தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: அ.ம.மு.க தலைமையை ஏற்கும் கட்சிகளுடனேயே கூட்டணி: டி.டி.வி. தினகரன்

பட மூலாதாரம், TTV DINAKARAN
(தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பாக நடந்து வரும் அரசியல் கட்சிகளின் முக்கிய நிகழ்வுகள், சந்திப்புகள் தொடர்பான தகவல்களின் சுருக்கத்தை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)
தமிழக சட்டமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைமையை ஏற்கும் கட்சிகளுடனேயே கூட்டணி மேற்கொள்ளப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று சசிகலா நடராஜனை அவர் வசித்து வரும் இல்லத்தில் சந்தித்து டி.டி.வி. தினகரன் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் தேர்தல் வியூகம், அதிமுக-அமமுக இணைப்பு சாத்தியம், பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறதா உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு டி.டி.வி. தினகரன் அளித்த பதில்:
அமமுக சார்பில் தேர்தலில் போட்டியிடும் விருப்ப மனுக்கள் கோரப்பட்டுள்ளன. மார்ச் 3 முதல் 10ஆம் தேதிவரை விருப்ப மனுக்கள் பெறப்படும். இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் எங்களுடைய தொண்டர்கள் விருப்ப மனுக்களை தாக்கல் செய்வார்கள்.
பாஜக மீதான விமர்சனத்தை சமீப காலமாக குறைத்து வீட்டீர்களே என செய்தியாளர்கள் கேட்டதற்கு, எப்போதும் போலவே நான் விமர்சனத்தை முன்வைக்கிறேன். அது உங்களுடைய பார்வையில் தான் தவறாகப்படுகிறது என்று தினகரன் கூறினார்.
நாங்கள் எதற்காக வெளிப்படையாக இன்னொரு கட்சியுடன் பேச வேண்டும், பல கட்சிகள் எங்களுடனேயே பேசி வருகின்றன. தேர்தல் நெருங்குகிறது. எங்களுடைய ஒரே இலக்கு திமுகவை ஆட்சிக்கு வர வைக்கக் கூடாது என்பது தான். அதற்காகத்தான் நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். எங்களுடைய தலைமையை ஏற்கும் கட்சிகளுடனேயே நாங்கள் கூட்டணி மேற்கொள்வோம் என்று தினகரன் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவும், பாஜகவும் அமமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள முன்வந்தால் ஏற்பீர்களா என கேட்டதற்கு, அந்த கட்சிகள் வரும் என எனக்கு நம்பிக்கையில்லை. நீங்கள் தொடர்ந்து கேட்பதால் அப்படி பதிலளித்தேன். அவர்களாக கூட்டணி பேச வந்தால் பேசுவோம் என்று பதிலளித்தார் டி.டி.வி. தினகரன்.
அதிமுக, பாஜக, அமமுக போன்ற கட்சிகள் இணைந்தால் திமுகவை வீழ்த்த முடியும் என நம்புகிறீர்களா என செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு, மற்ற கூட்டணி பற்றி நான் ஏன் பேச வேண்டும்? அது நல்லதாக இருக்காது. எங்களுடைய அம்பும் இலக்கும் ஒன்றுதான் என்று பூடகமாகவே பதிலளித்தார் தினகரன்.

திமுக - இடதுசாரிகள் கட்சிகள் இடையே தொகுப்பங்கீடு மீண்டும் பிற்பகலில் ஆலோசனை

பட மூலாதாரம், M.K.Stalin Facebook
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு தொகுதி உடன்பாடு காண்பதற்காக தி.மு.க. - இடதுசாரி கட்சிகளுக்கு இடையில் நடந்த முதல்கட்ட பேச்சு வார்த்தையில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை. தி.மு.க. மிகக் குறைவான இடங்களேயே தர முன்வந்ததாக இடதுசாரிக் கட்சிகள் கருதுகின்றன.
தி.மு.க கூட்டணியில் இடங்களைப் பகிர்ந்துகொள்வதற்கான பேச்சு வார்த்தை தற்போது நடந்து வருகிறது. ஏற்கனவே காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி ஆகியவற்றுடன் பேச்சு வார்த்தைகள் நடந்துள்ளன. இதில் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி ஆகியவற்றுடன் உடன்பாடு எட்டப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், இன்று காலையில் சி.பி.எம். குழுவினர் அக்கட்சியின் மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன் தலைமையில் அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்தனர். பேச்சுவார்த்தை முடிந்த பிறகு, செய்தியாளர்கள் பேச்சு வார்த்தை விவரங்களைக் கேட்டபோது, ஏதும் சொல்லாமல் சி.பி.எம். குழுவினர் சென்றுவிட்டனர்.
இதற்குப் பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அக்கட்சியின் எம்.பி. சுப்பராயன் தலைமையிலான குழுவினர் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக அறிவாலயம் வந்தனர். பேச்சு வார்த்தை முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சுப்பராயன், பேச்சுவார்த்தை மீண்டும் தொடருமென்று மட்டும் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
இந்த பேச்சு வார்த்தைகளின்போது இடதுசாரிக் கட்சிகள் தலா 12 இடங்களைக் கேட்டதாகவும் ஆனால், தி.மு.கவின் சார்பில் தலா ஆறு இடங்களை மட்டுமே தர முன்வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்தக் கூட்டணியில் குறைந்தது 10 இடங்களையாவது சி.பி.எம். எதிர்பார்க்கிறது. ஆனால், தி.மு.க. ஆறு என்ற எண்ணிக்கையைத் தாண்டி இடங்களை அளிக்க முன்வரவில்லையென சொல்லப்படுகிறது. இந்த நிலையில்தான் தி.மு.க. - சி.பி.எம். இடையிலான பேச்சு வார்த்தைகள் நிற்கின்றன.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து மார்க்சிஸ்ட் கட்சி இன்று பிற்பகலில் ஆலோசனை நடத்தவுள்ளதாகத் தெரிகிறது.
பிற செய்திகள்:
- பிரசாந்த் கிஷோர் பஞ்சாப் முதல்வரின் ஆலோசகராக நியமனம் - சம்பளம் ஒரு ரூபாய்
- "1980" தமிழக சட்டமன்ற தேர்தலில் எம்.ஜி.ஆர் மீண்டும் வென்றது எப்படி?
- பெண் எஸ்பி பாலியல் வழக்கு: சிறப்பு டிஜிபியை விசாரிக்க பெண் எஸ்பி நியமனம்
- அமேசான் காடுகள்: எப்படி வனங்களை அழித்து நிலத்தை அபகரிக்கிறார்கள்? நேரடி ரிப்போர்ட்
- ஜமால் கஷோக்ஜி கொலை வழக்கு: “செளதி இளவரசர் தண்டிக்கப்பட வேண்டும்” - ஹாடீஜா ஜெங்கிஸ்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:








