மகாராஷ்டிராவில் கொரோனாவில் இருந்து மீண்ட மூதாட்டியை சேர்க்க மறுத்த குடும்பம்; தெருவில் விடச்சொன்ன மகன்

Pune Family Tell Doctors To "Leave Old Woman On Street" After Covid Recovery, Cops Step In

பட மூலாதாரம், Vivek Anand / EyeEm via getty images

படக்குறிப்பு, சித்தரிக்கும் படம்

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் கோவிட்-19 தொற்றில் இருந்து குணமடைந்த 70 வயதாகும் மூதாட்டி ஒருவரை அவரது குடும்பத்தினர் மீண்டும் வீட்டில் சேர்த்துக்கொள்ள மறுத்துவிட்டதாக ஒரு காவல் துறை அதிகாரி தெரிவித்துள்ளார் என பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது

அதன் பின்னர் இந்த விவகாரத்தில் தலையிட்ட காவல்துறையினர், அப்பெண்ணை மீண்டும் குடும்பத்தில் சேர்த்துக் கொள்ளுமாறு அவரது குடும்பத்திற்கு அறிவுரை வழங்கினர். இதனால் தங்களது தவறை உணர்ந்து அந்தக் குடும்பத்தினர், மூதாட்டியை மீண்டும் வீட்டுக்கு வர அனுமதித்தனர் என்று அந்தக் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

மார்ச் 13ஆம் தேதி கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்ட அந்த பெண், புனேவில் உள்ள சிங்ஹாகாத் ரோடு என்னும் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அந்த மூதாட்டி குணமடைந்த பின்பு கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவதாக இருந்தது.

"குணமடைந்த மூதாட்டியின் மகனை அழைத்து அவரது தாயை வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு நாங்கள் கூறினோம். ஆனால் அவரை மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் செல்ல அவரது குடும்பத்தினர் மறுத்தனர். அப்படியானால் அவரது தாயை எங்கே விட வேண்டுமென்று நாங்கள் கேட்டபோது தெருவில் விட்டுவிடுமாறு அவர் கூறினார். அவரது பதில் எங்களுக்கு அதிர்ச்சியை தந்தது," என்று அந்த மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர் சுபாங்கி ஷா தெரிவித்துள்ளார்.

அதன்பின்பு காவல் நிலையத்தை தொடர்பு கொண்ட அந்த மருத்துவமனை நிர்வாகம் காவல்துறையின் உதவியை நாடியது.

கொரோனா வைரஸ்

"காவல்துறையினரின் உதவியுடன் நாங்கள் அந்த மூதாட்டி அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றோம். ஆனால் நாங்கள் சென்றபோது அந்த வீடு பூட்டப்பட்டு இருந்தது. அதைத் தொடர்ந்து அந்த மூதாட்டியின் குடும்ப உறுப்பினர்களை நாங்கள் தொடர்பு கொண்டோம். அப்போது அவர்கள் இரவு எட்டு மணிக்குத்தான் வீட்டுக்கு வருவோம் என்று தெரிவித்தனர்," என சுபாங்கி ஷா கூறினார்.

மூதாட்டியை வீட்டுக்கு வெளியிலேயே விட்டுச் செல்வது கடினமானது என்பதால் அவரை, மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அந்த மூதாட்டி அன்றைய இரவைக் கழித்தார்.

புதன்கிழமை அன்று காவல் துறையினர் மூதாட்டியின் குடும்ப உறுப்பினர்களுக்கு அறிவுரை வழங்கினர். அதன்பின்பு அந்த மூதாட்டி அவரது குடும்பத்தினருடன் மீண்டும் சேர்த்து வைக்கப்பட்டார் என்று மருத்துவர் சுபாங்கி ஷா தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை தமது தந்தை இறந்துவிட்டதால் தமது மாமியாரை மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் செல்ல இயலவில்லை என்றும் தாம் தற்போது பேசும் சூழ்நிலையில் இல்லை என்றும் அந்த மூதாட்டியின் மருமகள் தெரிவித்ததாக சிங்ஹாகாத் ரோடு காவல் நிலையத்தைச் சேர்ந்த மூத்த காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: