தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: ஆலந்தூரை தேர்வு செய்தாரா கமல்? தொகுதி நிலவரம் என்ன? எடுபடுமா எம்.ஜி.ஆர் சென்டிமென்ட்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளிவரும் நிலையில், அந்த தொகுதியை கமல் தேர்வு செய்வதன் பின்னணி என்ன?
தமிழக சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் என அறிவிக்கப்பட்டாலும், `எந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள்?' என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அ.தி.மு.க அணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 இடங்கள் ஒதுக்கப்பட்டு விட்டன. பா.ஜ.கவுடன் அ.தி.மு.க தலைமை நடத்திய பேச்சுவார்த்தையும் முடிவுக்கு வரவில்லை. தி.மு.க சார்பில் கூட்டணி கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த டி.ஆர்.பாலு தலைமையில் எழுவர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், மக்கள் நீதி மய்யம் கட்சியின் கூட்டணிக்குள் சட்டப் பஞ்சாயத்து இயக்கம் வந்துவிட்டது. சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, பாரிவேந்தரின் ஐ.ஜே.கே உள்ளிட்ட கட்சிகள், ம.நீ.மவுடன் பேச்சுவார்த்தையை நடத்திக் கொண்டிருக்கின்றன. இதன் தொடர்ச்சியாக, ம.நீ.ம சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் இன்று நேர்காணல் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கான குழுவில் பழ.கருப்பையா, செந்தில் ஆறுமுகம், சுரேஷ் ஐயர் உள்ளிட்டவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
கோவை தெற்கா.. ஆலந்தூரா?
இந்நிலையில், `ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் கமல் போட்டியிடலாம்' என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து ம.நீ.மய்யத்தின் மாநில நிர்வாகி ஒருவரிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். பெயர் குறிப்பிட விரும்பாமல் நம்மிடம் பேசியவர், ``கோவை தெற்கு தொகுதியில் கமல் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது. காரணம், நாடாளுமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் மட்டும் 30,000 வாக்குகளை ம.நீ.ம வாங்கியது. அதற்காக கோவையில் போட்டியிடுவது என்ற முடிவில் கமல் இல்லை. அந்தத் தொகுதியில் மகேந்திரன் போட்டியிட வாய்ப்புள்ளது" என்கிறார்.
தொடர்ந்து பேசுகையில், `` நாடாளுமன்ற தேர்தலில் தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை ஆகிய மூன்று தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் மூன்றாம் இடத்தை பிடித்தது. இந்த 3 தொகுதிகளிலும் 10 சதவிகிதத்துக்கும் மேலான வாக்குகளை ம.நீ.ம பெற்றது. இதுதவிர, கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி, பொள்ளாச்சி, சேலம், ஸ்ரீபெரும்பத்தூர், திருவள்ளூர், திருப்பூர் ஆகிய தொகுதிகளிலும் அக்கட்சி மூன்றாம் இடம் பிடித்தது. ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆலந்தூரை கமல் தேர்வு செய்வதன் பின்னணி என்ன?

18 நாளில் 24,000 வாக்குகள்
அதேநேரம், சட்டமன்ற தொகுதிகளில் சென்னைக்கு அருகில் உள்ள மிகச் சிறிய தொகுதியாக ஆலந்தூர் இருக்கிறது. தொகுதியில் உள்ள வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கையே 2 லட்சம்தான். மேலும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ம.நீ.ம சார்பில் களமிறங்கிய வழக்கறிஞர் ஸ்ரீதர், 1,36,000 வாக்குகளைப் பெற்றார். இதில், ஆலந்தூர் தொகுதியில் மட்டும் 24,000 வாக்குகள் கிடைத்தன. வெறும் 18 நாள்கள் நடைபெற்ற பிரசாரத்தில் கிடைத்த வாக்குகள் இவை. இதன் காரணமாகவே ஆலந்தூரை தேர்வு செய்தார் கமல்" என்கிறார்.
எம்.ஜி.ஆர் சென்டிமென்ட்!
இதைவிட பிரதான காரணம் ஒன்றையும் ம.நீ.ம நிர்வாகிகள் முன்வைக்கின்றனர். ``ஆலந்தூர் தொகுதியாக உருமாறுவதற்கு முன்னதாக அது பரங்கிமலை சட்டமன்ற தொகுதியாக அறியப்பட்டது. இங்கு 1967ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க சார்பில் முதன்முறையாக போட்டியிட்டு எம்.ஜி.ஆர் வென்றார். அதற்கு அடுத்து வந்த தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட்டு அவர் வென்றார். பின்னாளில் ஆலந்தூர் தொகுதியாக மாறியது. இதே தொகுதிக்குள்தான் எம்.ஜி.ஆர் வசித்த ராமாவரம் தோட்டமும் வருகிறது. அண்மைக்காலமாக எம்.ஜி.ஆர் பிம்பத்தைக் கமல் உயர்த்திப் பிடிப்பதால், சென்டிமெண்டாகவும் ஆலந்தூர் கைகொடுக்கும் என நம்புகிறார். தொகுதி முழுக்க நிரம்பியுள்ள அரசு ஊழியர்கள் மற்றும் நடுத்தர குடும்பங்களின் வாக்குகளும் தனக்கு வந்து சேரும் எனக் கமல் நம்புகிறார்" என்கின்றனர்.
`கமலின் சென்டிமென்ட் எடுபடுமா?' என மக்கள் நீதி மய்ய வழக்கறிஞர் அணியின் மாநில இணைச் செயலாளர் ஸ்ரீதரிடம் பேசினோம். `` நாடாளுமன்றத் தேர்தலில் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள தொகுதிகளில் ம.நீ.ம அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. எங்கள் கட்சியின் தலைவரோ அல்லது ம.நீ.ம சார்பில் எந்த வேட்பாளர் நின்றாலும் சென்னை முழுவதும் வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகம்" என்கிறார்.
தி.மு.கவுக்கு பாதகமா?
தொடர்ந்து பேசுகையில், `` ஆலந்தூர் தொகுதியில் வன்னியர்களுக்கு அடுத்தபடியாக தலித் மக்களின் வாக்குகள் அதிகம் உள்ளன. அண்மையில் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எஸ்.சி மக்களை இழிவுபடுத்திப் பேசிய வார்த்தைகளால் அங்கு தி.மு.கவுக்கு எதிரான சூழல் நிலவுகிறது. இங்கு தி.மு.கவும் அ.தி.மு.கவும் தோற்பதற்கு நாங்கள் காரணமாக இருப்போம். எங்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் 7 ஆம் தேதி வெளியாக உள்ளது. அப்போது ஆலந்தூரில் தலைவர் போட்டியிடுவாரா என்பது தெரியவரும்" என்றார்.

பட மூலாதாரம், RS BHARATHI/FACEBOOK
ம.நீ.ம முன்வைக்கும் குற்றச்சாட்டு குறித்து தி.மு.கவின் வழக்கறிஞர் அணியின் இணைச் செயலாளர் வீ.கண்ணதாசனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` எஸ்.சி மக்கள் குறித்து ஆர்.எஸ்.பாரதி என்ன உள்ளர்த்தத்தில் பேசினார் என்பதைத்தான் பார்க்க வேண்டும். சிவனின் பெயரே பிச்சைதான். அதற்காக, பிச்சை போடுவது என்பதைத் தவறாகப் பார்க்க முடியுமா. அதற்காக அம்மக்களை இழிவுபடுத்தினார் என்பதெல்லாம் தவறான நோக்கம். அப்படிப்பட்ட எண்ணமே அவருக்கு சிறிதும் இல்லை. அதுதான் உண்மை. இதன் காரணமாக ஆலந்தூரில் களநிலவரம் தி.மு.கவுக்கு எதிராக இருக்கிறது என்பதெல்லாம் தவறான வாதம்" என்கிறார்.
3 ஆம் தேதி 3 மணி 3 நாள்கள்!
மேலும், `` ஆலந்தூர் தொகுதி, தி.மு.கவின் கோட்டையாக இருக்கிறது. இந்தத் தொகுதியில் எம்.ஜி.ஆரே தி.மு.க சார்பில் போட்டியிட்டு இரண்டு முறை வென்றுள்ளார். ம.நீ.ம நிற்பதால் தி.மு.க வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் நங்கநல்லூர் பகுதியில் ம.நீ.ம வேட்பாளர், கணிசமான வாக்குகளை வாங்கியதால் எங்களின் வெற்றி எளிதாக இருந்தது. இந்தமுறையும் தி.மு.கவே வெல்லும்" என்கிறார்.
வரும் 3 ஆம் தேதி மாலை 3 மணிக்கு ஆலந்தூரில் பிரசாரத்தைத் தொடங்கவிருக்கிறார் கமல்ஹாசன். தேர்தல் பிரசாரத்தின் முடிவில் 3 நாள்கள் தொடர்ச்சியாக ஆலந்தூரில் பிரசாரம் மேற்கொள்வதும் அவரின் திட்டமாக இருக்கிறது. முதல்வர் வேட்பாளராகவும் டார்ச் லைட் சின்னத்திலும் களமிறங்குவதால் கமலுக்கான வெற்றிவாய்ப்பு எப்படியிருக்கப் போகிறது என்பது வாக்கு எண்ணிக்கை நாளான மே 2 அன்று தெரிந்து விடும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












