிய இடங்கள் தொடர்பில் ஏற்பட்ட அதிருப்தி சமூக வலைத்தளத்தில் பரவ, திமுக மீண்டும் கூடுதல் இடம் ஒதுக்கிய சம்பவமும் உண்டு.
ஒரு சட்டமன்றத் தேர்தல் தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தையில் கேட்ட ஒரு கூடுதல் தொகுதி கிடைக்காமல் திமுக கூட்டணியில் இருந்து விலகியது வைகோ தலைமையிலான மதிமுக.
தமிழ்நாட்டில் திமுக - அதிமுக என்ற இரண்டு பெரும் கட்சிகளே கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி அமைத்து வருகின்றன. இந்நிலையில், தேசியக் கட்சிகளானாலும், சாதியக் கட்சிகளானாலும் இந்த இரண்டு கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி தங்களுக்கு உரியது என்று கருதும் இடங்களைப் பெற போராடுகின்றன.
தேசியக் கட்சிகளும்கூட தமிழ்நாட்டில் சிறு கட்சிகள் கணக்கில்தான் வருகின்றன. ஆனால், மத்திய அரசியலில் தங்களுக்குள்ள செல்வாக்கை கேடயமாக கொண்டு எண்ணிக்கையில் கொஞ்சம் கௌரவமான இடங்களை, பல நேரங்களில் தங்கள் வலுவுக்கு அதிகமான இடங்களைப் பெறுவதில் தேசியக் கட்சிகள் வெற்றி பெற்றுவிடுகின்றன.
ஆனால், பிற கட்சிகளுக்கு அப்படிப்பட்ட ஒரு பிடிமானம் இல்லை. காரணம், "அவையெல்லாம், சாதி, மதம், வர்க்கம் என்று தங்களுக்கென ஒரு குறிப்பிட்ட எல்லையை வகுத்துக்கொண்ட கட்சிகள்.
அவற்றின் வாக்காளர் தளம் என்பது அவர்களின் குறிப்பிட்ட செல்வாக்கு மண்டலங்களில் மட்டுமே இருப்பது. எனவே, தமிழகம் தழுவிய தன்மையோ, தனித்து வெல்லும் நிலைமையோ அவற்றுக்கு இல்லை" தொகுதி பேரத்தில் அவர்களுக்குப் பிடிமானம் இல்லாமல் போவதற்கு இதுவே காரணம் என்கிறார் பிரண்ட்லைன் பத்திரிகை ஆசிரியர் ஆர்.விஜயசங்கர்.
"1920 வாக்கில் ஆங்கிலேய அரசு கூடுதல் வாக்குரிமை தரும் வகையில் சீர்திருத்தங்களை மேற்கொண்டபோது இங்கே வர்க்கம் என்பது வலுவான நிறுவனமாக இல்லாத காரணத்தால், சாதிகளாகத் திரண்டுதான் மக்கள் தங்களை பிரதிநிதித்துவப்படுத்திக்கொள்ளவேண்டிய நிலைமை இருந்தது. சமூக நீதிக்காக பெரியார் இத்தகைய சாதி சங்கங்களின் மாநாடுகளில் போய்தான் பேசினார்.

பட மூலாதாரம், PRAKASH SINGH/Getty Images
சமூக நீதிக்காக பிற்படுத்தப்பட்ட - ஒடுக்கப்பட்ட சாதிகள் ஒன்றினையும் சமூகப் பொறியியலை திராவிட இயக்கம் நிகழ்த்தியது. ஆனால், அதில் தங்களுக்கு உரிய பங்கு முழுமையாக கிடைக்கவில்லை என்று கருதிய தலித்துகள், வன்னியர்கள் போன்ற பிரிவுகள் தங்களுக்கு உரிய பிரதிதிநிதித்துவத்தைப் பெறுவதற்காக சாதி சார்ந்த அரசியல் அமைப்புகளை உருவாக்கிக் கொண்டன.
தலித் கட்சிகளை சாதிக் கட்சிகள் என்று சுருக்க முடியாது என்றாலும் அவற்றுக்கும் சாதி அடிப்படை உண்டு.
விடுதலைச் சிறுத்தைகள், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவை தங்கள் சாதி அடையாளத்தை மீறி வளர முயன்றன. அதற்காக இந்த இரண்டு கட்சிகளும் தமிழ் அடையாள அரசியலின் அடிப்படையில் ஒன்று சேர முயன்றன.

பட மூலாதாரம், Vijayasankar Ramachandran/FB
ஆனால், எல்லா பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கான பொதுவான சமூக நீதி, தமிழ் அடையாளம் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் திராவிடக் கட்சிகளுக்கு ஈடாக, அவற்றின் இரு துருவ சமன்பாட்டை உடைக்கும் அளவுக்கு அவற்றால் வளர முடியவில்லை.
தொழிலாளர் வர்க்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கம்யூனிஸ்ட் கட்சிகள் திரட்டப்பட்ட தொழிலாளர் வர்க்கம் செறிவாக இருந்த பகுதிகளில் வளர்ந்தன. ஆனால், தொழிலாளர் வர்க்கத் திரட்சியே பின் தங்கியபோது கம்யூனிஸ்ட் கட்சியும் தங்களுடைய செல்வாக்கு மண்டலத்தைக் கடந்து வளர முடியவில்லை" என்று தெரிவித்தார் விஜயசங்கர்.
இந்நிலையில், தமிழ்நாடு தழுவிய இருத்தலோ, அமைப்பு வலுவோ இல்லாத கூட்டணிக் கட்சிகளின் பேர வலிமை பெரிதாக வளர முடியவில்லை.
திராவிடக் கட்சிகளின் வாக்கு வங்கிக்குள் புகுந்து கணிசமாக 5 சதவீதம், 6 சதவீதம் என்ற அளவில் உடைசலை ஏற்படுத்த முடிந்த பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் ஓரளவு பேர வலிமையைப் பெற்றன என்றார் விஜயசங்கர்.
சிறிய கட்சிகளால் ஓர் அளவுக்கு மேல் தங்களுடைய தளத்தை விரிவுபடுத்த முடியவில்லை. தமிழ் இன அடையாள அரசியல் என்பது திராவிடக் கட்சிகளால் ஏற்கெனவே முன்னெடுக்கப்பட்டுவிட்டது. அதை மீண்டும் இந்தக் கட்சிகளால் பயன்படுத்த முடியவில்லை என்பது அவரது பார்வை.
ஆனால், இந்த சிறிய கட்சிகளின் உதவியில்லாமல் வெல்ல முடியாது என்ற நிலை இருந்தாலும்கூட இந்த இரண்டு பெரிய கட்சிகளும் அவற்றின் வலிமைக்குக் குறைவாகவே இடம் தருகின்றன என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத கம்யூனிஸ்ட் தலைவர் ஒருவர்.
ஆனால், இந்தப் பெரிய கட்சிகள் எந்த அளவுக்கு எந்த தேர்தலில் பலவீனம் அடைந்துள்ளன என்பதைப் பொறுத்து அவற்றிடம் பேரம் பேசும் வலிமை மற்ற கட்சிகளுக்கு கூடவோ குறையவோ செய்யும் என்பது அவரது கருத்து.
சிறிய கட்சிகள் தங்களுக்கு உரிய பங்கை, உரிய பிரதிநிதித்துவத்தை வேறெவர் தயவையும் சாராமல் பெறுவது எப்படி? இந்த சிக்கலுக்குத் தீர்வு என்ன? இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சி. மகேந்திரன் இதற்கு ஒரு தீர்வு சொல்கிறார்.
விகிதாசாரத் தேர்தல் முறை - ஒரு யோசனை
போட்டியிடுகிற வேட்பாளர்களில் யார் அதிகம் பெறுகிறார்களோ அவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கும் தற்போதைய நடைமுறையில், 30 சதவீத வாக்குகளைப் பெற்றவர்கள்கூட வெற்றி பெற்றுவிடுகிறார்கள். அப்படியானால், மீதமுள்ள 70 சதவீத வாக்குகள், அவர்களின் விருப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன. இதற்குப் பதிலாக விகிதாசாரத் தேர்தல் முறையை அறிமுகம் செய்தால், அந்தந்த கட்சி பெற்ற வாக்குகளின் சதவீதத்துக்கு ஏற்ப அவர்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கும்.

பட மூலாதாரம், RAVEENDRAN/Getty Images
இதன் மூலம் கொள்கை ரீதியாக செயல்படும் கட்சிகள், தங்களது சிறிய செல்வாக்குக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் பெறவும், தங்கள் கொள்கையிலேயே நின்று வளரவும் வழி பிறக்கும். பிரதிநிதித்துவத்துக்காக சமரசம் செய்து கூட்டணி வைக்கவேண்டிய அவசியம் நேராது என்றார் மகேந்திரன்.
இப்போதுள்ள தேர்தல் நடைமுறையில் ஒரு வேட்பாளருக்கு தன்னுடைய சாதிக்கு மட்டுமல்ல, எல்லா சாதிகளைச் சேர்ந்தவர்களுக்கும் ஏற்புடையவர்களாக அரசியல் செய்யவேண்டிய தேவை ஏற்படுகிறது. விகிதாசாரத் தேர்தல் முறை வந்தால், அவரவரும் அவரவர் சாதிக்காக மட்டும் பாடுபடுவதாக சொல்லி சாதி அமைப்பை இறுக வைத்துவிட மாட்டார்களா? ஏற்கெனவே, தலையெடுக்கும் சாதி அரசியலை இது அப்பட்டமான சாதி அரசியலாக மாற்றிவிடாதா? என்று கேட்டோம்.

பட மூலாதாரம், CMahendran Mahendran/FB
"அப்படிக் கருதி கண்களை மூடிக்கொள்ளவேண்டியதில்லை. சாதி முன்பு போன்ற இறுக்கத்தில் இப்போது செயல்படவில்லை. இப்போது, பணத்தை முன்னிறுத்தி சாதியைப் பின்னுக்குத் தள்ளும் போக்கு வந்துவிட்டது. அப்படியே சாதி அடிப்படையிலேயே பிரிந்து வாக்களிப்பதாக வைத்தாலும் ஆட்சி அமைப்பதற்கு எல்லா சாதிகளின் பிரதிநிதிகளும் இணைந்துதானே ஆகவேண்டும்?" என்றார் மகேந்திரன்.
அவர் கூறுவதைப் போல மாற்று தேர்தல் முறைகள் குறித்த சிந்தனை ஒரு புறம் இருந்தாலும், நடைமுறையில் இருக்கும் தேர்தல் முறையிலேயே சிறிய கட்சிகள் தங்கள் பிடியை வலுப்படுத்திக் கொள்ளவேண்டும் என்றால், அவை தங்கள் அடித்தளத்தை இடைவிடாமல் விரிவுபடுத்திக்கொள்வதைத் தவிர வேறு வழியிருப்பதாகத் தெரியவில்லை.
ஆனால் தங்களுக்கென கொள்கை அடிப்படையில் சில எல்லைகளை வகுத்துக் கொண்ட கட்சிகளுக்கு, கூட்டணியை விட்டு வெளியேறிவிடப் போவதாக மிரட்டி அதிக இடங்களைப் பெறுகிற வாய்ப்பு குறைவாக இருப்பதாகவும், எதிர்பாராத முடிவுகளை தயங்காமல் எடுக்கும் கட்சிகளுக்கு அந்த அடிப்படையில் பேரத்துக்கான பிடிப்பு ஏற்படுவதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால், அப்படிப்பட்ட கட்சிகள் காலப்போக்கில் தங்கள் நம்பகத்தன்மையை இழந்துவிடும் ஆபத்தும் நிகழ்ந்துள்ளது.
பேர உணர்ச்சியும் தோழமை உணர்ச்சியும்
ஒரு கூட்டணிக்குள் சிறிய கட்சிகள் அனைத்தும் இணைந்து ஒரு உள் கூட்டணியை உருவாக்கிக் கொண்டு கூட்டுப் பேர வலிமையை அதிகரித்துக்கொள்ளவேண்டும் என்ற கருத்தும் சமூக ஊடகங்களில் சிறிதுகாலம் முன்பு முன்மொழியப்பட்டது. ஆனால், அத்தகைய உள் கூட்டணி அமையுமானால், அது ஒரு பரந்த அரசியல் கூட்டணிக்குள் இயல்பாக நிகழவேண்டிய மன ஒருங்கிணைப்பையும், ஒருவர் வாக்குகள் மற்றவர்களுக்கு பரிமாற்றம் அடைவதற்கான சூழ்நிலையையும் கெடுத்துவிடும் என்ற பார்வையும் இருக்கிறது.
1989ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஜனதா தளத்தின் தலைமையில் தேசிய முன்னணி அமைந்தது. தமிழ்நாட்டில் திமுக தலைமையில் செயல்பட்ட இந்தக் கூட்டணி இங்கே ஒரு இடம்கூட வெல்லவில்லை. ஆனால், மத்தியில் இந்தக் கூட்டணி ஆட்சியைப் பிடித்தது.
கூட்டணி என்ற தோழமை உணர்வை மதித்து திமுகவுக்கு மத்திய அரசில் ஓர் இணையமைச்சர் பதவி அளித்தார் பிரதமர் வி.பி.சிங். அதன்படி, திமுகவின் முரசொலி மாறன் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராகப் பதவி ஏற்றார்.
அதைப் போல, பிறகு ஐ.கே.குஜ்ரால் பிரதமராகப் பதவி வகித்த ஐக்கிய முன்னணி அரசில் திமுக இடம் பெற்றிருந்தது. அந்த அரசுக்கு காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு அளித்து வந்ததது.
அப்போது வெளியான ஜெயின் கமிஷன் அறிக்கையைக் காட்டி திமுகவை ஆட்சியில் இருந்து விலக்கவேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியது. ஆனால், ஆட்சியை இழந்தாலும் திமுகவைக் கைவிடப் போவதில்லை என ஐக்கிய முன்னணி கூட்டணிக் கட்சிகள் உறுதியாக நின்றன. காங்கிரஸ் ஆதரவைத் திரும்பப் பெற்றது. ஆட்சி கவிழ்ந்தது.
வெறும் எண்களால் போர் நடக்கும் நிலையில், இத்தகைய தோழமை உணர்ச்சிகள் கூட்டணிகளுக்குள் மீண்டும் வருமா என்பது பிரச்சனையின் இன்னொரு பக்கம். ஏன் என்றால் இத்தகைய தோழமை உணர்ச்சி உருவாவதன் மூலமே அரசியல் கூட்டணிகள் அதன் பலனை அடையமுடியும்.
பிற செய்திகள்:
- எத்தியோப்பியா டீக்ரே சிக்கல்: பிபிசி செய்தியாளர் தடுத்து வைப்பு
- இமய மலையின் மர்ம ஏரி: '1200 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புக் கூடுகள்'
- கிம்முக்கு டிரம்ப் கொடுத்த அசாதாரண சலுகை - அதிர்ச்சியில் அமெரிக்கா
- கொழும்பு துறைமுகத்தின் ஒரு பகுதியை இந்தியா, ஜப்பானுக்கு கொடுத்த இலங்கை
- 'அமெரிக்காவில் உலகப் போரைவிட கொரோனாவால் அதிக மரணங்கள்' - பைடன்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:








