பெண் எஸ்பி பாலியல் வழக்கு: சிறப்பு டிஜிபியை விசாரிக்க பெண் எஸ்பி நியமனம்

(இன்று 02.03.2021 செவ்வாய்க்கிழமை இந்தியாவில் உள்ள சில முக்கிய நாளிதழ்களிலும் அவற்றின் இணையதளங்களிலும் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)
பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறப்பு டிஜிபி மீது சிபிசிஐடி தொடா்ந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக பெண் எஸ்பி நியமிக்கப்பட்டுள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி கடந்த 21-ஆம் தேதி திருச்சி, புதுக்கோட்டையில் நடைபெற்ற பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்றார். முதல்வரின் பாதுகாப்புக்காக தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு பிரிவு சிறப்பு டிஜிபி அங்கு சென்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இளம் பெண் ஐபிஎஸ் அதிகாரியை தனது காரில் அழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அந்த பெண் அதிகாரி, தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே. திரிபாதி, தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கே.பிரபாகா் ஆகியோரிடம் கடந்த 23-ஆம் தேதி புகார் அளித்தார். அதன் அடிப்படையில் விசாரணை செய்ய விசாகா கமிட்டி அமைத்து உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கே.பிரபாகா் 24-ஆம் தேதி உத்தரவிட்டார். இக்குழு, தமிழக அரசின் திட்டம் மற்றும் வளா்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலா் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.
சிபிசிஐடி வழக்கு: இந்நிலையில் பெண் எஸ்பி அளித்த புகாரை விசாரிக்க மாநில குற்றப்புலனாய்வுத்துறைக்கு (சிபிசிஐடி), தமிழக டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் சிபிசிஐடி அதிகாரிகள், சிறப்பு டிஜிபி மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கினா்.
இந்த வழக்கில் பெண் எஸ்பியை புகார் கொடுக்க விடாமல் தடுக்க முயன்றதாக மாவட்ட கண்காணிப்பாளராக இருந்த ஒரு எஸ்.பியும் சோ்க்கப்பட்டுள்ளார். இவ்வழக்கின் விசாரணை அதிகாரியாக ஐபிஎஸ் அதிகாரி முத்தரசியை நியமித்து சிபிசிஐடி டிஜிபி பிரதீப் வி பிலிப் திங்கட்கிழமை உத்தரவிட்டார். சிறப்பு டிஜிபி மற்றும் செங்கல்பட்டு எஸ்பி மீது விழுப்புரம் சிபிசிஐடி பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், அப்பிரிவு அதிகாரிகள் அங்கு முகாமிட்டு விசாரணையைத் தொடங்க திட்டமிட்டுள்ளனா். புகாரில் சிக்கியுள்ள இருவரும் விரைவில் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021: சந்தேக பண பரிமாற்றம் குறித்து தினசரி அறிக்கை அளிக்க உத்தரவு

பட மூலாதாரம், BBC Tamil
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வேட்பாளர்கள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் வங்கிக் கணக்கு நடவடிக்கைகளைக் குறித்த விவரங்களையும் அளிக்க வேண்டும் என வங்கிகளுக்கு கட்டுப்பாடுகளுடன் உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது என இந்து தமிழ் திசையில் செய்தி பிரசூரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைத்திருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக காட்பாடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தேர்தல் ரத்து செய்யப்பட்டு இரண்டாவது முறையாக நடத்தப்பட்டது.
எனவே, வரும் சட்டப் பேரவை தேர்தலில் பணப் பரிமாற்றத்தை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க தீவிரம் காட்டி வருகிறது தேர்தல் ஆணையம். குறிப்பாக, வங்கிகளில் பணப் பரிமாற்ற விவரங்களை கடுமையான கண்காணிப்புக்கு உள்ளாக்க திட்டமிட்டுள்ளனர்.
இது தொடர்பாக வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வங்கி மேலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பேசும்போது, ''இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்கு மாறான பணப்பரிவர்த்தனை தொடர்பாக அனைத்து வங்கி மேலாளர்கள், பணக் காப்பகங்களான செஸ்ட் கிளைகளின் மேலாளர்கள் நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட கடந்த 26-ம் தேதி முதல் தேர்தல் முடியும் வரை அனைத்து வங்கி பண காப்பகங்களும் பணம் எடுப்பு மற்றும் பணம் விடுவிப்பு, பணப் பரிவர்த்தனை விவரங்களை தினசரி மாவட்ட தேர்தல் அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
அனைத்து வங்கிக் கிளைகளும் ரூ.1 லட்சத்துக்கும் அதிகமான பணம் எடுப்பு, வைப்பு உள்ளிட்ட விவரங்கள், சந்தேகத்துக்குரிய பண பரிவர்த்தனை விவரங்களை அளிக்க வேண்டும். தேர்தலில் போட்டியிடும் நபர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகளின் நடவடிக்கை விவரங்களையும் தினசரி மாவட்ட தேர்தல் அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
ஆர்.டி.ஜி.எஸ் முறையில் சந்தேகத்துக்குரிய முறையில் பணப்பரிவர்த்தனை இருந்தால், அது தொடர்பாகவும் புகார் அளிக்க வேண்டும். கிராமப்புற வங்கிக் கிளைகளில் நீண்ட காலமாக பண பரிவர்த்தனை ஏதும் இல்லாமல் இருந்து தற்போது பணப்பரிமாற்றம் நடைபெறுவதாக சந்தேகம் இருந்தாலும் தகவல் தெரிவிக்க வேண்டும்.
மேலும், ஏடிஎம் மையங்களுக்கு பணம் எடுத்துச் செல்லும் வங்கி முகவர்கள் உரிய சான்றுகளுடன் செல்ல வேண்டும். அதில், பணத்தாள்களின் முழு விவரத்தையும் குறிப்பிட்டு வங்கி அலுவலரின் கையொப்பம் பெற்றிருக்க வேண்டும்.
ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக் கிளைக்கு பண பரிவர்த்தனை செய்யும்போது அந்த வங்கி அலுவலரின் அங்கீகரிப்பு சான்று இருக்க வேண்டும்'' என கூறியதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரட்டை இலை சின்ன லஞ்ச வழக்குக்கு தடைகோரிய மனு விசாரணை 25-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

பட மூலாதாரம், BBC Tamil
அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக சுகேஷ் சந்திரசேகர், டி.டி.வி.தினகரன், பி.குமார், மல்லிகார்ஜுனா உள்ளிட்ட 9 பேர் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் 17-ம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்தனர்.
டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட 4 பேருக்கு எதிராக குற்றச்சாட்டை ஏற்ற விசாரணை நீதிமன்றம் மற்றவர்களை விடுவித்தது. பி.குமாருக்கு எதிராக விசாரணை நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 14-ந் தேதி இடைக்காலத் தடைவிதித்தது.
இதை அடிப்படையாகக் கொண்டு, டி.டி.வி.தினகரன், மல்லிகார்ஜுனா, சுகேஷ் சந்திரசேகருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் 8-ந் தேதி இடைக்காலத் தடை விதித்தது.
இந்நிலையில், இரட்டை இலை சின்ன லஞ்ச வழக்குக்கு தடைகோரிய மனு மீதான விசாரணை, டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் சார்பில் வழக்குரைஞர்கள் என். ஹரிகரன் உள்ளிட்டோர் ஆஜராயினர். மனுவைப் பரீசிலித்த நீதிபதி சுப்ரமணியம் பிரசாத், இந்த விசாரணையில் இருந்து விலகிக்கொள்வதாகத் தெரிவித்ததுடன், வழக்கு விசாரணையை மார்ச் 25-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.
பிற செய்திகள்:
- அமேசான் காடுகள்: எப்படி வனங்களை அழித்து நிலத்தை அபகரிக்கிறார்கள்? நேரடி ரிப்போர்ட்
- ஜமால் கஷோக்ஜி கொலை வழக்கு: “செளதி இளவரசர் தண்டிக்கப்பட வேண்டும்” - ஹாடீஜா ஜெங்கிஸ்
- மியான்மரில் சூச்சி மீது சுமத்தப்பட்டுள்ள புதிய குற்றச்சாட்டுகள் – ஒரு மாதத்திற்கு பிறகு வீடியோ காலில் தோன்றினார்
- ஆலந்தூரில் கமல் போட்டியா? எடுபடுமா எம்.ஜி.ஆர் சென்டிமென்ட்?
- டிரம்ப் புதிய அரசியல் கட்சி தொடங்குகிறாரா? - பதவி போன பின் முதல் உரை
- சீனா 10 கோடி பேரை வறுமையில் இருந்து மீட்டது எப்படி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












