சென்னை மாநகராட்சி: எந்த தொகுதியில் என்ன பிரச்னை? வாக்காளர்கள் எதிர்பார்ப்பு என்ன? - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
சென்னை மாநகரம் - தமிழகத்தின் தலைநகரம். அதிக எண்ணிக்கையிலான சட்டமன்ற தொகுதிகள் கொண்ட நகரம். இருந்தபோதும், அடிப்படை பிரச்னைகளான சாலை வசதி, போக்குவரத்து நெரிசல், குப்பை சேகரிப்பு போன்றவை தொடருகின்றன. சென்னை, பெருநகர மாநகராட்சியாக மாறிவிட்ட நிலையில், சட்டமன்ற உறுப்பினர்களின் பங்கு அதிகரித்துள்ளதாக கருதும் வாக்காளர்கள், நகரத்தின் வளரும் வேகத்திற்கு ஏற்ப, வளர்ச்சி பணிகளை சட்டமன்ற உறுப்பினர்கள் மேற்கொள்ளவேண்டும் என்கிறார்கள்.
பரபரப்பாக காணப்படும் சென்னை நகரத்தின் வீதிகளில், முன்னணி அரசியல் தலைவர்கள், நட்சத்திர வேட்பாளர்கள் பிரசாரம் செய்யும்போது, புதிய குடியிருப்புகள், மேம்படுத்தப்பட்ட சாலை வசதி, சாக்கடை பழுதுநீக்கம், குப்பை சேகரிப்பு முறைப்படுத்துதல் போன்ற வாக்குறுதிகளை அளித்துவருகிறார்கள். சென்னை நகரத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர்களிடம் பேசியபோது, உடனடியாக தீர்க்கவேண்டிய பிரச்னைகள் என எதனை பார்க்கிறார்கள் என தெரிவித்தார்கள்.
சட்டமன்ற தொகுதிகள் மற்றும் அடிப்படை பிரச்னைகள்
ஆர்.கே. நகர் --- சட்ட ஒழுங்கு பிரச்னை, ஏழை மக்களுக்கு மோசமான குடியிருப்புகள்
பெரம்பூர் --- போக்குவரத்து நெரிசல்
கொளத்தூர் --- சாலை விரிவாக்கம் தேவை, வெள்ளநீர் தேக்கம்
வில்லிவாக்கம் --- சுரங்கப்பாதை, மேம்பாலங்களின் தேவை
திரு.வி.க.நகர் --- கழிவுநீர் தேக்கம், குடிநீர் பிரச்சனை
எழும்பூர் --- வாகன நிறுத்துமிடங்கள் பற்றாக்குறை, பொது கழிப்பிடங்கள் குறைவு
ராயபுரம் ---- குப்பை அகற்றல், போக்குவரத்து நெரிசல்
துறைமுகம் ----- வணிக வளாகங்கள் மேம்பாடு, முறையற்ற வாகன நிறுத்துமிடங்கள்
சேப்பாக்கம் - திருவல்லிகேனி --- போக்குவரத்து நெரிசல், கழிவுநீர் தேக்கம்
ஆயிரம் விளக்கு ---- சாலை ஆக்கிரமிப்பு, கொசு தொல்லை, பாதாள சாக்கடை பிரச்னை
அண்ணாநகர் தொகுதி---- போக்குவரத்து நெரிசல், சாலை ஆக்கிரமிப்பு
விருகம்பாக்கம் ---- வெள்ள நீர் தேக்கம், சாலைவசதி
சைதாப்பேட்டை --- கொசு தொல்லை, பாதாள சாக்கடை பிரச்சனை, குப்பை அகற்றல்
தியாகராயநகர் ---- வாகன நிறுத்துமிடம் போதாமை, போக்குவரத்து நெரிசல், வெள்ள நீர் தேக்கம்
மயிலாப்பூர் ---- கொசுத்தொல்லை, வெள்ளநீர் தேக்கம்
வேளச்சேரி ----- குப்பை அகற்றம், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, மோசமான சாலைகள்
குறுகிய சாலைகளால் தொடரும் சிக்கல்கள்
திமுக சார்பில் மருத்துவர் எழிலன் மற்றும் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக சார்பாக நடிகை குஷ்பு போட்டியிடும் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுகிறார்கள். ஆயிரம் விளக்கு தொகுதி வாக்காளரான சுமதி சென்னை நகரத்தில் அதிக கவனிக்கப்படும் தொகுதியாக தனது தொகுதி மாறியுள்ளது என்கிறார்.
''திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளுக்கும் இந்த தொகுதி வாய்ப்பு கொடுத்துள்ளது. ஆனால் எங்கள் பிரச்னைகள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் பகுதியாகவும், பல அரசியல் தலைவர்கள் இருக்கும் தொகுதியாக இருந்தாலும், இங்கு சாலை ஆக்கிரமிப்பு, கொசு தொல்லை, பாதாள சாக்கடை பிரச்னை தொடர்கிறது. இந்த தேர்தலில் மற்றம் ஏற்படுமா என காத்திருக்கிறோம்,''என்கிறார் வாக்காளர் சுமதி.
சென்னை நகரத்தின் கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து எழுதிவரும் பத்திரிகையாளர் கோடீஸ்வரனிடம் பேசினோம். சென்னை நகரத்தைச் சேர்ந்த சட்டமன்ற தொகுதிகளில் பெரும்பாலும் திமுக அல்லது அதன் கூட்டணிக்கட்சிகள்தான் தொடர்ந்து வெற்றிபெறுகின்றன என்றும் அதிமுக சமீப காலங்களில் தனது பிடியை அதிகரித்துவருகிறது என்கிறார் அவர்.
''திமுகவின் ஆரம்பகட்ட வளர்ச்சி என்பது சென்னை நகரத்தோடு அதிக தொடர்பு கொண்டது என்பதால், சென்னை நகரத்தின் பல தொகுதிகளிலும் திமுகவின் வேட்பாளர்கள் பெரும்பாலும் வெற்றி பெறுகிறார்கள். தொடர்ச்சியாக நகரத்தின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான திட்டங்களை திமுக அறிமுகப்படுத்தியுள்ளது என்பதால் திமுக பல தொகுதிகளை கைப்பற்றுவதற்கு எளிதாக இருக்கிறது. தற்போது மயிலாப்பூர், விருகம்பாக்கம் மற்றும் ராயபுரம் ஆகிய பகுதிகளில் அதிமுக பலமாகிவிட்டது. ஆனாலும் திமுக எளிதாக வெற்றி பெறகூடிய தொகுதிகள் அதிகம் கொண்ட நகரம் சென்னை,''என்கிறார் அவர்.
சென்னையில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் அடிப்படை பிரச்னைகள் தொடர்வதற்கு என்ன காரணம் என விளக்கினார். ''சென்னை நகரம் விரிவடைந்து கொண்டே செல்கிறது. பெருநகர மாநகராட்சியாக சென்னை மாறிவிட்டாலும், அதன் முக்கியமான வணிக பகுதிகளில் குறுகிய சாலைகள்தான் அதிகம். அந்த சாலைகளை விரிவுபடுத்துவதில் சிக்கல்கள் நீடிக்கின்றன. இந்த ஒரு காரணம் பல வசதிகளை தடுக்கிறது. வாகன நெரிசல் அதிகமாகிறது, வெள்ளநீர் வடிகால் பராமரிப்பு, பாதாள சாக்கடை பராமரிப்பு போன்றவை சிக்கல்கள் தொடருகின்றன. கடந்த 10-15 ஆண்டுகளில் சென்னை நகரத்தின் பரப்பளவு மிகவும் அதிகமாகியுள்ளது. பழைய சென்னையின் 174 சதுர கிலோமீட்டர் பரப்பளவு தற்போது 426 சதுர கிலோமீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதோடு வணிக பகுதிகள், அரசு அலுவலகங்கள் ஆகிய நெரிசலான பகுதிகளை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளிலும் நெரிசல் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. சாலை விரிவாக்கம் உடனடி தேவை, நகரத்தை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு மாநகராட்சி கவனத்தை கொடுத்துவருகிறது. அதோடு, சென்னையின் நெரிசலான பகுதிகளை ஒழுங்குபடுத்தினால், நகரத்தின் வசதிகள் மேம்படும்,''என்கிறார் கோடீஸ்வரன்.
''ஆட்சி மாற்றம் வந்தால் வளர்ச்சி தடைபடுகிறது''
முன்னாள் சென்னை நகர மேயர் மற்றும் சைதாப்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரான மா. சுப்பிரமணியிடம் சென்னை நகரத்தின் அடிப்படை பிரச்னைகள் தொடர்வது பற்றி கேட்டோம். ஆட்சி மாற்றம் ஏற்படும்போது நகரத்தின் வளர்ச்சியை கவனிப்பதில்லை என்பதால் சிக்கல்கள் தொடருகின்றன என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
''திமுக ஆட்சியில் இருக்கும் காலங்களில் சென்னை நகரத்தின் வளர்ச்சி என்பது மக்களின் பிரச்னைகளை தீர்ப்பதற்கான திட்டங்கள் கொண்டுவந்த காலங்களாக இருக்கும். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிமுக வந்தால், சென்னை நகரத்தின் முக்கிய திட்டங்களை கிடப்பில் போட்டுவிடுவார்கள். எங்கள் ஆட்சியில் சென்னை நகரத்தின் சாலைகள் மேம்பாடு, மேம்பாலங்கள் கட்டுவது, குப்பைகளை முறையாக சேகரிப்பு என கவனம் கொடுக்கிறோம். அதிமுக ஆட்சியில் சென்னை நகரத்தை புறக்கணித்துவிடுகிறார்கள்,''என்கிறார்.
''மக்களுக்கான திட்டங்கள் இல்லை''
சென்னை நகரத்தின் வளர்ச்சிக்காக அறிமுகப்படுத்தப்பட்ட பல திட்டங்கள் மக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல், அரசியல்வாதிகள் தங்களுக்கு வருமானம் தரும் திட்டங்களைதான் செயல்படுத்துகிறார்கள் என விமர்சிக்கிறார் அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராமன். அரசாங்க திட்டங்களில் நடைபெறும் ஊழல் மற்றும் சென்னை நகரத்தின் வளர்ச்சி திட்டங்களில் நடைபெற்ற நிர்வாக சீர்கேடுகள் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை தொடுத்தவர் ஜெயராமன்.
''சென்னை நகரத்தில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் நடுத்தர மக்கள். அவர்கள் தங்களது வாழ்க்கைக்காக பாடுபடவேண்டிய சூழலில் இருக்கிறார்கள். தரமான சாலைகள், முறையான குடிநீர் வசதி, கழிவுநீர் சேகரிப்பு, குப்பைகள் அகற்றவேண்டும் என்பது எட்டமுடியாத உயரத்தில் இல்லை. ஆனால் திட்டங்களை கொண்டுவரும்போது, அந்த திட்டங்களால் மக்கள் எந்தவிதத்தில் பயன்பெறுவார்கள் என்பதை அரசியல்வாதிகள் சிந்திப்பதில்லை. அவர்கள் தங்களுக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும் என யோசித்து திட்டம் கொண்டுவருகிறார்கள். நகரத்தை அழகுபடுத்துவதற்கு பணம் செலவிடுவதை விடுத்து சட்டமன்ற உறுப்பினர்கள் அவரவர் தொகுதியில் சாக்கடை பிரச்னை மற்றும் சாலை விரிவாக்கம் என அடிப்படை பிரச்னைகளை தீர்க்க பணத்தை செலவிட்டால், பல பகுதிகளை சீரமைக்கலாம்,''என்கிறார் ஜெயராமன்.
சென்னை நகரத்தில் உள்ள பல குடிசை பகுதிகள் அகற்றப்பட்டு அங்குள்ள மக்கள் பெரும்பாக்கம் உள்ளிட்ட புறநகர் பகுதியில் குடியமர்த்தப்பட்டதை நினைவுகூறுகிறார் ஜெயராமன். ''சென்னையில் பூர்விகமாக வாழ்ந்துவந்த மக்களை இடப்பெயர்வு செய்து அவர்களின் வாழ்வாதாரத்தை பறித்திருக்கிறார்கள். அவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு அமைத்து தருவதற்கு முயற்சிகள் எடுக்கவில்லை. ஆனால் சென்னை நகரத்தின் பல நீர் நிலைகளில் தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள் பலவற்றுக்கும் ஒப்புதல் தந்திருக்கிறார்கள். இதனை உடனே நிறுத்தவேண்டும்,''என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
பள்ளிக்கரணை பகுதியில் கடந்த 12 ஆண்டுகளாக பாதாள சாக்கடை பிரச்னைக்கு தீர்வு எட்டப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டிய அவர், ''அரசின் திட்டங்களை தீட்டும் கட்டத்தில் இருந்து செயல்படுத்தும் கட்டம் வரை பொது மக்களின் பங்கேற்பு இல்லாமல் செயல்படுத்தப்படுவதால் குறைகள் நீடிக்கின்றன. கிராமசபை நடைபெறுவதை பல நகரத்திலும் வார்டு சபை, ஏரியா சபை கொண்டுவரவேண்டும்,''என்கிறார் அவர்.
நிர்வாகத்தை விரிவுபடுத்தவேண்டும்
சென்னை நகரத்தில் நீடிக்கும் அடிப்படை பிரச்னைகளை பற்றி முன்னாள் மேயர் கராத்தே தியாகராஜனிடம் கருத்து கேட்டோம். ''ஒவ்வோரு தேர்தலிலும் ஒரே பிரச்னை தொடர்கிறது என்று சொல்லமுடியாது. நகரம் வளர்ச்சி அடைந்துவருகிறது. நகரத்தின் ஒரு சில இடங்களில் எந்தவித முன்னேற்றமும் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதை விடுத்து, இந்த நகரத்தை மூன்று மாநகராட்சியாக பிரித்து நிர்வாகம் செய்யவேண்டும். அந்த அளவுக்கு நகரத்தின் பரப்பளவு அதிகரித்துள்ளது. நகரத்தில் வசிப்பவர்களுக்கு மட்டுமல்ல, இந்த நகரத்தின் வசதிகள் அண்டை மாவட்டம், அண்டை மாநிலம், பிற மாநிலங்களில் இருந்து இங்கு வருவோர் என பலரின் தேவைகளை பூர்த்திசெய்யவேண்டிய கட்டாயத்தில் உள்ளது,''என்கிறார்.
இந்தியாவின் பிற வளர்ந்த நகரங்களோடு ஒப்பிடும்போது, சாலை மற்றும் குடிநீர் பிரச்னைகள் பெரிய அளவில் சென்னையில் இல்லை என்கிறார் தியாகராஜன். ''மின்விளக்கு இல்லாத தெருக்கள் இல்லை, குடிநீர் தரத்தில் பிரச்னை இருக்கலாம். ஆனால் குடிநீர் இணைப்பு எல்லா இடங்களிலும் சாத்தியமாகிவிட்டது. பாதாள சாக்கடை, கொசுத்தொல்லை போன்றவை தீர்ப்பதற்கான முயற்சிகள் தினமும் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதால், அவற்றை தொடர் பிரச்னை என சொல்லமுடியாது. நகரத்தின் வளர்ச்சிக்கு ஏற்றபடி நகரத்தின் வசதிகளிலும் முன்னேற்றம் தேவை. அதற்கு நிர்வாககத்தை விரிவுபடுத்தவேண்டும்,''என்கிறார் அவர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












