மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 18 பேர் பலி

Protesters take cover in Yangon

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, தடுப்பு அரண்களுக்கு பின் தற்காத்துக்கொள்ள முயலும் போராட்டக்காரர்கள்.

மியான்மரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு நடந்துவரும் தொடர்ச்சியான போராட்டங்களில் ஒரு பகுதியாக, சனியன்று குறைந்தது 18 பேர் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐநாவின் மனித உரிமைகள் ஆணையம் தெரிவிக்கிறது.

யங்கூன், தாவெய், மாண்டலே உள்ளிட்ட நகரங்களில் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நகரங்களில் நடந்த ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தின்போது கண்ணீர் புகை குண்டுகளை வீசிய காவல் துறையினர் போராட்டக்காரர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

பிப்ரவரி 1ஆம் தேதி மியான்மரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் அங்கு தொடர்ச்சியாக போராட்டம் நடந்து வருகிறது.

கடந்த வாரங்களில் பெரும்பாலும் அமைதியாக நடைபெற்ற இந்தப் போராட்டங்களை கட்டுபடுத்த போராடுபவர்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை, மியான்மர் பாதுகாப்பு படைகள் எடுத்து வருகின்றன.

ஆட்சியில் இருந்த ஆங் சான் சூச்சி உள்ளிட்ட தலைவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தலைநகர் நேபிடாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சூச்சி, ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியபின் பொது வெளியில் காணப்படவில்லை.

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, தலைநகர் நேபிடாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சூச்சி, ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியபின் பொது வெளியில் காணப்படவில்லை.

சனிக்கிழமை நடந்த சம்பவத்தின் காட்சிகள் சமூக ஊடகங்களில் ஞாயிறன்று வெளியாகியுள்ளன.

அந்த காணொளிகளில் காவல் துறையினர் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்துவது, தற்காலிக தடுப்பு அரண்களை காவல் துறையினர் சாலைகளில் அமைத்துள்ளது, ரத்த காயம்பட்ட பலர் காவல் துறையினரால் அடித்து விரட்டப்படுவது ஆகியவை பதிவாகியுள்ளன.

போராட்டங்கள் முடிவுக்கு வருவது தொடர்பான அறிகுறிகள் எதுவும் தென்படாததால் சனிக்கிழமை தொடங்கிய குடிமக்களுக்கு எதிரான நடவடிக்கைகள், ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்தன.

ஆட்சியை கைப்பற்றிய ராணுவம்

நாட்டின் நிர்வாகப் பொறுப்பை தாங்கள் ஏற்றுக் கொண்டிருப்பதாக மியான்மர் ராணுவம் பிப்ரவரி 1ஆம் தேதி அறிவித்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் நிர்வாகப் பொறுப்பை ஒப்படைக்க ஒப்புக்கொண்டு ஒரு தசாப்தம் கழித்து இது மீண்டும் நடந்திருக்கிறது.

Emergency workers treat an injured man in Yangon's Hledan township

பட மூலாதாரம், BBC Burmese

படக்குறிப்பு, போராட்டத்தின்போது காயம்பட்டவருக்கு சிகிச்சை அளிக்கும் மீட்புதவி பணியாளர்கள்.

இந்த ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கை நாட்டில் அச்சத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. 2011-ல் ஜனநாயக ஆட்சி அமைவதற்கு முன்பு, சுமார் 50 ஆண்டு காலம் ராணுவத்தின் சர்வாதிகார ஆட்சியை சந்தித்த நாடு மியான்மர். அதிகாலை நேரத்தில் ஆங் சான் சூச்சி மற்றும் பிற அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்ட பாணி, தாங்கள் மறந்துவிட்ட அதே ராணுவ பாணியை நினைவுபடுத்துவதாக அந்த மக்களுக்கு இருந்தது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக, சூச்சி மற்றும் ஒரு காலத்தில் தடை செய்யப்பட்டிருந்த அவருடைய ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சி (என்.எல்.டி.) ஆட்சி நடத்தி வந்தது. 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சுதந்திரமாக, நேர்மையாக 2015ல் நடந்த தேர்தலில் அந்தக் கட்சி ஆட்சியைப் பிடித்திருந்தது. பிப்ரவரி 1ஆம் தேதி காலையில், அந்தக் கட்சியின் இரண்டாவது பதவிக் காலம் தொடங்கி இருக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தில் கால்வாசி இடங்கள் ராணுவத்தின் வசம் இருக்கும் வகையிலும், மிக முக்கியமான அமைச்சகங்கள் ராணுவத்தின் வசம் இருக்கும் வகையிலும் உருவாக்கப்பட்ட அரசியல் சாசனத்தின் காரணமாக, மியான்மர் நிர்வாகத்தில் ராணுவம்தான் திரைமறைவில் கட்டுப்பாட்டை செலுத்தி வந்தது.

தேர்தலில் என்ன பிரச்சனை?

கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி நடந்த தேர்தலில் என்.எல்.டி கட்சி மொத்தம் உள்ள இடங்களில் 83 சதவீத தொகுதிகளில் வெற்றிபெற்றது. இதை பலரும் சூச்சியின் மக்கள் அரசாங்கத்தின் மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பாகப் பார்த்தார்கள்.

மியான்மரில் ராணுவ ஆட்சி

பட மூலாதாரம், Getty Images

2011-ம் ஆண்டு வரையிலான ராணுவ ஆட்சிக்குப் பிறகு நடத்தப்பட்ட இரண்டாவது தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மியான்மர் நாட்டின் ராணுவம் இந்தத் தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த நாட்டின் அதிபர் மற்றும் தேர்தல் ஆணையத்தின் தலைவருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் புகாரளித்திருக்கிறது ராணுவம். தேர்தல் ஆணையம் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கிறது.

தேர்தலில் மோசடி நடந்ததாக குற்றஞ்சாட்டப்படும் இந்த விவகாரம் தொடர்பாக " நடவடிக்கை எடுக்கப்போவதாக" மியான்மர் ராணுவம் சமீபத்தில் அச்சுறுத்தி இருந்தது. எனவே ஆட்சிக் கவிழ்ப்பு நடக்கலாம் என்கிற அச்சம் அப்போதே உண்டானது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: