திமுக தேர்தல் அறிக்கையை குறிப்பிட்டு போலிச் செய்தி: பெண் மீது வழக்குப் பதிய தேர்தல் ஆணையம் உத்தரவு - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021

inter caste marriage dmk manifesto 259

பட மூலாதாரம், Screenshot

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் கலப்புத் திருமணத்திற்கான நிதியுதவி அதிகரிக்கப்படும் என்பதைத் திரித்துக் கூறி சமூக வலைதளங்களில் பரப்பிய பெண் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சட்டமன்றத் தேர்தலுக்கான தி.மு.கவின் தேர்தல் அறிக்கை சில தினங்களுக்கு முன்பாக வெளியிடப்பட்டது. அந்தத் தேர்தல் அறிக்கையில், "கலப்பு திருமணம் செய்து கொள்ளும் மணமக்களில் ஒருவர் ஆதிதிராவிடர் அல்லது மலைவாழ் பழங்குடியினர் எனில் அவர் பிற இனத்தவரை மணைந்து கொண்டால் வழங்கப்படும் நிதியுதவி 60 ஆயிரம் ரூபாய் மற்றும் தாலிக்கு 8 கிராம் (22 கேரட்) தங்கம் காசும் வழங்கப்படும்" என்று கூறப்பட்டிருந்தது.

இந்தத் தேர்தல் அறிக்கை வெளியானதும் இந்த வாக்குறுதி தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு பொய்ச் செய்திகள் பரப்பப்பட்டன. "திமுக தேர்தல் அறிக்கையில் விபரீத வாக்குறுதி" என தலைப்பிட்டு, "முதலியார், பிராமணர், நாயுடு, வன்னியர், யாதவர், நாடார், அகமுடையார், ரெட்டியார், பிள்ளை, கள்ளர், மறவர், கொங்கு வெள்ளாளர், செட்டியார், முத்தரையர் உள்ளிட்ட எந்தவொரு சாதியை சேர்ந்த பெண்ணை, ஆதி திராவிடர் ஒருவர் கல்யாணம் செய்துகொண்டால் - ரூ. 60,000 பணம் மற்றும் 1 பவுன் தங்க காசு பரிசு என திமுக தேர்தல் அறிக்கையின் 259-ஆவது வாக்குறுதியாக கூறப்பட்டுள்ளது! தேவையா இது" என வாட்ஸப்பிலும் ட்விட்டரிலும் செய்திகள் பரப்பப்பட்டன.

மேலும், இதே செய்தியை பெண் ஒருவர் கூறுவது போன்ற வீடியோவும் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது.

இதையடுத்து, "பல்வேறு சமூகங்களிடையே வன்மத்தைத் தூண்டும் விதமாகவும் பேசப்பட்டிருக்கிறது. இந்தப் பொய்ப் பிரசார காணொலியை தடை செய்ய வேண்டும். மேலும், அதற்குக் காரணமானவர்கள்மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்று தி.மு.கவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மாநில தேர்தல் அதிகாரியிடம் புகார் செய்தார்.

இந்த காணொலியை அனைத்து சமூக வலைதளங்களிலிருந்தும் நீக்கிட வேண்டுமென இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பு செயலாளருக்கும் தலைமைத் தேர்தல் அதிகாரி கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி மாநில காவல்துறை இயக்குனருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், அந்தப் பெண் காணொளியில் வெளியிட்டுள்ள கருத்துகள் சமூகங்களிடையே வெறுப்பைத் தூண்ட வாய்ப்புள்ளதால் அவரை அடையாளம் கண்டு, அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் தக்க பிரிவுகளின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார்.

தமது அடையாளம் அல்லது அரசியல் சார்பை வெளியிடாத அந்தப் பெண்ணின் பேச்சு இந்திய தண்டனைச் சட்டம் 153A-இன் கீழ் தண்டனை வழங்கத் தகுந்தது என்று தமிழக காவல்துறை இயக்குநருக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அந்தக் குறிப்பிட்ட பெண் மீது தமிழக காவல்துறை தற்போது வழக்குப் பதிவுசெய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

தி.மு.க. தேர்தல் அறிக்கை - 73வது பக்கத்தில் 259வது வாக்குறுதி

உண்மையில் தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பது என்ன?

தி.மு.க. தேர்தல் அறிக்கையின் 73வது பக்கத்தில் 259வது வாக்குறுதியாக திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் திட்டத்தின் பெயர் "அஞ்சுகம் அம்மையார் கலப்பு திருமண நிதியுதவித் திட்டம்". இந்தத் தலைப்பின் கீழ், "கலப்புத் திருமணங்களை ஊக்கப்படுத்தி பிறப்பு அடிப்படையிலான சாதி இன வேறுபாட்டை அகற்றி தீண்டாமையை ஒழிக்கும் நோக்கத்தில் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கலைஞர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டச அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம் புதுப்பிக்கப்பட்டுச் செயல்படுத்த அரசாணை வெளியிடப்படும்.

கலப்புத் திருமணம் செய்துகொள்ளும் மணமக்களில் ஒருவர் பட்டியல் இனத்தவர் அல்லது பழங்குடியினர் எனில் அவர் பிற இனத்தவரை மணந்துகொண்டால் வழங்கப்படும் நிதியுதவி 60 ஆயிரம் ரூபாய் மற்றும் தாலிக்கு 8 கிராம் தங்கக் காசும் வழங்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால், உண்மையில் இந்தத் திட்டம் 1989 -91 காலகட்டத்தில் மு. கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட மிகப் பழைய திட்டம். இந்தத் திட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருந்த நிலையில், 2011ல் முதலமைச்சரான ஜெயலலிதா, இந்தத் திட்டத்தின் பெயரை டாக்டர் முத்து லட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டம் என்ற பெயரை மாற்றி தொடர்ந்து செயல்படுத்தினார்.

இந்த திட்டத்தில் மணமகள் எந்த ஜாதியை சேர்ந்தவராக இருக்கவேண்டும் என்று எதுவும் குறிப்பிடப்படவில்லை. மணமக்கள் இருவரில் ஒருவர் பட்டியல் இனத்தவர் அல்லது பழங்குடியினராக இருந்தால் அவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும்.

இந்தத் திட்டம் இரண்டு விதமாக செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின்படி, தம்பதிகளில் ஒருவர் முன்னேறிய வகுப்பினராகவும் ஒருவர் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகவும் இருந்தால் அவர்களுக்கு பதினைந்தாயிரம் ரூபாயும் 8 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது. மணமக்களில் ஒருவர் பட்டியல் வகுப்பினராக இருந்தால் முப்பதாயிரம் ரூபாய் பணமும் 8 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம் தற்போது மாவட்ட அளவில், மாவட்ட சமூக நல அலுவலரால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திமுக தேர்தல் அறிக்கை

பட மூலாதாரம், Mk Stalin facebook page

இந்த நிலையில்தான், தாங்கள் ஆட்சிக்கு வந்தால், இந்தத் திட்டத்தின் பெயரை மீண்டும் அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டம் என பெயர் மாற்றப்படும் என்று சொல்லியருப்பதோடு, உதவித் தொகையையும் இரு மடங்காக்கப்போவதாகத் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தி.மு.க. மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சியும் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. "பட்டியலின மற்றும் பழங்குடியினர் நலன்" என்ற பகுதியின் கீழ், பக்கம் 33ல் பின்வருமாறு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை கூறுகிறது: "சாதி மறுப்புத் திருமணம், கலப்புத் திருமணம் செய்துகொண்டவர்களுக்கு வேலை வாய்ப்பு அலுவலகங்களில் முன்னுரிமை இருப்பதைப்போல வேலைவாய்ப்புகளிலும் முன்னுரிமை வழங்கப்படும். மணமக்களில் ஒருவர் பட்டியலினத்தவராக இருந்தால், அவர்களைப் பாராட்டி ரூ. 3 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும்" என்று கூறப்பட்டிருக்கிறது.

இது தவிர மத்திய அரசும், 'டாக்டர் அம்பேத்கர் கலப்புத் திருமணம் மூலமான சமூக ஒருங்கிணைப்புத் திட்டம்' (Dr Ambedkar scheme for social Integration through inter caste marriage) என்ற பெயரில் இதே போன்ற ஒரு திட்டத்தை செயல்படுத்தி கலப்புத் திருமணத்தை ஊக்குவிக்கிறது. 2013ஆம் ஆண்டு முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்தத் திட்டத்தின்படி கலப்பு மணம் செய்யும் தம்பதிகளில் ஒருவர் ஆதிதிராவிடராக இருந்தால் 2. 5 லட்ச ரூபாய் நிதியுதவியாக அளிக்கப்படுகிறது. ஆனால், நாடு முழுவதும் வருடத்திற்கு 500 பேருக்குத்தான் இந்த நிதி உதவி வழங்கப்படும்.

அத்துடன், எந்த சாதிப் பெயரையும் திமுகவின் தேர்தல் அறிக்கை குறிப்பிட்டு அந்த சாதிப் பெண்களை திருமணம் செய்தால் நிதியுதவி என்று குறிப்பிடவில்லை.

ஆகவே, சமூக வலைதளங்களில் வரும் இது தொடர்பான செய்திகளில் உண்மையில்லை. ஏற்கனவே இருக்கும் திட்டத்தின் பெயர் மாற்றப்படும் என்றும் கூடுதல் நிதி தரப்படுமென்று மட்டுமே தி.மு.கவின் தேர்தல் அறிக்கை கூறுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: